தமிழ்நாட்டின் மின் உற்பத்திக்காக அதானி விற்ற நிலக்கரியில் ஆயிரக்கணக்கான கோடிகள் ஊழல் நடந்திருப்பதான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. குறைவான தரம் கொண்ட விலை மலிவான நிலக்கரியை மூன்று மடங்கு அதிகமான விலையில் மின்துறை நிறுவனமான ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு (TANGEDCO)’ 2014, அதிமுக ஆட்சியில் விற்றதில் இந்த ஊழல் நடந்துள்ளது. இதனை லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ‘Financial times’ என்ற ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது.
ஜனவரி 9, 2014 அன்று இந்தோனேசியாவில் இருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு 69925 மெட்ரிக் டன் நிலக்கரி அதானி நிலக்கரி நிறுவனத்திடமிருந்து இறக்குமதி ஆனது. ஒரு டன் நிலக்கரியின் விலை 2014 ல், அன்றிருந்த இந்திய ரூபாய் மதிப்பான ரூ 62-ன் படி ரூ 1736 (28 டாலர்). ஆனால் இந்த நிலக்கரி நேரடியாக சென்னைக்கு வரவில்லை. சிங்கப்பூர் மற்றும் விர்ஜின் தீவுகளுக்கு சென்று இரண்டு வார பயணத்திற்குப் பின்பே இங்கு வந்தது. இந்த பயணத்திற்கு பிறகு இங்கு வந்து சேர்ந்த போது இதன் விலை ரூ 5704 (92 டாலர்) – ஆக கிட்டத்தட்ட மூன்று மடங்குக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு இருக்கிறது.இந்த விலை ஏற்றத்திற்கு அந்தந்த நாடுகளில் உள்ள வரிக்கட்டமைப்பு மற்றும் டாலர் விலைக்கேற்ப, ஷெல் நிறுவனங்கள் எனப்படும் போலியான நிறுவனங்களால் விலைகள் மாற்றப்பட்டு, மூன்று மடங்கு விலையாக இங்கு வந்து சேர்ந்திருக்கிறது. நிலக்கரியின் எரியும் திறனான கலோரி அளவில், தரம் குறைவான 3500 கலோரிகள் கொண்ட நிலக்கரியை 6000 கலோரிகள் என விலை நிர்ணயம் செய்து விற்றுள்ளது. கலோரிகளின் தர அளவில்தான் விலைகளின் வேறுபாடும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரியின் தரத்திற்கேற்ற விலை மற்றும் ’ஷெல்’ நிறுவனங்களால் ஏற்றப்படும் விலை குறித்து, 2022-ம் ஆண்டே மே 17 இயக்கம் விரிவான கட்டுரை வெளியிட்டது.
இந்தோனேசியத் துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி முதலில், பிரிட்டனின் விர்ஜின் தீவுகளில் உள்ள ‘சுப்ரீம் யூனியன் இன்வெஸ்டார்ஸ்‘ என்கிற குழுமத்திற்கு 2014-ஜனவரி அன்று அனுப்பப்பட்டது. ஒரு டன்னுக்கு 28 டாலர் (ரூ1736) அளவுக்கு விலைப் பட்டியல் போட்டு அனுப்பிய நிலக்கரியின் தர அளவீடான கலோரி அளவுகள் அதில் குறிப்பிடப்படவில்லை. அவையே ஒரு வாரம் கழித்து 38 டாலர் அளவுக்கு சிங்கப்பூரில் உள்ள அதானி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. அப்போது ஒரு கிலோவிற்கு 3500 கலோரி என்றே விலைப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டின் எண்ணூர் துறைமுகத்தில் வந்து சேர்ந்த போது ஒரு டன் நிலக்கரி 92 டாலர் என விலைப்பட்டியல் இருந்தது. அதாவது 6000 கலோரிக்கான விலையாக நிலக்கரி இறக்குமதி ஆனது.
இவ்வாறு 2014, ஜனவரி முதல் அக்டோபர் வரை 24 முறை நடந்த 1.5 டன் இறக்குமதியிலும் இதே முறைகேடுகள் தொடர்ந்துள்ளன என Financial Times ஊடகம், OCCRP எனப்படும் ‘ஒருங்கமைக்கபபட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டம் ‘ அமைப்பிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களில் இருந்து வெளிப்படுத்தியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 24 முறையும், ஒரு கிலோ எரியும் திறனான 3500 கிலோரி தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து விட்டு, 6000 கிலோரிக்கான விலையாக 86 டாலர் (ரூ 5332) போடப்பட்டுள்ளது.
கடந்த 2021 – 23 ஆண்டுகளில் அதானி, தைவான், துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள இடைத்தரகர்களால் 5 பில்லியன் அமெரிக்க டாலர் (40 ஆயிரம் கோடி) மதிப்புள்ள நிலக்கரியை சந்தை விலையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இறக்குமதி செய்ததாக 2023-ம் ஆண்டுக்கான அறிக்கைகள் காட்டுவதாக இந்த ஊடகம் தெரிவிக்கிறது. இதில் தைவானிய நிறுவனம் அதானியின் மறைமுக பங்குதாரர் எனவும் கூறுகிறது.
இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) நடத்திய விசாரணை விவரங்கள், OCCRP எனப்படும் ‘ஒருங்கமைக்கபபட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டம்‘ அமைப்பிலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள், அதானியின் இந்தோனேசிய நிலக்கரி விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து கசிந்த ஆவணங்கள், இந்திய அதிகார மட்டங்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் உட்பட பல ஆதாரங்களை ஆய்வு செய்தே இதை வெளியிட்டுள்ளதாக ‘Financial times‘ கூறுகிறது.
நிலக்கரியின் இத்தகைய குறைந்த கலோரி இறக்குமதி முறைகேடு குறித்து ‘இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI)‘, 2016 -ல் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால் 2017-ல் சிங்கப்பூர், ஹாங்காங் உட்பட்ட இதில் சம்பந்தப்பட்ட நாடுகளின் நீதிமன்றங்களிடம் நிலக்கரி ஏற்றுமதி குறித்த தகவல்களை வழங்குமாறு கோரியது. ஆனால் அனைத்தும் சடங்குகள் போல நடத்தப்பட்டு, மும்பை நீதிமன்றம் அதானிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. மேல்முறையீடு செய்த உச்சநீதிமன்றமும் விசாரணையை இழுவையாக நீடிக்கிறது.
தமிழ்நாட்டின் அறப்போர் இயக்கமும் 2012-16 க்கு இடையில் அதானி இறக்குமதி செய்த நிலக்கரிக்கு ரூ 6000 கோடி அதிகமாக தமிழ்நாடு மின்துறை வாரியம் செலுத்தியதாகவும், இதன் ஒப்பந்தத்தில் பாதி அளவு அதானிக்கே வழங்கியதாகவும் 2018-ம் ஆண்டு ‘மாநில ஊழல் தடுப்பு நிறுவனத்தில்‘ புகார் அளித்திருக்கிறது.
அதானிக்கு சுமார் 6 ஆயிரம் கோடிக்கு அளவிற்கும் மேலான கொள்ளை லாபம் மட்டுமல்ல, இதனால் தமிழ்நாட்டிற்கு பெருத்த நட்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்டம் மின்கட்டண விலை உயர்வாக மக்கள் தலையில்தான் விழுந்தது. மேலும் குறைந்த கலோரி கொண்ட நிலக்கரியை எரித்ததினால் அதிகமான சுற்றுச்சூழலும் மாசுபாடு அடைந்திருக்கிறது. ஒரு ஆண்டிற்கு புகை மாசுவினால் மரணிக்கும் 20 லட்சம் மக்கள் சுவாசித்ததில் இந்தப் புகையும் அடக்கம். நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையங்கள் இருக்கும் 100 மைல்களுக்குள் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என ‘லான்செட்’ இதழின் ஆய்வாக இருக்கிறது.
அதானி நிறுவனம் தனது போலியான ஷெல் நிறுவனங்கள் மூலமாக பங்குச் சந்தை ஊழலில் ஈடுபட்டு பல லட்சம் கோடிகள் கொள்ளையடித்ததாக லண்டனின் ‘ஹிண்டர்பெர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது குறித்து மே 17 இயக்கம் வெளியிட்ட கட்டுரை இணைப்பு :
இப்போது நிலக்கரி ஊழலும் வெளிப்பட்டு இருக்கிறது. இது 2014-ல் நடந்த ஊழல். அதானியில் இந்த ஊழலில், தமிழ்நாட்டின் மின் துறைக்கு ஏற்பட்ட இந்த இழப்பில் தமிழ்நாட்டின் 2014-ம் ஆண்டில் ஆட்சி நடத்திய அன்றைய அதிமுக அரசும், அன்றைய மின்துறை சார்ந்த அதிகார மட்டங்களும் இந்த கொள்ளையில் பங்கு பெறாமல் இருந்திருக்க முடியாது. அவர்களின் மேல் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் நிலக்கரி இறக்குமதியில் நடந்த அதானியின் ஊழலே வெளியாகியிருக்கிறது. இன்னும் ஏனைய மாநிலங்களில் நடந்த நிலக்கரி ஊழல்களைப் பற்றியான ஆய்வுகள் இல்லை. அதைப் போல அதானி ஈடுபட்டுள்ள ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஊழல்கள் பற்றியான ஆய்வுகளும் இல்லை. ஒவ்வொரு ஆய்வுகளும் எடுக்கப்படுமானால் அதானியின் மோசடிகளையும், ஆசிய பணக்காரர் வரிசையில் முன்னணி பெற்ற காரணங்களையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
மோடியின் நண்பராக, அதானி நுட்பமான முறையில் கொள்ளைகளை, எந்த சட்ட சிக்கலும் இல்லாமல் நடத்துகிறார். மக்களின் சொத்துக்களான பொதுத்துறை கட்டுமானங்களை பங்கு பிரித்து அதானி போன்ற பார்ப்பன, பனியா கொள்ளையர்களுக்கு பகிர்ந்து கொடுத்து மோடி ஆட்சி நடத்துகிறார் என்பதையே இந்த ஊழல்கள் குறித்தான ஆய்வுகள் அம்பலப்படுத்துகின்றன.
- மே பதினேழு இயக்கம்