பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 10% இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 103 ஆவது திருத்தச் சட்டம், 2019 செல்லுபடியாகும் என்ற பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துக்கு எதிராக, நீதிபதி எஸ் ரவீந்திர பட், தலைமை நீதிபதி யு.லலித் இருவரும், “இது ஒரு விதிவிலக்கை அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்குகிறது, இது அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதாரமையத்தின் ஒரு பகுதியான சமத்துவக் குறியீட்டின் (Equality Code) இதயத்தைத் தாக்குகிறது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துடன் உடன்பட முடியாது என்று கூறிய நீதிபதி ரவிந்தர் பட், தனது தீர்ப்பில், “இந்தியக் குடியரசின் இந்த எழுபது ஆண்டுகளில் இந்த நீதிமன்றம் முதன்முறையாக, வெளிப்படையான விலக்கையும் பாகுபாடுகளையும் அனுமதித்துள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டம் விலக்கு மொழி (Language of Exclusion) எதுவும் பேசவில்லை. எனது கருத்துப்படி, புதிய விலக்கு மொழியைக் கூறும் இத்திருத்தம், சமூக நீதியின் கட்டமைப்பையும், அதன் மூலம் சட்டத்தின் அடிப்படை மாண்பையும் குறைக்கிறது” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
இந்த விலக்கு சமத்துவக் குறியீட்டின் பாகுபாடற்ற தன்மையையும், விதிவிலக்கு அற்ற விதியையும் மீறுவதால் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.வறுமையை எதிர்கொள்ளும் மக்கட்பிரிவினருக்கு உதவுவதற்காக இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல்களைச் சேர்ப்பதும் உருவாக்குவதும், பிரிவு 46 இன் படி, அரசியலமைப்பு கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வதாகாது. மேலும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுதலோ, மாற்றுவதோ அல்லது அழித்தலோ ஆகாது. பிரச்சனை எங்கிருக்கிறது என்றால், EWS இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும் முறையில்தான் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். பிரிவுகள் 15(4). 16(4) ஆகியவற்றின் மூலம் இட ஒதுக்கீடு பெறும் SC, ST, OBC வகுப்பினரை பொருளாதார வரம்பிலிருந்து மறைமுகமாக விலக்குவதில் தான் பிரச்னை இருக்கிறது “ என்றும் அவர் கூறுகிறார்.
நீதிபதி ரவீந்தர் பட், “சமூகத்தின் ஏழ்மையான பிரிவினரை இருவகைப் படுத்துகிறது இந்த புதிய EWS இட ஒதுக்கீட்டுக் கொள்கை. அதாவது, ஒரு பிரிவு ஏழைகள், உயர்சாதியினர், பழைய (SC, ST, OBC) இட ஒதுக்கீட்டின் பயனாளிகளாக இல்லதாவர்கள் என்றும், மற்றொறு பிரிவு ஏழைகள், ஜாதி, மற்றும் சமூகத் தடைகளால் பாகுபாடு கற்பிக்கப்பட்டதால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டோர் என்றும் பிரிக்கிறது. இதில் இரண்டாவது பிரிவை (SC, ST, OBC) புதிய இட ஒதுக்கீட்டில் இருந்து சட்டப்பூர்வமான முறையில் ஒதுக்கி வைப்பது, சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் அதிக அதிர்ஷ்டசாலிகள் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியேயாகும். இந்த பாகுபாடு சம வாய்ப்பின் சாராம்சத்திற்கு முற்றிலும் முரணானது.” என்றும் ரவீந்தர் பட் கூறுகிறார்.
SC, ST, OBC வகுப்பினர் ஏற்கனவே பலவகைப் பலன்களைப் பெரிதும் அனுபவிக்கின்றனர் என்ற வாதத்தைப் பற்றி ரவீந்தர் பட் கூறுகையில் ”SC, ST, OBC வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு இலவச அனுமதி அல்ல, மாறாக அவர்கள் சமூக இழிவுகளால் சமமற்றவர்களாக இருந்த ஒரு களத்தைச் சமன்படுத்தும் ஒரு முறையாகும்” என்றார்
"SC, ST, OBC உள்ளிட்ட சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினரை, அவர்கள் ஏற்கனவே உள்ள பலன்களை அனுபவிப்பதால், அவர்களை இந்த புதிய EWS இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைப்பது, கடந்தகால இயலாமையின் அடிப்படையில் புதிய அநீதியைச் செய்வதாகும் " என ரவீந்தர் பட்டின் சிறுபான்மைத் தீர்ப்பு கூறி இருக்கிறது
"முதலாவதாக, இது சமூகத்தில் கேள்விக்குரிய, பழைய முறையற்ற ஏற்றத்தாழ்வான நடைமுறைகளுக்கு உட்பட்டவர்களை (அவர்கள் சமூகத்தின் ஏழ்மையான பிரிவுகளில் இருந்தாலும்) வேறுபடுத்திக் காட்டுகிறது.. இரண்டாவதாக, புதிய இட ஒதுக்கீட்டின் பலன்களைச் சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்புகளுக்கும், சாதிகளுக்கும் தராமல் விலக்கி வைத்து, ஏற்கனவே வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்குள் மட்டுமே அவர்களை அடைத்து வைக்கிறது. மூன்றாவதாக, ஏற்கனவே தரப்பட்ட, கடந்தகால பாகுபாடுகளின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிலிருந்து பொருளாதார இழப்பை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீட்டுக்கு நகரும் வாய்ப்பை அவர்களுக்கு இது மறுக்கிறது” என்கிறது சிறுபான்மைத் தீர்ப்பு.
இந்த விதிவிலக்குக் கொள்கையின் நிகர விளைவு ஆர்வெல்லியன் கோட்பாடு போலத் தெரிகிறது. அதாவது இங்கு அனைத்து ஏழைகளும் அவர்களின் சாதியைப் பொருட்படுத்தாமல் கருத்தில் கொள்ளப் பட வேண்டும் என்ற நிலை மாறி உயர் சாதியினர் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுவதும், SC, ST, OBC வகுப்பினரையும், சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்களையும் தகுதியற்றவர்களாக மாற்றுவதும் நடக்கிறது என்கிறார் ரவீந்தர் பட்.
பொருளாதார நிலை இட ஒதுக்கீட்டிற்கு ஒரு அடித்தளமாக இருக்க முடியும் என்பதை ஒப்புக்கொண்ட சிறுபான்மைத் தீர்ப்பு, இந்தத் திருத்தமானது நமது சமூகத்தின் ஏழ்மையான பிரிவினருக்கு பாதைகளையும், வாய்ப்புகளையும் உருவாக்குகிறது, இதனால் அவர்களின் வறுமை, பொருளாதாரக் குறைபாடு, சரியான ஊதியமின்மை போன்றவற்றால் இழந்த வாய்ப்புகளை அடையவும், அவர்களால் சாதாரணமாக எதிர்பார்க்க முடியாத வாய்ப்புகளைப் பெற்று, அவர்கள் செல்ல முடியாத பகுதிகள், இடங்களுக்குச் செல்ல, பல வழிகளை உருவாக்குகிறது என்றும் கூறுகிறது.
ஏழ்மை, பொருளாதாரப் பற்றாக்குறை, வறுமை ஆகிய குறியீடுகள் இந்த விவாதத்துக்குரிய சட்டத் திருத்தத்தின் அடிப்படையாகும். எனவே அந்த அளவிற்கு இந்தச் சட்டத் திருத்தத்தை அரசியலமைப்பு ரீதியாக மறுக்க முடியாது. ஆனாலும், பெரும்பான்மையான ஏழை மக்களையும், சட்டம் ஏற்கனவே கருத்தில் கொண்டுள்ள கீழ் வர்க்கப் பிரிவினரையும், பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்காக உருவாக்கப்பட்ட புதிய வாய்ப்புகளின் பயனிலிருந்து தவிர்த்தது, அரசியலமைப்புச் சட்டம் தடை செய்த சமத்துவமின்மைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவதாகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரின் நிலையை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட சின்ஹோ கமிஷன், 2010 ஆம் ஆண்டு அறிக்கையில் 2004-2005 ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டியதை நீதிபதி ரவீந்தர் பட் சுட்டிக்காட்டினார். NSSO புள்ளிவிபரங்களின் படி. ஒட்டுமொத்தமாக, 31.7 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே (BPL) இருக்கிறார்கள், அதில் பட்டியலின மக்கள் 7.74 கோடி (அதாவது, 38% விழுக்காடு பட்டியலின மக்கள்), பழங்குடி மக்கள் தொகை 4.25 கோடி (அதாவது 48.4% பழங்குடியின மக்கள்), OBC மக்கள் தொகையில் 13.86 கோடி (அதாவது 33.1% பிற்படுத்தப்பட்ட மக்கள்), 5.85 கோடி பொதுப் பிரிவினர் (18.2% உயர்சாதியினர்) வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர்.
மேற்கண்ட புள்ளிவிவரங்கள் தரும் உண்மை என்னவெனில், சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரில் பெரும்பகுதியினர் அரசியலமப்புச் சட்டப் பிரிவுகள் 15(4), 16(4) ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ள (SC, ST, OBC) வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பதை நிறுவுகிறது என்றும் ரவீந்தர் பட் கூறினார்.
சிறுபான்மைத் தீர்ப்பானது, தனியார், அரசு உதவி பெறாத நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறது, தொழில்முறைக் கல்வியை வழங்கும் நிறுவனங்களை உள்ளடக்கிய உதவி பெறாத தனியார் நிறுவனங்கள் தேசிய நீரோட்டத்திற்கு வெளியே நிற்க முடியாது" என்றும் சிறுபான்மைத் தீர்ப்பு கூறுகிறது.
முந்தைய தீர்ப்புகளில் கூறியது போல், “தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக இல்லை. எனவே, தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்னும் ஒரு கருத்தாக்கத்தை நிராகரிக்க முடியாது. அவை அரசால் நடத்தப்படும் நிறுவனமாக இல்லாமல் இருக்கலாம், இருப்பினும் அவை சமூகத்தில் சேர்க்கும் மதிப்பு என்பது திறமையை வளர்த்து அறிவைப் பரப்புவதற்கான தேசிய முயற்சியின் ஒரு பகுதியாகும். அவ்வகையில் தனியார் கல்வி நிறுவனங்கள் சமூக வளங்களை உருவாக்குகின்றன. தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் வணிக நிறுவனங்களைப் போன்று அவற்றை நிறுவிய நிறுவனர்களின் தனிப்பட்ட நோக்கத்திற்காக அமைக்கப்படவில்லை என்பதைப் பார்க்கவேண்டும்.
50% இட ஒதுக்கீடு உச்சவரம்பு மீதான பெரும்பான்மைக் கருத்துடன் உடன்படாத நீதிபதி ரவீந்தர் பட், சில மாநிலங்களின் 50% உச்ச வரம்பு மீறலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஏற்கனவே நிலுவையில் இருப்பதால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 15(4) 16(4) ஆகியவற்றின் கீழ் அனுமதிக்கப்பட்ட 50% க்கு மேல. 10% இட ஒதுக்கீட்டைப் பெறும் இன்னொரு வகுப்பை உருவாக்குவது நிலுவையில் இருக்கும் மனுக்களின் மீதான விசாரணை மீது நேரடித் தாக்கம் செய்யும். எனவே, இந்த தீர்ப்பு நிலுவையில் உள்ள வழக்குகளை, சரியான விசாரணை இல்லாமலேயே முடிவுக்கு கொண்டு வரும் என்பதால் இங்கு எச்சரிக்கைக் குரலை நான் ஒலிக்க விரும்புகிறேன் என்றும் தனது தீர்ப்பில் ரவீந்தர் பட் குறிப்பிட்டுள்ளார்.
- அனந்தகிருஷ்ணன்
நன்றி: The Indian Express இணையதளம் (2022, நவம்பர் 8 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)
தமிழ் மொழியாக்கம்: கவுதமன்