rajini gurumoorthy and vengaiahசூப்பர் ஸ்டாருக்கு ஒரு மனம் திறந்த மடல்

மதிப்பிற்குரியவராக ஒரு காலத்தில் இருந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு,

ஆம்! உங்கள் மீது இருந்த மதிப்பு 03.12.2020 அன்றோடு முற்றிலும் சிதைந்து விட்டது. காரணம் நீங்கள் அரசியலுக்கு வந்ததால் இல்லை.

யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள் இந்நாட்டில். எங்கள் பெருவிருப்புக்குரிய நடிகரான நீங்கள் வந்தால் எங்களுக்கு என்ன கசக்கவா போகிறது? கண்டிப்பாக இல்லை! ஆனால் நீங்கள் எப்படி, எப்பொழுது, யாருடன் அரசியல் களத்தில் இறங்குகிறீர்கள் என்பதுதான் எங்கள் வெறுப்புக்குக் காரணம்.

தமிழர்கள் நாங்கள் முப்பது ஆண்டுகளாக அழைத்துக் கொண்டிருக்கிறோம் உங்களை அரசியலுக்கு வரச் சொல்லி. அப்பொழுதெல்லாம் வராத நீங்கள் அமித்சா, குருமூர்த்தி என இரண்டு பார்ப்பனர்கள் அழைத்ததும் ஓடோடி வருகிறீர்கள் என்றால் நீங்கள் செய்யப் போகும் அரசியல் யாருக்கானது என்பதை விளக்க வேண்டியதில்லை.

சரி, வருவதுதான் வருகிறீர்கள். அந்த வருகையின் தொடக்கமாவது ஒழுங்காக இருக்கிறதா? கட்சி தொடங்குவதாக அறிவித்த உடனேயே "வந்தவுடன் எல்லாத்தையும் மாத்தணும்" எனத் திமிர்ப் பேச்சுப் பேசுகிறீர்கள்! அப்படியா இங்கு எல்லாமே கெட்டுச் சீரழிந்து போயிருக்கிறது? முதலில் இது எப்பேர்ப்பட்ட மாநிலம் என்பது தெரியுமா உங்களுக்கு? முன்னேற்றக் குறியீடுகளில் இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழ்நாட்டின் இடம் எது என்பதை அறிவீர்களா நீங்கள்?

  • அசோச்செம் நிறுவனத்தின் 2015ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி பொருளாதாரம், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி என 9 முன்னேற்றக் குறியீடுகளுள் 8-இல் இந்தியாவிலேயே முதலிடத்தில் திகழ்வது தமிழ்நாடு!
  • பாலினச் சமத்துவ விகிதத்தில் (Sex Ratio) இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் விளங்குவது தமிழ்நாடு!
  • கல்வியைப் பொறுத்த வரை மக்கள்தொகை அடிப்படையில் நாட்டிலேயே மூன்றாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு!
  • சுகாதார அளவுகோல்களில் ஒன்றான பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தைப் (IMR) பொறுத்த வரை 5 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் தனிப்பெரும் நிலப்பரப்புகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் இந்தியாவிலிருந்து அப்பட்டியலில் இடம்பெறக்கூடிய தகுதி படைத்த ஒரே மாநிலம் தமிழ்நாடு!
  • அதிகப் பிரசவங்களால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவைக் கட்டுப்படுத்துவதில் சீனாவை விட, உலக வல்லரசான அமெரிக்காவை விட விஞ்சி நிற்பது தமிழ்நாடு!
  • தனிநாடுகளாக இருந்திருந்தால் எப்பொழுதோ முன்னேறியிருக்கக் கூடியவை என்று பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் அவர்களால் பாராட்டப் பெற்ற இரண்டே இந்திய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு!

இப்படிப் பல வகைகளில் இந்நாட்டின் வேறெந்த மாநிலத்தோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்ந்து நிற்கும் ஒரு முன்னோடி மாநிலத்தில் வந்து எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்கிறீர்களே, இவையெல்லாம் என்ன மாற்றப்பட வேண்டியவையா? இதென்ன உங்கள் தோழமைக் கட்சியான பா.ஜ.க ஆளும் பீகாரா, உத்திரப் பிரதேசமா எல்லாமே மாற்றப்பட வேண்டிய அளவுக்குச் சீர்கெட்டுக் கிடப்பதற்கு?

அதற்காக இங்கே எந்தக் குறையுமே இல்லை என நான் சொல்லவில்லை. மாற்றப்பட வேண்டியவை இங்கும் இருக்கவே செய்கின்றன. ஆனால் அந்த மாற்றங்களை யாரைக் கொண்டு நீங்கள் முன்னெடுக்கப் பார்க்கிறீர்கள் என்பதுதான் அடுத்த பெரும் தவறு!

உண்மையில் தமிழ்நாட்டின் இவ்வளவு முன்னேற்றங்களுக்கும் காரணம் இத்தனை ஆண்டுகளாக மாறி மாறி இம்மாநிலத்தை ஆண்ட இரு திராவிடக் கட்சிகள். ஆம்! நீங்கள் அரசியல் வழிகாட்டிகளாக வைத்திருக்கிற துக்ளக் அறிவாளிகள் நாட்டிலேயே மிக மோசமான அரசியல்வாதிகளாக யாரைத் திரும்பத் திரும்பச் சித்தரித்து வந்தார்களோ அந்தக் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் இந்த மண் இவ்வளவு முன்னேற்றங்களையும் அடையக் காரணர்களாக இருந்தார்கள்.

ஆனால் நீங்களோ தமிழ்நாட்டின் கால்மாட்டில் நிற்கக்கூடத் தகுதியில்லாத அளவுக்குத் தாங்கள் ஆளும் மாநிலங்களை வைத்திருக்கிற பா.ஜ.க - வைத் துணைக்கு வைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றப் போவதாக முழங்குகிறீர்கள்! தெரியாமல்தான் கேட்கிறோம், நீங்கள் தமிழ்நாட்டின் தலையெழுத்தை எப்படி மாற்ற வருகிறீர்கள், நல்லவிதமாகவா கெட்டவிதமாகவா?

இதுவரை சொன்னவையாவது தமிழ்நாடு பற்றி உங்களுக்குப் போதுமான தகவல்கள் தெரியாததால் ஏற்பட்ட தவறுகள் என விட்டு விடலாம். ஆனால் எப்படிப்பட்ட சூழலில் நீங்கள் இன்று அரசியலுக்கு வருகிறீர்கள் என்பதுதான் இவை எல்லாவற்றையும் விடக் கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மறைமுக பா.ஜ.க ஆட்சியிலிருந்து எப்பொழுது தப்பிக்கலாம் என்று தீப்பிடித்த வீட்டிலிருந்து வெளியேறத் துடிப்பவர்களாய்த் தமிழ் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ இத்தனை காலம் விட்டுவிட்டுச் சரியாக இப்பொழுது வந்து அரசியலில் குதிக்கிறீர்கள்.

இதனால் எதிர்க்கட்சிக்குப் போக வேண்டிய எதிர்ப்பலை வாக்குகள் சிதறி, நீங்களும் வெல்ல முடியாமல் தி.மு.க-வும் வெல்ல முடியாமல் மறுபடியும் இதே அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிதான் ஆட்சி அமைக்க ஏதுவாகும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் நீங்கள் அதைச் செய்ய முற்படுகிறீர்கள்!

அப்படியே விட்டாலே தமிழ்நாடு எப்போதும் போல் தன்பாட்டுக்கு முன்னேற்றப் பாதையில் போய்க் கொண்டிருக்கும். ஆனால் அதைப் பின்னுக்கு இழுப்பதே இன்றைய ஆட்சியாளர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியாதது இல்லை.

தமிழர்கள் எட்டியிருக்கும் கல்வி முன்னேற்றத்தைச் சிதைக்கத் தேசியக் கல்விக் கொள்கை, மொழியை அழிக்க மும்மொழிக் கொள்கை, எங்கள் வரிப் பணத்தில் கட்டிய அரசு மருத்துவக் கல்வியிடங்களை மற்ற மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வு, வேளாண்மையை அழிக்க எட்டு வழிச்சாலை முதற்கொண்டு பல பேரழிவுத் திட்டங்கள், எங்கள் மாநில அரசு வேலைவாய்ப்புகள் எங்களுக்கே கிடைக்காமல் வெளி மாநிலத்தவர்களைக் கொண்டு அவற்றை நிரப்ப முழுவீச்சில் நடைபெறும் மோசடிகள் என இருக்கிற அத்தனை வகைகளிலும் எங்கள் வாழ்க்கையில் மண்ணள்ளிப் போடுகிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்.

இப்படிப்பட்ட சூழலில் தேர்தலில் நின்று இருக்கிற ஒரே வழியையும் இழுத்துப் பூட்டுகிறீர்களே! இதை விடப் பெரிய கொடுமையை நீங்கள் தமிழ் மக்களுக்குச் செய்து விட முடியுமா ரஜினி அவர்களே?

உங்கள் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்த எங்களுக்கு உங்கள் உடல், பொருள் ஆவி எதையும் நீங்கள் தர வேண்டா! மாறாக இவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்யாமலாவது இருந்திருக்கலாம்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நம்புவது போல் பாவம் புண்ணியம் ஆகியவையெல்லாம் இருக்குமானால் இந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது! வாழ்வளித்த மக்களுக்கு நீங்கள் செய்யும் இந்தப் பெரும் பாவத்திலிருந்து எந்த பாபாவாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது! எத்தனை கங்கையில் முழுகினாலும் இந்தப் பழியை உங்கள் வரலாற்றிலிருந்து நீங்கள் கழுவ முடியாது!

இப்படிக்கு,

- உங்கள் முன்னாள் விசிறி

Pin It