ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான ஜனவரி 24-ம் தேதியில் இருந்து இதுவரை அதானியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடிகளுக்கு மேல் சரிந்துள்ளது. அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு ரூ.19.20 லட்சம் கோடியாக இருந்தது.
ஹிண்டன்பர்க் அதானி குழும நிறுவனதுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து, 88 கேள்விகள் அடங்கிய நீண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் 66 கேள்விகளுக்கு சம்மந்தமே இல்லாத பதில்களைச் சொன்ன அதானி குழுமம், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று அறிவித்துள்ளது.
ஆனால் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதை சந்திக்கத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் தங்களது குற்றச்சாட்டுகளை இந்தியாவுக்கு எதிரானது எனச் சித்தரிக்கும் அதானி குழுமம், தேசியத்தின் பின்னால் ஒளிந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளது.
சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டதை அடுத்து, அதானி எண்டர்பிரைசஸ் ரூ. 20,000 கோடி FPO மூலம் திரட்டும் திட்டத்தைக் கைவிட்டு முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பி அனுப்பியுள்ளது.சொத்து மதிப்பில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து, ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலில் 22வது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பட்டியலில் 3வது இடத்தில் இருந்தார்.
மோடி 2014-ல் பிரதமராக பதவியேற்கும் போது அதானியின் சொத்து மதிப்பு 60 ஆயிரம் கோடி மட்டுமே. ஆனால் இன்றைக்கு அவரது சொத்து மதிப்பு 20 மடங்கு உயர்ந்ததற்கு மோடியின் ஆசி மட்டுமே ஒரே காரணம்.
ஹிண்டன்பர்க் அறிக்கை வைத்த முக்கிய குற்றச்சாட்டு என்பது பட்டியலிடப்பட்ட 7 அதானி நிறுவனங்கள் தங்கள் பங்குகளின் விலையை அவற்றின் பங்கு மதிப்பில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக போலியாக அதிகப்படுத்தி பெருமளவில் கடன்களைப் பெற்றிருக்கின்றது என்பதுதான்.
ஹாங்காங் சார்ந்த முதலீட்டு குழுவான CLSA (கிரெடிட் லியோனைஸ் செக்யூரிட்டீஸ் ஆசியா) படி, அதானியின் ரூ. 2 லட்சம் கோடி 'கடன்' (மார்ச் 2022 நிதியாண்டு மதிப்பீட்டின் படி), 40 சதவீதம் இந்திய பொதுத் துறை வங்கிகள் மற்றும் எல்ஐசி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து வந்ததாகும். எல்ஐசி அதானியின் உயர்த்தப்பட்ட பங்குகளில் செய்த ரூ. 77000 கோடி முதலீட்டில் இரண்டு நாட்களில் மட்டும் ரூ. 23500 கோடி நஷ்டமடைந்தது.
அதானி குழுமத்திற்கு தனியார் வங்கிகளை விட இரண்டு மடங்கு கடனை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் வழங்கியுள்ளன. SBI மட்டுமே இந்திய அரசுடன் அதானியின் நெருங்கிய தொடர்பின் அடிப்படையிலும் வெறும் 'நம்பிக்கை' அடிப்படையிலும் மட்டுமே கடன் வழங்கியது. இந்த பணம் முழுவதும் வங்கியில் சேமித்து வைத்த சாமானிய இந்தியர்களின் பணமாகும்.
2002ல் அதானியின் முக்கிய ஹோல்டிங் நிறுவனத்தின் மொத்த மதிப்பு வெறும் 70 மில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது. ஆனால் பத்தாண்டு காலத்திற்குள், அதானி தனது சொத்தை 20000 மில்லியன் டாலராக அதாவது 300 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
அதானியின் சொத்து மதிப்பு ஊதி பெரிதாக்கப்பட்டதன் பின்புலத்தில் மிகப் பெரிய சதி நடந்துள்ளது. மொரிஷியஸில் உள்ள 38 நிறுவனங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சைப்ரஸ், சிங்கப்பூர் மற்றும் பல்வேறு கரீபியன் தீவுகளில் அந்த நாடுகளுடன் இந்திய அரசு போட்டுள்ள இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி ஷெல் நிறுவனங்களை நிறுவி, அதன் மூலமாக பெரிய மோசடிகள் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்த ஷெல் நிறுவனங்கள் என்பது போலியான நிறுவனங்கள் ஆகும். அந்த நிறுவனங்களில் ஊழியர்கள், முகவரி, தொலைபேசி எண்கள் என முறையான விவரங்கள் எதுவும் இருக்காது. ஆனால் பதிவு மட்டும் செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு பொய்யான நிறுவனங்களை உருவாக்கி பல ஆயிரக் கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம் நடத்திருக்கின்றது. குறிப்பாக அதானியின் சகோதரர் வினோத் அதானி இந்த சதிச்செயலின் மூளையாக செயல்பட்டுள்ளார்.
வினோத் அதானி இயக்குநராகப் பணியாற்றும் மொரீஷியஸ் நிறுவனத்திடமிருந்து 253 மில்லியன் டாலர் கடனும், வினோத் அதானியால் கட்டுப்படுத்தப்படும் மொரீஷியஸ் நிறுவனத்திடமிருந்து 692.5 மில்லியன் டாலர் முதலீடுகளும் பெறப்பட்டிருக்கின்றன.
வினோத் அதானி இந்தக் கம்பெனிகள் மூலம் அதானி குழுமத்தின் பங்குகளை செயற்கையாக ஊதிப் பெருக்குவது, அதானியின் தனியார் நிறுவனங்களிலிருந்து, பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள பொது நிறுவனங்களுக்கு பணத்தைச் செலுத்தி இவை ஆரோக்கியமாக இருப்பதான தோற்றத்தை உருவாக்குவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
கவுதம் அதானிக்கு அவரது சகோதரர் வினோத் அதானி ஏன் பெரும் தொகையை கடனாகக் கொடுத்தார்? அதற்கான பணம் வினோத் அதானிக்கு எங்கிருந்து வந்தது? என்று ஹிண்டன்பர்க் எழுப்பிய கேள்விக்கு யோக்கியன் அதானி “தெரியவில்லை” என்று பதில் அளித்து இருக்கின்றார்.
அதானி மட்டுமல்ல அதானியின் ஒட்டுமொத்த குடும்பமுமே மோசடிப் பேர்வழிகள் ஆவார்கள்.
அதானி குழுமத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் 22 பேரில் 8 பேர் கெளதம் அதானியின் குடும்ப உறுப்பினர்கள் ஆவார்கள்.
கெளதம் அதானியின் இளைய சகோதரர் ராஜேஷ் அதானி வைர வியாபாரத்தில் வரி ஊழல், கையெழுத்து மோசடி போன்ற குற்றங்களுக்காக 2004-2005 ஆண்டுகளில் இரு முறை கைது செய்யப்பட்டவர். அவருக்கு அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கெளதம் அதானியின் மைத்துனர் சமீர் வோராவும் வைர வியாபார ஊழலில் ஈடுபட்டதாகவும், பல முறை கண்காணிப்பாளர்களுக்கு தவறான கணக்கு சமர்ப்பித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவர். இவர் அதானி குழுமத்தின் ஆஸ்திரேலியா பிரிவிற்கு செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
ஒட்டுமொத்த பனியா குடும்பமும் சேர்ந்து நாட்டை மோடியின் துணையுடன் கொள்ளை அடித்திருக்கின்றார்கள். இந்திய மக்களின் சேமிப்புப் பணத்தை சூறையாடி இருக்கின்றார்கள்.
ஆனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்ஐசி “எங்களின் இந்த முதலீடு எங்கள் மொத்த சொத்தான 41 லட்சம் கோடி ரூபாயில் 1%கூட இல்லை; எனவே, இதனால் எல்ஐசி பாதிக்கப்படாது” என்று அலட்சியமாகவும் திமிர்தனத்துடனும் விளக்கம் அளித்துள்ளது.
அதே போல எஸ்பிஐ வங்கியும் “2022 டிசம்பர் 31ஆம் தேதி வரை அதானி குழுமத்திற்கு ஸ்டேட் வங்கியின் மொத்தக் கடன் ரூ.27,000 கோடி. எங்கள் வங்கியின் மொத்தக் கடனான 31 லட்சம் கோடி ரூபாயை ஒப்புநோக்கும்போது இது 0.88% மட்டுமே. அதானி குழுமத்தின் பங்குகளுக்கு எதிராக ஸ்டேட் வங்கி கடன் எதுவும் கொடுக்கவில்லை. எனவே, இதுபற்றி கவலை கொள்ளத் தேவையில்லை” என்று விளக்கம் அளித்துள்ளது.
எஸ்பிஐ மட்டும் அல்லாமல் ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகளும் 80,000 கோடி ரூபாய் அளவிற்கு அதானி குழுமத்திற்கு கடன் கொடுத்துள்ளன.
ஆனால் இவ்வளவு பெரிய மோசடிகள் அதானியால் அரங்கேற்றப்பட்டுள்ளன என அம்பலமான பின்னாலும் மீண்டும் அதில் எல்ஐசியும், எஸ்பிஐயும் முதலீடு செய்துள்ளன என்பதுதான் அதானிக்காக மோடி அரசு எவ்வளவு வெட்கக்கேடாக புரோக்கர் வேலை பார்க்கின்றது என்பதை அம்பலப்படுத்துகின்றது.
இத்தனைக்கும் அதானி குழுமங்களின் மொத்த பங்கு மதிப்பில் 74.8 சதவீதம் அதானியிடமும் மொத்தமாக 95 சதவீத பங்குகள் அதானி குடும்பத்தின் கட்டுப்பாட்டிலுமே உள்ளது.
இன்று அதானியின் போலி பிம்பம் அனைத்துமே சுக்குநூறாக உடைந்துள்ளது. 85 சதவீதம் மிகை மதிப்புப்படுத்தப்பட்டு ஊதிப்பெருக்கப்பட்ட அதானியின் சொத்தையும் அவர் வாங்கியிருக்கும் கடனையும் ஒப்பிட்டால் அவரின் சொந்த சொத்தாக ஒரு ரூபாய் கூட இல்லை என்பதும், அதானியின் வணிக ராஜ்ஜியம் முழுவதும் மோடியின் அருளால் வங்கிகளையும் எல்ஐசியும் சுரண்டி உருவாக்கப்பட்டது என்பதும் புலப்படும்.
ஆனால் அதானியின் வீழ்ச்சி சங்கிகளால் இந்தியாவின் மீதான தாக்குதலாக கட்டமைப்படுகின்றது. உண்மை என்னவென்றால் பங்குச் சந்தைக்கும் பெரும்பாலான இந்திய மக்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுதான்.காரணம். இந்தியாவில் 7 சதவீத மக்கள் மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்கின்றார்கள். இதுவே அமெரிக்காவில் 55 சதவீதம், ஆஸ்திரேலியாவில் 40 சதவீதமும் , பிரிட்டனில் 33 சதவீதமும், ஜப்பானில் 30 சதவீதமும் கனடா மற்றும் சீனாவில் 25% மற்றும் 13 சதவீதமாகவும் உள்ளது.
மேலும் அதானியின் குடும்பமே 95 சதவீதப் பங்குகளை வைத்திருக்கும் போது இதில் இந்திய மக்களுக்கு நேரடியாக எந்தப் பாதிப்பும் கிடையாது. மறைமுகமான பாதிப்பு என்பது எஸ்பிஐ மற்று எல்ஐசியின் பணம் முறைகேடாக அதானி குழுமங்களில் மோடியின் ஆசியால் முதலீடு செய்யப்பட்டதுதான்.
நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மோடியால் உருவாக்கப்படும் அனைத்து பணக்காரர்களும் உலக மகா திருடர்கள் என்பதும், அந்த திருடர்கள் அனைவரும் சங்கிகள் என்பதும்தான்.
- செ.கார்கி