மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மிகுந்த பதற்றத்தோடு காணப்படுகிறார் நரேந்திர மோடி. மீண்டும் ஆட்சிக்கு வருவோமா? இல்லையா? என்ற பதற்றத்தில், அவர் உதிர்க்கும் வார்த்தைகள் யாவும் உச்சபட்ச வெறுப்புணர்வை வெளிக்காட்டுகின்றன. இசுலாமியர்கள் குறித்து நாடெங்கும் அவதூறாகப் பேசிவிட்டு, கடைசியில் இல்லை என்று மழுப்பிவிட்டார். காங்கிரஸ் - திமுக - ஆம் ஆத்மி - திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குறித்து மோடியும் பாஜகவினரும் பேசும் பேச்சுக்கள் அநாகரீகத்தின் உச்சமாய் இருக்கின்றன. வாக்கு அரசியலுக்காக இவ்வாறு பேசுகிறார் என்று வைத்துக் கொண்டால் கூட, வாக்களிக்கும் மக்களையே தரம் தாழ்த்திப் பேசும் அளவுக்கு தற்போது எல்லை மீறிச் சென்றுவிட்டார் மோடி.modi 473சில மாநிலங்களில் மகளிருக்கு கட்டணமில்லாமல் பேருந்துப் பயணம் வழங்கப்படுவதால், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து விட்டது என்று மோடி கூறியிருக்கிறார். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் அமல்படுத்தப்பட்டது. பொருளாதார ரீதியாக இந்தத் திட்டம் ஏற்படுத்தியிருக்கிற தாக்கம் என்ன என்பதற்கு ஏராளமான தரவுகள் உள்ளன. இந்த விடியல் பயணத் திட்டத்தால் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 55 லட்சம் பேர். சின்னஞ்சிறு கிராமங்களில் இருந்து அருகே உள்ள நகரங்களுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள், காய்கறி விற்கும் பெண்கள் என பலதரப்பட்ட பெண்கள் இத்திட்டதால் மிகப்பெரிய பலனை அனுபவிக்கிறார்கள்.

மொத்தமாக இதுவரை 468 கோடிமுறை பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர். இவர்களில் சுமார் 80% பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இப்பெண்கள் மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமிக்கிறார்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த சேமிப்புத்தொகை மறைமுகமாக கிராமப்புற பொருளாதாரத்தைத் தூண்டி, விலைவாசியை கட்டுக்குள் வைக்க உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இத்திட்டத்தால் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாகக் கூறியிருக்கிறார் பிரதமர் மோடி.

இந்தியாவில் தற்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம் அமலில் உள்ளது. இவை எல்லாமே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள். மெட்ரோ ரயில் திட்டம் பயன்பாட்டில் இருப்பதோ 15 நகரங்களில் மட்டுமே. அதில் கட்டணமில்லா பேருந்துப் பயணம் செயல்பாட்டில் இருப்பதோ சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி ஆகிய நகரங்கள் மட்டுமே. அதேசமயம், இந்த நகரங்களில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. சென்னை மெட்ரோ ரயிலில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை சராசரியாக 3 லட்சமாக உள்ளது.

எந்தவிதமான தரவுகளும் இல்லாமல், மனம்போகிற போக்கில் அவதூறுகளை, உண்மைக்குப் புறம்பான செய்திகளை அள்ளிவீசுவது 10 ஆண்டுகளாக மோடி வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல. மெட்ரோ ரயில் திட்டத்தின் மீது அவ்வளவு அக்கறை கொண்ட பிரதமர் மோடி, சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட ஒதுக்காததது ஏன்? ஒன்றிய மற்றும் மாநில கூட்டுப் பங்களிப்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.61,843 கோடி. இதுவரை தமிழ்நாடு அரசு நிதியில் இருந்து மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மெட்ரோ ரயில் திட்டத்தின் மீது பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை. ஆனால் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்கிற கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டத்தையும், அதைப் பயன்படுத்தும் உழைக்கும் பெண்களையும் சிறுமைப்படுத்தும் நோக்கத்தோடே பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருக்கிறார்.

“பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, படிக்கச் செல்லக்கூடாது,வேலைக்குச் செல்லக்கூடாது” என்ற சனாதனக் கோட்பாட்டுக்கு நேரெதிராக, பெண்கள் நகரங்களை நோக்கி படிக்கவும், வேலைக்கும் செல்லத் தூண்டுவதாகவும் கட்டணமில்லா பேருந்துப் பயணம் திட்டம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக அரசு செயல்படுத்தியிருக்கும் இத்திட்டத்தை தற்போது மற்ற பல மாநிலங்களும் செயல்படுத்தத் தொடங்கி விட்டன. திக்கெட்டும் ‘திராவிட மாடல்’ திட்டங்கள் பரவுகின்றன என்ற கோபமும்கூட இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். அதேசமயம், கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டத்தால் இழப்பு ஏற்படுகிறது என்றால், கடந்த 10 ஆண்டுகளில் பெரு நிறுவனங்களின் 25 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கின்றன. இதில் பொதுத்துறை வங்கிகள் மட்டுமே 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தள்ளுபடி செய்திருக்கின்றன. அவை இழப்பு இல்லையா? அந்த வாராக்கடன்களை வசூலித்துக் காட்டுவோம் என்று இதுவரை பிரதமர் மோடி எங்காவது பேசியிருக்கிறாரா?

பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள், பயனடைவது மட்டும் ஏன் மோடியின் கண்களை உறுத்துகின்றன? ஒருவேளை இதிலும் உயர்ஜாதி ஏழைகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டால் ஏற்றுக் கொள்வாரா என்று பாஜகவினர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

ஜி.ஆர்.சாமிநாதனின் மூடத்தனமான தீர்ப்பு

அக்ரஹாரத்தில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு போட்ட எச்சில் இலையில் பிற ஜாதியினர் உருண்டு தரிசனம் செய்யும் முறையை கடந்த 2015ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை செய்திருந்தது..

தற்போது இந்த சடங்கு முறைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன். இந்த சடங்கு அடிப்படை உரிமை என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே கர்நாடக அரசும் எச்சில் இலையில் உருண்டு தரிசனம் செய்யும் முறைக்கு தடை விதித்திருந்தது. இப்போது இந்த மூடத்தனம் தமிழ்நாட்டில் உயிர்ப்பெற்று வருகிறது.

 இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. அது நீதிபதிகளுக்கு தெரிவதில்லை.

சுகாதார உரிமையை விட பக்தி உரிமை தான் முக்கியமானது என்று நீதிபதிகள் கருதுகிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. வாழை இலையில் எச்சில் செல்கிற போது அதில் ஒரு ரசாயனம் உருவாகி அந்த சக்தியில் அதிர்வலைகள் ஏற்பட்டு மனித சிந்தனையை மாற்றி அமைக்கிறது என்று இவர்கள் அறிவியல் விளக்கத்தை கூறினாலும் வியப்பதற்கு இல்லை. சனாதனம் இப்படி எல்லாம் நாட்டை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It