மெளனத்தின் பேரொலியில் நனைந்து
மெளனித்து உறங்கும் இரவு
வாசல் கதவின் கயிற்று முடிச்சில்
கூடொன்று கட்டிய பறவை
அழையாத விருந்தாளியென மகிழ்வின்
உச்சத்தில் அனைவரும்
உச்சபட்ச பிரக்ஞையோடு அனைவரும்
ஓசை எழுப்ப உள்ளம் அஞ்சி
பறவையோடு பொழுதுகள் சில
மாலை மறைந்து இரவின் வருகையில்
முட்டையோடு கூட்டில் பறவை
ஓசையின் பேரொலியில் தடுமாறி
வீட்டின் உள்ளறையில் வந்தமர்ந்தது.
பயத்தின் பரபரப்பும் இரவின் தவிப்பும்
அதனை அலைக்கழித்தன.
சுற்றிய திசைகளில் தடுமாறிய
நெஞ்சங்களாக நாங்கள்
மின் விசிறி அணைத்துக் கதவுகள் திறந்து
பறவையோடு பேசிப் பழகினோம்.
சமாதானம் இருந்தாலும் கவனிப்பின் விசை குறையவில்லை
இயல்பானோம் நாங்கள் எங்களோடு அதுவும் இளைப்பாறிக்
கொண்டிருக்கிறது நிறுத்திய மின் விசிறியில்
பறவையோடு இரவுத் தூக்கம்
உள்ளுக்குள் ஆதி கனவு எங்களோடு
உறங்கப்போனது அதுவும்.
கண்மூட மனமில்லை இந்த இரவின்
அதிசய தருணங்களை இழந்துவிட
இப்படியொரு சூழல் மீண்டும்
ஒருமுறை வாய்க்காமல் போகலாம்.
பறவையோடு கதை பேச அழைக்கிறது மனம்
என்னோடு பேச அதற்கும் ஏதாவது
இருக்கத்தான் செய்யும்
இதோ
வாசல் திறந்து சூரியனை
வரவேற்க தூங்காமல் காத்திருக்கிறேன்
இதனை இணையோடு சேர்த்து வைக்க.
எங்கோ அருகில் விடியலுக்காய்
காத்திருக்கும் இணையின் தவிப்பும்
விடியலின் வரவுக்காய் மௌனித்திருக்கும் உனது தவிப்பும்
என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது
வாழ்தலின் இருப்பும் அன்பின் அதிர்வும்
உன்னோடு கழித்த இவ்விரவு
என்றும் உன்மத்தமாகி என்னை
உறைய வைக்கும் உன்னதத்தில்!
- முனைவர் ம இராமச்சந்திரன்