கடந்த 1925 முதல் 1934ஆம் ஆண்டு இறந்து போகும் வரை ஜெர்மனியின் அதிபராகப் பதவி வகித்தவர் ஃபீல்டு மார்சல் பால் ஃபோன் இண்டன்பர்க். இவரது பெயர் தாங்கிய ஒரு வானூர்தி 1937 மே 6ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் புது ஜெர்சியில் மான்செஸ்டர் நகரியத்தில் கொடுநேர்ச்சிக்கு உள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர். அந்தக் காலத்தில் பெரும் அதிர்ச்சிக்கும் பரபரப்புக்கும் காரணமாய் அமைந்த இந்த நேர்ச்சியின் பெயரைப் பங்கு வணிக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தனக்குச் சூடிக் கொண்டது.
இண்டன்பர்க் எனும் இந்த அமெரிக்கப் பங்கு வணிக ஆராய்ச்சி நிறுவனம்தான் அண்மையில் இந்தியப் பன்னாட்டுப் பெருங்குழுமமான அதானி குழுமத்தின் மோசடிகளை ஆய்வு செய்து சனவரி 24ஆம் நாள் அறிக்கை வெளியிட்டு இந்திய அரசியலில் புயல் வீசச் செய்துள்ளது.
இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதிக்கும் கௌதம் அதானிக்குமான நெருக்கம் சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றில்லை.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இடர்ப்படாதவர்கள் யாருமில்லை. அது உடலியல் நலவாழ்வுக்கு மட்டுமல்ல, அனைவரின் பொருளியல் நிலைக்கும் பேரிடியாக விழுந்தது. நாடே முடங்கிப் போயிற்று. ஆலைகள், அலுவலகங்கள் மூடப்பெற்றன. புலம்பெயர் உழைப்பாளர்கள் பசி பட்டினியோடு நூற்றுக் கணக்கான கிலோமீட்டர் கால்கடுக்க நடக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. ஏற்கெனவே சுணக்கம் கண்ட நாட்டுப் பொருளியல் மேலும் வீழ்ச்சி கண்டது. இத்தனைக்கும் நடுவில் மிகச் சில பெருமுதலாளர்கள் மட்டும் வளர்ந்து கொண்டே இருந்தனர். அவர்களில் முதலிடம் பிடித்தவர் கெளதம் அதானி. அவர் தலைமையிலான அதானி குழுமம் மட்டும் முதல்பெருக்கிய வண்ணம் இருந்தது. அதானி உலகச் செல்வந்தர்கள் வரிசையில் மேலே மேலே ஏறிய வண்ணம் இருந்தார்.பொருளியல் வல்லுநர்களுக்கே இது புரியாப் புதிராகத்தான் இருந்தது. இந்தப் புதிரை விடுவித்து விட்டது இண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை. அதானியின் வளர்ச்சிக்கு இயல்பான தொழில்வணிக நடவடிக்கைகள் காரணமில்லை. ஏமாற்று மோசடிகளே அடிப்படை என்பதை இண்டன்பர்க் அறிக்கை உலகறியச் செய்து விட்டது. ஆட்சியாளர்களின் துணையில்லாமல் அதானி குழுமம் இவ்வளவு பெரிய மோசடிகளை நிகழ்த்தியிருக்க முடியாது. பொய்க் கணக்கு, போலி நிறுவனங்கள், பங்கு வணிகச் சூதாட்டம் என்று அதானி குழுமம் நடத்தியுள்ள மோசடிகளை உரிய சான்றுகளோடு இண்டன்பர்க் அம்பலமாக்கி விட்டது. அதானி குழுமப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் உடனே தங்கள் பணத்தை விலக்கிக் கொண்டனர்.
புதிதாக அந்தப் பங்குகளை வாங்கு வாரில்லை என்ற நிலை தோன்றியது. அதானி குழுமம் சடசடவென்று சரிந்து வீழ்ந்தது. இண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் தந்த ஒற்றை விடை என்ன தெரியுமா? இது இந்தியாவின் மீதான தாக்குதல் என்பதே. மோதி ‘சௌக்கிதார்’ ஆயிற்றே? இந்தியாவைக் காக்காமல் விடுவாரா? அதானியைக் காப்பாற்ற எல்லாத் தந்திரங்களையும் கையாண்டு வருகிறது அவரது ஆட்சி. பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்த வேண்டிய இந்தியப் பங்குப் பரிமாற்ற வாரியம் (செபி) போன்ற அமைப்புகள் அதானி குழும மோசடிகளைத் தெரிந்தே அனுமதித்துள்ளன. இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 420 மோசடிக் குற்றத்துக்குரியது. அதானி செய்திருக்கும் குற்றம் இதற்குக் குறைவில்லாத ஒன்று. இதற்காக அவரைத் தளைப்படுத்திச் சிறையில் அடைத்திருக்க வேண்டும்.
ஆனால் அதானி பழைய மோசடிகளுக்கு மேல் புதிய மோசடிகளைச் செய்து வருகிறார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தியும் திரினாமூல் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்து மொய்வா மொய்த்ராவும் மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதானி குழுமத்தின் மீதும் ஆட்சி மீதும் நேராக மோதி மீதும் சாற்றிய குற்றங்களுக்கு ஆளும் கட்சியின் தரப்பிலிருந்து விடையே இல்லை. நீதி விசாரணையோ நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணையோ நடத்த மறுத்து மோதி ஆட்சி அழிச்சாட்டியம் செய்து வருகிறது. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கிக் கிடக்கின்றன.
இந்தியக் குடியாட்சியம் எப்படி இயங்குகிறது என்பது பற்றி இராகுல் காந்தி இலண்டனில் பேசி விட்டாராம்! அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டுமாம்! அதானி தொடர்பான குற்றச்சாட்டுக்கு பாசக கண்டு பிடித்துள்ள எதிர்க் குற்றச்சாட்டு இவ்வளவு தான்! மோதிக்கும் அதானிக்குமான இந்த இணை பிரியாக் கூட்டு ஒட்டுமுதலியம் (CRONY CAPITALISM) என்பதற்கு மிகச் சிறந்த (படுமோசமான) எடுத்துக்காட்டாகும்.
முதலாளரும் அரசியலாரும் நேராகவே ஒருவரையொருவர் காப்பாற்றி வளர்த்து விடுவதுதான் இந்த முதலியத்தின் சாறம். மோதி குசாராத் முதலமைச்சராக இருந்த போது அதானியை வளர்த்து விட்டார். மோதியின் அரசியல் வெற்றிகளுக்கு அதானி அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். “குசராத் மாடல்” வளர்ச்சி என்பதன் அச்சாணியே இந்த ஒட்டுறவுதான். யாரைக் கொண்டு யார் பயனடைந்தார் என்று பிரித்துப் பார்க்கவே முடியாது. தொன்னைக்கு நெய் ஆதாரமா? நெய்க்குத் தொன்னை ஆதாரமா? கடந்த 2014ஆம் ஆண்டு மோதி நாட்டின் தலைமையமைச்சரான பிறகு இந்த ஒட்டுறவு தில்லியில் மையங்கொண்டது.
உலகெங்கும் சுற்றிச் சுற்றி அதானிக்குப் புதிய இலாப வேட்டைக் களங்களை அமைத்துக் கொடுத்தார் மோதி! அனைவருக்கும் வளர்ச்சி அனைவரோடும் சேர்ந்து (சப்கா விகாஸ் சப்கே சாத்) என்ற முழக்கத்தின் மெய்ப்பொருள் இருவருக்கும் வளர்ச்சி இருவரும் சேர்ந்தே என்பது தெளிவாயிற்று. மோதி-அமித்சா கும்பலின் உதவி இல்லாமல் அதானியால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. அதானியும் அவர்களுக்கு வள்ளலாகவே வாரிக் கொடுத்துள்ளார்.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவை யில்லை! அதானியின் பொருளியல் பேரரசும் மோதியின் அரசியல் வல்லரசும் ஒன்றுக் கொன்று இணையாகவும் துணையாகவுமே வளர்ந் துள்ளன. இரண்டும் இந்துத்துவ வண்டி ஓடும் இரட்டைத் தளவாடங்களாக உள்ளன. ஆழ்ந்து நோக்கினால் குசராத்தில் இசுலாமியர் இனப் படுகொலைக்கும் மோதி-அதானி ஒட்டு வளர்ச்சிக் குமான நெருங்கிய தொடர்பைப் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் குடியாட்சிய நிறுவனங்கள் பாசிசத்தின் கொடிய பிடியில் சிக்கிக் கொள்ளும் போக்கு வளர்ந்து வரும் நிலையில், குசராத் – 2002 இனக் கொலையை அம்பலமாக்க பிரித்தானிய பிபிசியும், அதானியின் மோசடியை அம்பலமாக்க அமெரிக்க இண்டன்பர்க்கும் தேவைப் பட்டிருப்பதில் வியப்பில்லை.
பன்னாட்டளவில் வலுவுடன் மிரட்டிக் கொண்டிருக்கும் மோதி அதானியை முறியடிக்க நாமும் பன்னாட்டளவில் குடியாட்சிய ஆற்றல்களின் ஆதரவைத் திரட்டியாக வேண்டும். மோதி - அதானி கும்பலைப் பன்னாட்டளவிலும் இந்திய அளவிலும் முறியடிக்க வேண்டும். அதற்குத் தமிழகத்தை எடுத்துக் காட்டாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் அதானியுடன் செய்துள்ள உடன்படிக்கைகளை திமுக அரசு கிழித்தெறிய வேண்டும்.
எல்லாத் தளங்களிலும் எல்லா முனை களிலும் மோதி-அதானி கும்பலை முறியடிப்பதே குடியாட்சியமும் சமூக நீதியும் சமயச் சார்பின்மையும் காக்கும் வழி. இந்திய அரசே!· அதானி குழுமத்தின் சொத்து களைப் பறிமுதல் செய்!·
மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த அதானியைக் கைது செய்!
தமிழக திமுக அரசே!·
அதானி குழுமத்துடன் போட்டுக் கொண்ட மக்கள் விரோத ஒப்பந்தங்களைக் கிழித்துப் போடு!