அன்பு கொண்ட நகரசபை தலைவரவர்களே! அங்கத்தினர்களே!! மற்றும் இங்கு கூடியுள்ள தோழர்களே!!!

கோவை நகரசபையின் சார்பாக எனக்கு வாசித்தளித்த உபசாரப் பத்திரத்திற்கு நான் மிகுதியும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டவனேயாவேன். ஆனால் அவ்வுபசாரப் பத்திரத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்று சொல்லுவேனேயானால் நான் உண்மையற்ற புகழை ஏற்றுக் கொண்டவன் என்னும் குற்றத்திற்காளானவனாவேன். ஏனெனில் தீண்டாமை விலக்கிலும், பொது நல சேவையிலும், அரசியலிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும் நான் ஏதோ பெரிய வேலைகள் செய்திருப்பதாக உங்கள் உபசாரப் பத்திரத்தில் புகழ்ந்து இருக்கிறீர்கள். உண்மையில் பார்ப்போமானால் அத்துறையில் பொது மக்களுக்கு என்ன காரியம் செய்திருக்கிறேன் என்று இன்று உங்கள் முன்னிலையில் நான் சொல்லக் கூடும்?

தோழர்களே! இந்தியாவில் பார்ப்பனர்களும் படித்த கூட்டத்தாரும் செல்வவான்களுமாகிய ஊரார் சரீர உழைப்பில் வாழ்வதற்கென்றே உயிர் வாழும் கூட்டங்களை அப்படியே வைத்துக் கொண்டு தீண்டாதாருக்கு பாடு பட்டிருக்கின்றேன், ஏழைகளுக்கு பாடுபட்டிருக்கின்றேன், தொழிலாளிக்கு பாடுபட்டிருக்கின்றேன் என்று ஒருவர் ஒப்புக் கொள்ளுவதானால் அப்படி பட்ட அவர், நான் மாத்திரமல்ல மற்றும் எப்படிப்பட்ட தேச பக்தர் ஆனாலும், தேசீயவாதி ஆனாலும், தேசப் பாதுகாப்புக்காக தேச மக்களுக்காகவே உயிர் வாழ்கின்றேன் மூச்சு விடுகின்றேன் என்று சொல்லுபவர்களானாலும் அதில் ஏதாவது நாணயமோ, உண்மையோ, அறிவுடைமையோ பலன் தரும் தன்மையோ இருக்க முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.

periyar nagammai 350பொதுநலசேவை என்பது புரட்டு

நான் வெகுநாளைக்கு முன்பதாகவே (social service is a humbug) சோஷியல் சர்விஸ் இஸ் ஏ ஹம்பக். அதாவது சமூக சேவை என்று சொல்வது முழுப் புரட்டு என்றும் அதன் கருத்து பணக்காரர்களையும் முதலாளிகளையும் சோம்பேரிகளையும் காப்பாற்றக் கோட்டை கட்டுதல் என்றும் சொல்லி இருக்கிறேன். இந்த அபிப்பிராயம் எனது மேல் நாட்டு சுற்றுப் பிரயாணத்தில் முன்னிலும் அதிகமாய் பலப்பட்டது என்று தான் சொல்லுவேன். நான் ஸ்பெயினில் ஒரு பெண்ணினிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அந்தம்மாள் பேச்சு சந்தர்ப்பத்தில் என் வேலை என்ன என்று கேட்ட காலத்தில் நான் சாதாரண முறையில் ஏதோ என்னாலான பொது ஜன சேவை செய்கிறேன் என்று சொன்னேன். அதற்கு உடனே அந்தம்மாள் “பொது ஜன சேவை என்பது முழுதும் பித்தலாட்டம் என்றே நாங்கள் கருதுகிறோம்” என்று சொன்னார்கள். பிறகு நமது இயக்க விஷயத்தை சொன்ன பிறகு ஒரு அளவில் அந்தம்மாள் சரி என்று சொன்னார்கள். நமது நாட்டு பொதுஜன சேவை என்பதை என்ன என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

தீண்டாமை விலக்கு

தீண்டாமை விலக்கு என்றால் ஒருவனைதொட்டு விடுவதாலும் கோயிலுக்குள் புகவிட்டு விடுவதாலும் தீண்டாமை விலகிப் போய் விட்டது என்று கற்பித்து, அந்தப்படியே இந்நாட்டு மக்களை நம்பச் செய்து, அவ்வளவு செய்தாலே போது மென்று சொல்லி அதற்கே பெரிய புரட்சி செய்ய வேண்டி யதாய் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறோம். அப்படிச் சொல்லுகின்றவர்களையே மகான்கள்-மகாத்மாக்கள்- பொது ஜன சேவைக்காரர்- தீண்டாமை விலக்கு வீரர்- வைக்கம் வீரர்- என்றெல்லாம் ஆக்கி விட்டோம்.

“கங்காதரா மாண்டாயோ என்ற ஒரு வண்ணாத்தி அழுகைக்குரல் அரசன் வீடுவரை அழச்செய்து விட்டது” என்ற கதை போல் இந்த காரியமே இப்போது தேசீய சேவையாய் - பொது ஜன சேவையாய் -–சுயராஜிய சேவையாய் - அன்னிய ஆட்சியை விரட்டி அடிக்கும் சேவையாய் ஆக்கப்பட்டு எங்கு பார்த்தாலும் இதே தப்பட்டை அடிக்கப் படுகின்றது. அது மாத்திர மல்லாமல் மக்கள் எல்லோராலும் அப்படியே கருதப்படுகின்றது. இதனால் எல்லாம் உண்மை தீண்டாமை எப்படி விலகும்? தீண்டாமை விலக்கு என்றால் தீண்டாதவனைத் தொடுவதும் அவனை “மோட்சத்திற்கு அனுப்ப” என்று கோவிலுக்குள் கொண்டு விடுவதும் தானா? என்று கேட்கின்றேன். ஒரு மனிதனுக்கு சாப்பாடும் உடையும், இடமும், கல்வியும் வேண்டுமா? மனிதனைத் தொடுவதும் “செத்த பிறகு அனுபவிப்பதுமான மோக்ஷமும்” வேண்டுமா? என்று கேட்கின்றேன்.

தொடவும் கோவிலுக்குள் போகவும் விடப்பட்டு விட்டால் அவனுக்கு உண்டியும், உடையும், இடமும், கல்வியும் கிடைத்துவிடும் என்று சிலர் சொல்ல வருவார்கள். அப்படியானால் இன்று தொடவும், கோவிலுக்குள் போகவும் உரிமையுடையவர்களும் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் அவற்றை அனுபவித்து வருபவர்களுமான மனிதர்கள் எல்லாம் இன்று சோறும், துணியும், குடிசையும், படிப்பும் உடையவர்களாய் இருக்கிறார்களா? என்பதை சிந்தித்துப் பாருங்கள். சோற்றுக்கும், துணிக்கும் வழியென்ன? என்று கேள்க்கும்போது கல்லில்போய் முட்டிக் கொள்ளக் கூட்டி விட்டதால், அது பொதுநல சேவை ஆகுமா? ஜீவகாருண்யமாகுமா? சமதர்மமாகுமா? என்று யோசித்துப் பாருங்கள். அல்லது ஏழைகள் படும் கஷ்டத்துக்கு வழி என்ன என்று கேட்கும்போது ஒரு நாளைக்கு ஏதோ இரண்டு மூட்டை அரிசியை வேக வைத்துப் போட்டு தர்மத்துக்கு வந்து சாப்பிடுங்கள் என்று தண்டோரா அடித்துவிட்டால் ஏழைகளின் பசியாற்றிய சேவை ஆகிவிடுமா? என்று யோசித்துப் பாருங்கள். எனவே இப்படிப்பட்ட காரியங்களை நாணைய மானதும், பயன் தரத்தக்கதும், அறிவுடமையானதும் என்று எப்படிச் சொல்ல முடியும்?

அரசியல்

நமது சுயராஜ்ஜியப் புரட்டும், ஸ்தல சுயாட்சிப் புரட்டும் இப்படித்தானே இருக்கின்றது. சுயராஜ்ஜியமென்றால் யாருக்கு என்று யோசித்துப் பாருங்கள். நாளை வரும் சுயராஜ்ஜியத்தில் 100-க்கு 90 மக்களாய் உள்ள ஏழைகளுக்கு என்ன புதியவசதி ஏற்படப்போகின்றது? ஏழைகள், தொழிலாளிகள், கடன்காரர்கள், ஏழை விவசாயக்கூலிகளான படிப்பில்லாதவர்கள் முதலாகிய மக்களுக்கு முறையே பணக்காரன், முதலாளி, லேவாதேவி, பாங்கிக்காரன், நிலச்சுவான், ஜமீன்தாரன், படித்த பார்ப்பனன் ஆகியவர்கள்தானே போய் பிரதிநிதிகளாக உட்காரப் போகின்றார்கள். தீண்டாதார்கள் என்பவர்கள் “இந்து மதத்தை விட்டு விடுவோம், எங்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் வேண்டும்” என்று கேட்டதின் பயனாய் சிறிது பிரதிநிதித்துவமாவது கிடைத் தது. கோவிலுக்குள் வாருங்கள் என்று சிலர் கூப்பிடுகின்றார்கள். மற்றபடி மேல்கண்ட வகுப்பாருக்கு என்ன பலன் கிடைத்தது? என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் குறைகளை நீக்கிக்கொள்ள அரசியலில் எங்காவது எந்த சட்ட சபைகளிலாவது இடமளிக்கப்பட்டிருக்கின்றதா? இதுபோல்தானே இன்று ஸ்தல சுயாட்சியும் இருந்து வருகின்றது.

முனிசிபல் கௌன்சிலிலோ, தாலூகா ஜில்லா போர்டுகளிலோ, பட்டக் காரர்களும், ஜமீன்தாரர்களும், வெள்ளியங்கிரிக் கவுண்டர்களும், ரத்தின சபாபதி முதலியார்களும், ஷண்முகஞ் செட்டியார்களும் மற்றும் இது போன்றவர்களும்தான் எங்கும் போட்டிபோட்டு அவரவர்கள் “பெரிய வீட்டு” சொத்துகளைப் போல் பங்கு போட்டுக் கொள்ளுவதுபோல் மோதல்கள் நடக்கின்றனவேயொழிய உண்மையான ஏழை, கூலி, தொழிலாளி, பயிர் செய்பவன் போட்டி போடவோ வெற்றி பெறவோ முடிக்கின்றதா என்று பாருங்கள். சொத்தின் பேரிலும் படிப்பின் பேரிலும்தான் ஓட்டர் லிஸ்ட்டும், அபேட்சகர் லிஸ்ட்டும் தயாரிக்கப்பட்டிருக்கிறதே தவிர சொத்தும், படிப்பும் இல்லாத மக்கள் கதி என்ன? என்பதை யோசித்துப் பாருங்கள்.

தோழர்களே இந்த மாதிரியான பொது நல சேவை, சுயராஜ்ஜிய சேவை, தேசீய சேவை, தீண்டாமை விலக்கு சேவை ஆகியவைகளால் என்ன காரியங்கள் ஆகப் போகின்றது என்றுகருதி இருக்கிறீர்கள். நான் யாருடைய மனதையும் நோகும் படி செய்வதற்காகப் பேசவில்லை. என்னுடைய பொது நல சேவையையும், தீண்டாமை விலக்கு வேலையையும், சிலாகித்து சிலாகித்து திருப்பித் திருப்பி உபசாரப் பத்திரத்தில் எழுதிப் புகழ்ந்திருக்கிறீர்கள். நான் எப்படி அவைகளை ஒப்புக் கொள்ள முடியும். அதைக் கேட்டு நான் வெட்கப்படத் தானே வேண்டியிருக்கிறது. உண்மையான பொதுநல சேவையோ தீண்டாமை விலக்கு வேலை நான் என்ன செய்து விட்டேன்? இப்போது ஏதோ செய்யவேண்டும் என்று கருதுகிறேன் என்றாலும் அதற்கு எவ்வளவு எதிர்ப்பு, எவ்வளவு தொல்லைகள் இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள். நான் செய்ய நினைக்கும் பொது ஜனசேவை தீண்டாமை விலக்கு வேலை என்பவை மதத் துரோகம், கடவுள் துரோகம், ஜாதித்துவேஷம், வகுப்புத் துவேஷம், தேசீயத் துரோகம். ராஜத்துரோகம் என்றெல்லாம் ஆகி விடுகின்றன. ஆகை யால் இந்நிலையில் சுலபத்தில், உண்மையான பொதுநல சேவையும், தீண்டாமை விலக்கு சேவையும், காரியத்தில் பயன்படும்படி செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. பொது நல சேவை என்றால் என்ன? தீண்டாமை விலக்கு என்றால் என்ன? என்பதை மக்களுக்கு தெரியும்படி செய்தாலே போதும் என்று நினைக்கிறேன். அந்த வேலைதான் செய்ய வேண்டியது முக்கிய கடமையாய் இருக்கிறது என்று கருதியிருக் கிறேன்.

இந்த வேலை இந்தியாவுக்கு மாத்திரம் அவசியம் என்று நான் கருதிவிடவில்லை. “தீண்டாமை” என்பது இல்லாத ஊரிலும், அன்னிய ஆட்சி என்பது இல்லாத ஊரிலும், ஏகாதிபத்தியமோ, சக்கரவர்த்தியோ, ராஜாக்களோ இல்லாத ஊரிலும் இப்படித்தான் இருக்கிறது. “குபேர பட்டணம்” என்று சொல்லும் அமெரிக்காவிலும், சக்கரவர்த்தியை ஒழித்து சமதர்ம ஆட்சி நடத்தும் ஜர்மனியிலும், சொந்த தேச அரசர் ஆளும் இங்கிலாந்திலும், அரசரை விரட்டி அடித்த குடி அரசு நாடான ஸ்பெயினிலும் இந்த கதிதான் இருக்கிறது. சில இடங்களில் ஒரு கட்டிலில் பகுதி படுக்கையை வாடகைக்கு விட்டு ஜீவிக்க வேண்டி இருக்கின்றன. வெரும் சகிக்க முடியாத பட்டினிக்காகவே பெண்கள் தெருக்களில் வந்து கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் விபசாரித்தனம் செய்து ஜீவிக்க வேண்டி இருக்கின்றன.

இதற்கெல்லாம் காரணம் முதலாளிகளின் ஆட்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றே உணருகிறேன்.

தோழர்களே! இவைகள் என் சொந்த அபிப்பிராயமே யொழிய தர்க்கித்து முடிவு கண்டு முடிந்த முடிவு என்று சொல்ல வரவில்லை. நான் பார்க்கும் கண்ணாடி துவேஷக் கண்ணாடியாய், பாரபட்சக் கண்ணாடியாய் இருக்க லாம். ஆகையால் நீங்கள் இவற்றை உங்கள் நடுநிலைக் கண்ணாடி கொண்டு பார்த்து உங்களுக்கு தோன்றியபடி நடவுங்கள் என்று சொல்லுவதோடு, மறுமுறையும் எனக்கு இவ்வித சந்தர்ப்பமளித்து ஊக்கமளித்ததற்காக உங்கள் எல்லோருக்கும் உங்கள் பிரதிநிதியாகிய கோவை முனிசிபல் அங்கத்தினர் களுக்கும் அவர்களது அக்கிராசனாதிபதி அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

(குறிப்பு: 22.01.1933 இல் கோவை முனிசிபல் சங்கத்தாரால் வழங்கப்பட்ட உபசாரப் பத்திரத்திற்கு பதிலளித்து பேசிய உரை,

குடி அரசு - சொற்பொழிவு - 29.01.1933)

Pin It