illayraja artistஅவருக்கு மூச்சு விட முடியவில்லை. சளி தொண்டையை அடைத்திருந்தது. நன்றாகத்தானே இருந்தேன்... ஏன் திடீரென்று இப்படி ஆகிவிட்டது என்று அவர் நினைத்தார்.

அக்கா மகளின் திருமணத்திற்கு ஊருக்கு சென்ற போது குளத்தில் குளித்தது தான் காரணம்... தண்ணீர் சேரவில்லை என்று பல விதமாக சுய சமாதானம் செய்து கொண்டார். காய்ச்சல் மாத்திரை எடுத்துக் கொண்டார்.

தைலங்களை தேய்த்து தூங்கியிருக்கிறார். இரண்டு மூன்று நாட்களாக அப்படியே போய்க் கொண்டிருக்க காய்ச்சல் தீவிரமடைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா.

நுரையீரல் முழுக்க பரவி நிறைந்திருந்தது. பல முயற்சிகள் செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. கொரோனா சிறிது சிறிதாக அவரது நுரையீரலை செயல்பட விடாமல் உயிர்க் காற்றை சுவாசிக்க முடியாமல் நிறுத்தி விட்டிருந்தது.

அவர் வேறுயாரும் அல்ல நேற்று முன்தினம் உயிரிழந்த ஓவியர் இளையராஜா தான் அந்த பரிதாபத்திற்கு உரிய நபர். தனது ஒப்புயர்வு அற்ற ஓவியத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களைக் கொண்டவர் இளையராஜா.

குளத்தின் கரையில் அமர்ந்திருக்கும் பெண், விறகு அடுப்பின் அருகே அமர்ந்திருக்கும் கிராமத்து பெண், மண் தரையில் விளையாடும் கிராமத்து சிறுமி என்று அவரது ஓவியங்களைக் காண கண் கோடி வேண்டும். அவ்வளவு அழகியலும் நுட்பமும் வாய்ந்தவை.

கடந்த 18 மாதங்களாக ஒன்றிய அரசும் தமிழக அரசும் பலகட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. பல கலைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கிராமத்து நடன, நாடக கலைஞர்கள், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் ஆடும் கலைஞர்கள் ஆகியோர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டியை திறந்தாலே அரைமணிக்கு ஒருமுறை கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் வருகின்றன.

அதில் தோன்றுபவர்கள் முககவசம் அணியுங்கள், கைகளை சோப் போட்டு கழுவுங்கள், தனிமனித இடைவெளியுடன் பொதுவெளியில் இருங்கள், காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனே இலவச தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள், அருகில் உள்ள சுகாதார மையங்களை அணுகுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

கொரோனாவிற்கு சுய சிகிச்சை செய்து கொள்ளாதீர்கள். மருத்துவர்களிடம் வாருங்கள் என்று அழைத்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் எதையும் இந்த ஓவியர் கருத்தில் கொள்ளாமல் சுய சிகிச்சை செய்துக் கொண்டதன் பலன், தமிழ்ச் சமூகம் ஒரு மாபெரும் ஓவியரை இழந்திருக்கிறது.

அவரது குடும்பத்தினருக்கும் இது ஒரு மாபெரும் இழப்பாக அமைந்திருக்கிறது. எவ்வளவு படித்திருந்தாலும் திறமையுடன் இருந்தாலும் சமூக அக்கறையும் விழிப்புணர்வும் அவசியம் என்பதை இவரது மரணம் நமக்கு உணர்த்திச் சென்றிருக்கிறது.

இதேபோன்று தான் மருத்துவர்களுக்கே பலர் புத்தி சொல்கிறார்கள். சமீபத்தில் ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது. 30 வயது இளைஞரை பரிசோதனை செய்த மருத்துவர், "உங்களுக்கு மூச்சுவிடும் ஆக்ஜிஜன் அளவு குறைந்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாத அந்த வாலிபர், "எனக்கு சில நேரங்களில் அப்படித்தான் டாக்டர் இருக்கும் போகப்போக சரியாகி விடும்" என்று சொல்லிவிட்டு பிடிவாதமாக மருத்துவமனையிலிருந்து சென்றிருக்கிறார். ஆனால் அன்று இரவே அவர் மரணத்தை தழுவியிருக்கிறார்.

ஆகவே அலட்சியம் வேண்டாம்... அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகுங்கள்... அங்கே உங்களுக்காகத்தான் மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவியலை நம்புங்கள். மதிப்பு மிக்க உயிரை வெற்று ஜம்பங்களால் பலி கொடுத்து விடாதீர்கள்...

- சஞ்சய் சங்கையா