girlkids 600கொரோனா பெருந்தொற்று அலை அலையாக பரவி உலகம் முழுவதும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆய்வின் முடிவில் குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்று 56 சதவீதம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தான் பரவுகிறது.

அதனால் கொரோனா நோயில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மேல் வழக்கத்தைவிட அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமல் asymptomatic அல்லது குறைந்த அறிகுறிகளுடன் தான் முதல் அலையில் காணப்பட்டது.

ஆனால் இப்போது உள்ள இரண்டாம் அலையில் முன்பை விட குழந்தைகள் பாதிப்படையும் எண்ணிக்கையும் தீவிர நோய் தன்மையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவின் மூன்றாவது அலை பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் என்று சொல்லி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்றுக்கு பின் சில நாட்கள் அல்லது வாரங்களில் குழந்தைகளுக்கு மற்றொரு ஆபத்து காத்திருக்கிறது அதான் Multisystem inflammatory syndrome in children (MIS-C) அல்லது Post-infectious inflammatory multisystem syndrome (PIMS) என்று சொல்லப்படும் கொரோனா தொற்றில் மீண்டு வந்த பிறகு குழந்தைகளுக்கு ஏற்படும் தீவிர நோயாக உள்ளது, இதன் எண்ணிக்கை முன்பை விட இப்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது என்று பல குழந்தைகள் நல மருத்துவர்கள் மிகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை RT-PCR குறைந்த அளவில் செய்வதும் அப்படி செய்தாலும் பெரும்பாலும் குழந்தைகளுக்கு negative என்றே முடிவு வருவதாலும், இந்த கொரோனா பின் ஏற்படும் சிக்கல்களை முன்பே கண்டறிய முடியாததிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

MIS-C வர உறுதியான காரணங்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும் மருத்துவ வல்லுனர்கள் கொரோனாவிற்கு எதிராக தோன்றும் antibodies ஆன்டிபயாடிகள் இரத்த நாளங்களை தாக்குவது தான் இந்த MIS-C ஏற்பட முக்கிய காரணம் என்று தற்போது கூறுகின்றனர்.

முதலில் இதைப்பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்!

Multisystem inflammatory syndrome in children (MIS-C) - இது குழந்தைகளுக்கு கொரோனா பின்பு பல உறுப்புகள் மற்றும் இரத்த நாளங்களிலும் inflammation அழற்சி எனப்படும் வீக்கங்களை ஏற்படுத்தி Kawasaki disease or toxic shock syndrome போன்ற நோய்களில் காணப்படும் மாற்றங்கள் போன்று தோற்றமளிக்கிறது.

பல உறுப்புகளை பாதிக்கும் இந்த நோய் கொரோனா வந்த பிறகு 2-8 வாரம் கழித்து தோன்றுகிறது. இது பெரும்பாலும் 3-12 வயது குழந்தைகளுக்கு அதிக அளவிலும் சில நேரங்களில் மேற்கத்திய நாடுகளில் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் காணப்படுகிறது.

MIS-C பெரும்பாலும் மரணங்களை ஏற்படுத்தாவிட்டாலும் இதயம், சிறுநீரகம், கல்லீரல், இரத்த நாளங்கள், மூளை, தோல் மற்றும் கண்கள் போன்ற முக்கிய உறுப்புகளில் குறிப்பிட்ட கவலை தரும் அளவிற்கு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் முக்கிய அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனித்தால் தீவிர நோயாக மாறுவதை பெரும்பாலும் தடுக்கலாம்.

முக்கிய அறிகுறிகள்

 • காய்ச்சல் (ஒரு நாளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக , 100°F மேல் இருப்பது)
 • தோல் அழற்சி,
 • வாந்தி ,
 • சிவந்த கண்கள்,
 • வயிற்றுப்போக்கு,
 • சோர்வு தன்மை,
 • அதிக தூக்கம் அல்லது மயக்கம்,
 • நெரிகட்டுதல்,
 • இதய துடிப்பு அதிகரித்தல்,
 • வேகமாக மூச்சு விடுதல் மற்றும் சிரமம்,
 • நெச்சு பகுதியில் பாரம் அல்லது வலி,
 • கடுமையான வயிற்று வலி
 • உதடு நாக்கு கை கால்களில் சிவத்தல்/வீக்கங்கள்/வறட்சி,
 • கை கால் முட்டி மற்றும் பாத வீக்கங்கள்.

பெற்றோர்கள் மேல் கூறிய அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அலட்சியம் காட்டாமல் அதே நேரம் அச்சம் அல்லது பதற்றம் அடையாமல் குழந்தைகள் நல மருத்துவரை அலைபேசி telemedicine அல்லது நேரிலோ அணுகுவது சிறந்தது.

அவர்கள் அறிவுறுத்தலோடு தேவைப்பட்டால் அழற்சியை கண்டறியும் சில இரத்த பரிசோதனைகள், x-ray, echocardiogram, Ultrasound abdomen உடனே செய்து அதன் முடிவுகள் மற்றும் அறிகுறிகள் அடிப்படையில் அழற்சியை குறைக்கும் சிகிச்சையை தொடங்குவார்கள்.

ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் இதன் சிகிச்சையை பெரும்பாலும் வீட்டிலேயே மருத்துவர் ஆலோசனைப்படி தொடரலாம். தொடக்கத்திலேயே அறிகுறிகளை அலட்சியாக தவரவிடாமல் இருந்தாலே பல உறுப்புகள் பாதிக்கப்படுவதை சிறிய அளவிலேயே தடுத்து நிறுத்தலாம். மேலும் அதிக மருத்துவமனை நாட்கள் மற்றும் ICU போன்றவை தவிர்க்கலாம்.

இதுவரையில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் வெளிநாடுகளில் கொரோனா அலைகளுக்கு பின்பு இதன் தாக்கம் அதிகமாகத் தெரிகிறது. ஆனால் இரண்டாம் அலை முடிந்தபின்பு இதன் தாக்கம் அதிகரிக்கலாம் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பெற்றோர்கள் உடனடி கவனம் வேண்டியது:

உணவு முறைகள்:

குழந்தைகளின் ஊட்டச்சத்து மீது மிகவும் அக்கறை செலுத்த வேண்டும் காய்கறி பழங்கள் கீரை வகைகள், புரதச் சத்து மிகுந்த மீன், மாமிசம், முட்டை பால் மற்றும் பருப்பு வகைகள் மற்றும் Vitamin C அதிகம் உள்ள புளிப்பான பழவகைகள் எடுத்துக்கொள்வது சிறந்தது. இதில் Antioxidant தன்மை அதிகமாக உள்ளதால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுகழிவுகளை நீக்கி உடலின் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.

சுகாதாரம்:

கூட்டமான இடத்திற்கு கூட்டிச் செல்வதை தவிர்க்கவும். வெளியே சென்றால் முக கவசம் ஒரு சர்ஜிகல் அல்லது துணி முகக் கவசம் போதுமானது. கை கழுவுதல் சுத்தமான மற்றும் சூடான உணவு மற்றும் காய்சிய குடிநீர் எடுத்துக் கொள்ளுதல்.

தடுப்பூசிகள்:

குழந்தைகளுக்கு வழங்கப்படும் வழக்கமான அட்டவணையில் உள்ள தடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். தவறினால் MMR mumps measles rubella போன்று இவ்வளவு நாட்கள் தடுப்பூசிகளால் கட்டுப்பாட்டில் உள்ள நோய்கள் மீண்டும் தலைதூக்க கூடும். அது இந்த கொரோனா காலத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.

தேவையற்ற பயத்தை தவிர்த்தல்:

தற்போதைய சூழலில் அதிக காய்ச்சல், மூச்சு திணறல், கடும் வயிற்றுப் போக்கு வந்து அவசர நிலையில் மட்டுமே மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது.

அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்ல மக்களிடையே எங்கு கொரோனா வந்து விடுமோ ஒரு அச்சம் நிலவுகிறது. இது மிகவும் தவறான புரிதல் கொரோனா மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் தனியான பகுதியில் தான் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற இடங்களை விட மருத்துவமனைகளில் சுகாதார விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் அதனால் எந்த அச்சமுமின்றி செல்லலாம்.

அரசு கவனம் செலுத்த வேண்டியது:

கொரோனா தொற்றால் மற்றும் கொரோனா பின் வரும் நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க உடனடியாக குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகள் உடனடியாக போர் கால சூழலில் தயாரிக்கப் பட வேண்டும் அதற்கான ஆராய்ச்சிகளில் அரசுகள் அதிக நிதியும், கவனமும் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் 18+ வயது மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தான் கொரோனா தடுப்பூசி தரப்படுகிறது. ஆனால் அமெரிக்க மாற்றம் ஐரோப்பிய நாடுகளில் 12+ உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது.

அதே நேரத்தில் ஒன்றிய அரசு தேவைக்கேற்ப நிதி ஒதுக்கி மாநில அரசுகள் மாவட்டம் தோறும் தனியே ஒரு குழந்தைகள் நல மருத்துவமனையை உருவாக்கினால் தான் மக்கள் தயக்கம் இன்றி செல்லவும் வசதியாக இருக்கும்.

மேலும் வரவிருக்கும் மூன்றாவது அலைக்காக காத்திருக்காமல் இப்போதே போதிய அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் மேலும் குழந்தைகளுக்கு தேவைப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் மற்றும் கருவிகள் கையிருப்பு வைக்கவோ அல்லது தேவைக்கேற்ப வாங்க வேண்டும்.

தவறுகளிலிருந்து பாடம் கற்போம் என்பதற்கேற்ப இரண்டாம் அலையை தவற விட்டது போல் மூன்றாவது அலையில் நடக்காமல் இருக்க முன்பே தயாராக இருப்பது சிறந்தது.

ஏனென்றால் குழந்தைகள் தான் நாட்டிற்கும் வீட்டிற்கும் எதிர்காலம். அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்து நல்ல ஆரோக்கியமான உடல்நிலை மனநிலை மற்றும் சுற்றுச்சூழலை அமைத்து தருவதுதான் பெற்றோர் மற்றும் அரசின் முதன்மையான கடமையாக தற்போது உள்ளது.

- மே பதினேழு இயக்கம்

Pin It