சமூகங்கள் நாகரிகத்தின் பல படிநிலைகளைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. அந்நகர்வு முன்னேற்றத்தை நோக்கியா இல்லையா என்பதை காலம்தான் உணர்த்த வேண்டும். சமூகம் பல குழுக்களை உள்ளடக்கியது. குழுக்கள் தேசியம், இனம், மதம், மொழி, பண்பாடு போன்ற காரணிகளில் ஒன்றாகவோ அல்லது கூட்டாகவோ இருக்கின்றன. இநத்திய சமூகங்கள் இதையும் மீறி வட்டாரம், சாதி, உபசாதி என பல துண்டுக்களானது. குழுக்கள் தன்நலன் சார்ந்து இயங்கும் ஒரு அமைப்பாக இருப்பதோடல்லாமல் அதன்பொருட்டு எந்த எல்லைக்கும் சென்று போராடும் நிலையில் உள்ளன. தன்நலன் என்று வருகின்றபோது ஒவ்வொரு குழுவும் தனக்காக தேவைகளை இனங்கண்டு அதை அடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகின்றன. இத்தைகய சூழல் இரு குழுக்களுக்கிடையே இறுக்கத்தையும் உராய்வையும் ஏற்படுத்துகின்றது. உரிமைப் போராட்டத்திற்கு வித்திடுகிறது. இதுவே நாளடைவில் தீராத பகையாகி சிக்கலுக்கு வழிவகுக்கின்றது.
ஆக, சிக்கல்கள் இருவேறு குழுக்களின் தன்னலன் காக்கும் போராட்டத்தின் விளைவாகவே தோன்றுகின்றன. இங்கே கூர்ந்து நோக்க வேண்டியது, இரு குழுக்களுமே தன்பக்கமே நீதி இருப்பதாக நம்புவதோடு அதை நிலைநாட்டும் முயற்சியில் வெகுவாக ஈடுபடுகின்றன. இது நிலைமையை மோசமாக்குவதோடு ஒரு சிக்கலை தீர்வெல்லையிலிருந்து வெகுதூரத்திற்குக் கொண்டு சென்று விடுகின்றது. இன்று உலகம் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளின் மூலம் இதுவே.
தனிமனிதன் மற்றம் சமூகங்களின் மனம் பல காரணிகளால் கட்டமைக்கப்படுகிறது. குழு மற்றும் பகுதி சார்ந்த நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கங்கள் வாழ்வியல்முறை போன்றவை ஒரு இனக்குழு மற்றும் பகுதிசார்ந்த நியதிகளின் உருவாக்கத்தில் பங்குவகிக்கின்றன. இதுவே தனிமனிதன் மட்டுமின்றி சமூகங்களின் மனதையும் தகவுமைக்கின்றது. பொது நியதி என்ற ஒன்றைக் கடந்து ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்த குழுவின் நலன்நோக்கியே தன் பார்வையை செலுத்துவதோடு அதைக்காக்கும் பொருட்டு மனசாட்சிக்குப் புறம்பான நிலைப்பாட்டை எடுக்கக் காரணம் இவ்வாறான கட்டமைக்கப்பட்ட மனமேயாகும்.
தன்நலன் என்ற ஒன்று இருக்கின்றதெனில், பொதுநலன் என்ற எதிர்ப் பண்பு ஒன்று உண்டென்பது தெளிவு. இங்கே பொதுநலன் என்பது பொது நியதி. மனித குலம் அனைத்திற்கும் பொதுவான நியதி. சாதி, மதம், இனம், மொழி, வட்டாரம் நாடு போன்ற அடையாளங்களுக்கப்பாற்பட்ட மனிதத்திற்கான நியதி.
கால முதிர்வு வளர்ச்சியின் அடையாளமாகவே அறியப்பட்டு வந்துள்ளது. கலை, அரசியல், அறிவியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் எட்டப்பட்டுள்ள வளர்ச்சி காலத்தின் கொடை என்றே கருதப்படுகிறது. ஆனால் மனித மனம் மட்டும் காலத்தோடு சேர்ந்து முன்னோக்கிப் பயணிக்காமல் பல தலைகளால் கட்டுண்டு செம்மையுறாமலேயே உள்ளது. ஏதாவது ஒரு காரணியைச் சார்ந்தியங்கும் போக்கு முன்னெப்போதையும் விட இப்போது தலைதூக்கியுள்ளது. பொதுநியதி சார்ந்தியங்கும் போக்கு அரிதாகி, குறைந்த பட்சம் தேசிய உணர்வு என்ற நிலையில் நம் புத்தி சிறைபட்டு நிற்கிறது. அறிவுக்கண் அடைப்பட்ட நிலையில் மெய்ப்பொருள் காண்பதறிவு என்கிறது வள்ளுவம். இங்கு மெய்ப்பொருள் என்பது விருப்பு வெறுப்பின்றி சீர்தூக்கி ஆய்ந்தறியும் போக்கு இன்றைய அறிவுலகம் தன்னலன் சார்ந்த காரணிகளால் கட்டுண்டு பொதுநியதியை நோக்கிப் பயணிக்க மறுக்கின்றது அல்லது தனது சிரீய அறிவை தன்குழுவிற்காக நியாயம் கடந்து வாதாட செலவிடுகிறது. பல முக்கியப் பிரச்சனைகளில் அறிவுலகம் சாதிக்கும் மெளனம் அல்லது எதிர்வாதமே இதற்குச் சான்று.
எந்த ஒரு சிக்கலையும், அதன் மூலம் மற்றும் வரலாறு கொண்டே ஆராய வேண்டும். கால ஓட்டம் ஒரு சிக்கலின் நிலையை மாற்றியிருந்தாலும், அதன் மையக்கரு தீர்வு காணப்படும் வரை இருந்து கொண்டேதானிருக்கும். அறிவைப் புறந்தள்ளி தன்னல உணர்வால் வழிநடத்தப்படும் எந்த சிக்கலும் தீர்வைப் பழித்தே வந்துள்ளன. இந்நிலையை மாற்ற வினையாற்றுவே அறிவுலகத்தின் இன்றைய தேவையாகும்.
இந்தியநாடு இன்று எதிர்நோக்கும் தலையாய சிக்கல்களான சாதி மற்றும் மதம் சார்ந்த சிக்கல்கள், மாநிலங்களுக்கிடையேயான எல்லை, இயற்கை வளம், ஆற்று நீர்ப்பங்கீடு தொடர்பான சிக்கல்கள், அண்டை நாட்டோடு இந்திய நாட்டிற்குள்ள, நிலம் மற்றம் இனம் சார்ந்த சிக்கல்கள் போன்றவற்றின் நிலைத்ததன்மைக்கு இருதரப்பு அறிவுலகத்தின் பாராமுகமும், குதர்க்க வாதமுமே காரணமாகும். மேற்கண்ட எந்த சிக்கலிலும் அறிவுலகம் தன் கருத்தை நேர்மையாக வெளியிடத் தவறிவிட்டது. பெரும்பான்மை மேம்போக்குச் சிந்தனை வாதிகளைக் கொண்ட இந்தியச் சமூகங்கள் தன்நலன் சார்ந்து கருத்துக்கள் கூறும் போலிகளின் சொல்லாடலில் மயங்கி பொது நியதியைப் புறந்தள்ளி ஒருசார்பு கொண்டு இயங்கவே முனைகின்றன. அறிவுலகத்தின் மெளனத்தால் தோன்றும் வெற்றிடம் அரைவேக்காட்டுச் சிந்தனைகளின் குதர்க்கவாதத்தால் நிரப்பப்பட்டு சிக்கல்கள் அனைத்தும் எக்காலத்தும் உயிர்ப்போடு வைக்கப்பட்டுள்ளன.
இந்திய சமூகங்களின் நோய்க்கூறுகளில் முதன்மையான சாதிச்சச்சரவுகள் நாகரிகச் சிந்தனைகளை இன்றளவும் பழித்தே வந்துள்ளன. தொடர்கதையாக நீளும் ஒடுக்கப்பட்டவர்களின் துயரங்களையும் அவர்கள் தரப்பு நியாயங்களையும் பேசத்துணிந்த அவர்களல்லாதோர் எத்தனைப்பேர்?. அப்பட்டமான ஒழுக்குமுறைகளையும் ஆதிக்க சாதியினரின் அத்துமீறலையும் எதிர்த்துக் குரல் கொடுப்பதில் பெரும்பான்மையோர் சாதிக்கும் மெளனம் அவர்களின் பொது புத்தி தங்களின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ள சாதியத்தின் ஏற்ற மனப்பான்மையை உடைத்தெரிந்து சிந்திக்க மறுப்பதை காட்டுகிறது. திண்ணியம், மேலவளவு, உத்தபுரம், கயர்லாஞ்சி உள்ளிட்ட எண்ணற்ற நினைவு எல்லைக்குள் அடங்கா நிகழ்வுகள் ஏன் தகுந்த விவாதத்திற்கும் எதிர்வினைக்கும் உட்படுத்தப்படவில்லை. அச்சம்பவங்களின் பொதுநியதி ஏன் சமூகங்களின் பொதுபுத்திக்கு அறிவுலகங்களால் எடுத்துச்செல்லப்படவில்லை என்பதே நம்முன் உள்ள கேள்வி
தமிழகத்திற்கும் கேரளா மற்றும் கர்நாடாகாவிற்கும் இடையே உள்ள ஆற்றுப்பங்கிட்டுச் சிக்கல் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை தன்மை மாறாமல் இருக்க காரணம் தொடர்புடைய அறிவுலகத்தின் உண்மை பேசத்துணியா கோழைத்தனமே ஆகும். நீர்ப்பிடிப்பு பகுதிகள் அடங்கிய ஆற்றின் மேற்பகுதியை தன்னகத்தே கொண்டுள்ள சாதகமான ஒரே காரணத்திற்காக பாரளுமன்றம், நீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றங்களையும் பழிக்கும் கர்நாடகத்தின் போக்கு வலிமையுள்ளவன் வைத்ததே சட்டம் என்னும் போக்கிலிகளின் போக்கிற்கு சற்றும் குறைந்தது அல்ல. கர்னாடகத்தின் செயலை குறித்து தொடர்புடைய அறிவுலகம் வினையாற்ற தவறியது தற்சார்பு நிலைகளில் இருந்து அவர்கள் விடுபடவில்லை என்பதையே காட்டுகிறது.
இலங்கை இனச்சிக்கல் குறித்த நம் பார்வையும் இப்போக்கிற்கு விதிவிலக்கு அல்ல. சிக்கல் தீவிரமடைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் நம்மிடையே அதுகுறித்த சரியான புரிதல் இல்லை. சிக்கலின் வரலாறு, இயல்பு மற்றும் அதன் பொது நியதி குறித்து விவாதித்து பொதுக் கருத்து உருவாக்க தமிழ் பேசும் நல்லுலகம் தவறிவிட்டது. இன்னும் நம்மில் பலர் வாழ்வுரிமைக்காக போராடும் ஈழதமிழர்கள், இலங்கையின் வந்தேறிகள் எனவும் அவர்களின் தனித்தாயக கோரிக்கை நியாயமற்றது எனவும் கருதுகின்றோம். சிங்களப் பேரினவாதத்தின் தொடரும் வன்கொடுமைகள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகள் காலப்போக்கில் மறக்கப்பட்டு நியாயப்படுத்தப்படுவதோடல்லாமல் மானமுள்ள இருப்பிற்காக போராடும் ஒரு தேசிய இனத்தின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பேச யாருக்கும் துணிவில்லை. தேசியம், இறையான்மை போன்ற பின்காலனிய அரசியல் கற்பிதங்கள் அல்லல்படும் சிறுபான்மை தேசிய இனத்தின் விடுதலைக்காகப் பயன்படுத்தப்படாமல் அவற்றிற்க்கு எதிரான சக்தியாக மாற்றப்பட்டு பேரினவாத அரசின் கையில் கொலைக்கருவியாக வழங்கப்பட்டதில் இந்திய அறிவுலகம் மற்றும் ஊடகங்கள் ஆற்றும்பணி முரண்நகையாய் பதிவுசெய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
தோற்றுவாயிலிருந்து இன்றுவரை மாந்தர்குலம் கணக்கில்லா சிக்கல்களை சந்தித்ததோடு அல்லாமல் சொல்லொனாத்துயரையும் அனுபவித்துள்ளது. அனைத்திலும் இழையோடும் பொது நியதியை அறிவுலகம் இனங்கண்டு சாமானியர்களுக்கு உணர்த்தியிருந்தால் துயரத்தின் வீச்சு நிச்சயம் குறைந்திருக்கும். மெளனமும் ஒத்துப்போதலுமான அறிவு ஜீவிகளின் நேர்மையற்ற போக்கு முரண்பாடுகளினால் ஏற்படும் சேதத்தை அதிகப்படுத்தவே செய்கிறது. கருத்துச்சுதந்திரம் ஓரளவிற்காவது இருக்கும் இக்காலத்தும் அறிவுலகம் அவ்வாய்ப்பை பயன்படுத்தி கருத்துக்களை நேர்மையாக பதிவுசெய்ய மறுப்பது தூங்குபவனைப்போல நடிப்பதற்கு ஒப்பாகும். பழமொழியோடு ஒப்பிடும் அளவிற்கு இச்செயல் எளிமையானது அல்ல என்பதை நினைவிற்கொள்க.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
எங்கே அறிவுசார் நேர்மை?
- விவரங்கள்
- ஏ.அழகியநம்பி
- பிரிவு: கட்டுரைகள்