கீற்றில் தேட...

 

தொழிலாளி என்கிற பதத்துக்கு அர்த்தம் என்ன? வேலை செய்கிறவன் என்று அர்த்தமாகும். ‘யாவருந்தான் வேலை செய்கிறார்கள். அப்படி இருக்க ஒரு கூட்டத்திற்கு மாத்திரம் தொழிலாளி என்று பெயர் கொடுக்கப்பட்டிருப்பானேன்?' என்றால், பிறருக்கு ஆக தொண்டு செய்து மநுதர்ம சாஸ்திரப்படி, தொழிலாளியாகவே வாழ்பவர்கள், தொழிலாளி என்று அழைக்கப்படுகிறார்கள். அந்தக் கருத்தில் பார்த்தால், திராவிடர்களாகிய நாம் யாவரும் தொழிலாளிகள் அல்லவா என்று கேட்கிறேன்.

Periyar E.V.Ramasamy
எந்திரங்களின் முன்னால் நிற்பவர்கள் மாத்திரம் தானா தொழிலாளர்கள்? வண்டி ஓட்டுகிறவர்கள், வண்டி இழுக்கிறவர்கள், வீதி கூட்டுகிறவன், கக்கூசுக்காரன், வண்ணார், நாவிதர், குயவன், உழுபவன், விதைப்பவன், தச்சன், கொல்லன், சக்கிலி, பறையன், செக்கு ஓட்டுகிறவன், நெசவு நெய்பவன் முதலிய சரீரத்தால் உழைத்து வயிற்றுக்கு, வாழ்வுக்கு மாத்திரம் சம்பாதித்து அன்றாட வாழ்க்கைக்கு, அன்றாடம் வரும்படி எதிர்பார்த்து நிற்கும் யாவரும் தொழிலாளி அல்லவா?

இன்று இந்த மாதிரி தொழிலாளிகள் யார்? பார்ப்பனர்களா? சத்தியர்களா? அல்லவே! சூத்திரர்கள்தானே இந்த மாதிரியான தொழிலாளிகளாய் இருக்கிறார்கள். அந்தச் ‘சூத்திரர்' என்கின்ற பட்டியலில் சட்டப்படியும், சாஸ்திரப்படியும், கடவுள் சிருஷ்டிப்புபடியும், காரியத்தில் நடப்புப்படியும் இருந்து வருகிறோம்! இதை எந்தத் தொழிலாளியாவது மறுக்க முடியுமா? நான் மேலே சொன்ன தொழில்களில் ஒரு ‘பிராமணன்' இருக்கிறானா? ஆகவே, சரீரத்தினால் பாடுபடும் வேலை அவ்வளவும் சூத்திரர்கள் என்று அழைக்கப்படும் ஆக்கப்பட்டிருக்கும் திராவிடர்களாகிய நம் கையிலேயே இருப்பதால், திராவிடர் இயக்கம் தொழிலாளிகள் இயக்கம் என்று சொல்லுகிறேன்.

ஆகவே திராவிடர் கழகம் என்பது, 4 ஆவது வர்ணத்தாராக ஆக்கப்பட்டு, சமுதாயத்தில் இழிவுபடுத்தி, சரீரப்பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தி வைத்திருக்கும் ஒரு 4 கோடி மக்கள் கொண்ட சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட விடுதலைக் கழகத்தைத் தொழிலாள மக்கள் உணர்ந்து கொள்ளாமல், திராவிடர்களின் எதிரிகளின் ஆதிக்கத்திற்காக ஏற்பட்டிருக்கும் காங்கிரசிலும், திராவிட எதிரிகள் தலைமை வகித்து நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் சார்ந்திருப்பதோடு, திராவிடர்களின் எதிரிகளுக்கு அடிமைகளாகவும் ஒற்றர்களாகவும் இருக்கும் புராணப் பிரசங்க, புராண வாழ்வுக்காரர்களுக்குச் சிஷ்யர்களாகவும் இருப்பது எவ்வளவு அறியாமை, மானக்கேடு என்று பாருங்கள்.

கவலையுள்ள எங்களைப் போன்றவர்களையும் திராவிடப் பிள்ளைகள் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள், காலித்தனம், காலடித்தனம் செய்கிறார்கள் என்பதல்லாமல் வேறு என்ன? இப்படிப்பட்ட மானம் கெட்ட மானத்தில், ஈனத்தில் கவலையில்லாத ஜாதி எந்தக் காலத்திலும் முன்வர முடியாது. ஆகவே நம் திராவிடர்களுக்கு, தொழிலாளர்களுக்கு, சூத்திரர்களுக்கு விடுதலை, மாறுதல் வேண்டுமானால் முதலில் மானம் வரவேண்டும். எதிரிக்கு விபீஷணனாய், அனுமாராய் இருப்பதைப் பற்றி வெட்கப்பட்டு எதிரியை, எதிரி ஆயுதத்தை வெறுக்க வேண்டும். தனது இழிவுக்கு அடிப்படை எது என்று பார்த்து அதைப் பெயர்த்து தகர்த்தெறிய வேண்டும்.

சில தொழிலாளர் தலைவர்கள் என்பவர்கள் என்மீது குரோதம் கொண்டிருக்கிறார்கள். என்னைப்பற்றி விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். ‘ராமசாமி நாயக்கர் மதத்தில், கடவுளில் பிரவேசிக்காவிட்டால் நான் அவருடன் நேசமாக இருப்பேன். ஆனால், அவர் நாத்திகம் மதத்துவேஷம் பேசுகிறார். ஆகையால் ஜாக்கிரதையாக இருங்கள்' என்று உங்கள் தலைவர்களில் சிலர் சொல்லி, உங்களை என்னிடம் அணுகவிடாமல் செய்கிறார்கள். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.

எது மதம், எது கடவுள் என்பது இந்த அன்னக் காவடிகளுக்குத் தெரியுமா? நான் எந்த மதத்தை, எந்தக் கடவுளை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகிறேன் என்பது, இந்தத் தற்குறிகளுக்குத் தெரியுமா என்று கேட்கிறேன். எந்த ஒரு மதம் ஒரு மனிதனை, ‘பிராமணனாக'வும் ஒரு மனிதனைச் சூத்திரனாகவும் அதாவது தொழிலாளியாகவும் பாட்டாளியாகவும், பறையனாகவும் உண்டு பண்ணிற்றோ, அந்த மதம் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். ஒழிய வேண்டுமா வேண்டாமா? (ஆம், ஒழிய வேண்டும் என்னும் பேரொலி).

எந்தக் கடவுள் ஒருவனுக்கு நிறையப் பொருள் கொடுத்தும், ஒருவனுக்குப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழ உரிமை கொடுத்தும் மற்றொருவனை உழைத்து உழைத்து ஊரானுக்குப் போட்டுவிட்டுச் சோற்றுக்குத் திண்டாடும்படியும், ரத்தத்தை வேர்வையாய்ச் சிந்தி உடலால் உழைத்தவண்ணம் இருந்து கீழ் மகனாய் வாழும்படியும் செய்கிறதோ, அந்தக் கடவுள் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். அந்தக் கடவுள் ஒழிய வேண்டுமா, வேண்டாமா? ஆகவே தோழர்களே! இது சொன்னால் நான் நாத்திகனும், மதத் துவேஷியுமா? ‘ஆம் ஒழிய வேண்டும்' என்று சொன்ன நீங்கள் மதத்துவேஷியா, நாத்திகர்களா?

சென்னை ‘பி அண்ட் சி மில்' தொழிலாளர்கள் கூட்டத்தில் 30.6.1946 அன்று ஆற்றிய உரை