சித்தார்த்தர் குடும்பம் மற்றும் இனக்குழுவின் பிடியிலிருந்து பிரிந்து, தன்னை ஒரு சமூக மனிதராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இது இத்துணைக் கண்ட வரலாற்றில் மானுடத்திற்கான மாபெரும் திருப்புமுனை ஆகும். சகமனிதர்களுக்கான சிந்தனை ஒளியே அவருடைய துறவற வாழ்வின் மீட்சியானது. அவர் மனித இன வாழ்வை சுதந்திரமாக சமத்துவமாக சகோதரத்துவமாக அமைப்பதற்கான மன எழுச்சியை இயற்கையிலிருந்தும், மனிதவாழ்வின் நேர்குண - எதிர்குண எல்லாவற்றிலிருந்தும் கற்றுக் கொண்டார். சித்தார்த்தரின் தனிப் பெரும் மனம் இயற்கை, மானுடம், உயிரினம் பற்றிய உணர்வுடன் செயல்பட்டதால்தான், அவர் சகமனிதர்களிலிருந்து தனித்துவமாகி நின்றார். அவர் ஒட்டுமொத்த மானுடத்தையும் தனது மனதிற்குள் நிரப்பிக் கொண்டு புதிய வெளியைக் கண்டறிந்தார்.
உடல், மனம், சிந்தனை, தீர்க்கம் ஆகியவை ஒரே புள்ளியிலிருந்து வேறுபடாதபடி பிணையும் விவேகத்தை அடைந்த அவர், தனிமனித வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்கும் உருமாற்றம் செய்யும் மானுட மேன்மைக்கான நூதனப் பாங்கினைப் பெற்றார். புத்தர் தன் சமூக வாழ்விற்கானப் பயிற்சிகளையும் உத்திகளையும் தனிமனித சமூக வாழ்வு இரண்டிற்கும் வழிவிடும் பாலமாக ஆக்கினார். அவருடைய மனம் ஒவ்வொரு வாழ் கணத்திலும் ‘நான்' என்று பாவிக்கும் அகங்காரத்தை மறுதலித்து ‘நாம்' என்று கருதும் சமூகப் பிராணிக்கான சுய அடையாளத்தை நிறுவ எத்தனித்தது.
சித்தார்த்தர், சிந்தனை உருவாக்கத்திற்கும் செயல்பாட்டிற்கும் முன் நிபந்தனையாக சுய விவாதங்களை மேற்கொண்டார். சுய விவாதங்களின் மூலம் தன்னை சிந்தனை ரீதியாகக் கற்பித்துக் கொண்ட அவர், புறகற்பித்தலுக்கு முன் நிபந்தனையாக சுய கற்பித்தல் மூலம் தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டார். சமூகத்தை நேசிப்போர் அடிப்படையாகக் கொள்ள வேண்டிய கட்டுமானச் சிந்தனை கைக்கூடிய பிறகுதான், சகமனிதருக்கு கற்பிக்க அவர் அணியமானார். சித்தார்த்தர், வேறுபடுத்துதல்களுக்கும் ஒதுக்கல்களுக்கும் ஒடுக்குதல்களுக்கும் அப்பாற்பட்ட சிந்தனை முறுக்கேறியவராய் மானுடத்திற்கு வரவானார்.
சித்தார்த்தன் சிந்தனை அடர்த்தி நடைமுறை வீரியத்தைக் கொண்டிருந்தது. அவர் தன்னுடைய சிந்தனையின் வேர் ஆதாரத்தை மனிதர்களின் முரண்பாடுகளைத் தீர்க்கவே கொண்டிருந்தார். மானுடத் தேவைகளை மய்யமாகக் கொண்டுதான் அவருடைய சிந்தனைத் திரட்சி இருந்தது. மேலும், அவரது சிந்தனைகள் மானுடத் தேவைகளை மறு ஆய்வு செய்வதாகவும், சமூகத்தைப் புனரமைப்பு செய்வதாகவும் ஆனது. அது, சகமனிதர்கள் காதுகளில் கேட்டுக் கொள்வதற்கான ஒரு செய்தியாக மட்டுமல்ல; மாறாக செயல்படுவதற்கான வகையில் உயிரோட்டம் உள்ளதானது.
குறிக்கோளை எய்தியவர் எனப் பொருள் கொண்ட பெயரினைக் கொண்ட சித்தார்த்தர், முழுமையாய் விழிப்பு பெற்றவர் எனும் பொருளில் புத்தரானார். போதி சத்துவராகி, ‘இவ்வாறு வந்து இவ்வழியே சென்றவர்' எனப் பொருள்படும் ‘ததாகத'ரான புத்தர், இயற்கைக்கு அடித்தளமாக உள்ள விதிகளையே தம் அறிவுரைகளில் உள்ளடக்கினார்; மனிதர் ஒழுகுவதற்குரிய பாதைகளாக விரிந்தார். விழிப்படையும் நோக்கத்துடன் மனதை மானுடத்திற்காக ஒருங்குவிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார். விழிப்படைவதற்குரிய வழியைப் பொருத்தமட்டில் எல்லாவற்றையும் ஒடுக்கிய கடுந்தவம், எல்லாவற்றையும் விரும்பும் வாழ்க்கை என்ற இரு எல்லைகளுக்கும் பதிலாக, புத்தர் தனது பாதையை நடுநிலைப்பாதையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
புத்தர், வெறுப்பற்று வாழும் சுய நெறியாளுமைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். கருணையால் இப்பிரபஞ்சத்தைத் தழுவினார். மற்றதன் இருப்புகளையெல்லாம் மனதார ஏற்றார். பார்ப்பனியம் கடவுளை மய்யப்படுத்தியதில், புத்தர் அறத்தை மய்யப்படுத்தினார். மனித வாழ்க்கைக்கு பிரபஞ்சம் எப்படியானதோ அப்படியானார் புத்தர். புத்தர் எண்ணங்களில் கவனமாகயிருந்து வார்த்தைகளை வெளியிட்டார். வார்த்தைகளில் கவனமாகயிருந்து செயல்களை உருவாக்கினார்; பழக்க வழக்கமாக்கினார். பழக்க வழக்கங்களில் கவனமாகயிருந்து அவைகளையே அறமாக்கினார். அறத்தில் கவனமாகயிருந்து மக்களுக்கான வாழ்க்கையை உருவாக்கினார். அறங்களே வாழ்க்கையை உருவாக்குகிறது என்பதில் முடிந்துபோனார்.
பிரபஞ்சம் என்பது ஒன்றோடொன்று உறவிலுள்ள பல்வேறு கூறுகளின் கூட்டு சராசரியன்றி வேறல்ல. முடிவற்றுப் பாய்ந்து செல்லும் ஆற்றல்களும் தோற்றங்களும் ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவமாய் மாறிக் கொண்டே உள்ளன. இத்தகைய பல்வேறு வாழ்வுகளின் தொகுப்பே இப்பிரபஞ்சம் என்பது புத்தருக்கு விளங்கியது. அவர் மாறாத சாரம் கொண்ட நிலையற்ற பொருளாக எதையும் பாவிக்கவில்லை. அனைத்தும் தோன்றிக் கொண்டும் உருப்பெற்றுக் கொண்டும் மாறிக் கொண்டுமே இருக்கும் என்பதை புத்தர் அறிவித்தார். மாற்றம் மட்டுமே மாறாதது என்பதே அவர் சிந்தனையின் உச்சமாகும்.
புத்தரின் சொந்த அனுபவத்தின் மூலம், சூழ்நிலைமைகள் மூலம் அவரறிந்த எண்ண ஓட்டங்களே ‘தம்மம்' ஆனது. தம்மம் என்பது, மக்களின் சிந்தனைக்கான பொருளாகும். தம்மத்தைச் சார்ந்து இருத்தல், மானுட வாழ்க்கை நிமிர உயர அதை நெம்பு கோலாக்குதல், தம்மத்தைச் சிந்தித்தல், தம்மத்தோடு சிந்தித்தல், தம்மத்தைக் கடந்து சிந்தித்தல் என்று பவுத்தம் பரிணாமம் பெறக்கூடியதாகும்.
புத்தர் தத்துவஞானி என்றோ, அறிஞர் என்றோ பீற்றிக் கொண்டதில்லை. தன் அனுபவங்களின் அடிப்படையில் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கான வழியைச் சொன்ன அவர், தன்னை சக தோழராகப் பாவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இறை அம்சம் அல்லது இறைத்தூதர் ஒருவர் மூலம் நடந்து வந்த மானுட மீட்பின் நம்பிக்கையை அகற்றி வைத்த புத்தர், தனது சொந்த முயற்சிகளின் அடிப்படையிலேயே மனித வாழ்க்கையை வெற்றியாக்க வேண்டும் என்றார். பகையையும், போரையும், வெறுப்பையும் துரத்தியடித்த புத்தர் அன்பாலும், உயிர்வதையை விலக்குவதாலும் உலகை வெல்ல இயலும் எனும் நம்பிக்கையை ஊட்டினார்.
கி.மு. 544 மே மாத வைசாகப் பவுர்ணமி முழு நிலவில் சித்தார்த்த கோதமர் பேரொளியடைந்தது, மனித இன வரலாற்றின் மாபெரும் திருப்புமுனை ஆகும். புத்தர் ஒளிபெற்ற அனுபவம் என்பது, கடவுளுடன் கட்டுண்டு பெற்றதல்ல; மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் ஏதுமின்றி, முழுக்க முழுக்க மனித முயற்சிகளால் கிட்டிய பேரனுபவம் ஆகும். தனது மனதையும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதன் ,ஈலமாகவே ஒருவர் தனக்கான அமைதியையும் துன்பமற்ற நிலையையும் அடைய முடியும் என்பதே புத்தர் சொல்லும் செய்தியின் உள்ளடக்கமாகும்.
புத்தர் ஒளிபெற்ற அனுபவம் அல்லது எல்லை என்பது, கடவுளுக்கு அடங்கி நடந்திராத ஒன்று. கடவுள் என்பது நீண்ட கால வதந்தி! வதந்திகளை நம்பாதீர்! வதந்திகளைப் பரப்பாதீர்! என்றே புத்தர் மக்களுக்கு தன்னுணர்வினை ஊட்டினார். நேரடியான அனுபவம், அதன் மூலம் விழிப்புணர்வு பெறுதல் என்பதற்கு முதன்மை அளித்தார். வேதங்களிலும் உபநிடதங்களிலும் மறைந்து கிடக்கும் உண்மையை (?) அறிவது என்கிற பார்ப்பனிய நெறியை அவர் மறுத்தார். வேதங்களோ, வேறெந்த இறைவாக்குகளோ எவருக்கும் வழிகாட்ட முடியாது என்றுரைத்த புத்தர், மனிதரை கடவுள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கருத்தியலை - காரியங்களை அடியோடு மறுத்து, ‘உனக்கு நீயே ஒளி விளக்கு' என்றார். இது, பார்ப்பனியத்தோடு மட்டுமல்ல, முதலாளித்துவக் குழந்தைகளின் தொட்டில்களான எல்லா மதங்களிலிருந்தும் புத்தர் விடுபட்டு மாறுபட்டு நிற்கும் முக்கியப் புள்ளியாகும்.
புத்தர், பார்ப்பனிய சாராம்சம் எதையும் ஏற்கவில்லை. சுயதர்மம் என்கிற பார்ப்பனிய ஆச்சார அனுஷ்டானங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த புத்தர், அதை ஏற்க மறுத்து அவை பிறவிச் சூழலிலிருந்து விடுதலை அளிக்க வழிவகுக்காதவை என்று எடுத்துரைத்தார். சுயதர்மம் என்பது மற்ற வர்ணத்தாருக்குப் பணிந்து ஏவல் செய்வது. ஒன்றின் சுயதர்மமே அதன் சுய கடமையாகவும் இருந்தது. நால் வர்ண அமைப்பிற்கு சுயதர்மங்களே நிறைவேற்றிக் காட்டும் கடமைகளாக்கப்பட்டது. இந்தச் சுயதர்மங்களை நிறைவேற்றுவதன் மூலம் செய்யும் கர்மங்களே தூய்மையானவை. இவற்றிலிருந்து வழுவும் போது நிகழும் கர்மங்களே பாபமானவை; தீட்டானவை. புத்தர் சுயதர்மம், பாபம், தீட்டு இவைகளைத் தூக்கியெறிந்தார். புத்தர், பவுத்தத்தையும் பார்ப்பனியத்தையும் எதிரெதிர் புள்ளியில் வைத்தார். புத்தர் மனிதருக்கு மனிதரை இணையாக வைத்தது மட்டுமின்றி, மரஞ் செடி கொடிகள், இயற்கை, பிற உயிரினங்கள் எல்லாவற்றையும் மானுட நம்பிக்கையில் இணையாக வைத்துப் போற்றப்படுவதை ஏற்படுத்தினார்.
பிறப்பால் யாருக்கும் உயர்வு தாழ்வுகள் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரும் இப்பிறவியில் செய்யும் செயல்களின் மூலம், அச்செயல்களுக்குப் பின்னணியாக உள்ள நோக்கங்களின் மூலமே பிரிவுபட நேரிடும் என்றார் புத்தர். மனிதர்களை வெவ்வேறானவர்கள்; ஆனால் சமமானவர்களே என்று பிரகடனம் செய்தார். ஆனால், பார்ப்பனியப் பிரபஞ்சம் ஓடு மூடுண்ட எல்லைக்குட்பட்ட தங்கள் வசதிக்குட்பட்ட பிரபஞ்சமாகி நின்றது. ஆனால், பவுத்த பிரபஞ்சமோ எல்லையற்ற சமவெளியாய்த் திகழ்ந்தது. அது பார்ப்பனியத்தின் வீச்சுகளையும் மீறி விம்மிப் புடைத்தது.
பார்ப்பன உபநிடத்துவம் முன்வைக்கும் பிரபஞ்ச நிலைக் கோட்பாடான நன்மையும் தீமையும், இப்பிரபஞ்சத்தில் சம நிலையில் இருக்கிறது எனும் தகிடுதத்தத்தைப் பவுத்தம் மறுத்தது. மேலும், இந்தச் சமநிலை தவறும் போது அவதாரப் புருஷர்கள் அவதரிப்பதாகச் சொல்லும் கட்டுக் கதையினையும் தவிடுபொடி ஆக்கியது. பார்ப்பனியத்தின் பிரபஞ்சக் கோட்பாட்டிற்குப் பதிலாக பவுத்தம், நற்செயல்களுக்கு நற்பலன்கள்; தீய செயல்களுக்கு தீயபலன்கள் என்று அறிவித்தது. எனவே, அறச்சமநிலை என்பது, தனிநபர்களின் செயல்களைப் பொறுத்ததே. அவரவர் செயல்களுக்கு அவரவர் பொறுப்பு என்பதே பவுத்தத்தின் முடிந்த முடிவாகும். பிரபஞ்சத்திற்கு பார்ப்பனியம் இறைமய்யப்படுத்தியதை, பவுத்தம் அறமயப்படுத்தியதே புத்தரின் மூலச் சிறப்பாகும்.
புத்தர் நடைமுறை சார்ந்து இயங்கியவர். அவரைப் பொறுத்தமட்டில் பார்ப்பனியம் கேலிக்குரியதே. வர்ணக்குணம், வர்ணக் கடமை, சாதிப்புத்தி எதையும் புத்தர் ஏற்றுக் கொள்ளவில்லை. குணங்களின் அடிப்படையில் சதுர்வர்ணம் பிரிக்கப்படுவதை முற்றாக மறுத்து நின்றார். சுயதர்மம் (சாதிக்கடமை) பேணுவதன் அடிப்படையில் தூயவை, தீட்டானவை எனப் பிரிக்கப்பட எதுவுமில்லை என்றார். வர்ண அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்துதலை புத்தர் முழுமையாக எதிர்த்தார். பிறவி அடிப்படையில் சாராம்சமான பண்புகளையுடைய வர்ண தர்மத்தை பவுத்தம் மறுத்தது மட்டுமின்றி, சமருக்கும் ஆயத்தமானது வரலாற்றின் படைப்புப் புள்ளிக்கும் ஆதாரமானது குறிப்பிடத்தக்கது.
“சொந்த மக்களுடனேயே போராடியவர்''
“இதோ இங்கே ஒரு சாக்கிய இளைஞர், பாரம்பரியப் பெருமை வாய்ந்தவர், உன்னதமான பெற்றோர் வாய்க்கப் பெற்றவர், செல்வ வளம் கொண்டவர், ஆரோக்கியமான தேகம், உள்ளம் உடையவர். இம்மண்ணில் அமைதியை நிலைநாட்டவும், மனிதர்களுக்கு நன்மை செய்வதற்காகவும் தம் சொந்த மக்களுடனேயே போராடினார். இந்த சாக்கிய இளைஞர், தம்மக்களின் வாக்குகளாலேயே தோற்கடிக்கப்பட்ட பிறகும் பணிய மறுத்து அதற்கான தண்டனையை தாமே வலிய ஏற்று நிற்கிறார்.
அத்தண்டனையில் அவர் செல்வத்துக்கு மாறாக வறுமையையும், வசதிகளுக்கு மாறாகப் பிச்சையையும், இல்லற நிழலுக்கு மாறாக இல்லறம் துறப்பதையும் ஏற்றிருக்கிறார். இதனால், இவர் தன்னைப் பேணவும் யாருமின்றி, தன்னுடையது என உரிமை கொண்டாடவும் ஏதுமின்றி அனைத்தையும் துறந்து செல்கிறார். இவருடைய இச்செயலானது, அவரே மனமுவந்து செய்த மிகப் பெரிய தியாகமாகும். இது மிகவும் துணிச்சலான, தீரமிக்கச் செயலாகும். உலக வரலாற்றில் இத்தியாகத்திற்கு இணையானது வேறெதுவுமில்லை. இவர் ‘சாக்கிய முனி' என்றோ ‘சாக்கியச் சிங்கம்' என்றோ அழைக்கப்படத் தகுதி வாய்ந்தவர்.
சித்தார்த்தர் துறவறம் நோக்கி விடைபெற்றபோது மக்கள் வியந்து கூறியது.
ஆதாரம் : ‘புத்தா' - புத்த தம்மத்தின் சாரமும் அதன் நடைமுறையும்;
ஆனந்த் ; பக்கம் : 18 ; வெளியீடு : சம்ருத்பாரத் வெளியீடு, மும்பை
விடுதலை வேர்
தலித் மக்களின் மறைக்கப்பட்ட வரலாற்றையும், மறுக்கப்பட்ட அடையாளங்களையும் வெளிக்கொணரும் அரசியல் அரங்கமாகவும், தலித் மக்களின் சமூக, மார்க்க, பொருளாதார, அரசியல் விடுதலைக்கான வேர்களைப் பண்பாட்டு வடிவங்களில் மீட்டெடுக்கும் கலை இலக்கியத்தளமாக விளங்கும் ‘தலித் கலை விழா', மதுரையில் பதினோரு ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தலித் கலை விழாவை நிகழ்த்தும் ‘தலித் ஆதார மய்யம்' - தலித் விடுதலைக்கான சித்தாந்தங்களை, தத்துவங்களை, வரலாறுகளை எழுத்துகள் வழியே படைத்தளித்து வரும் மூத்த தலித் எழுத்தாளர் ஒருவருக்கு ‘விடுதலை வேர்' என்ற விருது வழங்கி மரியாதை செய்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் விடுதலை வேராக சமூமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகத்தைத் தெரிவு செய்து, 18.3.2006 அன்று மதுரையில் நடைபெற்ற தலித் கலை விழாவில் ‘விடுதலை வேர்' விருதை வழங்கியுள்ளது.
-ஏ.பி.வள்ளிநாயகம்
.---