சந்திப்புகள் மனித அமைப்பின் மிக முக்கிய வளைவுகள். சந்திப்புகள் இல்லாத எந்தப் பாதையும் தொடர்வதில்லை.

சந்திப்புகளில் ஆச்சரிய நொடிகள் எதிர்பாராத சந்திப்புகளில் நிகழும். கவனித்திருப்பீர்கள். எங்கோ போய்க் கொண்டிருப்போம். கொஞ்சம் கூட நினைத்து பார்த்திராத ஒருவரை சந்திக்க நேரும். திக்கு முக்காடும். சொர்க்களற்று முகம் மலர்ந்து நிற்போம். உறவுகளின் சிறகுகள் பொறுத்து கை குலுக்கல்... ஹக் குடுத்தல்... கண்ணீர் துளிர்த்தல்.. ஏன் முகம் திருப்புதல் கூட நடக்கும்.

எதிர்பாராத சந்திப்புகளை எல்லாருமே சந்தித்திருப்போம். விரும்பத்தக்க தருணமாகவும் அது இருந்திருக்கும். விரும்பத்தகாத தருணமாகவும் அது இருந்திருக்கும். எப்படி எதிர்வினை ஆற்றுவது என தெரியாத தருணமாகவும் அது இருந்திருக்கும். சட்டென தலையை உள்ளிழுத்து ஒதுங்கிக் கொண்ட தருணமாகவும் அது இருந்திருக்கும்.

பொள்ளாச்சி பேருந்தில் கூட்டம். 

நிற்க கூட முடியாத சூழலில்... டேய் விஜி என்ற குரல் தீர்க்கமாக என்னை திரும்ப வைத்தது. ஆச்சரியம் நிறைந்த முகம். கண்களில் சந்தோஷ மின்னல். ஆனால் நான் யாரோ போல பார்க்கிறேன். யாருன்னு... வாய் முனகுகிறது. அவரும் தன் பெயர் சொல்லி நான் தான்டா என்கிறார். அந்த டா வே எனக்கு பிடிக்கவில்லை. மேலும் பிடிபடவே இல்லை. அவரும் என்னென்னவோ அடையாளம் சொல்கிறார். ம்ஹும்.. எதற்கும் என்னிடம் வழி இல்லை. யாரு... எங்க பார்த்தேன்... ஒன்றுமே நினைவிற்கு வரவில்லை. ஒரு கட்டத்துக்கு பிறகு நான் அவரை அவாய்ட் பண்ணுகிறேன் என்பதாக நினைத்துக் கொண்டு.. சரி... விடுடா என்று திரும்பிக் கொண்டார்.

பொள்ளாச்சி வந்து கோவை பேருந்தில் ஏறி அமர்ந்த போது திக்கென நினைவுக்கு வந்தது. அவரோடு சேர்ந்து எத்தனை சினிமாக்கள் பார்த்திருப்பேன். ரொம்ப பழக்கம். 8 வருட இடைவெளியில் இப்படி மறந்திருக்கிறேன். நினைக்கும் போதே வினோதமாக இருந்தது. மனதுக்கு மட்டுமல்ல.. கண்களுக்கும் நெருக்கமான ஒரு மனிதனை இப்படி மறக்க முடியுமா. இந்த கேள்விக்கு அதன் பிறகு 5 வருடங்களுக்கு பிறகு எனக்கு விடை கிடைத்தது. முடியும். 

என் தோழியின் அக்காவை ஒரு மருத்துவமனையில் சந்திக்க நேர்ந்தது. அக்கா எப்பிடி இருக்கீங்க என்று நலம் விசாரித்து.. அவர் கணவரின் உடம்புக்கு என்ன என்று விசாரித்து... வீட்டுக்கு வாங்க என்று சொல்லி.. அதன் பிறகு மெல்ல அந்தக்கா கேட்டது. என்னை சுட்டிக்காட்டி.... இது யாரு என்று.

அட நம்ம விஜிப்பையன்...- என்றார் அவர் கணவர்.

ம்ஹும்.... கண்டுபிடிக்க முடியவில்லை.

அட உன் தங்கச்சி பிரென்ட்...

ம்ஹும்..
.
சைக்கிள்ல எத்தனை வாட்டி பின்னால் உக்காந்து போயிருக்க.

ம்ஹும்... அட டேன்ஸ் நல்லா ஆடுவானே...

ம்ஹும்...

சரி விடுங்க என்று கிளம்பி விட்டேன். ஒரு வேளை கொஞ்ச நேரம் கழித்து எனக்கு வந்தது போல அந்தக்காவுக்கும் நினைவு வந்திருக்கலாம். நினைவுகளின் சுழற்சி மறதியின் கை பிடித்தே தான் எப்போதும் இருக்கிறது.

வேண்டும் என்றே தெரியாதது போல பேசி விட்டு வருவது வேறு. இந்த ரெண்டு நிகழ்விலும்... பொய்யோ.. ஏமாற்றோ இல்லை. முன்பிருந்த வாழ்வின்... அந்தப் பகுதியை கடந்து விட்ட நிறைவாகத் தான் உணர்கிறேன்.

எதிர்பாராமல் சந்தித்த நண்பனிடம் கொடுத்த ரெஸ்யூம் தான் முதல் வேலையை வாங்கி தந்தது. அந்த கம்பெனியில் வேலை செய்த கவிக்குயிலோடு காதல் வளர்த்து கல்யாணத்துக்கும் வழி செய்தது.

நீண்ட நெடுங்காலத்துக்கு பிறகு மருதமலையில் பி காம் பி கிளாஸ் நண்பன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது. கட்டிக்கொண்டோம். காயத்ரி பற்றியெல்லாம் அளாவிக் கொண்டோம். ஆனால் அலைபேசியில் நம்பரை சேமிக்கையில் அவனும் தடுமாறினான். நானும் தடுமாறினேன். இருவருமே எங்கள் பெயர்களை மறந்திருக்கிறோம். இப்படி எதிர்பாராத சந்திப்புகளின் சுவாரஷ்யம் விசித்திரமானவை. வீடு வந்து சேர்ந்த போது பெயர் நினைவுக்கு வந்து விட்டது வேறு.

பழைய கம்பெனியின் சிஸ்டர் கன்செர்ன் -க்கு செக்கிங் போன போது... ஒரு மெஷின் ஆப்ரேட்டர் தயங்கி தயங்கி என்னிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். ஏன் இப்படி இத்தனை தயக்கம் என்று யோசித்தபடியே வேலையை முடித்து விட்டு வெளியே வருகையில்... பின்னாலயே வந்து நீங்க விஜிதான என்றான். நான் திரும்பி அவன் முகத்தை பார்த்து ஆமா என்று சொல்ல சொல்லவே தெரிந்து விட்டது. என்னோடு ஐந்தாவது படித்த நண்பன். டேய்.. என்று கட்டிக் கொண்டேன். ஆச்சரியம் தாங்காத அவன் கைகளில் நடுக்கம். எனக்கு கண்களில் என்னென்னவோ சிமிட்டல். இல்ல தெரிஞ்சுக்கிட்டு தான் அவாய்ட் பண்றயோன்னு நினைச்சேன் என்றான். ஐயையோ அப்பிடி இல்லடா என்று பேச ஆரம்பித்து... அது ஒரு அழகிய சந்திப்பாக இப்போது வரை இருக்கிறது. 

கவிக்குயில் சிறுவயது போட்டோவை என் அலுவலகத்தில் காட்டிக் கொண்டிருக்க... எங்கள் ரிசப்ஷனிஸ்ட் உற்று பார்த்தபடியே... அவள் அந்த புகைப்படத்தில் என்னவோ கண்டு பிடித்து விட்டாள். அவள் முகம் யோசிக்கிறது. கண்கள் தேடுகிறது. நினைவடுக்கில் இருந்து தோண்டி எடுத்த புன்னகையை ஹேய்... என்று சத்தமிட்டபடி முன் வைக்கிறாள்.

என்ன... என்று கேட்பதற்குள்...விஜி இது கவிதா தான என்றாள்.

ஏதோ கணிப்புல கண்டு பிடிச்சிட்டா போல என்று நான் அவளையே கவனிக்க.. பக்கத்துல உக்கார்ந்துருக்கற புள்ள யாருனு தெரியுதா என்று கேட்டாள்.

நான் ஆச்சரிய தடுமாற்றத்தில் யோசிக்க... லூசு அது நான் தான்டா... என்று சிரித்துக் கொண்டே... உன் பொண்டாட்டி என் பிரென்ட் கவிதாவா என்று ஆச்சரியப்பட்டு அதன் பிறகு போனில் பேசி கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு பிறகு தோழிகள் சந்தித்தார்கள்.

எனக்கு கல்லூரியில் ஒரு தோழி இருந்தாள். சூப்பர் ஜுனியர். அவள் அக்கா கல்யாணத்துக்கு போன போது தான் தெரிந்தது. என் சூப்பர் சீனியர் தோழி தான் அவள் அக்கா என்று. அக்கா தங்கைகளை தனித்தனியாக நண்பிகளாக கொண்டிருக்கிறேன். இரண்டு வருடம் மூத்தவள் ஒருத்தியிடமும் இரண்டு வருடம் இளையவள் ஒருத்தியிடமும். பிறகு தொடர்பற்ற இருவருக்குமான பல சம்பவங்கள் இலகுவாக தொடர்புக்குள் வந்தன. இந்த மாதிரி இரண்டு அக்கா தங்கை சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆச்சரியம் தாளாமல் ஆவென மூவரும் பார்த்துக் கொண்டு நின்ற கணங்கள் வாவ் நிமிடங்கள். 

ஒவ்வொரு வளைவிலும் ஆச்சரியம் தான் இந்த சந்திப்புகள். தவிர்க்க நினைத்த நிகழ்வுகளின் வழியே வாழ்நாள் தோள்களை சந்தித்த சுவாரஷ்யமும் உண்டு. 

ஒருமுறை ரேஸ் கோர்ஸில் என் ஒண்ணாம் வகுப்பு டீச்சரை சந்தித்தேன். என்னென்னவோ சொல்லியும்.. டீச்சருக்கு என்னை நினைவு வரவில்லை. ஆனால் நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு பார்க்கிறேன். மனம் கைகட்டி நின்று விட்டது. துளி கூட எதிர்பாராத சந்திப்பு அது. சட்டென உலகம் நின்று விட்ட உணர்வு அது. ஆச்சரியமும் திகைப்புமாக ஸ்தம்பித்து விட செய்யும் நேரம் அது. போன வாரம் கூட பழைய கம்பெனியின் செக்ரெட்டரியை (15 வருடங்களுக்கு பிறகு) ஒரு கடையில் சந்தித்தேன். அந்த லூசு என்னை ஹெல்மெட்டுக்குள் நுழைந்து கண்டு பிடித்து விட்டது. என் உடல் மொழியை அது மறந்திருக்க வாய்ப்பில்லை.

நீ என்று கையை நீட்டியது. நான் இல்ல என்றபடியே சிறு சிரிப்போடு நகர்ந்து விட்டேன். அது கூட பேசவோ பகிர்ந்துக்கவோ ஒன்றும் இல்லை. இப்படியும் சில எதிர்பாராத சந்திப்புகள் இருக்கும். சந்திப்புகளின் ஸ்னாப் கிளிக் கிளிக் கிளிக் என்று மனதுக்குள் பட்டன் தட்டிக்கொண்டே இருக்கிறது. 

யோசிக்கிறேன். சந்திப்புகளில் முதல் ஐந்து நிமிடம் நம்முடையது இல்லை. நம் நினைவுகளுடையது. இல்லையா....!

- கவிஜி

Pin It