இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிகின்றது. அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து சாமானிய உழைக்கும் மக்களை சித்தரவதை செய்துகொண்டு இருக்கின்றது. கடுமையான விலைவாசி உயர்வும், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடும் இலங்கையின் சாமானிய மக்களை பட்டினிச் சாவை நோக்கித் தள்ளியுள்ளது. 

economic crisis in srilankaஇந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பு 7.5% சரிந்துள்ளது. 2019 நவம்பரில் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 20%-க்கும் அதிகமாக சரிந்துள்ளது. மேலும் கொரோனோ காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 3.6% என்ற அளவில் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 இதன் விளைவாக தொழிலாளர்களின் வேலை சுமை அதிகரித்ததோடு, சம்பள வெட்டு போன்றவையும் ஏற்பட்டு இருக்கின்றன. இதற்கு எதிராக சம்பளத்தை உயர்த்தித் தரச் சொல்லி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

 சாமானிய மக்களின் நலன்களை பிரதிபலிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்ணனி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஜே.வி.பி. தலைமையிலான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து அரசை பணிய வைப்பதற்கு மாறாக தொழிலாளர்களின் போராட்டத்தை தனிமைப்படுத்தி அவற்றை அரசுக்கு காட்டிக் கொடுத்திருக்கின்றன.

நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி இராஜபக்சே அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை முழுவதும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் போராடி வருகின்றார்கள்.

கடந்த ஆண்டு நவம்பரில் இலங்கையின் வருடாந்திர பணவீக்க அளவானது 9.9 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

ஆனால் ராஜபக்சே அரசாங்கமோ கடந்த ஆண்டு செப்டம்பர் பிற்பகுதியிலும் அக்டோபர் தொடக்கத்திலும் அரிசி, சமையல் எரிவாயு, கோதுமை மாவு, பால் மாவு ஆகியவற்றின் மீதான விலை கட்டுப்பாடுகளை அகற்றி பெரிய வணிக அரிசி ஆலை உரிமையாளர்களும் இறக்குமதியாளர்களும் கொள்ளையடிக்க கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.

இதனால் கடைசி தரத்திலான அரிசி ஒரு கிலோவின் விலை 115 ரூபாயாகவும், சம்பா அரிசி 145 ரூபாயாகவும், கோதுமை 97 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அதே போல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 சதவீதம் உயர்ந்து, 2,675 ரூபாயாக உயர்ந்துள்ளது..

1978 இல் இலங்கையில் ‘திறந்த பொருளாதாரக்' கொள்கைகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, சில அத்தியாவசியப் பொருட்களைத் தவிர, மற்றவற்றுக்கு அரசாங்க விலைக் கட்டுப்பாடுகள் திட்டமிடப்பட்ட வகையில் விலக்கிக் கொள்ளப்பட்டன. இப்போது ஒரு பேரழிவு தரும் பொருளாதார சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள இராஜபக்சே அரசாங்கம் கொஞ்சநஞ்சம் இருந்த கட்டுப்பாடுகளையும் இரத்து செய்யவும், மானியங்களை வெட்டிக் குறைக்கவும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டுள்ளது.

வரிகள் அதிகரிப்பு, மானியக் குறைப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் மூலம் இந்த நெருக்கடியை தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஏழைகள் மீது சுமத்துவதே பேரினவாத ராஜபக்சே அரசாங்கத்தின் நடவடிக்கையாக இருக்கின்றது.

ஐந்து இலட்சம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தும் 13,500க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தும் இருக்கும் இந்தக் கடுமையான சூழலில்கூட ராஜபக்சே அரசங்கம் சுகாதார ஒதுக்கீடுக்கு ஒதுக்கப்படும் தொகையை 6 பில்லியன் ரூபாய்களாக வெட்டியுள்ளது.

மேலும் விவசாயத்தைப் பொறுத்தவரை இதுவரை இலங்கை விவசாயிகள், ரசாயன உரங்களைப் பயன்படுத்தித்தான் விவசாயம் செய்து வந்தார்கள். தற்போது அரசு திடீரென ரசாயன இடுபொருள்களுக்குத் தடை செய்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். நாடு முழுவதும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து கோரும் விவசாயிகளின் போராட்டமும் தீவிரமாகப் பரவி வருகிறது.

 தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் இலங்கை அரசு அனைத்திற்கும் இறக்குமதியை மட்டுமே நம்பி இருந்ததும் அதன் ஏகாதிபத்திய சார்புக் கொள்கையுமே காரணமாகும்.

 இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு பொருளாதாரம் உலக நாடுகளில் ஏற்படும் நெருக்கடிக்கு உடனடியாக முகம் கொடுத்தாக வேண்டும் என்பதற்கு ஏற்ப இலங்கையின் அந்நிய செலாவணிக் கையிருப்பு பெருமளவு குறைந்துள்ளது.

270 கோடி அமெரிக்க டாலராக அதன் அந்நிய செலாவணிக் கையிருப்பு இருக்க, வெளிநாடுகளுக்கு அது செலுத்த வேண்டிய கடன் பாக்கியோ 3,500 கோடி அமெரிக்க டாலருக்கு மேலாக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய இலங்கை அரசின் வருவாயில் சுமார் 80 சதவிகிதம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காகவே செலவிடப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, அந்நிய செலாவணி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மேலும் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது

கொரோனா காரணமாக இலங்கைக்கு பெருமளவில், அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் சுற்றுலாத்துறை பாதிப்படைந்திருந்தாலும் அதற்கு முன்பே இலங்கை மீளமுடியாத கடனில் சிக்கிக் கொண்டு விட்டது. அதற்கு முதன்மைக் காரணம் சீனாவிடம் இருந்து தனது தகுதிக்கு மீறி கடன் வாங்கியதும் உள்நாட்டு உற்பத்தியை தற்சார்வை நோக்கி வளர்த்தெடுக்க திராணியின்றி இறக்குமதிக்கு பெருமளவு ஆதரவு கொடுத்ததுமே ஆகும். மேலும் வெளிநாட்டு வங்கிகளில் அரசு வாங்கிய கடனும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.

இலங்கையில் நடத்தி முடிக்கப்பட்ட இன அழிப்புக்குப் பின்னான காலத்தில் அதன் பொருளாதார நடவடிக்கை முற்றும் முழுக்காக ஏகாதிபத்தியங்களின் பிடியில் சிக்கிக் கொண்டு விட்டது.

பன்னாட்டு பெருநிறுவனங்களின் வேட்டைக்காடாக அது மாற்றப்பட்டு விட்டது. சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பெருமுதலாளிகளுக்காக நடத்தி முடிக்கப்பட்ட இன அழிப்புக்குப் பின், இன அழிப்புக்கு ஆயுதம் கொடுத்து உதவிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பணிந்து நாட்டை திறந்து விட்டதன் விளைவைதான் இன்று இலங்கை சந்தித்துக் கொண்டு இருக்கின்றது.

எந்தெந்த நாடுகள் ஏகாதிபத்தியத்தின் கடன் வலையில் வீழ்த்தப்படுகின்றதோ, எந்தெந்த நாடுகள் சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியமைக்கத் திராணியின்றி நாட்டை முழுக்க இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்கச் செய்கின்றதோ அந்த நாடுகள் அனைத்துமே சந்திக்கும் பிரச்சினையைத்தான் இன்று இலங்கையும் சந்தித்துள்ளது.

ஆனால் ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை அடமானம் வைத்து, உள்நாட்டில் பேரினவாதத்தைத் தூண்டி, வர்க்கப் பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் தனது குடும்ப நலனை காத்துக் கொண்ட கொள்ளைக் கூட்டத்திற்கு எதிராக அணிசேர்க்கை நடத்த வேண்டிய சிங்கள, தமிழ் இனம் தங்களுக்குள் பிளவுபட்டுக் கிடக்கின்றது.

இந்த முரண்பாட்டை ஏகாதிபத்திய அடிமைக் கும்பல் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு மேலும் மேலும் உழைக்கும் மக்களை ஒட்ட சுரண்டவும் அவர்களை நிரந்தர துயரத்தில் தள்ளவும் முயற்சித்து வருகின்றது.

 தற்போது இருக்கும் அரசு சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மேல் சுமத்தி இருக்கும் தாங்க முடியாத நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு பாசிச கொடுங்கோல் ராஜபக்சே அரசாங்கத்தை வீழ்த்துவதும், ஆட்சி அதிகாரத்தை அங்கிருக்கும் உழைக்கும் மக்கள் கையில் எடுத்துக் கொள்வதும் மிக முக்கியமானதாகும். ஆனால் அதற்கான கட்சி அமைப்பு குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி அங்குள்ளதா என்பதே தற்போதைய பெரிய பிரச்சினை.

 பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பத்தை அவர்கள்தான் உருவாக்குகின்றார்கள். ஆனால் உழைக்கும் மக்கள் அதை சரியாகப் பயன்படுத்தி பாசிசத்தை வீழ்த்தவில்லை என்றால் அவர்கள் மேலும் பல நூற்றாண்டுகள் பாசிசத்தின் பிடியில் வாழுமாறு தள்ளப்படுகின்றார்கள்.

- செ.கார்கி