கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பாபர் மசூதி இருந்த இடத்தின் மீதான உரிமை கோரும் வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்தது போலவே வெளிவந்திருக்கின்றது. நீதிபதி லோயாவிற்கு ஏற்பட்ட நிலைமை ஒரு கணம் மனதில் வந்துபோன போது, நமக்கும் கூட கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது, எங்கே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியாயத்தின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கி விடுவார்களோ என்று. ஆனால் சாமானிய குடிமகனான நமக்கே இவ்வளவு பயம் இருக்கும் போது, தீர்ப்பை சொல்லப் போகும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்காதா என்ன? எனவே நிச்சயம் அப்படியான பலப்பரிட்சைக்கு நீபதிபதிகள் தயாராக இருக்க மாட்டார்கள் என்பது நமக்குப் புரிந்தது. அதுவும் இல்லாமல் ஏற்கெனவே செய்த கரசேவைக்கே இன்னும் முடிவு தெரியாத போது, நீதிமன்றத்தைச் சுற்றி குவிந்திருந்த கரசேவகர்கள் உச்ச நீதிமன்றத்திற்கே கரசேவை செய்துவிட்டால் என்ன செய்ய முடியும்? நிச்சயம் அப்படியான ஒன்று நடந்துவிடாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

supreme court 255சங்கிகளின் ஆன்மாவே கரசேவையிலும், கடப்பாரையிலும், விச நாக்குகளிலும் தான் உறைந்து கிடக்கின்றது என்பது விபரம் தெரிந்தவர்களுக்குத் தெரியும். அதனால் மோடியின் ஆட்சியில் நீதிபதிகளுக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று சதாசிவம் வழி, மற்றொன்று லோயா வழி. எனவே இந்தத் தீர்ப்பை நாம் சதாசிவம் வழி என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

தற்போது வந்திருக்கும் இந்த ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ தீர்ப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு நீதிபதிகள் இதற்கு முன்னால் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாபர் மசூதியின் மீது அனுபவ உரிமை கோரியும், ராமர் சிலையை வழிபட அனுமதி கோரியும் 1950 ஆம் ஆண்டு கோபால் சிங் விஷாரத் (அகில இந்திய இந்து மகாசபையின் பைசாபாத் கிளையின் பொதுச் செயலாளர் மற்றும் அகில இந்திய இராமாயண சபையின் இணைச் செயலாளர்) வழக்கைத் தொடர்ந்தார். அதே ஆண்டு ஜனவரியில் இராமசந்திர தாஸ் பரமஹன்ஸ் (இந்து மகா சபையின் அயோத்தி கிளைத் தலைவர் மற்றும் அகில இந்திய இராமாயண சபையின் பொதுச் செயலாளர்) அங்கு வழிபாடு நடத்த வேண்டும் என்று ஒரு வழக்கைப் பதிவு செய்தார். அதே போல 1959 இல் சொத்தில் தனக்கும் உரிமை உண்டு என்று நிர்மோகி அகாராவினர் வழக்கு தொடர்ந்தனர். சொத்துக்கான முழு அனுபவ உரிமையும் கோரி 1961 ஆம் ஆண்டில் சன்னி வக்பு வாரியம் ஒரு எதிர் வழக்கைத் தொடர்ந்தது. 1989 ஆம் ஆண்டு அனுபவ உரிமை கோரிய அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது.

ஏறக்குறைய 21 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் 30-09-2010 அன்று வழங்கிய தீர்ப்பில் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் நிர்மோகி அகாரா ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் எஸ்.யு.கான், நீதிபதி சுதிர் அகர்வால், நீதிபதி தரம்வீர் ஷர்மா ஆகிய மூன்று பேருமே ராமர் சிலை நிறுவப்பட்ட இடம் ராமர் பிறந்த இடம் என்பதை ஒப்புக் கொண்டனர். (ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் மதிப்புமிகு நீதிபதிகள் இதுவரை கொடுக்கவில்லை)

தீர்ப்பு கொடுத்த நீதிபதிகளில் நீதிபதி அகர்வால் மற்றும் எஸ்.வி.கான் ஆகியோர் பாபர்மசூதி இருந்த இடத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றும், நீதிபதி தரம்வீர் ஷர்மா மட்டும் அந்தப் பகுதி முழுவதும் இந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு கொடுத்தார். பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததாகவும், அதை இடித்துத்தான் அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும் தொல்லியல் ஆய்வுத்துறை ஆவணங்கள் நிரூபிப்பதாக நீதிபதிகள் கூறினர். மேலும் கோயிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டியது இஸ்லாத்திற்கு எதிரானதால் அதை மசூதியாகவே கருத முடியாது என்றும் இரண்டு நீதிபதிகள் கருத்துச் சொன்னார்கள். ராமர் பாலம் மணல்மேடு என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகள் சொன்னாலும் அதை ஏற்காத காவி பயங்கரவாதிகளும், அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத நீதிமன்றமும் பாபர் மசூதி வழக்கில் மட்டும் 'அறிவியலை' ஏற்றுக் கொண்டார்கள்!

இது தொடர்பாக நடந்த மேல் முறையீட்டு வழக்கில் 2017 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும் படி அறிவுரை வழங்கியது. 2019 ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று சமரசப் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்எம். கலிபுல்லா தலைமையில் சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் பஞ்சு போன்றவர்கள் அடங்கிய குழுவையும் நியமித்தது. ஆனால் இந்தக் குழு உண்மையில் எந்த மாதிரியான ‘சமரசத்தைப்’ பேசியது என்பதெல்லாம் யாருக்கும் இதுவரை தெரியாது.

பொதுவாகவே இந்தப் பிரச்சினை இனிமேலும் தொடர வேண்டாம் என்றும், பெரும் பாசிச அபாயம் சூழ்ந்திருக்கும் இந்தத் தருணத்தில் தங்கள் மீது இழைக்கப்பட்ட அநீதியை கடந்து போகவே இஸ்லாமிய மக்களும் விரும்புகின்றார்கள் என்பதும், இதை வைத்து இனி பாஜக அரசியல் செய்ய முடியாது என்பதால் பல்வேறு அரசியல் கட்சிகளும் இதை வரவேற்றுள்ளதாகவே தெரிகின்றது. அதைத் தாண்டி பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களின் உயிர் இதற்காக பலி கொடுக்கப்பட்டதைப் பற்றி எல்லாம் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

அதுமட்டுமல்ல, சென்ற ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது நமக்கு நினைவிருக்கலாம். “நீதிமன்ற நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்றும், நீதிமன்ற அமைப்பை பாதுகாக்காவிட்டால் நாட்டில் ஜனநாயகம் அழிந்துவிடும்” என்றும் பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால் அப்படி கருத்து தெரிவித்த நீதிபதிகளில் ஒருவரான ரஞ்சன் கோகோய்தான் தற்போது அயோத்தி பாபர் மசூதியை இடித்தவர்களின் கரங்களில் ஒப்படைத்த நீதிபதிகளில் ஒருவராக இருக்கின்றார்.

இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும் என்று காலம் நமக்கு மண்டையில் அடித்தாற்போல விளங்க வைத்துச் சொல்கின்றது. ஆனால் நம்முடைய மண்டையில்தான் அது ஏற மறுக்கின்றது. காரணம் நாம் 'மக்கள் மாறுவார்கள், சமூக அமைப்பை மாற்றிக் காட்டுவார்கள், ஒருநாள் நிச்சயம் நீதியை நிலைநாட்டுவார்கள்' என உளமார இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றோம். அந்த நம்பிக்கைதான் சாதியவாதத்தாலும், மதவாதத்தாலும், பிழைப்புவாதத்தாலும், முட்டாள்தனத்தாலும் இந்த மக்கள் பீடிக்கப் பெற்று பெரும் நோயாளிகளாய் இருந்தாலும் நம்மை நம்பிக்கையுடன் இயங்க வைக்கின்றது. அது இல்லை என்றால் தற்போது நடந்து கொண்டிருக்கும் கூத்துக்களைப் பார்த்து இந்நேரம் சட்டையைக் கிழித்துக் கொண்டு ஓடி இருப்போம்.

- செ.கார்கி