உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை, ஒவ்வொரு ஆண்டும் பிரபல ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அதன்படி தனது 35-ஆவது உலகப் பெரும் பாணக்காரர்களின் பட்டியலை ‘போர்ப்ஸ்’(Forbes’ 35th Annual World’s Billionaires List - 2021) வெளியிட்டுள்ளது.

இதில், அதிகப் பணக்காரர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில், இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 100 கோடி டாலருக்கும் அதிகமாக - அதாவது, ரூ. 7 ஆயிரத்து 300 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்களை ‘பெருங் கோடீஸ்வரர்கள்’ (பில்லியனர்கள் - Billionaires) என்று அழைக்கிறார்கள். அந்த வகையில், பில்லியன் டாலருக்குமேல் சொத்து படைத்த பணக்காரர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 140 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா 724 பில்லியனர்களுடன், முதலிடத்திலும், சீனா 698 பில்லியனர் களுடன் இரண்டாமிடத்திலும் இருக்கும் நிலையில் ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளைத் தாண்டி, 140 பெருங்கோடீஸ்வரர்களுடன், இந்தியா மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஜெர்மனி நான்காம் இடத்திலும், ரஷ்யா ஐந்தாம் இடத்திலுமே உள்ளன.அதேபோல, போர்ப்ஸ் பட்டியலில், இந்தியாவின் முதற்பெரும் பணக்காரரான ‘ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்’ தலைவர் முகேஷ் அம்பானி, தற்போது உலகின் 10-ஆவது பெரும்பணக்காரராகவும், ஆசியாவின் முதற்பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார்.

இதுவரை அந்த இடத்தில் இருந்த சீனாவின் முதற்பெரும் பணக்காரரான அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மா-வை, அம்பானி பின்னுக்குத் தள்ளியுள்ளார். அம்பானியின் சொத்துமதிப்பு 8,450 கோடி அமெரிக்க டாலர்களாக ( 84.5 பில்லியன் டாலர்- சுமார் ரூ. 6.27 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

முகேஷ் அம்பானிக்கு, கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் மட்டும், 3,500கோடி அமெரிக்க டாலர் சொத்து சேர்ந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின்நிகர கடன் பூஜ்ஜியமாகி இருக்கிறது.

முகேஷ் அம்பானிக்கு அடுத்து, இந்தியாவின் 2-ஆவது பெரும்பணக்காரராக - பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், நிலக்கரிச் சுரங்கம், விமான நிலையங்கள், துறைமுகம் என அனைத்தையும் வளைத்துப் போட்டு வருபவருமான- கவுதம் அதானி உருவெடுத்துள்ளார்.அதானியின் சொத்து மதிப்பு 5,050 கோடிடாலராக அதிகரித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் அதானியின்சொத்து மதிப்பு 5 மடங்கு உயர்ந்துள்ளதாக ‘போர்ப்ஸ்’ இதழ் தெரிவித்துள்ளது.

அதானி உலக அளவிலும் 24-ஆவது பெரும்பணக்காரராக மாறியுள்ளார். இந்தியாவில் அம்பானி, அதானிக்கு அடுத்தபடியாக, 3-வது இடத்தை 2,350கோடி சொத்து மதிப்புடன் எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடாரும், 4-வது இடத்தை,1,650 கோடி டாலர் மதிப்பிலான சொத்துடன் ‘அவென்யூ சூப்பர்மார்ட்’ நிறுவனத்தின் முதலாளி ராதாகிஷன் தாமணியும், 5-ஆவது இடத்தை, 1,590 கோடி டாலர் சொத்து மதிப்புடன் ‘கோடக் மகிந்திரா’ மேலாண் இயக்குநர் உதய் கோடக்-கும் பிடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, இந்தியாவில் 102 பெருங்கோடீஸ்வரர்கள் இருந்த நிலையில், அது இந்த ஆண்டு 140 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்தமாக கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, 59 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டாலர்களாக- அதாவது, ரூ. 44 லட்சத்து27 ஆயிரம் கோடிகளாக உயர்ந்துள்ளது.

உலக அளவில் ‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெசாஸ் 177 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 12 லட்சத்து 74 ஆயிரத்து 400 கோடி) சொத்து மதிப்புடன் முதலிடத்தையும், டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மாஸ்க் 151 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் ‘எல்விஎம்எச்’ தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் (150 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு), நான்காவது இடத்தில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ், ஐந்தாவது இடத்தில் ‘முகநூல்’(Face Book) நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It