கீற்றில் தேட...

30 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மூர்மார்க்கெட் கலகலவென்று இருந்த சமயம். ஒரு நாள்அந்த வழியாக நான் சென்று கொண்டிருந்தேன். ஒருவர் அறுந்த பிளாஸ்டிக் செருப்பை ஒட்ட வைக்கும் இரசாயனப் பொடி என்று கூவி விற்றுக் கொண்டிருநதார். அப்பொழுது நான் அணிந்திருந்த பிளாஸ்டிக் செருப்பு அறுந்து இருந்தது. அவா¢டம் அதைக் கொடுத்துச் சரி செய்யச் சொன்னேன். அவரும் தன்கையில் இருந்த இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி அந்த இரசாயனப் பெடியில் (!) தோய்த்துச் செருப்பின் அறுந்த பாகத்தை இணைத்துப் பழுக்கக் காய்ச்சிய அதன்மேல் வைத்த உடன் அறுந்த பாகங்கள் ஒட்டிக் கொண்டன. செருப்பு நேரான மகிழ்ச்சியில் அந்த அதிசயப் பொடியை இரண்டு பொட்டலங்கள் வாங்கிக் கொண்டேன், 

 இன்னொருமுறை அதை உபயோகிக்க முனைந்த போது தான் உண்மை பு¡¢ந்தது. பிளாஸ்டிக் செருப்பின் அறுந்த பாகங்களை இணைப்பது இரும்புக் கம்பியில் உள்ள வெப்பமே தவிர அந்த அற்புதப் பொடிக்கு அங்கே எந்த வேலையும் இல்லை என்று. எனக்கு அந்த பிளாஸ்டிக் செருப்பு வித்தைக்காரன் மீது கோபம் வந்தது, 

 இவரக்ள் எல்லாம் சாதாரண ஏமாற்று வித்தைக்காரர்கள். கெளரவமான வேலையை அனைவருக்கும் தரவேண்டிய அரசு தன் கடமையைச் செய்யாத அயோக்கியத்தனத்தின் விளைவாக, வயிற்றைக் கழுவ வேண்டிய கட்டாயத்தினால் இப்படி ஏமாற்றுவித்தைக்காரர்களாக நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். ஆனால் இப்பொழுது "யோகா" என்று சொல்லிக் கொண்டு புற்றீசல்களைப் போலப் பெரும் அளவிலானோர் கிளம்பியிருக்கிறார்கள். இவர்களில் யாருமே ஏழை மக்களின் வயிறறுப் பசியைப் பற்றிய கவலை இல்லாதவர்கள். இவர்களின் நோக்கமே மக்களை அறிவு மயக்கத்தில் ஆழ்த்தி அவர்கள் சமூக அவலங்களைப் பற்றிய அக்கறை கொள்வதில் இருந்து திசை திருப்புவது தான்.

இவர்கள் உண்மையில் செய்வது என்னவென்றால் உடற்பயிற்சியைக் கற்றுக் கொடுக்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் உடல் நலமாக இருக்கும். இதில் மாய மந்திரம் எதுவும் இல்லை. ஆனால் இந்த யோகா ஏமாற்றுவித்தைக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் உடற்பயிற்சியின் போது உடல் இருக்க வேண்டிய நிலையை (கடவுளை) வணங்குவது போல இருக்கச் செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக இரு கைகளை உயர்த்திக் கொண்டு இருந்தால் சரி என்ற நிலையில் இவர்கள் கைகளை உயர்த்தி வணங்குவது போல் (கைகூப்பி) இருக்கச் செய்வார்கள்.

 பிளாஸ்டிக் செருப்பு வித்தைக்காரன் தேவையின்றித் தனது அற்புதப் பொடியில் இரும்புக் கம்பியைத் தோய்த்தது போல இவர்கள் தேவையின்றி கைகூப்பி வணங்கச் செய்கிறார்கள். இடையிடையே 'ஓம்' என்ற வார்த்தையை உச்சா¢க்கச் செய்கிறார்கள். இவர்களிடம் பயிற்சி பெறுகிறவர்களின் உடல் நலம் தேறுவது கண்டு ஏதோ ஆண்டவனின் சக்தி தான் தங்களைக் காக்கிறது என்று நினைக்க வைத்துவிடுகிறார்கள். 

 பிளாஸ்டிக் செருப்பு வித்தைக்காரரின் அற்புதப் பொடி இல்லாமலேயே அறுந்த செருப்பை ஒட்ட வைக்கமுடியும். அது போலவே யோகா ஏமாற்றுவித்தைக்காரர்களின் ஆன்மீகக் கலவை இல்லாமலேயே உடல் நலம் பெற முடியும். இரும்புக் கம்பியின் வெப்பம் அறுந்த செருப்பை நேர் செய்வது போல யோகாவில் உள்ள உண்மைப் பொருளான உடற்பயிற்சி உடலை நலமாக வைத்துக் கெள்ளும். 

 சரி! யோகா என்று சொல்பவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க ஈஷா 'யோகா' என்ற வகுப்பில் சேர்ந்தேன். முதலில் இங்கு கற்றுக் கொண்டதை வெளியில் சொல்லக் கூடாது என்று உறுதிமொழி கேட்டார்கள். அது ஏன் என்று வினா எழுப்பிய போது சரியான தெளிவான விடை கூற மறுத்துவிட்டார்கள். விவாதம் தொடர்ந்தபோது வகுப்பில் இருந்த பலர், என்னை விவாதம் செய்ய வேண்டாம் என்றும், அதனால் பலருடைய நேரம் வீணாவதாகவும் கூற நான் வகுப்பு முடிந்தபின் கையெழுத்திடுவதாகக் கூறினேன். 

 பின் வகுப்பு தெடங்கியது. ஆசிரியர் முதலில் தான் கூறுவதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இதுவரை நாம் பெற்ற அனுபவ அறிவை அகற்றிவிட வேண்டும் என்றும் கூறினார். அதற்குக் காரணமும் கூறினார். ஒரு குவளையில ஏற்கனவே தேனீர் இருந்தால் அதற்கு மேல் ஊற்றப்படும் தேனீரைக் கொள்ளாது என்றும், ஆகவே முதலில் குவளையில் இருக்கும் தேனீரைக் கொட்டிவிட வேண்டும் என்றும், அது போல் ஏற்கனவே பெற்ற அனுபவ அறிவை நீக்கிவிட்டால் அவர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறினார். 

 உடனே நான் மறுத்தேன். தேனீர்க் குவளையின் கொள்ளளவு வரம்புக்கு உட்பட்டது. மனித மூளையின் கொள்ளளவு வரம்பில்லாதது. ஆகவே ஏற்கனவே இருக்கும் அனுபவ அறிவுடன் புதிதாகப் பெறுவதற்கு மனித மூளைக்குத் திறன் உண்டு. ஆகவே பழைய அறிவை மறைக்கத் தேவையில்லை என்று கூறினேன். மேலும் தேனீரைக் கொட்டிவிடுவது போல அனுபவ அறிவை வெளியேற்றுவது இயலாத ஒன்றாகும் என்பதையும் கூறினேன். என்னடைய விளக்கத்தால் ஆசிரியர் திணறினார் என்பது அவருடைய மழுப்பல்களில் இருந்து வெளிப்பட்டது. அவர் சொல்லும் பாடங்களை நான் ஏற்கனவே பெற்ற அனுபவ அறிவுடன் சோதித்துப் பார்த்துத்தான் ஏற்கவோ மறுக்கவோ முடியும் என்று சொன்னதை அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. 

 எங்கள் விவாதம் தொடர்ந்தது. வகுப்பில் சுமார் நூறு பேர்கள் இருந்தார்கள். எங்களுடைய விவாதம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆசிரியர் ஏதோ சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தமாக இருக்கும் வேளையில் நான் தடைக் கல்லாக இருப்பதாக நினைத்தார்கள். உடனே ஒரு ஒப்பந்தத்தை முன் வைத்தேன். இனி நான் எந்த வினாவையும் எழுப்புவதில்லை என்றும், அமைதியாக என்ன பாடம் நடக்கிறதோ அதைக் கவனித்து விட்டுச் செல்வதாகவும், அதே போல் ஆசிரியரும் என்னுடைய கருத்தைக் கேட்கக் கூடாது என்றும் கூறினேன். 

 ஆசிரியர் ஒப்புக் கொள்ளவில்லை. நூறு பேர் செல்லும் படகில், ஒருவருக்கு உடல் நலம் இல்லை என்றால் அவரைத் தூக்கி எறிய முடியாது என்றும் முதலில் அவரைக் கவனிப்பது தான் முறையான செயல் என்றும் கூறி, என்னுடைய அனுபவ அறிவை உபயோகிக்கக் கூடாது என்று ஒப்புக் கொள்ள வைக்க இயன்ற அளவு முயற்சி செய்தார். அவருடைய இக்கட்டான சூழலையும், வகுப்பில் இருந்தவர்களின் மனோநிலையையும் பார்த்த பின்னர் நான் வகுப்பிலிருந்து வெளியேறிவிட்டேன். 

 இந்த அனுபவத்தில் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் யோகா வகுப்புகளில் உடற்பயிற்சி உண்டு. அதுதான் உண்மையில் மனிதர்களுக்குப் பயன்படுகிறது. கூடவே அவர்கள் செய்ய வைக்கும் தேவையற்ற அசைவுகள் (கை கூப்புவது போல) இது உடற்பயிற்சி என்பதை மறைப்பதற்குத் தான். மேலும் வகுப்பில் உடற்பயிற்சிக்கு 25% நேரம் ஒதுக்கப்படுகிறது. மதிமயக்கப் பிரச்சாரத்திற்கு அதாவது மூளைச் சலவைக்கு 75% நேரம் அளிக்கப்படுகிறது. பகுத்தறிவாளர்கள் அங்கு அமைதியாக அமர்ந்து இருப்பதைக் கூட அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 

 பிளாஸ்டிக் செருப்பு வித்தைக்காரன் மீது இருந்த கோபம் நீங்கிவிட்டது. 

- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)