church closeupகோயில் வழிபாடு.. பூஜை.. பொங்கல்.. என்று எந்தளவுக்கு மனதோடு நெருக்கம் வாய்ந்ததோ அதே அளவு ஆலயம்... ஞாயிறு ஆராதனை.. கிறிஸ்துமஸ் பண்டிகை... நியூ இயர் கொண்டாட்டம் என்பதும் நெருக்கம் தான்... எஸ்டேட் மக்களுக்கு.

அந்த காலகட்டத்தில் எனக்குத் தெரிந்து மதம் பற்றிய பாகுபாடு.. அதன் மூலமாக நிகழும் எந்த வித சண்டைச் சச்சரவும் இருந்ததில்லை. சொல்லப் போனால் மத நல்லிணக்கம்... அது அதுவென்றே தெரியாமல் அங்கு இயல்பிலேயே இருந்தது என்று தான் நம்புகிறேன்.

ஒரே லைனில் இந்த வீடு இந்து வீடாகவும்... அடுத்த வீடு கிறிஸ்டியன் வீடாகவும்... அடுத்த வீடு இஸ்லாம் வீடாகவும் எந்த திட்டமிடுதலும் இன்றி... காலப்போக்கில் இருந்திருக்கிறது. எங்கள் லைனில் முதல் மூன்று வீடு கிறிஸ்துவர்களும்.. நான்காவது வீடு இந்து வீடாகவும்... அடுத்த ஐந்தாவது வீடு... மலையாள வீடாகவும் இருந்திருக்கிறது. ஆனால்.. எல்லாரும் எல்லாருக்கும் 'யக்கா... யண்ணா' தான். அத்தனை நெருக்கம்.

பொங்கல் கரகாட்டம்... என்றாலும் சரி.. கிறிஸ்துமஸ் நியூ இயர் கொண்டாட்டமாக இருந்தாலும் சரி... எல்லாருக்கும் எல்லாமே பொதுவாகத்தான் இருந்திருக்கிறது.

சனிக்கிழமை இரவு கரகாட்டம் பார்த்தாலும்... ஞாயிறு காலை ஆராதனைக்கு கிறிஸ்டியன்காரர்கள் சென்று விடுவது மிக இயல்பாக நடக்கும் வாழ்க்கை முறையாக இருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். உருளிக்கல் சர்ச்சில்... சில நாட்களில் கீழ் பிரட்டில் இருந்து "திரு வில்லியம்ஸ் அவர்கள்" பிரசங்கம் செய்வார்.

சில நாட்களில் "சாமியப்பன் சார்" அல்லது "தேவதாஸ் சார்". சில நாட்களில் நீள வெள்ளை அங்கி தரித்த 'அய்யர்' என்று அழைக்கப்படும் 'பாஸ்டர் அல்லது ஃபாதர்' சோலையார் டேமில் இருந்து வருவார். அவரைக் காண்பதே நன்றாக இருக்கும். ஞாயிறு- ன் முதல் வேலையே ஆலயத்துக்கு செல்வதுதான். அது ஒரு மாதிரி நம்மையும் அறியாத ஒழுக்கத்தை வடிவமைத்தது என்று தான் சொல்வேன்.

ஆங்கில பாடல்கள் மாதிரி இழுத்து இழுத்து பாடும் போது உற்சாகம் பீறிடும். உள்ளுக்குள் இனம் புரியாத நம்பிக்கை மேலோங்கும். சில போது அப்பமும் திராட்சை ரசமும் தருவார்கள். நமக்கு கிடைக்காதா என்று ஏங்கி இருக்கிறேன். (சிறுவர்களுக்கு கிடைக்காது.) (ஒரே கோப்பையை துடைத்து துடைத்து அடுத்தவர்க்கு தரும் பழக்கம் இன்னும் அப்படியே இருக்கிறதா என்று தெரியவில்லை)

உருளிக்கல் ஆலயத்துக்கு வராத சிலர் வால்பாறை ஆலாயத்துக்கு செல்வார்கள். பிராத்தனை முடிந்து திரும்புகையில்... அப்படியே வால்பாறை மார்க்கெட்டில் வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்கி வரவும் அந்த ஞாயிறு ஆசீர்வதிக்கப்படும்.

வால்பாறையில்.... பழைய பேருந்து நிலைய பக்கம் ஒரு ஆலயமும்.. போஸ்ட் ஆபிஸ் எதிரே ஒரு ஆலயமும் இருக்கும். நான் இரண்டுக்குமே சென்றிருக்கிறேன். கருமலை சார்ச்க்கு கூட ஓரிருமுறை போயிருக்கிறேன்.

அந்த மாதிரி ஒரு கால கட்டத்தில் தான்.. ஆலயத்தைத் தாண்டி.. வீடுகளில் பிராத்தனைக் கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.. என்று நினைக்கிறேன். அதன் தேவை... அந்தந்த குடும்பத்தின் பிரச்சனைகள்... அந்தந்த குடும்பத்து நம்பிக்கைகள் சார்ந்தவையாகத்தான் இருந்திருக்க முடியும். அப்படி நடக்கும் பிராத்தனைக் கூட்டங்களுக்கு அக்கம் பக்கத்துக்கு வீடுகளில் உள்ளோரும் அந்த வீட்டுக்காரரின் அழைப்பின் பேரில் வருவார்கள்.

மனம் நிறைந்து மனிதர்கள் வீட்டில் வந்து நிறைகையில்... ஒரு வகை பாசிடிட்டிவ் வைப்ரேஸன் அந்த வீட்டில் நிறையும். பரவசம்... அபிஷேகம்.. அக்கினி... அருள்... கடவுள் இறங்குதல் என்று நிறைய வழிகளில் சொல்லிக் கொள்ளலாம். எப்படியோ நாளையை பற்றிய ஒருவகை நம்பிக்கையை அது பெருக்கெடுக்க வைக்கிறது.

ஊர் கூடி தேர் இழுப்பது போல. உள்ளம் கூட கவலை ஓட்டுவது. வெரி சிம்பிள். தனிமையாய் இருப்பதை விட ஒரு நண்பன் உடன் இருக்கையில் வரும் தெம்புக்கு சமம் அது. அது மட்டுமல்லாமல் கூட்டு பிரார்த்தனைக்கு வலிமை உண்டு... என்பது அறிவியலும் சொல்லும் உண்மை. கூட்டம் முடிந்து சுண்டல்... தேனீர் என்று ஒரு சின்ன டீ பார்ட்டி நடக்கும். அது அத்தனை தித்திப்பான நினைவுகளைக் கொண்டிருக்கிறது.

'உருளிக்கல் எஸ்டேட்' முதல் பிரிவு... லோயர் டிவிஷன்... இரண்டாம் டிவிஷன்... மட்டத்துப்பாடி... புதுபிரட்டு என்று எங்கெல்லாம் கூட்டம் நடக்குமோ அங்கெல்லாம் அழைப்பு இருக்கும் பட்சத்தில் மக்கள் சென்று கலந்து கொள்வார்கள். நான் மட்டத்துப்பாடிக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சென்று விடுவேன்.

மட்டத்துப்பாடி லேண்ட்ஸ்கேப் மீது எப்போதுமே இனம் புரியாத ஆர்வம் உண்டு. கிறிஸ்துவ மதம் இங்கிலிஷ்காரனின் மதமாகயிருந்தாலும்.. பெரும்பாலைய எஸ்டேட் மக்களின் மனதுக்கு நெருக்கமான ஈர்ப்பை... நம்பிக்கையை அது விதைத்திருக்கிறது.

அதுவும் கிஸ்துமஸ் சமயங்களில் கேரல் சர்வீஸ்க்கு லைன் லைனாக டிரம்ஸ் அடித்து பாடல் பாடிக் கொண்டு ஆலயத்தின் சார்பாக வரும் கூட்டத்தைக் காணவே கண் கோடி வேண்டும். கிறிஸ்டியன் வீடுகள் எல்லாம்.. ஸ்டார்ஸ்....சீரியல் பல்புகள் மினுமினுங்க.... அந்த கேரல் சர்வீஸ் கூட்டம் எப்படா வரும் என்று காத்துக் கிடப்பார்கள்.

டிசம்பர் மாத குளிருக்கு ஸ்வெட்டர்... குல்லா சகிதம்... பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் கைக்கடக்கமான சிலுவையைப் பிடித்தபடி... ராகமிட்டு பாடிக் கொண்டே வந்து வாசலில் நின்று டிரம்ஸ் அடிக்கையில்... ஜீசஸ் வந்தால் கூட அவ்ளோ சந்தோசம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அத்தனையும் ஆக சிறந்த நினைவலைகள். ஜோதா நதிக்கரையில் நிற்கும் உணர்வு. சிறுவர்களுக்கோ சிரிக்க சிரிக்க எழும் உற்சாகம்.

சாண்டா கிளாஸ் என்ற கிறிஸ்துமஸ் தாத்தா அந்த வருடம் யாராக இருக்கும் என்று கண்டு பிடிக்கும் விளையாட்டு பரவசமூட்டும். அந்த தாத்தா வேஷத்தை யார் வேண்டுமானாலும் போட்டு இருக்கலாம். நமக்குத் தெரிந்த... நம்மோடு இருப்பவர் கூட சாண்டா கிளாஸ் - ஆக இருக்கலாம்.

அது கிஸ்துமஸ் முடியும் வரை யாருக்கும் தெரியாமல் இருப்பது இன்ப முரண். ஒரு முறை எங்கள் 'சேத் மச்சான்' கிறிஸ்துமஸ் தாத்தாவாக இருந்திருக்கிறார். தாடி வைத்த பொக்கை வாயோடு... தொப்பைத் தள்ளிய தளர்ந்த நடையில்... கிறிஸ்துமஸ் குல்லா போட்ட குதூகலத்தில்... முகத்தை ஆட்டி ஆட்டி மெல்ல நம்மிடையே வந்து கோணங்கி செய்கையில்... கவலை எல்லாம் பறந்தோடும். யாருக்குத் தெரியும். கடவுள் கூட அந்த வேஷத்தில் வந்திருக்கலாம்.

வால்பாறை எஸ்டேட் மக்களின் வாழ்க்கை முறையில் கிறிஸ்துவம் இரண்டறக் கலந்து விட்ட ஒன்றாகவே பார்க்கிறேன். அது அவர்களுக்கு நம்பிக்கை சார்ந்த முன்னெடுப்பைத் தருவதால் அதை ரசிக்கத்தான் வேண்டும். அற்புதங்களை எந்த கடவுள் செய்தால் என்ன.... இறுதியில் மனிதனின் மன நிம்மதியே முக்கியம்.

கொரோனா காலத்திலும்கூட நம்மை பாதுகாக்கும் அந்த நம்பிக்கையை மிக கண்ணியத்தோடு பகிர்கிறேன். எல்லாரும் நலமுடன் இருக்க வேண்டும் வேண்டுதல்... கிறிஸ்துமஸ்க்கு காத்திருக்கிறது.

- கவிஜி

Pin It