இதழின் குரல்

கடந்த இரண்டு புதுமலர் இதழ்களும் அறிவுத்தளத்தில் பேசுபொருளாக மாறியது குறித்து மிக்க மகிழ்ச்சி.

வள்ளலாரின் முற்போக்குச் சிந்தனைகளைத் தாங்கி வந்த சனவரி-மார்ச்சு 2023 இதழ்களை வேண்டி இன்னும் கூட அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு ஆளுநர் வள்ளலாரை “சனாதனத்தின் உச்ச நட்சத்திரம்“ என இழிவுபடுத்தியதன் வெளிப்பாடாகத்தான் இதைக் காண முடிகிறது. அதே போல் ஏப்ரல்-சூன் இதழில் தாய்மொழிகளைக் காக்கும் மொழிப் போராளி பஞ்சாப் பேராசிரியர் ஜோகா சிங் அவர்களின் விரிவான பேட்டியும் பலரின் கருத்தை ஈர்த்துள்ளது.

அதே போல் இந்த இதழில் சாதியொழிப்புப் போராளிகளான அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் போன்ற ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் வெளியாகி உள்ளன. சாதி ஒழிப்புப் போரில் தங்களைக் கரைத்துக் கொண்டு களமாடிய இன்னும் பல சாதி ஒழிப்புப் போராளிகள் குறித்து விரிவாக எழுதப்பட வேண்டும். தொடர்ந்து வரும் இதழ்களில் அப்படிப்பட்ட கட்டுரைகள் இடம்பெறும்.

இந்தியச் சமூகத்தில் மிக மிக முக்கியமான எதிர்மறைச் சக்தியான சாதி அமைப்பு நம்மைச் சவாலுக்கு இழுக்கிறது. இந்தப் போரை, நாம் தொடங்கவில்லை அதேபோல் இந்த போர் நம்மோடு முடிவடையப் போவதும் இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் சமூகத்தைச் சீரழித்து வரும் கொடும் நோய் இது. இருப்பினும் கால மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு நம் மண்ணில் ஊன்றி வளர்ந்து நிற்கிறது இந்தப் பிசாசு.

சாதியைத் தூக்கி நிறுத்த வர்ணாசிரம தர்மமும், சனாதனமும், வேதங்களும், புராணங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. அத்தோடு இப்பொழுது அரசதிகாரமும் இணைந்து கொண்டு “இரட்டை எஞ்சின்” வேகத்தோடு இயங்கி வருகிறது.

சாதியின் கொடுங்கரங்களால் அநியாயமாகப் படுகொலை செய்யப் பட்டவர்கள் குறித்து வரலாறு தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. ஹைதராபாத் பல்கலைக் கழகத் தலித் மாணவன் ரோகித் வெமூலா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு எழுதிய கடிதம் அதற்கோர் இரத்த சாட்சியாகும். “ எனது பிறப்பே ஒரு சபிக்கப்பட்ட விபத்தாகும். எனது வாழ்க்கையே ஒரு சாபமாகும். எனது மரணத்திற்காக யாரும் கண்ணீர் சிந்த வேண்டாம். உயிரோடு இருப்பதைக் காட்டிலும் சாவு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” எனும் அந்த ஒடுக்கப்பட்ட மாணவனின் மரண சாசனம் சாதியின் கொடூரத்தை வெளிச்சமிட்டுக் காட்டி நம் மனசாட்சியை உலுக்குகிறது.

கொஞ்சமோ சாதிக் கொடுமைகள்? அது மனித மலத்தை மற்றொரு மனிதனைத் தின்ன வைக்கிறது. ஒடுக்கப்பட்டவன் மீது மனச்சாட்சியே இல்லாமல் சிறுநீரைப் பொழிகிறது. சேரிகளில் வாழ்பவர்களின் குடிநீரில் மனித மலத்தைக் கரைக்கிறது. தலித் என்ற காரணத்தாலேயே பழைய செருப்பை நக்க வைக்கும் கொடுந் தண்டனையைக் கொடுக்கிறது. ஒரு தலித்தின் நிழல் தன் மீது பட்டுவிட்டது எனக் குற்றம் சாட்டி அவனை அடித்தே கொல்கிறது.

ஒரே குவளையில் தேநீர் அருந்தக் கூடாது, காலில் செருப்பு அணியக்கூடாது, கோயிலில் நுழையக் கூடாது, சாமி வரும் தேரை இழுக்கக் கூடாது, சைகிளில் போகக் கூடாது, நல்ல துணிமணிகள் அணியக் கூடாது, வண்டி வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது, ஊர்க் குளத்தில் குளிக்கக் கூடாது, பொதுக் கோயில்களில் சாமி கும்பிடக் கூடாது, பதவியில் இருந்தாலும் சமமாக உட்கார முடியாது, அலுவலகங்களில் கொடியேற்ற முடியாது, ஒரே இடுகாட்டில் புதைக்க முடியாது என எண்ணற்ற தடைகள் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தொடர்வது நம்ப முடியாமல்தான் இருக்கிறது.

இவைகள் எல்லாம் எங்கோ வட நாட்டில் நடப்பவை அல்ல. நம் கண்ணெதிரே தமிழகத்திலேயே நடக்கிறது. கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த காரணத்தால் கச்சநத்தம் கிராமத்தில் மூன்று தலித்துகள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். பட்டியலினத்தவரை அர்ச்சகராக நியமித்தது செல்லாது என உயர்நீதி மன்றமே தீர்ப்பளிக்கும் அவலநிலையும் தொடர்கிறது.

2021- ஆம் ஆண்டில் பட்டியல் சாதி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் பதிவு செய்யப் பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 50, 900. அதே போல், நாடு முழுவதும் மலக்குழியில் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 989. அதில் தமிழகத்தில் மட்டும் மரணம் அடைந்தவர்கள் 55 என்பது அதிர்ச்சிக்குரியதாகும்.

தவிரவும், தமிழகத்தில் 87 வகையான தீண்டாமைப் பாகுபாடுகளும், 28 வகையான தீண்டாமைக் கொடுமைகளும் நிலவுவதாகத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கணக்கெடுப்புக் குறிப்பிடுகிறது. மேலும் சனவரி 2016 முதல் திசம்பர் 2020 வரை 350 பட்டியலின மற்றும் பட்டியலினப் பழங்குடி மக்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும், இதில் 13 பேர் மட்டும் தண்டிக்கப்பட்டு, 229 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் மதுரை எவிடன்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4000 தலித் பஞ்சாயத்துத் தலைவர்களில் 1200 பேர் சாதிப்பாகுபாடுகளுக்கு உள்ளாகின்றனர். தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 114 பட்டியலின ஊராட்சித் தலைவர்களிடம் ஒரு தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழ்நாடு முழுவதும் 11 தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் நாற்காலியில் அமர முடியவில்லை. 45 ஊராட்சி மன்றங்களில் தலைவர்கள் கோயிலுக்குள்ளே நுழைய முடியவில்லை. விடுதலை நாளில், குடியரசு நாளில் 12 ஊராட்சிகளில் தேசியக் கொடியை ஏற்றக்கூடிய உரிமை பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. பட்டியலின மற்றும் பட்டியலினப் பழங்குடி மக்கள் கண்காணிப்புக்குழு ஆண்டுக்கு இரண்டு முறை கூட வேண்டும் ஆனால் 1995 முதல் 2018 வரை தமிழகத்தில் இது மூன்று முறை மட்டுமே கூடி உள்ளது.

தீண்டாமையின் உச்சமாக வேலூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அருகிலுள்ள நாராயணபுரம் கிராமத்தில் ஆகஸ்டு 22 / 2019 அன்று நடைபெற்ற நிகழ்வைக் குறிப்பிடலாம். குப்பன் எனும் தலித்தினுடைய சடலத்தைப் புதைப்பதற்காகப் பாலத்தின் மேலிருந்து 20 அடி ஆழத்திற்குப் பிணத்தைத் தொட்டில் கட்டி இறக்கிப் பிறகு அங்கே புதைக்கப்பட்ட காணொலி தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே உலுக்கியது. உயர்த்தப்பட்ட சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்போர் அவர்களுக்குச் சொந்தமான நிலத்தின் வழியே ஒடுக்கப்பட்ட மக்களின் பிணத்தைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்து விட்ட காரணத்தினால் இத்தகைய கொடுமை நடைபெற்றுள்ளது. வாழ்வில் மட்டுமல்ல சாவிலும் தீண்டாமை தொடர்கிறது.

இந்த வழக்கைத் தானாக முன்வந்து விசாரித்த உயர் நீதி மன்றம், “இறந்தவர்களின் சவத்தைப் புதைப்பதற்கு அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கதல்ல! அது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கௌரவமாக வாழ்வதற்கு மட்டுமல்ல கௌரவமாக இறப்பதற்கும் கூட அனைவருக்கும் உரிமை உண்டு” எனச் சுட்டிக் காட்டியுள்ளது. அதை விசாரித்த நீதிநாயகம் ஆர். மகாதேவன் அவர்கள், பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒரே பகுதியில் புதைக்கத்தக்க இடுகாடுகளைத் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார். இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய நிலை.

சாதிக் கொடுமையில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். அதிலும் இடைநிலைச் சாதியைச் சார்ந்த ஓர் ஆணைப் பட்டியலினப் பெண் காதலித்தாலோ / திருமணம் செய்து கொண்டாலோ, அல்லது இடைநிலைச் சாதியைச் சார்ந்த ஒரு பெண், பட்டியலின ஆணைக் காதலித்தாலோ / திருமணம் செய்து கொண்டாலோ இறுதியில் கொல்லப்படுவது என்னவோ பட்டியல் இனத்தைச் சார்ந்த பெண்ணாகவோ அல்லது ஆணாகவோதான் இருப்பார்கள். இதுதான் பொதுவான சாதி நீதியாக இருக்கிறது. தவிரவும், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட கண்ணகி - முருகேசன், நந்தீஸ் - சுவாதி ஆகிய நான்கு பேரும் படுகொலை செய்யப் பட்ட அவலமும் நடந்தேறியுள்ளது. . சூரக்கோட்டை முத்து, உடுமலை சங்கர், தர்மபுரி இளவரசன் போன்ற சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பட்டியலின இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்டனர். பட்டியலினப் பிரிவைச் சார்ந்த திருச்செங்கோடு கல்லூரி மாணவன் கோகுல்ராஜ் தன்னோடு பயிலும் உயர்சாதிப் பெண்ணோடு பழகிய ஒரே காரணத்திற்காகக் குரூரமாகக் கொல்லப் பட்டான். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்டக் காவல் துணைக்கண்காணிப்பாளரான பட்டியல் இனப் பிரிவைச் சார்ந்த விஷ்ணுபிரியா அவர்கள், பணித் தொல்லைகள் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார் என்பது சாதிய இறுக்கம் எவ்வளவு கோலோச்சுகிறது என்பதைத் தெளிவாக்குகிறது.

தமிழகத்தில் காதல் தொடர்பான விஷயங்களில் ஆண்டுதோறும் 120 முதல் 150 வரை ஆணவப் படுகொலைகள் நடப்பதாக அறியப் படுகிறது. ஆனால் இவற்றில் சாதி ஆணவப் படுகொலைகளாகப் பதிவு செய்யப்படுவது மிகமிகக் குறைவாகும். ஆனால் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக முதலமைச்சராக இருந்த பொழுது “தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளே நடக்கவில்லை” எனச் சட்டமன்றத்திலேயே கூசாமல் பொய் பேசினார்.

சாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து நீதிமன்றங்கள் சிறந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளன. எடுத்துக்காட்டாக லதா சிங் (எதிர்) உ. பி. மாநில அரசு மற்றும் இன்னொருவர் (2006) 5 எஸ். சி. சி. 475 (ஏ. ஐ. ஆர். 2006 எஸ். சி. 2522) வழக்கின் தீர்ப்பு இதில் மிகவும் முக்கியமானது.

“சாதி அமைப்பு நாட்டைப் பீடித்துள்ள ஒரு சாபமாகும். அது எவ்வளவு விரைவில் அழிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு நல்லது. உண்மையில் நமது நாட்டுக்கு முன்னாலுள்ள சவால்களை எதிர்த்து நாம் ஒன்றுபட்டுப் போராட வேண்டியிருக்கிற நேரத்தில், அது நாட்டைப் பிளவு படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் சாதிகளுக்கு இடையிலான திருமணங்கள் உண்மையில் தேசிய நலனுக்கானவை. ஏனென்றால் அவற்றின் விளைவாகச் சாதி அமைப்பு அழியும். இருப்பினும் சாதிகளுக்கு இடையே திருமணம் செய்து கொள்ளும் இளம் ஆண்களும் பெண்களும் வன்முறை அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர் அல்லது உண்மையிலேயே அவர்களின் மீது வன்முறை செலுத்தப்படுகிறது என்று நாட்டின் பல பாகங்களிலிருந்து வருத்தத்திற்குரிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எங்களுடைய கருத்துப்படி அத்தகைய வன்முறைச் செயல்கள் அல்லது அச்சுறுத்தல்கள் அல்லது துன்புறுத்தல் முற்றிலும் சட்டவிரோதமானவை. மேலும் அந்தச் செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

இது சுதந்திரமான சனநாயக நாடு. ஒரு நபர் ஆணோ பெண்ணோ வயது வந்தவர் ஆனதும், அவர்கள் விரும்புகிற பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்து கொள்ளலாம். அந்தப் பையன் அல்லது பெண்ணின் பெற்றோர் அத்தகைய சாதி கடந்த அல்லது மதம் கடந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதிகபட்சமாக அவர்கள் செய்யக் கூடியதெல்லாம் அந்த மகளுடனோ, மகனுடனோ சமூக உறவுகளைத் துண்டித்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் அச்சுறுத்துவதோ அல்லது வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதோ அல்லது வன்முறைச் செயல்களைத் தூண்டி விடுவதோ கூடாது. மேலும் அத்தகைய சாதி கடந்து அல்லது மதம் கடந்து திருமணம் செய்து கொள்வோரைத் துன்புறுத்த முடியாது. எனவே வயது வந்த ஒரு பையனோ பெண்ணோ, ஒரு வயது வந்த பெண்ணையோ ஆணையோ சாதி கடந்து அல்லது மதம் கடந்து திருமணம் செய்து கொள்வாரானால், அந்த இணையர் யாராலும் துன்புறுத்தப்படாமல் அல்லது வன்முறை அச்சுறுத்தலுக்கு அல்லது செயல்களுக்கு ஆளாகாதவாறு பார்த்துக் கொள்ளுமாறும், யாராவது தானாகவோ அல்லது பிறரைத் தூண்டி விட்டோ அத்தகைய அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தலில் அல்லது வன்முறைச் செயலில் ஈடுபடுவாரானால், அத்தகைய நபர்கள் மீது குற்றவியல் நடைமுறைகளைத் தொடங்கி, சட்டத்தில் உள்ளவாறு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள நிர்வாக / காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம்“ என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக வழிகாட்டியுள்ளது.

மேலும் மற்றொரு ஆணவப் படுகொலை வழக்காகிய அசோக் குமார் தோடி (எதிர் ) கிஸ்வர் ஜகான் மற்றும் பிறர் குறித்த வழக்கில் சாதி கடந்து, மதம் கடந்து திருமணம் செய்து கொள்வோர் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் அத்தீர்ப்பில்

“ வயது வந்த ஒரு ஆணோ பெண்ணோ சாதி கடந்து அல்லது மதம் கடந்து திருமணம் செய்து கொண்டால், அவர்களுடைய திருமண வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது அல்லது துன்புறுத்தப்படக்கூடாது. மேலும் யாராவது தானாகவோ அல்லது பிறரைத் தூண்டி விட்டோ அத்தகைய அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தலில் அல்லது வன்முறைச் செயலில் ஈடுபடுவாரானால் அத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது தொடர்புடைய அதிகாரிகளின் பொறுப்பாகும் .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. . காவல் துறை அதிகாரிகளுக்கு அவர்களுடைய தாம்பத்திய விவகாரங்களில், எந்தப் பாத்திரமும் இல்லை. மேலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு, அவர்களுடைய திருமண வாழ்க்கையில் தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. மேலும் அவர்களுடைய திருமண வாழ்க்கையில் தலையிடும் பிறரைத் தடுக்கும் கடப்பாடு அவர்களுக்கு உண்டு” என மிகத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.

இவ்வழக்குத் தவிர, பகவன் தாஸ் (எதிர்) தில்லி அரசு வழக்கில், வன்முறையை நிகழ்த்துவதற்கோ அல்லது வன்முறை மிரட்டல் விடவோ எவருக்கும் உரிமை இல்லை என்பதை உச்சநீதிமன்றம் வலியுறுத்துகிறது.

விகாஸ் யாதவ் (எதிர்) உத்தரப் பிரதேசஅரசு (2016) வழக்கில், தங்களது துணைவரைத் தேர்ந்தெடுப்பது பெண்களது சுயமரியாதை தொடர்பானது. அவளது சகோதரர்களுக்கோ அல்லது அவளது தந்தைக்கோ அல்லது குடும்ப கௌரவத்திற்கோ அப்பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளைக் கட்டாயப்படுத்துவது கடுமையான குற்றமாகும் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அதே போல் ஆஷா ரஞ்சா (எதிர்) பீகார் அரசு (2017) வழக்கில், தனது வாழ்நாள் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் பெண்ணின் உரிமை என்பது அரசமைப்புச் சட்டப் பிரிவு 19 வழங்கிய உரிமையாகும் எனச் சுட்டிக் காட்டி உள்ளது.

இது தவிர சக்தி வாகினி (எதிர்) இந்திய ஒன்றியம் (2018) எனும் புகழ்பெற்ற வழக்கில் சாதிமறுப்புத் திருமணம் செய்த இணையரைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என வலியுறுத்துகிறது. மேலும் சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும் கட்டைப் பஞ்சாயத்துகளைத் தடுப்பது மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளரது கடமை எனவும், சாதி மறுப்பு இணையருக்குப் பாதுகாப்பான இருப்பிடம் மற்றும் காவல்துறை பாதுகாப்பு அளிப்பதும் அந்த இரு காவல் அதிகாரிகளின் பொறுப்பு எனவும், இணையர்கள் மீது வன்முறை ஏவப்பட்டால், அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 141 மற்றும்143-ன்படி, காவல் கண்காணிப்பாளர் முதல் தகவல் அறிக்கை பதியலாம் எனப் பல பரிந்துரைகளை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது.

இவ்வளவு சட்டப் பாதுகாப்புகள் இருந்தும், ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரும் சவாலாகும். எனவேதான் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு சனநாயக அமைப்புகளால் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தவிரவும், இந்திய சட்ட ஆணையம் மற்றும் இந்திய மகளிர் ஆணையம் ஆகியனவும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் பரிந்துரை வழங்கி உள்ளன.

சாதி மறுப்புத் திருமணம் தவிர, பல்வேறு சாதிப் பாகுபாடுகளும் கொடுமைகளும் சமூகத்தில் நிலவி வருவதை அனைவரும் அறிவர். குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள் வேலைவாய்ப்புகளில் மிகவும் புறக்கணிக்கப் படுகின்றனர். இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகைப் பங்கில் உயர்த்தப்பட்ட சாதியினர் 14% மட்டுமே உள்ள போதிலும், அவர்கள் இந்தியாவில் 94% நிறுவனப் பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர். அதே போல் கல்வி நிறுவனங்களில் இருந்தும், நிலத்தில் இருந்தும் ஒடுக்கப்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 71% தலித்துகள் நிலமற்ற விவசாயக் கூலிகளாக உள்ளனர். நிலம் இல்லையேல், அவர்களிடம் அதிகாரம் இருக்காது. அவர்களுக்குக் கௌரவமான வாழ்க்கையும் இருக்காது.

“நிலமற்ற உழைப்பாளிகள் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். அவர்களுக்கு நிலம் இல்லை என்பது தான் அவர்களது துன்பங்களுக்கு மிக முக்கியமான காரணம் ஆகும். இதனால்தான் அவர்கள் அவமானங்களுக்கும், கொடுமையான அடக்குமுறைகளுக்கும் பலியாகிறார்கள்" என அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

எனவே சாதி ஒழிப்பு என்பது நில உரிமை மற்றும் பண்பாடு தொடர்பானதாக இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக ஊறிக் கிடக்கும் இக்களையை ஒழிக்கப் பல்வேறு படிநிலைகளையும் கடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கல்வி, இடஒதுக்கீடு, அகமண முறை ஒழிப்பு போன்ற வழிகளில் விடுதலைப் பயணத்தைத் தொடர வேண்டும். “வர்க்கம் என்பது மாறக்கூடிய சாதியாகவும், சாதி என்பது மாறாத வர்க்கமாகவும் உள்ளது” எனச் சோசலிசத் தலைவர் இராம் மனோகர் லோகியா அவர்கள் கூறியிருப்பதை இத்தருணத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம். (“Class is mobile Caste whereas Caste is immobile Class”) எனவே பொருளாதாரப் புரட்சி, பண்பாட்டுப் புரட்சி ஆகிய இரண்டையும் ஒன்றாக முன்னெடுக்க வேண்டிய தேவை இன்று உருவாகியுள்ளது. இது தவிர, சாதி ஒடுக்குமுறையை ஒழிக்கக் குறுக்கு வழி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

***

இலண்டன் வாழ் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் அவர்களது காத்திரமான கட்டுரை ஒன்றும் இவ்விதழில் வெளியாகியுள்ளது. இன்றைய சூழலுக்கு ஏற்ற மார்க்சியம் குறித்த கட்டுரையாக அது விரிவடைகிறது. இது குறித்த உரையாடலைத் தொடர வேண்டும் நண்பர்களே!

- புதுமலர் ஆசிரியர் குழு