கோகுல்ராஜ் சாதி ஆணவப் படுகொலை வழக்கின் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் 02.06.2023 அன்று பாராட்டுதலுக்குரிய தீர்ப்புரை அளித்துள்ளது. வழக்கை மிகவும் அக்கறை யுடனும், ஆழமாகவும் விசாரணை நடத்தி அரியத் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள் எம்.எஸ். இரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் இருவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுதலை உரித்தாக்குகிறோம். வழக்கில் ஊன்றி, மிகத் திறமையாகத் தமிழ்நாட்டரசின் சார்பில் வழக்கை எடுத்துரைத்த செம்மல்கள் தோழர் ப.பா. மோகன், திரு. டி.லஜ பதிராய் மற்றும் திரு. எ. திருவடிகுமார் ஆகியோருக்கு நம் பாராட்டுதலைத் தெரிவிக்கின்றோம்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் சாதி பொறியியல் பட்டதாரி வி.கோகுல்ராஜும் அவருடன் படித்த கொங்கு வேளாளர் சாதியைச் சேர்ந்த சுவாதியும் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள இருந்தனர். இருவரும் 23.06.2015 அன்று நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் கோவிலுக்குச் சென்றிருந்தனர். இதையறிந்த சாதி மறுப்புத் திருமணத் திற்கு எதிரான சாதி வெறி பிடித்தவனும் மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனனும் தலைவனுமான சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சார்ந்த எஸ். யுவராஜும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து கோகுல்ராஜை கோவிலில் இருந்து கடத்திச் சென்று, தற்கொலைச் செய்து கொள்ளப் போவதாக எழுதி, கோகுல்ராஜை கையொப்பமிடச் செய்துள்ளனர். கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகப் பேசிடச் செய்து காணொளிப் பதிவு செய்து கொண்டு, தலையைத் துண்டித்து பள்ளிப்பாளையம் தொடர் வண்டிப் பாதையில் கிடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தக் கொலை வழக்கைப் புலனாய்வு செய்த காவல் துறையினரிடம் சிக்காமல் யுவராஜ் 100 நாள்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து, பின் நாமக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தான். நாமக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையின் போது நீதிபதி கே.எச். இளவழகன் அவர்களை அவதூறாகப் பேசினான். அதன்பின் இந்த வழக்கு 2019-இல் மதுரை வன் கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு விசாரணை முடிந்து 08.03.2022 அன்று அளித்தத் தீர்ப்பில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டத் தண்டனை விவரம்:
1. எஸ். யுவராஜ், 2. பி. அருண் (யுவராஜின் மகிழுந்து ஓட்டுநர்) ஆகிய இவ்விருவருக்கும் மூன்று - வாழ்நாள் சிறைத் தண்டனை; 3.குமார் (எ) வி. சிவகுமார், 4. ஆர். சதீஷ்குமார், 5. இரகு (எ) டி.சிறீதர், 6.டி.இரஞ்சித், 7.டி. செல்வ ராஜ் ஆகிய அய்ந்து பேருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத் தண்டனை; 8. எஸ். சந்திரசேகரன், 9.எம். பிரபு, 10.பி. கிரிதர் ஆகிய மூவருக்கும் வாழ்நாள் சிறைத் தண்டனை.
குற்றவாளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டை எம்.எஸ். இரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் ஆகிய இரு நீதிபதிகள் வழக்கை விசாரித்து 02.06.2023 அன்று மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்து எஸ்.யுவராஜ் உள்ளிட்ட முதல் எட்டு பேர் தண்டனைகளை உறுதி செய்தனர். எம். பிரபு, பி. கிரிதர் ஆகிய இருவர் வாழ்நாள் சிறைத் தண்டனையை 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையாகக் குறைத்து தீர்ப்புரை அளித்தனர்.
உயர்நீதிமன்றத் தீர்ப்புரையின் சிறப்பு
தீர்ப்புரையின் முகப்புரையில் “மனித நடத்தையின் இருண்ட பகுதியின் கொடிய முகங்களை வெளிப்படுத்து கின்ற ஒரு வழக்கு” என்றும், “சாதியத்தால் கட்ட மைக்கப்பட்ட நமது சமுதாயத்தில் உள்ள சாதி வெறி, விளிம்பு நிலையில் உள்ள மக்களை மனிதத்தன்மை யற்ற வகையில் நடத்துதல்” பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். “இந்த வழக்கில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, சூழ்ச்சித் திறத்துடன் வினையாற்றி, கூச்சமின்றி அரசுத் தரப்புச் சான்றினரை பிறழ்வுச் சான்றினராகப் பொய்ச்சான்று பகர வைத்து குற்ற வழக்கு விசார ணையை தடம்புரளச் செய்வதிலும் திசைதிருப்பச் செய்வதிலும் ஈடுபட்டு அதில் வெற்றி பெறவும் முயல் கிறார்கள் என்பதற்கு இதுபோன்ற வழக்குகள் பாடநூல் களாக இடம்பெறச் செய்ய வேண்டிய எடுத்துக்காட்டு களாக அமை கின்றன” எனவும் கூறப்பட்டுள்ளது.
செல்வாக்குப் படைத்த மனிதர்கள் மீது குற்ற வழக்கு விசாரரைண நடக்கும் போது இது மிக இயல்பாக நடைபெறும் நிகழ் வாகிவிட்டது. நெருக் கடிகள் பலவற்றை மீறி நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு காலத்தில் கோவிலில் 8 இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண் காணிப்புக் காமிராக்கள் மூலம் பதிவான காட்சிகள் நல்ல சான்றாக அமைந்தன. மாதொரு பாகன் நூல் தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது குற்றம் சாட்டியதில் எம்.யுவராஜால் தொடங்கப்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை பேரவை முக்கியப் பங்கு என்பதையும் பெருமாள் முருகனை (11.01.2015) மன்னிப்புக் கேட்க வைத்ததையும் தங்கள் 234 பக்கத் தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.
தேவை சாதி ஆவணக்கொலைத் தடுப்புச் சட்டம்
இளைஞர்களான பெண்ணும் ஆணும் தங்கள் இல்வாழ்க்கை இணையரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுதந்திரம் இல்லை என்றால், மறுக்கப்பட்டால் நாம் என்ன நாகரிக மக்கள் சமுதாயம்? இது பெரியார் மண் என்று பீற்றிக்கொள்கிறோமே, சரியா? ஒவ்வொரு மனிதரும் வெட்கப்பட வேண்டாமா? அவமானமாகக் கருத வேண்டாமா?
இதுபோன்ற கொடியக் குற்றங்கள் மேலும் நிகழ் வதற்கு முன் அவற்றைத் தடுப்பதற்கும் சாதி மறுப்புத் திருமணம் புரிவோரைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் முற்போக்காளர்களுக்கும் அரசுக்கும் பொறுப்பு உள்ளது. சாதி ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்துக் கொண்டுள்ளோம்.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க ‘போக்சோ’ (POCSO) சட்டம் 2012-இல் கொண்டுவந்தது போல் சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொள்வோரை ஆணவக் கொலையிலிருந்து பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டம் இயற்றிடுமாறு வேண்டுகிறோம்.
- சா.குப்பன்