கண்ணிற்கெட்டிய தூரம் வரை அச்சுறுத்தும் நெடிய பாலை. அங்குள்ள மரங்களும் செடிகளும் வாடிய நிலையில் இருக்கும். மிருகங்கள் குடிக்க நீர் இல்லாது தவிக்கும். தலைவன் பொருள் சேர்க்க பாலை நிலம் வழியாகச் செல்ல உடன் தலைவியும் இந்த நிலத்தைக் கடந்து செல்வாள். அப்போது அங்கு இறந்தவர்களுக்காக நட்ட நடுகற்களை வணங்கிக் கொண்டே போவர்கள். ஒரு சில நடுகற்களில் பூஜை முடிந்த தடயமாக சிதறிய இறைச்சித் துண்டங்களின் கவிச்சையும், சிந்திய கள்ளின் மணமும் ஒன்றெனக் காற்றில் கலந்து வீசும். படைக்கப்பட்ட பண்டங்களை வீரனின் ஆவி ஏற்றுக் கொள்வதாகவும், அதனால், வெற்றியும், விரும்பியது கிட்டும் என்று மக்கள் நம்பினார்கள் நடுக்கற்களைச் சுற்றி அரண்போல் நட்டு வைத்திருக்கும் கூரியவேல்களின் வழியாக ஊடுருவிச் செல்லும் பாலைக் காற்று இரைச்சலோடு வெளியேற அந்தப் பேரொலி அச்சுறுத்தும் பெயர் தெரியா மிருகங்களின் ஊளையை ஒத்திருக்கும். நடுகற்களைத் தவறாது வணங்கினால் மழை மிகுதியாகப் பெய்யும். மழை பெய்தால் வறட்சி நீங்கிக் குளிரும் ; மரம் செடிகள் தளிர்த்துப் பூக்கும்; அதனால் வறட்சி மிக்க இக்கொடிய பாலை வழியில் வண்டுகள் மிகுதியும் மொய்க்கும்; வளம் பெருகும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே இருந்தது.

சூரியக் கதிர்களின் வெபபத்தால் ஏற்பட்ட நிலப் பிளவுகளில் முருங்கை மரங்களின் வெள்ளைமலர்கள் கொட்டிக் கிடக்கும். ஆளில்லாத நீண்ட வறண்ட பாலையின் பாதையில் கூர்மையான பற்களையுடைய ஆண் செந்நாய் வருத்தத்துடனும் பசியுடனும் தன் துணையுடன் நடுக்கல்லின் நிழலில் இளைப்பாறும். அங்கு கள்ளிச் செடியும் வாகை மரங்களும் இருக்கும் . கள்ளிச் செடிப் புதர்களிலிருந்து அதன் ஊளையைக் கேட்ட முதியவர்கள் மற்றவர்களை செய்கையால் அமைதிகாக்க எச்சரிப்பார்கள். உட்புறம் வாடிய வளைந்த மூக்கையுடைய நொள்ளை நத்தை வாகை மரத்தின் சொர சொரப்பான அடியில் பொதிந்து இருக்கும்.

அனைவரும் சிறு சிறு குழுக்களாக தங்களின் பயணத்தை முதலில் தொடங்குவார்கள். ஒரு சிலர் குழுக்களில் இருந்து பிரிந்து களைப்பு மிகுதியால் சாலையோரத்தில் இருக்கும் வாகை மர நிழலில் சிறிது நேரம் ஓய்வெடுப்பார்கள். அப்போது அவர்களுடன் வந்தவர்கள் முன்னேறி தொலை தூரத்திற்கு போய் விட, பயத்தை வெளிக்காட்டாமலிருக்க உரத்த குரலில் பேசிக்கொண்டும், பாடிக் கொண்டும் பயணத்தைத் தொடர்வார்கள்.

பயணம் செய்பவர்களின் பொருட்களைக் கைப்பற்றி அவர்களைக் கொல்லும் கள்வர்கள் அங்கு ஏராளம். யாத்திரிகர்களுடன் பயணிக்கும் அவர்கள் தங்களை யாரும் அடையாளம் காணாதிருக்கும் பொருட்டு வெகு இயல்பாக பேசிக் கொண்டும், பாடிக்கொண்டும் வருவார்கள்.

அந்தப் பாதையில் அடிக்கடி இரண்டு கள்வர்கள் பதிவாக வருவார்கள். அதில் ஒருவனின் பெயர் “சும்பன்”. அவனுடைய மெலிந்த உடல்வாகும், பருத்ததலையும், அவன் உருவத்திற்கு துளியும் ஒத்துப் போகாத கூரிய நாசியும் ஒன்றிற்கு இரண்டு முறை எவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும். நுனி பிளந்த அடர்த்தி இல்லாத மீசை காற்றிற்கு கலையும் ஒவ்வொரு முறையும் உதட்டின் ஓரத்தைக் குவித்து மேல் நோக்கி வேகமாக ஊதுவான்.

இவனைப் பார்க்கிலும் வயதில் குறைந்தவனாகத் தோற்ற மளிப்பவனின் பெயர்“நிசும்பன்”. முன்னவனைப் பார்க்கிலும் பத்து வயது இளையவன். பள பளக்கும் திரண்ட தோள்களை உடையவன். அடர்த்தியான எண்ணை தடவிய புருவம். ஒரு நொடியில் எவரையும் சுண்டி இழுக்கும் வசீகரமான கண்கள். அடிக்கொரு தடவை நிலத்தை உழுவதைப் போல் விரல்களால் தலைமுடியைக் கோதி பின் வாக்கில் இழுத்து படிய வைப்பான்.

அன்று நிசும்பன் கைகளில் அணிந்திருந்த கருப்புக் கயிற்றில் காட்டு மலர்களை சொருகியிருந்தான். சிறிய ஊதாப் பூக்களுடன் பாறையின் மேல் படந்திருக்கும் காட்டுக் கொடியினை வட்டமாகப் பின்னி கிரீடம் போல தலையில் அணிந்திருந்தான். ஒரு புறம் தன் நண்பனுடன் அவன் பேசிக்கொண்டே நடந்துக் கொண்டிருந்தாலும், அவனுடைய பார்வை ஒரிடத்தில் நிலைத்து நிற்காமல் பசியுடன் இறை தேடும் மீன்களைப் போல அங்கும் இங்குமாக அலைபாய்ந்தது.

ஏரிக்காத்தான் கோயிலை அவர்கள் நெருங்கும் போது இருள்க விழத் தொடங்கி இருந்தது. கோயிலின் எதிரில் நட்டு வைத்திருந்த நடுகல்லின் அருகில் தான் அணிந்திருந்த கிரீடத்தை எடுத்து வைத்தான் நிசும்பன். தியான நிலையில் இருக்கும் ஒருவனின் உருவத்தை அந்தக் கல்லில் செதுக்கியிருந்தார்கள். நடுகல்லின் மீது நெய்யின் மணம் வீசியது. சாற்றிய மலர்களில் ஒன்றிரண்டு உதிர்ந்து நடு கல்லின் பதுகையின் மேல் இருந்தது. கல்லில் பொறித்திருந்த எழுத்துக்களை விரல்களால் வாஞ்சையுடன் தடவிக் கொண்டே “அண்ணே, நாம செத்த பிறகு நமக்கு இப்படி யாராவது ஒரு நடுகல் வைப்பாங்களா?” என்றுகேட்டான்

இதைக் கேட்ட சும்பன் விழுந்து விழுந்து சிரித்தான். “எதுக்குடாசாமி ? நீ எத்தனை பேரை வழி மறிச்சு கொள்ளை அடிச்சேன்னு இந்த உலகம் தெரிஞ்சுக்கனும்னா? போடா போ, முதல்லே வந்த வேலையை பாரு” என்று வேட்டியிலிருந்து மடித்து வைத்திருந்த காய்ந்த வெற்றிலையை மடித்து வாயில் போட்டு சுவைத்து முதலில் வரும் அடர்த்தியான எச்சிலை காரி உமிழ்ந்து வாயின் ஓரத்தைகையால் அழுத்தித் துடைத்துக் கொண்டான்.

“இல்லைண்ணே, மத்தவங்க மாதிரி நாம சாகக் கூடாது. வீரனாய் சாகாவிட்டாலும் கண்டிப்பா ஒரு திருடனா சாகவே கூடாது !”

நிசும்பனையே உற்றுப் பார்த்த சும்பன் “கல்யாணம் கார்த்தி எல்லாம் உனக்கு இப்போதான் நடந்திருக்கு. அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம். எனக்கு ரொம்ப பசிக்குது தம்பி. அதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு முதல்லே பாப்போம்” என்று கூறிக் கொண்டே கிராமத்தை நோக்கி நடந்தான்.

அனைத்து தெருக்களும் வெறிச்சோடிக் கிடந்தது. ஆளில்லா கல் மண்டபத்தின் படிக்கட்டுகளில் வரைந்திருந்த ஆடு புலி ஆட்டத்தின் முக்கோணக் கோடுகளில் சோழிகள் சிதறியிருந்தது. நிசும்பன் மண்டபத்தின் மேல் ஏறி நின்று பார்த்தான். கிழக்கு பக்கம் சிறிய கோயில் கோபுரம் தெரிந்தது. மற்றபடி சிறிய கிராமம் தான். மண்டபத்தில் இரவு தங்கி விட்டு காலையில் சென்று விடலாம் என்று இருவரும் தீர்மானித் திருந்தார்கள். பசி அவர்களிருவரையும் முழுவதுமாகத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தது. அரை மயக்கத்தில் இருந்த சும்பனுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. இருவரும் தூக்கம் வராமல் கால் போன போக்கில் நடந்து ஒரு வீட்டின் திண்ணையில் வந்த மர்ந்தார்கள்.

“அம்மா, வீட்டிலே யாராவதுஇருக்கீங்களா?” நிசும்பனின் கம்பீரமான குரலைக் கேட்ட ஒரு முதியவள் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தாள். எதுவும் கூறாமல் உள்ளே சென்றாள். திரும்ப வரும் போது சிறிய மண்தட்டில் நான்கு சோளக்களி உருண்டைகளுடன் நெல்லி ஊறுகாயும் கொண்டு வந்தாள். அவர்களிருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை திண்ணையிலேயே பொறுமையாகக் காத்திருந்த அந்த முதியவள் “நாளைக்கு ஏரிக்காத்தான் கோயில்லே கொடியேத்தம், தெரியுமில்லை. அப்புறம் ஊரை விட்டு பத்து நாளைக்கு யாரும் வெளியே போகக் கூடாது. திருவிழா முடியறவரைக்கும் ரெண்டு பேரும் இங்கேயே படுத்தக்கலாம். எங்களுக்கும் ஒரு பாதுகாப்பா இருக்கும்.” என்று கூறினாள். முதியவளின் கழுத்தில் அணிந்திருந்த கட்டை விரல் அளவு தடிமனான தங்கக் கொடி சும்பனின் கண்களில் பட, நண்பனைப் பார்த்து ரகசியமாகக் கண்ணடித்துச் சிரித்தான். முகத்தைச் சுளித்த நிசும்பன் கண்களால் சும்பனை கண்டித்தான். முதியவளிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தான்.

“ஊருக்குள்ளே ஏதாவது பிரச்சினையா பாட்டி?” நிசும்பனின் கேள்விக்கு முதியவள் உடனே பதில் கூறாமல் மீண்டும் வீட்டினிற்குள் நுழைந்தவள் மண்கலயங்களில் இரண்டு பேருக்கும் நீர் மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“ஆமாய்யா, பெரிய பிரச்சினை தான். நாளைக்கு ஏரிக்காத்தான் கோயில்லே கொடியேத்தம். கொடியேத் தற அன்னைக்கு தனி பூஜைக்கு ஒரு ஆளை தேடிக் கண்டு பிடிச்சாகனும். இது வரைக்கும் ஊரிலே யாரும் முன்னே வந்து நிக்கலை”

“எந்த ஆளு பாட்டி?” நிசும்பனின் கேள்விக்கு நீண்ட பதிலளித்தாள் முதியவள்.

“ஐஞ்சு வருஷமா கிராமத்திலே துளி கூட மழை இல்லை. கொஞ்ச விவசாய நிலமும் காஞ்சு வரண்டு போச்சு. திருட்டு பயம் வேறே, அதிகமாயிடுச்சு. விடிஞ்சா கொலை, கொள்ளைன்னு நடக்க கொஞ்ச பேரு ஊரைக் காலி பன்னிட்டு போயிட்டாங்க. இந்தப் பிரச்சினைக்கு எங்க ஊர்சாமியாடி ஒரு தீர்வு சொன்னாரு. யாராவது ஒரு ஆளு கொடியேத்தம் அன்னைக்கு மனமுவந்து ஏரிக்காத்தானை வேண்டி கழுத்துலே செம்பங்கி மாலை போட்டு குளத்துக்கு நடுவே இருக்கும் மண்டபத்திலே அன்னம் தண்ணி எதுவும் இல்லாம மழைவரும் வரை தனியா பூஜையில் இருக்கனும். அப்படி பூஜை செஞ்சா நிச்சயம் மழை வருமாம். எனக்கு இப்போ எழுவது வயசாகுது. எனக்கு விவரம் தெரிஞ்ச வயசிலே எங்கம்மா இது மாதிரி பூஜை ஊரிலே நடந்ததா சொல்லக் கேட்டிருக்கேன்”.

“அப்படியும் மழை வரலைன்னா என்ன பாட்டி செய்வாங்க? அப்போ மழை வேண்டி பூஜையிலே இருக்கிறவரோட நிலமை?” இடை மறித்துக் கேட்டான் சும்பன்.

“மழைக்காக காப்பு கட்டி பூஜை செஞ்சவன் அப்பாலே சாமியாயிடுவான். அடுத்து மழை வரும் நாள் வரை காத்திருந்து அவனைப் பொதைச்ச இடத்திலே நடுகல் சாத்தி சாமியாக்கிடு வாங்க. அவன் குடும்ப செலவு முழுசையும் ஊரே ஏத்துக்கிட்டு வேண்டிய படியும் அளப்பாங்க”. உடனெ நிசும்பனிற்கு ஏரிக்காத்தான் கோயிலில் தான் பார்த்து வியந்த நடுக்கல் நினைவிற்கு வந்தது.

“சரி பாட்டி, அப்போ நாங்க கிளம்பறோம். இன்னைக்கு ராத்திரியே நாங்க ஊருக்கு போயாகனும்” என்ற சும்பன் தன் நண்பனை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வேகமாக வெளியேறினான்.

விடியும் வரை அந்தக் கிராமத்தில் யாரும் தூங்கவேயில்லை. அடுத்த நாள் காலை சூரிய உதயத்திற்கு முன்பே கொடியேற்றத்திற்கான பூஜை முடிந்து கோயிலிற்கு வந்திருந்த அனைவரும் காப்பு கட்டிக் கொண்டார்கள். குளக்கரை பூஜைக்காக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் கோயில் பூசாரி மற்றும் ஊர்ப் பெரியவர்கள் இதற்கு மாற்று வழி ஏதாவது இருக்கிறதா என்று பேசிக் கொண்டே குளத்தை நோக்கி நடந்தார்கள்.

பெண்கள் அனைவரும் ஒன்று கூடி குளத்தின் நடுவில் இருக்கும் மண்டபத்தை கழுவி, நான்கு தூண்களிலும் மாவிலை கட்டி, சந்தனம் குங்குமம் வைத்து நடுவில் அமைந்திருந்த பீடத்தில் பன்னீர் விட்டுத் துடைத்து பூக்களால் அலங்கரித்து வைத்திருந்தார்கள். அந்தப் பீடத்தின் மேல் செம்பங்கி மாலையை வைத்து வணங்கி விட்டு வந்தார்கள்.

குளத்தைச் சுற்றிலும் கிராம மக்கள் ஆவலுடன் கூடியிருந்தார்கள். அப்போதுயாரும் துளியும் எதிர் பாராவண்ணம் கூட்டத்தில் இருந்து ஒருவன் வெறி கொண்டவனைப் போல மண்டபத்தை நோக்கி ஓடினான். மற்றொருவன் கத்திக் கொண்டே அந்த ஒருவனை நோக்கி ஓடி வந்து பிடிப்பதற்குள், அந்த ஒருவன் மண்டபத்தில் வைத்திருந்த செம்பங்கி மாலையை எடுத்து கழுத்தில் அணிந்து பீடத்தை மூன்று முறை சுற்றி வந்து பயபக்தியுடன் அமர்ந்து கொண்டு கண்களை மூடினான். குழுமியிருந்த மக்கள் அனைவரும் ஏரிக்காத்தான் கோயிலை நோக்கி இரண்டு கைகளையும் உயர்த்தி குரலெழுப்பி பயபக்தியுடன் வணங்கினார்கள்.

“அண்ணே இப்படிப் பன்னிட்டீங்களே! வீட்டிலே நான்என்ன பதில் சொல்லுவன்” என்று புலம்பிக் கொண்டே நிசும்பன் மழைக்காக வேண்டி அந்த குளத்தையே தினமும் சுற்றி வந்தான். யார் அழைத்தும் அந்த இடத்தை விட்டுப் போகாமல் ஒரு பைத்தியக்காரனைப் போல அடிக்கடி வானத்தைப் பார்த்து வேண்டிக் கொள்வதும், அடுத்து மண்டபத்தில் அமர்ந்திருக்கும் சும்பனை கவனிப்பதுமாகவே இருந்தான். கிராமத்தில் உள்ளவர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் எதுவும் உண்ணாமல் பட்டினியாகவே இருந்தான்.

கொடியேற்றம் முடிந்து இருபத்தி இரண்டாம் நாளின் விடியல் முதல் மழைத்துளியைக் கொண்டு வந்தது. மழையில் நனைந்து கொண்டே ஊர் மக்கள் குளத்தில் இருக்கும் மண்டபத்திற்கு விரைந்து வந்தார்கள். சுயநினைவில்லாமல் தூணில் சாய்ந்து இருந்த சும்பனைகைத் தாங்கலாக தூக்கி வந்தார்கள். அவனை சோதித்துப் பார்த்த ஊர் வைத்தியர் “அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. கொஞ்ச நேரத்தில் சரியாகி விடுவான்” என்று வாக்களித்த பிறகே அனைவரும் அங்கிருந்து கலைந்து போனார்கள். மெதுவாக சுயநினைவிற்கு வந்தவன் முதலில்“நிசும்பன், நிசும்பன்” என்று பிதற்றுவதைக் கேட்ட வைத்தியர் அவனைப் பற்றி பலரிடம் விசாரித்தார். இருவருக்கும் உணவு இடம் கொடுத்த அந்த முதியவள் முழு விபரங்களையும் வைத்தியரிடம் கூறினாள். மக்கள் திரண்டு நிசும்பனை தேட ஆரம்பித்தார்கள். ஏரிக்கரையின் கிழக்குப் பகுதியில் நிசும்பன் இறந்து கிடந்தான். அவன் கண்களை முழுவதுமாகத் திறந்து வானத்தையே வெறித்து பார்த்தவாறு இருந்தது.

ஊர் மக்கள் ஒன்று கூடி நிசும்பனுக்கு வீரக்கல் எடுக்கத் தீர்மானித்தார்கள். நடவேண்டிய கல்லை மலையிலிருந்து தேர்ந்தெடுத்து கொண்டு வந்தார்கள். அப்படி கொண்டு வந்த கல்லில் நிசும்பனின் உருவத்தைப் பொறித்து குளத்தில் நீராட்டினார்கள். அந்த வீரக்கல்லை குளத்தின் கிழக்குப் பக்கம் நட்டு அதற்கு மயிற் பீலிகளையும் மாலைகளையும் சாற்றி சிறப்புச் செய்தார்கள். மழை வேண்டிக் காத்திருந்த கிராம மக்களுக்காகவும், தன் நண்பனிற்காகவும் உயிர் துறந்த நிசும்பனின் தியாகத்தை கிராம மக்கள் பல தலைமுறைகளாக தாலாட்டுப் பாட்டாகவும், அறுவடைப் பாட்டாகவும் இட்டுக் கட்டி வாழ்த்திப் பாடிக் கொண்டே இருந்தார்கள்.

- பிரேம பிரபா

Pin It