உங்கள் நூல்கள், கட்டுரைகளை முன்வைத்துப் பேசலாமா? உங்களுடைய ஆரம்பகால எழுத்துகளில் பொற்காலங்கள் (1981) பற்றிய சிறு நூலும், அடிமைமுறையும் தமிழகமும் என்ற நூலும் (1984) முக்கியமானவை என்று கருதுகிறேன். அந்த இரண்டு நூல்களையும் உள்ளெடுத்து 2005-இல் தமிழகத்தில் அடிமைமுறை என்ற நூல் வெளியாகியுள்ளது. சங்க காலம் தொட்டு ஆங்கில ஆட்சிக்காலம் வரையில், இப்போதும்கூட கொத்தடிமை முறை இருந்து வருவதைப் பற்றி அந்நூலில் எழுதியுள்ளீர்கள். வேளாண்மைத் தொழிலில் மட்டுமின்றி, வீட்டுப்பணிகளில், கோயில்கள், மடங்களில் அடிமைகள் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். தமிழகத்தில் அடிமைமுறை சாதி அமைப்பாக இணைந்து தொழில்பட்டதை எடுத்துக் காட்டுகிறீர்கள். ஆனால் இன்று பல ஒடுக்கப்பட்ட சாதிகள், தாம் அடிமைகளாக இருந்த பழைய வரலாற்றை நினைவூட்டுவதை விரும்புவது கிடையாது. தாம் உழைப்பாளிகளாக இருந்தோம் என்பதைவிட தாமும் ஆண்ட பரம்பரையாக இருந்தோம் என்றே அவர்கள் கூற விரும்புகிறார்கள். மதுரையில் ஒரு வணிகரின் வீட்டுக்கு நான் சென்றிருந்தேன். அவர் நாடார் சாதியைச் சேர்ந்தவர். 'நாடார்கள் பனையேறினார்கள், நாடார் பெண்கள் தோள்சீலை அணியவில்லை போன்ற தகவல்களையே எல்லோரும் பெரிதுபடுத்துகிறார்கள், அப்படியெல்லாம் கிடையாது, அந்த வரலாற்றை நாங்கள் இணையதளங்களின் உதவியோடு மாற்றியமைத்து வருகிறோம்' என்று சொன்னார்.

aa sivasubramanian 319தமிழக வரலாற்றில் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகம் பொருளாதார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, அரசியல் ரீதியாகப் பல போராட்டங்களை நடத்தி முன்னோக்கி நகரும்போது, அது தனது கடந்த கால வரலாற்றைத் தேடுகிறது. நாம் எப்படியெப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டோம் என்ற பழைய தகவல்கள் போராட்டக் காலங்களில் அம்மக்களுக்குத் தேவையாக உள்ளன. ஆனால் ஓரளவு தம்மை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, அதே சமூகத்தினுள் உருவாகும் மேட்டுக்குடித் தலைவர்கள் தமது பழைய இழிவுகளை, அவை திணிக்கப்பட்ட இழிவுகளாக இருந்த போதிலும், அவற்றை மறக்க விரும்புகின்றனர்.

தேவர் சமூகத்தினருக்குச் சொந்தமான மாடத்தி அம்மன் கதையில், இயல்பான சூழல்களிலேயே அண்ணன்மார்கள் ஆட்டுக்கடா திருடி வருவார்கள் என்று கதை தொடங்கும். ஒரு புலவரிடம் சொல்லி மாடத்தி அம்மன் வில்லுப்பாட்டை எழுதச் செய்தபோது, ஆட்டுக்கடா திருடினார்கள் என்ற விஷயத்தைச் சேர்ப்பதா, வேண்டாமா என்று ஒரு விவாதம் எழுந்ததாம். நான் அதே கதையை ஒரு கட்டுரைக்காக எழுதும்போது, அந்த விபரத்தைச் சேர்ப்பதா, வேண்டாமா என குழப்பம் நேரிட்டு, பின் சேர்த்து விட்டேன்.

இயற்கை விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கும், பண்பாட்டு ஆராய்ச்சிகளுக்கும் இடையிலான அடிப்படையான வேறுபாடாக இது இருக்கலாம். பண்பாட்டு ஆராய்ச்சிகளில் கால ஓட்டத்துடன் வரலாற்று எழுதியல் தேவைகள் மாற்றமடைகின்றன. பண்பாட்டு அரசியலில் வெற்றி பெறும் சமூகப் பிரிவுகள் அவற்றின் நேர்மை, திறமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே வெற்றி பெறுவதில்லை. பல்வேறு அரசியல் சந்தர்ப்பங்கள் இங்கு மிகச் சிக்கலான முறையில் தொழில்பட்டு அந்த வெற்றிகளைச் சாதித்துக் கொடுக்கின்றன. வலுவற்ற சமூகக் குழுக்கள் தொடர்ந்து இழிவுகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது.

“கல்வெட்டுகளில் தலித்துகள்” என்ற கட்டுரையை நான் எழுத முடிவு செய்தது அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான். தலித்துகளின் வரலாறுகள் பொதுவாக வாய்மொழித் தரவுகளைக் கொண்டு எழுதப்பட்ட போதிலும், அவர்களது வரலாற்றில் சில உயர்ந்த புள்ளிகள் உண்டு என்று காட்டுமாறு அந்தக் கட்டுரையை அமைத்திருந்தேன். பூமணியின் 'அஞ்ஞாடி' நாவல் சொத்துப்பத்து இல்லாத தலித்துகளை மையமாகக் கொண்டதில்லை. நில உடமையாளர்களாக இருந்த பள்ளர் சமூகத்தை மையமாகக் கொண்டது. இது அவரது கற்பனை அல்ல. அம்மக்கள் நிலவுடமையாளர்கள் என்பது ஒரு சமூக யதார்த்தம்தான். மற்றொரு பக்கம், நில வெளியேற்றம், உரிய ஊதியம் என்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகவும் பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அம்மக்களில் ஒரு பகுதியினர் போராடி வெற்றி பெற்றதும் சமூக எதார்த்தம்.

இன்னொரு புறம், அதுபோன்ற இயக்கங்கள் போராடிக் கொண்டிருக்கும் கட்டத்தைக் கடந்து, அந்த இயக்கத்தினுள் மத்திய தர வர்க்கப் பண்புகள் குடிகொள்ள ஆரம்பிக்கும்போது, சுய சாதிக்குள்ளேயே உருவாகும் வர்க்க வேறுபாடுகளை மறைக்கவும், கடந்த கால இழிவுகளை மறைக்கும் முயற்சிகள் நடைபெறலாம். இவற்றைப் பல முறை என் கள ஆய்வுகளில் கண்டிருக்கிறேன்.

 எட்டயபுரம் அருகில் வண்டிமறிச்சான் அம்மன் ஒன்று இருக்கிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அண்ணன், தங்கை இருவரும் பசிக் கொடுமையால் நெசவுக்காகக் காய்ச்சி வைத்திருந்த பாவுக்கஞ்சியை எடுத்து குடித்து விடுகிறார்கள். நெசவுக்காரர்கள் அவர்களைப் பாவுக் கம்பால் அடித்துக் கொன்று விடுகிறார்கள். அவ்வாறு இவர்களை அடித்துக் கொன்ற நெசவாளர்கள் துணிகளை ஏற்றி சந்தைக்குப் போகும்போது குறுக்கே படுத்து வண்டியை மறித்தார்களாம். பின்னர் அவர்களைச் சாந்தப்படுத்தும் வகையில் படுத்த நிலையிலேயே அவர்களுக்கு உருவங்கள் எழுப்பப்பட்டன.

பல ஊர்களில் நெசவாளர் குடியிருப்புப் பகுதிகளில் வண்டி மறிச்சான் கோயில்கள் உருவாயின. எட்டயபுரத்திலும் வண்டி மறிச்சான் கோயில் உருவாகியிருந்தது.

எட்டயபுரத்தில் ஒரு பணக்கார நெசவாளர் தமது அந்தஸ்துக்குத் தகுந்தாற்போல படுத்த நிலையிலிருக்கும் தெய்வத்தை நிமிர்ந்து நிற்கும் நிலையில் உருவாக்க முயன்றார். இதன்பொருட்டு தம்முடைய சொந்தச் செலவில் சில நெசவாளர்களை அழைத்துக் கொண்டு, காஞ்சி மடத்தின் ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்தித்தார். அவர் எவ்வாறு செய்யலாம் என்று ஆலோசனை கூறினாரோ, அதன்படி பழைய தெய்வத்தைக் குழிக்குள் போட்டுப் புதைத்து விட்டு, ஜெயேந்திரர் மந்திரித்துக் கொடுத்த தகட்டின் மேல் வேறொரு சிலையை நிற்கும் நிலையில் நிறுவிவிட்டார். அப்பெண் தெய்வம் விஷ்ணுவின் சகோதரி என்ற புனைகதையும் உருவாக்கப்பட்டது. கள ஆய்வின் போது அப்பகுதி நெசவாளர்கள் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னபோது, "சிரிரங்கத்தில் ரொம்ப நாளாக ஒருவர் கிடந்த நிலையிலேயே இருக்கிறாரே, அவரை நிமிர்ந்து உட்கார வைக்க காஞ்சிப் பெரியவர் முயற்சி செய்யக்கூடாதா?" என்று நான் வினவினேன். ஒரே சாதியினுள் உருவாகி வரும் வர்க்க மேலாண்மையை நிலைநிறுத்தவும் வர்க்க முரண்பாடுகளை மழுங்கடிக்கவும் இம்மாதிரியான முயற்சிகள் மேலெழுந்து வருகின்றன.

மதுரை திருப்புவனம் அருகில் ஒரு மாரியம்மன் கோவில். நாக்கு வெளியே தொங்கும் வடிவில் கோரைப் பற்களுடன் பயங்கரமான பெரிய உருவம். மதுரையைச் சேர்ந்த ஒரு பணக்காரர் அந்தக் கோயில் பராமரிப்பை ஏற்றுக் கொண்டார். அம்மனின் நாக்கை உள்ளே அடக்கமாக அமர வைத்து, கோரைப் பற்கள் இல்லாமல், அமைதியான வடிவில் சிலை செய்து கொடுத்து விட்டார். அம்மனின் எல்லைக்குள் ஆடு, கோழி பலியிடுவதை நிறுத்தி, சிறிது தூரத்தில் செய்யுமாறு ஏற்பாடுகள் செய்துவிட்டார்.

இப்படிப் பல இடங்களில் நிகழுகின்றன. குறியீட்டுத் தளங்களில் நிகழும் இந்த வேறுபாடுகள், சம்பந்தப்பட்ட அந்த சமூக மக்களிடையில் நிகழும் மாற்றங்களைத்தான் பதிவு செய்கின்றன.

வ.உ.சி குறித்த ஆய்வுகளில் உங்களின் பங்களிப்பு ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. ஆ. இரா. வேங்கடாசலபதியும் செய்திருக்கிறார். செக்கிழுத்த செம்மல் என்ற பட்டப் பெயரைத் தாண்டி, அவர் முன்னின்று நடத்திய முதல் அரசியல் வேலை நிறுத்தம், அவரது சிறை வாழ்க்கை, சிறையிலிருந்து வெளிவந்த பிறகான அவரது வாழ்க்கை எனப் பல பரிமாணங்களில் வ.உ.சியை நீங்கள் எடுத்துக் காட்டினீர்கள். வ.உ.சி தமிழ்த் தேசியத்தில் காலூன்றிக் கொண்டுதான் இந்திய தேசியத்தைப் பார்த்தார், அரசியல் விடுதலையையும் சமூக விடுதலையையும் இணைத்தார் போன்ற கருத்துகளையெல்லாம் அந்நூலில் விவாதித்துள்ளீர்கள். அதே நூலில் காந்தியின் சாத்துவீகக் கருத்துகளோடு வ.உ.சியால் ஒத்துப் போக முடியவில்லை என்று எழுதியுள்ளீர்கள். இந்த வேறுபாடு எங்கேனும் பதிவாகியிருக்கிறதா? இதனை விளக்குவீர்களா?

தூத்துக்குடியைச் சேர்ந்த பெ.நா. கந்தசாமிப் பிள்ளை என்ற விடுதலைப் போராட்ட வீரர் அழுத்தமான காந்தியவாதி. அவர் வ.உ.சியின் காலத்திலேயே 'அவிந்த நெருப்பு' என்று ஒரு சிறு நூலை எழுதியிருக்கிறார். அந்த நூல் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. வ.உ.சி. காந்தியிடமிருந்து வேறுபட்டதால் வ.உ.சி.யைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜீவாவின் வாழ்க்கை வரலாற்றிலும் காந்தியின் ராட்டை குறித்த வ.உ.சியின் கடுமையான விமர்சனம் பதிவாகியுள்ளது. இறுதிவரை சுதேசி என்ற அடைமொழியில் அழைக்கப்படுவதைத்தான் விரும்பியுள்ளார். கதர் அணிவதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. கைத்தறி ஆடைகளையே அணிந்திருக்கிறார்.

அன்றைய காங்கிரசின் பிராமணியத் தலைமை வ.உ.சியை நிராகரித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா?

காங்கிரசுக்குள் பிராமணர்/அல்லாதார் என்ற அணிகள் அன்று உருவாகியிருந்தன. வ.உ.சி, திரிகூடசுந்தரம் பிள்ளை, வரதராசுலு நாயுடு, திரு.வி.க. போன்றோர் பிராமணர் அல்லாதார் அணியிலிருந்தனர். வ.உ.சி. பிராமணர்களை நோக்கி, "பிறப்பு முதல் இறப்பு வரை இந்துக்களின் வாழ்க்கையை, சடங்குகளாலேயே நிரப்பி விடுகிறீர்கள், இப்போது நாங்கள் விழித்துக் கொண்டோம்" என்றெல்லாம் எழுதுகிறார். இது 'எனது அரசியல் பெருஞ்சொல்' என்ற அவரது குறுநூலில் பதிவாகியுள்ளது. "பிராமணர் அல்லாதார் எனும்போது முகம்மதியர், கிறித்தவர், தாழ்த்தப்பட்ட இந்துக்கள், தாழ்த்துகின்ற இந்துக்கள்" என்ற நான்கு வகையினரைக் குறிக்கின்றேன் என்று கூட வ. உ. சி எழுதியுள்ளார். இது வ.உ.சி 1927இல் எழுதியது. பிராமணரல்லாதார் என்ற சொல்லுக்குள் தாழ்த்துகின்ற இந்துக்களும் உள்ளனர் என்று வ.உ.சி கூறுவது அவரது தெளிவான பார்வையை எடுத்துக் காட்டுகிறது. காங்கிரசில் இருந்து கொண்டு கம்யூனல் அவார்டை ஆதரித்த காங்கிரஸ்காரர் வ.உ.சி.

காங்கிரஸ் அரசியலில் தீவிரவாதி என அறியப்பட்டுள்ள திலகர், சமூக விஷயங்களில் பழமைவாதியாக இருந்தார். இதனைத் தெளிவான சான்றுகளுடன் அம்பேத்கர் எடுத்துக் காட்டியுள்ளதை என் நூலில் குறிப்பிட்டுள்ளேன். வ.உ.சி இந்த விஷயத்தில் திலகரிடமிருந்து வேறுபட்டார்.

வ.உ.சி யின் பெயரால் கல்வி நிறுவனங்களை நிறுவிய திரு ஏ.பி.சி.வீரபாகு வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை அவரது நெருங்கிய நண்பர் வாயிலாகக் கேள்விப்பட்டேன். பின்னர் கிறித்தவர் ஒருவரும் தமது நூலில் இதனைப் பதிவு செய்துள்ளதைப் படித்தேன். அப்போது திரு.வீரபாகு அவர்கள் சிரிவைகுண்டம் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அந்தத் தொகுதியில் ஒரு கிராமத்தில் இந்துக்கள் நிலங்களைக் கிறித்தவர் ஆக்கிரமித்து கோயில் கட்டிக் கொண்டதாக ஒரு பிரச்சினை உருவானது. உண்மையில் அது அவ்வாறு இல்லை. வீரபாகு அவர்களுக்கு அந்தக் கிராமத்தில் ஒரு வரவேற்புக் கூட்டம் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் வீரபாகு அவர்கள் இந்துக்களின் கூற்றை விமர்சனம் செய்து பேசினார். அதுபற்றி அவரிடம் அவரது நண்பர்கள் கேட்டபோது, அவர் சொன்ன பதில் இதுதான். “நான் வ.உ.சியின் பெயரால் கல்லூரி நடத்தி வருகிறேன். வெறும் சம்பிரதாயமாக இதனை நான் செய்து வரவில்லை. வ.உ.சி சைவராக மட்டும் வாழ்ந்தவரல்ல, சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாப்பதில் அவருக்கு அக்கறை இருந்தது”.

1913லிருந்து 1936இல் வ.உ.சியின் மறைவு வரையிலான அவரது வாழ்க்கை விரிவாகப் பேசப்படுவதில்லை. அக்காலம் பற்றிச் சொல்லுவீர்களா?

இக்காலக்கட்டத்தில் வ.உ.சி பொருளாதார நலிவுக்கு ஆளாகி வாழ்க்கைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் தொழிற்சங்கப் பணிகளையும் செய்துள்ளார். அவருடைய சமூக சீர்திருத்த உணர்வுகள் வெளிப்பட்ட காலம் இதுதான். அவருடைய எழுத்துப் பணிகளும் இதே காலத்தில்தான் நிகழ்ந்துள்ளன. தமிழ் மொழியின் மீது ஆழ்ந்த பற்றும் தமிழில் ஆழ்ந்த புலமையும் கொண்டவர் என்பதை அவரது இக்காலத்திய செயல்பாடுகள் உறுதி செய்கின்றன.

வ.உ.சி ஆய்வுகள் தொடருகின்றனவா?

வ.உ.சி ஆய்வுகள் பல கட்டங்களைக் கடந்து வந்துள்ளன. ம.பொ.சி. ஒரு காலத்தில் வ.உ.சி குறித்து ஜனரஞ்சக வடிவில் எழுதினார். ஆனால் அது மிகவும் முக்கியமானது. அவரது நூலுக்குப் பின்பே வ.உ.சி பற்றிய அறிமுகம் தமிழ்நாட்டில் பரவலானது என்பதை மறுக்க முடியாது. அதன்பின்னர் பாரதி ஆய்வாளர்களான ரா.அ.பத்மநாபன், பெ.சு.மணி ஆகியோர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ளனர். ஆ.இரா.வேங்கடா சலபதி வெளிவராத வ.உ.சியின் எழுத்துகளைச் சேகரித்து சில நல்ல ஆய்வுகளைச் செய்துள்ளார். பேராசிரியர் வீ.அரசு, வ.உ.சியின் 13 நூல்களைத் தொகுத்து ஒரு பெரிய நூலாக வெளியிட்டுள்ளார். அவை எல்லாமே வ.உ.சி சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு 1913லிருந்து 1936 வரை எழுதியவை. வரலாற்றுப் பேராசிரியர் ராஜேந்திரன் சுதேசி இயக்கம் குறித்த தமது ஆய்வேட்டில் வ.உ.சியின் பங்கை மிக அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆஷ் கொலை பற்றிய உங்களது ஆய்வுகளும் சில விவாதங்களுக்கு உள்ளானது. வாஞ்சிநாதன் ஆஷை ஏன் கொலை செய்தான் என்பது குறித்த விவாதம் அது. இந்த விவாதம் தொடர்கிறது என்றே கருதுகிறேன்.

கொலை செய்யப்பட்ட ஆஷ் ஒரு ஐ.சி.எஸ் அதிகாரி. தன் அரசு எந்திரத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டதை மிக எளிதாக ஆங்கில அரசு எடுத்துக் கொள்ளாது என்பது தெளிவு. ஆஷ் கொலை நிகழ்ந்தது தொடங்கி உயர்நீதி மன்றத் தீர்ப்பு வரையிலான காவல் துறை மற்றும் நீதித்துறை ஆவணங்களை நான் முழுமையாகப் படித்துத்தான் “ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்” என்ற நூலை எழுதினேன். அவை அனைத்திலும் அது ஒரு அரசியல் படுகொலை என்றே காணப்படுகிறது. கொலைச் செயலில் ஈடுபட்டவர்கள் பிராமணர், வேளாளர் வகுப்புகளைச் சார்ந்தவர்கள் என்பதுடன் சனாதன சிந்தனையும் கொண்டவர்கள். சவார்க்கர் நிறுவிய 'அபிநவ பாரத் சமிதி' என்ற ரகசிய சங்கம் இதில் ஈடுபட்டுள்ளது. இச்சங்கம் வெளியிட்ட இரு துண்டு வெளியீடுகள் நீதிமன்றத்தில் தடயங்களாக அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் காணப்படும் செய்திகளையும் காவல்துறை ஆவணங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, இது ஒரு அரசியல் படுகொலை என்பது உறுதிப்படுகிறது. ஆஷ் தொடர்பான சில ஆவணங்களை ஆஷின் பேரனிடமிருந்து வேங்கடாசலபதி சேகரித்துள்ளார். ஆஷின் அதிகார வெறியை வெளிப்படுத்துவனவாகவே அவை உள்ளன.

இவையெல்லாம் இருக்க, நிறைமாதக் கர்ப்பிணியான ஒரு பெண்ணுக்கு தான் பயணம் செய்த வண்டியை ஆஷ் கொடுத்து உதவினார் என்ற ஒரு வாய்மொழிச் செய்தியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவன் ஒரு தலித் ஆதரவாளன் என்ற சித்திரத்தைச் சிலர் உருவாக்குகிறார்கள். வாஞ்சிநாதன் சட்டைப் பையிலிருந்த கடிதத்தில் தலித்துகளை இழிவுபடுத்தும் தொடர் இடம் பெற்றுள்ளது. இதுவும் மேற்கூறிய கருத்துக்கு அரண் சேர்க்கிறது.

நிலவுடமை அமைப்பு முழுமையாகச் சிதைந்து அழியாத ஒரு நாட்டில் நிகழும் தொடக்ககால விடுதலை இயக்கங்கள் சமயம் சார்ந்து இயங்குவது வரலாற்றில் அறியப்பட்ட உண்மை. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வகாபி இயக்கம், சன்னியாசிகள் கலகம் என்பன மதம் சார்ந்த இயக்கங்கள்தாம். காங்கிரஸ் இயக்கம் கூட கிலாபத் இயக்கத்தை ஏற்றுக் கொண்டதுதான். இவற்றையெல்லாம் உணராமல், ஆவணங்களின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் இன்று விவாதங்கள் நிகழுகின்றன. 

1988இல் வெளிவந்த “மந்திரம் - சடங்குகள்” நூல் உங்கள் ஆய்வுகளில் மற்றுமொரு மைல்கல். அதன் முதல் பதிப்பை என்.சி.பி.எச் வெளியிட்டது. பின் மக்கள் வெளியீடாக வந்தது. மீண்டும் காலச்சுவடு நான்காவது பதிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. தமிழாய்வுகளில் மானுடவியல் அணுகுமுறை வலுவாகக் குடிகொண்டுவிட்டதை முன்னறிவிக்கும் நூலாக அது அமைந்தது. பெரியாரின் பகுத்தறிவு, நாத்திகம், தமிழ்ப் புலவர் மரபின் செவ்வியல் நோக்கு ஆகிய இரண்டிலிருந்தும் வேறுபட்ட அணுகுமுறை மானுடவியல் சார்ந்தது. சமூக அடித்தளங்களில் தங்கி நிற்கும் சில பழம் மரபுகளுக்கு மானுடவியல் விளக்கம் அளித்து, நியாயம் வழங்குகிறது. இந்த வகையில் மானுடவியலின் விமர்சனக் கூர்மை பலவீனமாக உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. உங்கள் அபிப்பிராயம் என்ன?

மானுடவியல், வழக்காறுகளின் தோற்றத்தை ஆய்வு செய்கிறது. ஆனால் அது வழக்காறுகள் அப்படியே தொடர வேண்டுமென்று சொல்வதில்லையே! மானுடவியல் சடங்குகளை, வழிபாட்டு முறைகளை அவற்றின் மீது ஏற்றப்பட்டுள்ள புனிதத் தன்மையிலிருந்து விலக்கி விடுகிறது. பண்டைய மக்களின் அச்சம், வளமை சார்ந்த மனோபாவங்களிலிருந்து அவை தோன்றின என்பதை வெளிப்படுத்துகிறது. அப்படிச் சொல்லும்போது, நம்பிக்கைகளில் ஒரு கீறலை ஏற்படுத்தி விடுகிறது அல்லவா! சமயம் சாராத ஒரு தளத்திற்கு அவற்றைக் கொண்டு சென்று விடுகிறது அல்லவா!

உங்களுடைய “அடித்தள மக்கள் வரலாறு” (2002) அடுத்த கட்டத்தைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. 2008இல் வெளிவந்த “வரலாறும் வழக்காறும்” நூல் அதனுடன் சேர்ந்து நிற்கிறது. இந்த நூல்களில் நீங்கள் ரணஜித் குகாவின் Subaltern Studies, சுமித் சர்க்காரின் கீழிருந்து வரலாறு, இன்னும் வாய்மொழி வரலாறு போன்ற போக்குகளுடன் இணைந்து நிற்கிறீர்கள். உண்மையில் நீங்கள் 80களிலேயே, மேற்குறித்த கோட்பாடுகள் தமிழுக்கு அறிமுகமாகாத காலங்களிலேயே அவ்வகை ஆய்வுகளை நடைமுறையில் செய்யத் தொடங்கிவிட்டீர்கள். பின்னால் அந்தப் பெயர்கள் தமிழுக்கு அறிமுகமான பிறகு புது உற்சாகத்துடன் அக்கட்டுரைகளைத் தொகுத்து புதிய தலைப்பில் வெளியிட்டீர்கள். ஈ.பி. தாம்சன், எரிக்கோப்ஸ்பாம், அந்தோனியோ கிராம்சி எனப் பயணப்படத் தொடங்கினீர்கள். இங்கு என்னுடைய கேள்வி என்னவெனில், வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்ற மார்க்சின் கருத்திலிருந்து, அடித்தள மக்கள் வரலாறு எங்கே, எப்படி வேறு படுகிறது?

ரணஜித் குகா தொடங்கிய அடித்தள மக்கள் வரலாறு மூன்று சொற்களின் ஊடாகப் பயணம் செய்கிறது. மேட்டுக்குடிகள்/ அடித்தள மக்கள்/ பண்பாட்டு மேலாண்மை என்ற வார்த்தைகள் அவை. எல்லாச் சமூக வேறுபாடுகளையும் இந்த மூன்று சொற்களுக்குள் அடக்கிச் சொல்லி விடலாம் என்று அவ்வகை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இப்படி எல்லா வேறுபாடுகளையும் ஒற்றை எதிர்வுகளாகக் குறைக்க முடியும் என்று நான் கருதவில்லை. ஆனால் வட்டார அளவிலான போராட்டங்களைப் பல வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணித்து வந்தனர்.

துவிக்குத்தகைப் போராட்டம், மேசை எதிர்ப்புப் போராட்டம் போன்ற கட்டுரைகளுக்கான தகவல்களை நான் சேகரித்தபோது, எனக்கு இந்தச் சிக்கல் எழுந்தது. மார்க்சிய வரலாற்று ஆசிரியர்கள் வட்டார அளவிலான நுண் வரலாறுகளைப் புறக்கணித்ததால் ஏற்பட்ட இடைவெளியை அவர்கள் இட்டு நிரப்பினர்.

வெவ்வேறு வட்டாரங்களில் வெவ்வேறு அளவுகோல்களைக் கையாண்டு மேட்டிமையினர் என்பதை அவர்களால் அடையாளப்படுத்த முடிந்தது. பொருளாதாரச் சுரண்டலை மட்டுமின்றி, சாதி, மதம், வட்டார அதிகாரம், ஆணாதிக்கம் என்ற பல அளவுகோல்களைப் பயன்படுத்த அவர்களால் முடிந்தது. வர்க்கம் என்பதை இந்தியச் சூழல்களில் ஓர் ஒற்றை மாதிரியாகப் பயன்படுத்த முடியாது என்ற விமர்சனம் அவர்களின் அணுகுமுறையில் இருந்தது உண்மைதான்.

என்னுடைய கள ஆய்வு அனுபவத்தில் வெவ்வேறு வட்டாரங்களில் வெவ்வேறு வகையான ஆதிக்க வடிவங்கள் பயின்று வந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அவற்றைப் பதிவு செய்வதே நியாயமானது என்பதால் அடித்தள மக்கள் வரலாறு என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். துவிக்குத்தகை, மேசைப் போராட்டம் போன்றவை ஒரே சாதிக்குள் மேட்டிமையினருக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலான மோதலைக் குறித்தவைதான். இந்தக் கட்டுரையை நான் முன்பே எழுதிவிட்டேன். அதற்குப் பின் அந்தக் கோட்பாடு எனக்குத் தெரிய வந்தது. நூலின் தலைப்பாக அதனை ஆக்கினேன். தனித்தனி வட்டாரங்களில் தனித்தனி அடையாளங்களைக் கொண்டு மோதல்களைப் பதிவு செய்யும் போது, வரலாறு துண்டுபட்டதாக ஆகிவிடுமல்லவா? எனச் சிலர் ஆட்சேபிக்கின்றனர். அடித்தள மக்கள் வரலாற்று அணியினர் கூட அப்படித் துண்டுபட்டால் என்ன ஆகிவிடும்? என்று பதிலளிக் கின்றனர். நான் அப்படிச் சொல்லமாட்டேன். நுண் வரலாறுகள் அடுத்த கட்டத்தில் பொது வரலாற்றைச் செழுமையாக எழுத உதவும் என்பதே என் நிலை. பொது வரலாற்றின் இடைவெளிகளை இட்டு நிரப்ப இவை பங்களிக்கும் என்றே கருதுகிறேன். நுண்வரலாறுகள் அளவில் அதிகமாகிக் குவியும்போது, நமது பொது வரலாற்றின் பண்பு மாறலாம். அது குறித்து அப்போது விவாதிக்கலாம்.

“சாமியாடும் மனைவி”, “பாலியல் வன்முறைகளும் நாட்டார் வழக்காறுகளும்” போன்ற கட்டுரைகளில் அமைப்பியல், பிராய்டியம், பெண்ணியம் போன்ற பலவகைச் சொல்லாடல்கள் இடம்பெறுகின்றன. அவற்றை மார்க்சியத்துக்கு முரண்படாதவகையில் உங்களால் கையாள முடிந்திருக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது? கோட்பாடுகளைப் பற்றி அக்கறைப்படாத தகவல்கள் தளம் உங்களிடம் அமைந்து போகிறது. மிக அற்புதமான தகவல்கள், மிகச் சிரமப்பட்டுச் சேகரித்திருப்பீர்கள். அவை உங்களை எந்தச் சூழல்களிலும் காப்பாற்றிவிடும். முழுமையான ஈடுபாடு இல்லாமல், எதையும் எதிர்பார்க்காத ஆய்வு நேர்மை இல்லாமல் அந்தத் தகவல்கள் உங்கள் வயப்பட்டிருக்க முடியாது.

ஃபிராய்டியம், பெண்ணியம் போன்ற கோட்பாடுகளை நோக்கியெல்லாம் நான் பயணம் சென்றதில்லை. பெண்கள் குறித்து தனித்து ஏராளமாகப் பேச வேண்டும். பெண் துயரம் நம் ஆய்வாளர்களால் போதுமான அளவு பேசப்படவில்லை. கி.ரா., கு.அழகிரிசாமி போன்ற எழுத்தாளர்கள் சில முக்கியமான பதிவுகளைச் செய்திருக்கிறார்கள். சாவுச் சடங்குகளில், குறிப்பாகப் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு, துயரத்துக்கும் அவமதிப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். ஒரு பெண்ணின் பிள்ளை அல்லது சகோதரன் இறந்து போனால், பிணத்தை எடுத்துச் சென்ற பிறகு, அப்பெண்ணைத் தெருவழியாகக் குளிக்கக் கூட்டிக் கொண்டு செல்வார்கள். கொடூரமான காட்சி அது.

கால் நடக்க முடியாத ஒருவர், மனைவியை அருகில் அழைத்து கட்டையால் அவளை அடிப்பார். அவள் அவரது அருகில் நின்று அடிபட வேண்டும். மனைவியின் தலைமுடியை வெட்டி அசிங்கப்படுத்திய கணவன்மார்கள் உண்டு. கோட்பாடுகளைப் படித்துத்தான் இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமா? நான் செல்லும் இடங்களிலெல்லாம் இது போன்ற சம்பவங்களைக் கேள்விப் படுகிறேன். 

“எந்தப் பாதை?” என்ற நூலை அடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன். அந்த நூலின் உள்ளடக்கத்தைக் கொண்டு பார்க்க, நூலின் தலைப்பு மிகச் சாதாரணமாகத் தோற்றமளிக்கிறது. இந்த நூலில் ஒரு நாட்டுப்புறவியல் ஆய்வாளரான நீங்கள் சமகால வெகுசன அரசியல் தளத்திற்குள் மிக லாவகமாக நுழைகிறீர்கள். நம்முடைய ஆய்வாளர்கள் பெரும்பாலும் வெகுசன அரசியலுக்குள் நுழைவது கிடையாது. நாட்டார் வழக்காறுகள் எப்படி வெகுசன அரசியலாக மாற்றப்பட முடியும் என்பதற்கு இந்த நூல் ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு. குறிப்பாக, இந்துத்துவ அரசியலுக்கு எதிராக, சமயச் சார்பின்மைக்கு ஆதரவாக. இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு நாட்டார் வழக்காறுகளுக்கும் வெகுசனப் பண்பாட்டுக்கும் இடையிலான உறவுகளை ஆய்வு செய்யலாம்.

“எந்தப் பாதை?” நூலை முதலில் ஒரு சிறு நூல் வடிவில்தான் எழுதினேன். வெகுசன வாசிப்புத் தளத்தில் வாசகர்களை முன்னிலைப்படுத்தி அவர்களை நேரில் சென்று தொடுவது போன்ற வடிவத்தில் எழுதினேன். சிறுசிறு சம்பவங்களைச் சொல்லி அவற்றை நிகழ்கால அரசியல் கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதினேன். சலபதி கூடக் கேட்டார், அந்தக் கட்டுரைகளை உங்கள் மொழியிலேயே எழுதியிருக்கலாமே, என்று. ஆனால் அந்தக் கட்டுரைகளை நான் ஆய்வாளர்களுக்காக எழுதவில்லை. வெகுசன வாசிப்பாளர்களுக்காகத்தான் எழுதினேன். அவர்கள் பத்திரிகைகளில் செய்திகளை வாசித்தறியும் பழக்கம் கொண்டவர்கள். அது போலவே இக்கட்டுரைகளையும் படிக்க வேண்டும் என்று கருதினேன். அவர்களது வாசிப்புத் தளத்தை நான் சென்று சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

“தோணி”, “உப்பிட்டவரை”, போன்ற நூல்கள் இன்னொரு வகையைச் சேர்ந்தவை. இந்த வரிசையில் “பனை”, “பருத்தி” என்ற நூல்களை எழுத இருப்பதாகவும் நீங்கள் சொன்னீர்கள். புழங்கு பொருள் பண்பாடு (Material Culture) வகைப்பட்ட நூல்கள் அவை. தூத்துக்குடி வட்டார உழைக்கும் மக்கள் வாழ்க்கையைச் சுற்றி இந்நூல்கள் அமைந்திருப்பதையும் உணரமுடிகிறது. தோணி, உப்பு, பனை, பருத்தி போன்ற வாழ்வியல் ஆதாரங்களைக் கொண்டு அவற்றின் பொருளாதாரத்தையும் வழக்காறுகளையும் பின்னியிருக்கிறீர்கள். மரபு சார்ந்த தொழில்நுட்பத்தில் தொடங்கி அம்மக்களது நம்பிக்கைகள் வரை பயணப்படுகிறீர்கள்.

எனக்கு நேர்ந்த விபத்தால் “பனை” “பருத்தி” குறித்த நூல்கள் காலந்தாழ்ந்து கொண்டு போகின்றன. பொருட்கள் தனியாக வாழ்வதில்லை. அவை வழக்காறுகளுடன், பண்பாட்டுடன் கலந்தே வாழ்கின்றன. பொருளும் பண்பாடும் பின்னிப் பிணைந்தவை. மேலைநாடுகளில் வெள்ளை ரொட்டி, ப்ரௌன் ரொட்டி ஆகிய இரண்டுக்குமிடையில் வெறும் நிற வேறுபாடு மட்டுமல்ல, சமூக வேறுபாடே உண்டு என ஒரு கிறித்தவப் பாதிரியார் என்னிடம் சொன்னார்.

இஸ்லாமியர்களிடையில் பொருளியல் நிலையில் தாழ்ந்து நிற்கும் லெப்பை பிரிவினர் மாட்டுக்கறி வாங்குபவர்களாகவும், வளமான மரைக்காயர்கள் ஆட்டுக்கறி வாங்குபவர்களாகவும் இருப்பதாக கீரனூர் ஜாகிர் ராஜா தம் நாவல் ஒன்றில் குறிப்பிட்டு உள்ளார்.

ஒரு பொருளுக்குப் பெயரிடுதல், அதன் பயன்பாடு ஆகியவை கூட மேட்டிமைக் குடிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற உண்மையைச் சந்திக்கிறோம். சோறில் உப்புப் போட்டுப் பொங்குபவர்கள், உப்பு போடாமல் பொங்குபவர்கள் என்ற பாகுபாடு உள்ளது. மேட்டிமை சாதியினரும் வளம் படைத்த பிற்பட்ட மற்றும் தலித் சாதியினரும் உப்பிடாமல் சோறு பொங்குகிறார்கள். ஏனையோர் சோறில் உப்புப் போட்டு பொங்குகிறார்கள்.

“தமிழகத்தில் அடிமை முறை” ஒரு காத்திரமான நூல். சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம், மராத்தியர் காலம், விஜயநகரப் பேரரசு, கொங்கு நாடு, திருவிதாங்கூர், நாஞ்சில் நாடு, ஆங்கிலேயர் ஆட்சி என நீங்கள் மிக விரிவாகப் பயணம் செய்த நூல் அது. கல்வெட்டு, இலக்கியம், செப்பேடுகள், ஓலைப் பத்திரங்கள், நாட்டார் வழக்காறுகள் எதுவும் உங்கள் கண்களைத் தப்பவில்லை. உங்களது ஆய்வுப் போக்கில் அந்நூல் வகிக்கும் இடத்தைப் பற்றிச் சொல்லுவீர்களா?

நெல்லை ஆய்வுக்குழுவிலும், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 1973ஆம் ஆண்டில் நடத்திய கல்வெட்டுப் பயிற்சி முகாமின் நிறைவையொட்டி நிகழ்ந்த கருத்தரங்கிலும் ‘அடிமை முறையும் தமிழகமும்’ என்ற தலைப்பில் கட்டுரை படித்தேன்.

குமரி மாவட்டக் கலை இலக்கியப் பெருமன்றத்தினர் 1982 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடத்திய பயிற்சி முகாமில் ‘தமிழகத்தின் அடிமைமுறை’ குறித்து வகுப்பு நடத்தினேன். பின்னர் ‘மார்க்சிய ஒளி’ மாத இதழின் ஆசிரியராய் இருந்த தோழர் அ.சீனிவாசன் கூறியதற்கேற்ப, அதைத் தொடர் கட்டுரையாக்கி அனுப்பினேன். அதன் பின்னர் அது ‘அடிமைமுறையும் தமிழகமும்’ என்ற சிறுநூலாக என்.சி.பி.எச். நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. தீவிர வாசகர்களிடையே அதற்கு நல்ல வரவேற்பிருந்தது. அதை விரிவுபடுத்தி ‘தமிழகத்தில் அடிமைமுறை’ என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகத்தால் 2005ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதன்பின் 2007ஆம் ஆண்டில் இரு பதிப்புகளும், 4வது பதிப்பு 2010ஆம் ஆண்டிலும் வெளியாகியுள்ளன.

பெரிய அளவிலான கூட்டங்களையும் சொற்பொழிவுகளையும் நான் தவிர்த்ததற்கான காரணம் சரியே என்பதை இந்நூல் எனக்கு உணர்த்தியுள்ளது. முதலில் தீவிர வாசகர்களுக்கு நிகழ்த்திய உரை தத்துவார்த்த மாத இதழில் தொடர் கட்டுரை, பின் சிறுநூல் என்ற பரிணாம வளர்ச்சியைத் தாண்டி இந்நூல் உருவாகியுள்ளது. ஆய்வில் நிறைவு என்பது கிடையாது என்ற உண்மையை எனக்கு உணர்த்திய நூல் இது. ஆங்கில காலனியத்துக்கு முந்தைய காலத்தில் தமிழகத்தில் நிலைபெற்றிருந்த போர்ச்சுக்கல், டச்சு, டேனிஷ் காலனியத்தின்போது நிலவிய அடிமைமுறை குறித்து விரிவாக பதிவு செய்வதன் அவசியத்தைத் தற்போது உணர்ந்துள்ளேன். போர்ச்சுக்கல், டச்சு, டேனிஷ் மொழிகள் தெரிந்திருந்தால்தான் விரிவாகச் செய்ய முடியும் என்பது உண்மை. தற்போதைக்கு இரண்டாம் நிலை ஆதாரங்களின் அடிப்படையிலாவது எழுதலாம். தமிழகத்தில் இவர்கள் நடத்திய கொடூரமான அடிமை வணிகம் குறித்து எழுதுவது அவசியம்.

நான் எழுதியதில் எனக்குப் பிடித்த நூல்களில் இதுவும் ஒன்று. நீ குறிப்பிட்ட ஆவணங்களை எல்லாம் ஒன்றாக இணைத்துப் பல்துறை சங்கம ஆய்வாக இதை எழுத முயன்றுள்ளேன்.

தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் கொண்டி மகளிர், தொழுவர், அடியோர், அடிமை, இழிசினர் போன்ற சொற்கள் பதிவாகியுள்ளன. இன்னொரு புறம் சங்கப் பாடல்களில் இனக்குழு சமத்துவம் குறித்த ஏக்கங்களும் பதிவாகியுள்ளன. இந்த முரண்பாட்டை எப்படி நீக்குவது?

இந்த முரண்பாட்டை எப்படி நீக்குவது என்று கேட்பதை விட, இந்த முரண்பாட்டை எப்படிப் பார்ப்பது? என்று கேள்வியை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று விரும்புகிறேன்.

பேராசிரியர் சிவத்தம்பி உள்ளிட்டோரின் கருத்துப்படி, ‘மாறுதல் நிகழும் காலமாக’ சங்க காலம் இருந்துள்ளது. அடுத்து சங்கப் பாடல்கள் அனைத்தும் ஒரே காலத்தில் எழுதப்பட்டவையுமல்ல, தொகுக்கப்பட்டவையும் அல்ல என்ற உண்மையையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இவற்றின் அடிப்படையில் பார்த்தால் மீன்பிடித்தல், மீன் உணவுகள் தயாரித்தல், உப்பு விளைவித்தல், உணவு வேட்டையாடும் வாழ்க்கை, மேய்ச்சல் நில வாழ்க்கை, புன்புல வேளாண்மை, நிலவுடைமைச் சமூகத்தின் தோற்றத்திற்கான கூறுகள் உருவாதல், வாணிப வளர்ச்சி, கைத்தொழில் வளர்ச்சி எனப் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள காரணத்தை உய்த்தறிய முடியும்.

‘அசமத்துவ வளர்ச்சி நிலை’ என்று சிவத்தம்பி குறிப்பிடுவதற்கான காரணம் இந்நடவடிக்கைகள்தான். சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய நேரும் பொருளாதார நடவடிக்கைகள் சுட்டும் அசமத்துவ வளர்ச்சி நிலையே இம்முரண்பாடுகளுக்குக் காரணம்.

aa sivasubramanian 441திணைக் கோட்பாடு தமிழின் தனித்துவமான ஒரு சாதனையாகச் சொல்லப்படுகிறது. ஆயின் அது சமூக ஏற்றத்தாழ்வுகளிலிருந்து விடுபட்டதா?

பண்டையத் தமிழிலக்கியத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று ‘திணைக் கோட்பாடு’ என்பதில் எவ்வித அய்யமும் இல்லை. ஒன்றுக்கொன்று மாறுபட்ட பொருளாதார நடவடிக்கைகளைக் குறித்து ‘திணைக் கோட்பாடு’ அறிமுகம் செய்வதால் சமூக ஏற்றத் தாழ்வுகள் அதில் வெளிப்படுகின்றன. எனவே சமூக ஏற்றத் தாழ்வுகள் இல்லாத இனக்குழு வாழ்வையும், சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட நன்செய் வேளாண் வாழ்க்கையையும் ‘திணைக்கோட்பாடு’ உணர்த்தி நிற்கிறது. இது குறித்து சிவத்தம்பியின் திணைக் கோட்பாட்டின் சமூக அடிப்படைகள் என்ற கட்டுரை ஆழமாக ஆராய்ந்துள்ளது.

உங்கள் நூலில் பலதரப்பட்டோர் அடிமைகளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறீர்கள். மன்னர்களின் மனைவியர், மறையவர், வேளாளர் போன்ற மேட்டுக்குடிகளும் அடிமைகளாக்கப்பட்டுள்ளார்கள். இதன்படி, ஒடுக்கப்பட்ட சாதியினர் எனக் குறிப்பிட்ட சில சாதியினரை மட்டும் சொல்லும் சித்திரம் கலைகிறதே!

பொருளியல் நிலையில் தாழ்ந்தோரும், சாதிமுறை இறுக்கமடைந்தபோது சாதியப் படிநிலையில் தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்டோரும், பெருமளவில் அடிமைகளாக்கப்பட்டோர் என்பதுதான் உண்மை. ஏனையோர் போர், பஞ்சம், ஆதரவற்ற நிலை என்பனவற்றால் அடிமையாயினர். தண்டனையாக அடிமையானோரும் உண்டு. இவையெல்லாம் சில சமூக நிகழ்வுகள். மற்றபடி ஒடுக்கப்பட்டோரை மையமாகக் கொண்டே அடிமை முறை இருந்துள்ளது என்பதுதான் உண்மை.

தமிழகத்தில் அடிமை முறை என்ற பிரச்சினைக்கும் சாதி அமைப்புக்கும் உள்ள தொடர்பு என்ன? அடிமை முறை என்பது பேசப்படும்போது சாதி அமைப்பு தவிர்க்கப்படுகிறதா? அல்லது, மார்க்சிய கருத்தாக்கமான அடிமை முறையில் தொடங்கி சாதி அமைப்புக்கு வந்து சேருகிறீர்களா?

மார்க்சியக் கருத்தாக்கத்தின்படி ஒரு சமூகத்தின் பொருள் உற்பத்தி முறையானது முற்றிலும் அடிமைகளைச் சார்ந்திருந்தால் அச்சமூகத்தை அடிமைச் சமூகம் எனலாம். தமிழ்நாட்டில் அத்தகைய சமூக அமைப்பு இல்லை என்பதே பொதுவான கருத்து. அதேநேரத்தில் அடிமைகள் என்ற பிரிவினர் இருந்தனர் என்பதற்கு இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. இவர்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதும் உண்மை. ஆனால் சமூகத்தின் மொத்தப் பொருள் உற்பத்தி முறை முழுவதும் இவர்களை நம்பியில்லை. இதனால் அடிமைகள் இருந்தார்கள். அடிமைச் சமூகம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.

மற்றபடி அடிமை முறையைக் குறித்துப் பேசும் சாதி அமைப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதல்ல. இரண்டும் வெவ்வேறான தனித் தனி நிறுவனங்கள். அதேநேரத்தில் குடி ஊழியம் மேற்கொண்டிருந்த சாதியிலும் ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்தும் பலர் அடிமைகளாக்கப்பட்டனர் என்பதும் உண்மை. எனவே மார்க்சியம் குறிப்பிடும் அடிமைமுறைக்கும் சாதியத்திற்கும் நெருக்கமான தொடர்புள்ளதாகக் கருதுவதில் தவறில்லை.

தமிழகத்தில் சாதி அமைப்பு குறித்து உங்களின் நூல்கள், ராஜ் கௌதமனின் நூல்கள், மனோன்மணி சண்முகதாசின் சாதியும் துடக்கும் என்ற நூல், இவை போல இன்னும் சில நூல்களைச் சொல்லுவீர்களா?

பேராசிரியர் எஸ்.மாணிக்கத்தின் ‘‘Slavery in the Tamil Country’, பேராசிரியர் அனுமந்தனின் ‘Untouchablity in Tamilnadu, பேராசிரியர் பரமார்த்தலிங்கத்தின் ‘Social Reform Movement in Tamilnadu’ என்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவைபோக தனித்தனியாகச் சில சாதிகளை மையமாகக் கொண்டு ஹார்டு கிரேவ், லூயி துமான்ட் போன்ற அய்ரோப்பிய ஆய்வாளர்களும், இந்திய மற்றும் தமிழக ஆய்வாளர்களும் எழுதிய நூல்களும் ஏராளமாக உள்ளன. இவற்றுள் சில சாதியப் பெருமிதம் பேசுபவை.

இடங்கை - வலங்கை என்ற பெயரில் சோழர் ஆட்சிக்காலம் தொடங்கி, ஆங்கில ஆட்சிக்காலம் வரை பல்வேறு சாதிகளை உள்ளடக்கியிருந்த இரு பெரும் அமைப்புகள் குறித்தும், அவற்றிற்கிடையே அவ்வப்போது நிகழ்ந்த மோதல் குறித்தும் கட்டுரைகளும் நூல்களும் வெளியாகியுள்ளன.

மட்டுமீறிய சாதிப் பெருமிதம் பேசும்போதும், அல்லது பிற சாதியை இழிவுபடுத்தும்போதும், சாதி குறித்த நூல்கள் அறிவுப் பிறழ்ச்சிக்கு ஆளாகின்றன.

மானுடவியல், சமூகவியல், வரலாறு, நாட்டார் வழக்காறு ஆகிய அறிவுத்துறைகளின் துணையுடனும், விரிவான கள ஆய்வின் அடிப்படையிலும், காய்தல் உவத்தல் இன்றி தமிழகத்தின் சாதிகள் குறித்து அறிவியல் அணுகுமுறையிலான ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் உணர்ச்சி சார்ந்த ஒன்றாக அது உள்ளதுதான். இதிலிருந்து விடுபட்டு அறிவுசார்ந்து அணுகும் சூழல் உருவாகும் வரை, பழைய சாதிப் புராணங்களின் மறுபதிப்பும், ஆய்வு என்ற பெயரில் சாதிப் பெருமிதம் பேசும் நூல்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கும்.

உங்கள் நூலில் “ஆங்கில ஆட்சியில் அடிமை முறை” என்ற பகுதி ஒரு முக்கியமான பிரச்சினையைப் பேசுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அன்று நிலவிய அடிமை முறைமைகளை ஆதரித்தார்களா, அவற்றை மாற்றியமைக்க முனைந்தார்களா? என்ற பிரச்சினை அது. “அடிமை முறை இந்தியச் சமூக அமைப்பின் ஒரு பகுதி.. அதனைத் தடை செய்தால் அரசாங்க வருவாயைப் பாதிக்கும்... அந்த அடிமைகளே வேலையற்றவர்களாகி விடுவார்கள்” என்று பிரிட்டிஷ் அதிகாரிகளே குறிப்பிடுகின்றனர். காலனி ஆட்சிக்கும் அடிமை முறைக்கும் உள்ள உறவுதான் என்ன? இந்தக் கேள்வியை நீட்டினால், காலனிய ஆட்சிக்கும் சாதி அமைப்புக்கும் இடையிலான உறவு என்ன? என்ற கேள்வியும் உருவாகும். இது குறித்து உங்களின் கருத்தைக் கூறுவீர்களா?

கிளர்ச்சிகள், கலவரங்கள் இன்றி ஆட்சியை நடத்திச் செல்ல விரும்பிய காலனிய அரசு, தன் வருகைக்கு முன்பிருந்த சாதிய வேறுபாடுகளுடன் கூடிய சமூக அமைப்பைத் தக்க வைத்துக் கொள்ளவே விரும்பியது. சாதிய வேறுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது அதன் நோக்கமல்ல.

அய்ரோப்பாவின் இனவேறுபாடு போன்று இந்தியச் சாதி அமைப்பையும் நோக்கும் தவறான பார்வையும் பல காலனிய அதிகாரிகளிடம் இருந்தமையால் உயர்சாதி ஆதரவுப் போக்கை இயல்பாக மேற்கொண்டனர். பழைய சமூக அமைப்பில் கல்வியைத் தமக்குள் வைத்துக் கொண்ட பிராமணர்களும் வேளாளர்களும் காலனிய ஆட்சியின் தொடக்க காலத்தில் துபாஷிகள் (மொழி பெயர்ப்பாளர்), வாணிப முகவர்கள், கீழ்நிலை அதிகாரிகள், ஊழியர்கள் என்ற பதவிகளைப் பெற்றிருந்தனர். தமக்கு மேலிருந்த காலனிய ஆட்சியாளர்களை இவர்கள் தவறாக வழிநடத்தினர்.

இப்போக்கிற்கு ஏராளமான சான்றுகளை ஆங்கில அரசின் ஆவணங்களில் காணமுடியும். கிறித்தவம்கூட இத்தகைய அணுகுமுறையைக் கொண்டிருந்தது. பிரெஞ்சு காலனியத்தின் கீழிருந்த புதுச்சேரியிலும் கூட இத்தகைய போக்கு நிலவியதற்கு ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பிலும் சில சான்றுகள் உள்ளன.

மற்றொரு பக்கம் மேற்கத்திய நாடுகளின் சனநாயகச் சிந்தனைகளின் தாக்கத்திற்கு ஆட்பட்டிருந்த காலனிய அதிகாரிகள் சிலரும், உண்மையான கிறித்தவத் தகவுகளை நிலைநாட்ட ஆர்வம் கொண்ட ஒருசில கிறித்தவப் பாதிரியார்களும் ஒடுக்கப்பட்ட சாதியினர் பக்கம் நின்றுள்ளனர்.

காலனி ஆட்சி என்று வரும்போது பொருளாதாரச் சுரண்டல் என்பது அதனுடைய அடிப்படை நோக்கமாக அமையும். அன்றையச் சமூக அமைப்பில் முக்கியப் பங்கு வகித்த வேளாண் உற்பத்தியில் நிலவிய பண்ணை அடிமை முறையை ஒழித்தால், வேளாண் உற்பத்தி பாதிக்கும் என்று கருதியதால் பண்ணை அடிமை முறையைக் கண்டு கொள்ளாது இருந்துள்ளது. மற்றொரு பக்கம் அடிமை ஒழிப்புச் சட்டத்தையும் இயற்றினர். காலனிய ஆட்சியின் இரட்டைத் தன்மை என்று இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

மேற்கத்திய சமூக அமைப்பில் காணப்பட்ட அடிமை முறை, இந்தியாவில் அடிமை முறை ஆகியவற்றை அம்பேத்கரை முன் மொழிந்து உங்கள் நூலில் ஒப்பிடுகிறீர்கள். அதனை விளக்குவீர்களா?

மேற்கத்திய அடிமை முறையில் விலைக்கு வாங்கும் பொருளாக அடிமைகள் இருந்ததால் விலை கொடுத்து வாங்கிய விலங்குகளைப் பேணுவது போன்று அடிமைகளைப் பேணினர். தன் அடிமைக்கு உணவும், உறையுளும், மருத்துவ உதவியும் வழங்கும் கடப்பாடு அடிமை உரிமையாளனுக்கிருந்தது.

இந்தியாவில் இத்தகைய அடிமை முறை பரவலாக இல்லை. மாறாக மனு உருவாக்கிய ‘சண்டாளர்’ என்ற மக்கட்பிரிவினர் தம் இருப்பிடங்களில் தனித்து வாழ்ந்தனர். குடும்ப உறவுகளைக் கொண்டிருந்தனர். ஆனால் மேட்டிமை சாதியினருக்காக, கால வரம்பின்றி உழைத்தனர். அவர்களால் இழிதொழில் என்று கருதப்பட்ட தொழில்களைச் செய்யும்படி வற்புறுத்தப்பட்டனர். இவ்வாறு ஒருபக்கம் சுதந்திரமானவர்கள் போலக் காட்சியளித்து, மறுபக்கம் நடைமுறையில் அடிமைகளாக வாழ்ந்துள்ளனர். இந்திய அடிமை முறையின் வடிவமாக தீண்டாமை இருந்துள்ளது. அம்பேத்கரின் இக்கருத்து எனக்கு மிகவும் பொருத்தமாகப் படுகிறது.

இந்திய அடிமை முறை குறித்த ஆய்வில், இந்தியாவில் அடிமைகள் இருந்தார்கள், ஆனால் இம்முறையைக் கிரேக்கம், ரோம், பாபிலோனியா ஆகிய நாடுகளின் அடிமை முறையுடன் ஒப்பிடக்கூடாது என்ற மார்க்சிய ஆய்வு முடிவு போன்றே அம்பேத்கரின் இக்கருத்தும் முக்கியமானது.

உங்கள் நூலின் முடிவில், தமிழகத்தில் அடிமைகள் இருந்தார்கள், அடிமை முறை இல்லை என்பது போலக் குறிப்பிட்டுள்ளீர்கள். மேற்கத்திய அடிமை முறையை விட இந்தியச் சாதிச் சமூகம் மிகத் தந்திரமானது என்றும் குறிப்பிடுகிறீர்கள். இந்த இரண்டு கருத்துகளுக்கும் நடுவில் இடைவெளி உள்ளது போலத் தோன்றுகிறதே!

இப்பகுதியை நான் விளக்கியிருந்தால் இந்தச் சந்தேகம் தோன்றியிருக்காது. ‘அடிமைமுறையின் இந்திய வடிவம் தீண்டாமை’ என்ற அம்பேத்கரின் கருத்தும், ‘அடிமைகள் இருந்தார்கள் அடிமை முறை இல்லை’ என்ற கருத்தும் தனித்தனியாக நின்றுவிட்டன. இனிவரும் பதிப்பில் இதைத் திருத்திக் கொள்வேன்.

இப்போது பல அடிநிலைச் சாதியினர், நாங்கள் அடிமைகளாக இருக்கவில்லை, நாங்கள் நாடாண்ட பரம்பரை என்கிறார்களே! இதனை எப்படிப் புரிந்து கொள்வது?

மேட்டிமைச்சாதி எதிர்ப்பில் தமக்கென கடந்த கால வரலாற்றில் இடம் தேடும்போது, இத்தகைய முடிவுகளுக்கு வருவது இயல்பான ஒன்றுதான். ஒருவகையில் கலகக்குரலின் வெளிப்பாடுதான் இது. இப்போக்கைக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டியதில்லை.

இப்பரம்பரைத் தேடல் குறித்தும், உரிமை கொண்டாடுவது குறித்தும், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் சாதியவாதிகளிடம் விவாதங்கள் நடந்து வந்துள்ளன. நடந்தும் வருகின்றன. இதை அவர்களிடமே விட்டுவிடலாம். நாம் எந்தவொரு எதிர் நிலைப் பாட்டையும் எடுக்க வேண்டியதில்லை.

மன்னர்களையும் அவர்களைச் சார்ந்திருந்த தனி மனிதர்களையும் மையமாகக் கொண்ட மரபுவழி வரலாற்றிற்கு மாறாக வெகுதிரள் மக்களை மையமாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட பொருள் உற்பத்தி முறை கொண்ட சமூக அமைப்பில் இருந்து மற்றொரு பொருள் உற்பத்தி முறை கொண்ட சமூக அமைப்பிற்கு மாறுவதே வரலாறு என்ற சிந்தனைப் போக்கை உள்வாங்கி எழுதப்படும் வரலாறு இவற்றை மழுங்கடிக்கும். இது எழுதப்படாத வரையில் சாதிப் பெருமித வரலாறுகளையும் அவற்றை யானை மீது ஏற்றி வரும் உலாக்களையும் தடுக்க முடியாது.

தமிழகத்தில் அடிமை முறை என்று எழுதியது போல தமிழகத்தில் சாதி முறை என்ற தலைப்பில், முழு வரலாற்றையும் தழுவி ஒரு நூல் எழுதலாம் அல்லவா?

முன்பே சொன்னதுபோல் இது உணர்ச்சி சார்ந்த ஒன்று. தோழர்.நல்லகண்ணு கிட்டத்தட்ட நாற்பது வரையிலான எண்ணிக்கையில் சாதி சார்ந்த பழமொழிகளைச் சேகரித்துள்ளார். நானும் சாதி சார்ந்த பழமொழிகள் சிலவற்றைச் சேகரித்துள்ளேன். இவற்றை மையமாகக் கொண்டு கட்டுரையொன்று எழுதுவதற்கே எங்களுக்குப் பயமாக உள்ளது. இத்தகைய சமூகச் சூழலில் சாதிமுறை குறித்து எங்கே எழுதுவது.?

இருந்தாலும் பாதுகாப்பு உணர்வுடன் எழுத முயற்சி செய்யலாம். இப்பொருளின் ஆழம் கருதி கூட்டு முயற்சியாகச் செய்வதே பயனுடையதாக இருக்கும் என்பது என் கருத்து.

சமீபகால வரலாற்றை எழுதுவதில் நாட்டார் வழக்காற்றியல் உதவுவதாக இருக்கலாம். ஆயின் வரலாற்றின் மிகப் பழமையான அடுக்குகளைப் புரிந்து கொள்ள வழக்காறுகள் உதவுமா? அப்படி உதவும் சந்தர்ப்பங்களை எடுத்துரைப்பீர்களா?

நாட்டார் பாடல்கள், கதைகள், விளையாட்டுகள் என்பனவே நாட்டார் வழக்காறு அல்ல. நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், புழங்குபொருள் பண்பாடு, சமயம், உணவு, நிகழ்த்துக் கலைகள் என்பனவும் இதில் அடங்கும்.

இவையெல்லாம் இன்று அப்படியே தொடராமல் இருக்கலாம். ஆனால் இவற்றின் மூல வேர்கள் பண்டைய வரலாற்றில் இருப்பதைக் கண்டறியலாம்.

சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் குறிப்பிடும் ‘நடுகல் வழிபாடு’ இன்று நாட்டார் தெய்வ வழிபாட்டில் கொலையுண்டோர் மற்றும் இறந்தோர் வழிபாடாகத் தொடரவில்லையா? இதுபோல் சங்க இலக்கியம் குறிப்பிடும் வேலன் வெறியாட்டத்திற்கும், சிலப்பதிகாரம் குறிப்பிடும் தெய்வ ஆவேச நிகழ்வுகளுக்கும், இன்று நாட்டார் தெய்வக் கோவில்களில் நிகழும் சாமியாட்டம், வாக்குக் கூறல் நிகழ்வுகளுக்கும் இடையே இயைபு காண முடியாதா?

உங்களால் பதிப்பிக்கப்பட்ட நூல்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். “பூச்சியம்மன் வில்லுப்பாட்டு”, “கல்லறை வாசகப்பா”, “உபதேசியார் சவரிராய பிள்ளை ” ஆகியவை.

“கொலையில் உதித்த தெய்வங்கள்” தொடர்பான களப்பணி செய்தபோது பூச்சி அம்மன் வில்லுப்பாட்டு கிடைத்தது. பேராசிரியர் நாவாவின் “முத்துப்பாட்டன் கதைப்பாடல்” பதிப்பு எனக்கு வழிகாட்டியாக அமைந்தது. “கல்லறை வாசகப்பா” நாடகத்தை காமநாயக்கன்பட்டியில் தற்செயலாகப் பார்த்தேன். அதை ஆய்வு செய்ய வேண்டுமென்ற நோக்கம் எனக்கு அப்போது கிடையாது. அந்நாடகத்தின் பெயர்க் காரணம் குறித்து அங்கிருந்த ஒருவரிடம் இயல்பாக வினவியபோது, வாசல் காப்பு என்பதே வாசாப்பு என்று ஆகியது என்றார். ஏசுவின் கல்லறையை பிலாத்துவின் வீரர்கள் காத்து நிற்பதே வாசல் காப்பு என்று விளக்கமும் அளித்தார். நான் பார்த்தபிறகு “வாசகப்பா” நிகழவில்லை என்பதை பின்னர் அறிந்தேன். தெ.பொ.மீயின் கட்டுரை ஒன்றை படித்த பிறகுதான் வாசகப்பா என்பது ஒரு நாடக வகை என்று அறிந்து கொண்டேன். உரையும் பாட்டும் கலந்து வருவதால் அது வாசகப்பா என்றாயிற்று என அவர் பொருத்தமாக விளக்கு கிறார்.

உபதேசியார் சவரிராய பிள்ளை வரலாறைப் பதிப்பிக்கும் போது அவரது குடும்பத்தார் கல்லறைகளைச் சென்று பார்த்திருக்கிறேன். நெல்லை சீர்திருத்தக் கிறித்தவத்தின் வரலாற்றைப் படித்து ஆய்வு செய்ய வேண்டி வந்தது. முறையாகச் செய்தால் பதிப்பு என்பதே ஓர் ஆய்வுப் பணிதான்.

எழுதி முடிக்க வேண்டிய நூல்கள் இன்னும் பல இருக்கும்?

ஆமாம், உள்ளன. தாவர வழக்காறுகள் பற்றிய ஏழு கட்டுரைகள் உள்ளன. அவற்றைத் தொகுத்து இடைவெளிகளை இட்டு நிரப்பி நூலாக ஆக்க வேண்டும். கொலையில் உதித்த தெய்வங்கள் குறித்து சனநாயக வாலிபர் சங்கத்தின் பத்திரிகையான இளைஞர் முழக்கத்தில் சில கட்டுரைகள் தொடர்ச்சியாக எழுதினேன். அவற்றையும் தொகுத்து வெளியிடத் திட்டம் உள்ளது. அம்பேத்கரும் இந்தியச் சமூகவியலும் என்றொரு நூலுக்கான குறிப்புகளுடன் அமர்ந்து கொண்டிருக்கிறேன். எழுதி முடிக்க வேண்டும். ராமச்சந்திரனுடன் சேர்ந்து ‘நாட்டார் வழக்காற்றியல்:’ ஓர் அறிமுகம் என்றொரு நூல் திட்டமிட்டுள்ளேன். வாய்மொழிக் கதைகள் தொகுப்பு ஒன்று உள்ளது. வள்ளலார் பற்றி ஒரு சிறுநூல் எழுத ஆசை உள்ளது.

கழுகுமலைக் கலவரம், சிவகாசிக் கொள்ளை பற்றி ஆராய்ச்சி பத்திரிகையில் இரண்டு கட்டுரைகள் எழுதினீர்கள். இப்போது எழுத்தாளர் பூமணி “அஞ்ஞாடி..” என்ற நாவலை அதே வரலாற்றுப் பின்புலங்களைக் கொண்டு எழுதியுள்ளார். 19 ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் கழுகுமலை, சிவகாசி வட்டாரங்களில் நாடார்கள் எழுச்சி பற்றி பூமணி எழுதியுள்ளார். அந்த நாவல் குறித்த உங்கள் கருத்துகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 

பூமணியின் “அஞ்ஞாடி..” ஒரு நல்ல நாவல். 1850களை அடுத்துவந்த இருபது ஆண்டுகளில் கோவில்பட்டி, சிவகாசி வட்டாரங்களில் நிகழ்ந்த சமூக மாறுதல்களை மிகக் கூர்மையாகக் கவனித்து அவற்றை மையமாகக் கொண்டு இந்த நாவலை அமைத்திருக்கிறார்.

இக்காலத்தில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தைத் தொடர்ந்து அமெரிக்கப் பருத்தி முன்போல பிரிட்டிஷ் தொழிலதிபர்களுக்குக் கிடைக்காமல் போயிற்று. கோவில்பட்டிப் பருத்திக்கு மேலைச் சந்தையில் மவுசு ஏற்பட்டது. கோவில்பட்டி வட்டாரத்தில் கிறித்தவப் பாதிரிமார்கள் கூட பருத்தி விதைகள் விற்றார்கள். கரிசல் நிலப்பகுதியில் அக்காலத்தில் கிணறுகளின் எண்ணிக்கையும் வண்டிகளின் எண்ணிக்கையும் கூடியதாக டேவிட் லுட்டன் எழுதுவார்.

ஒருபுறம் பருத்தி விவசாயம் அதிகரிக்க, இன்னொருபுறம் வழக்கமான வேளாண்மைத் தளத்திலிருந்து விலகி இன்னொரு பகுதி மக்கள் வணிகத்தினுள் நுழைந்தார்கள். இவற்றை, பூமணி காய்தல் உவத்தல் இன்றிப் பதிவு செய்துள்ளார். சமூகப் பிளவுகளைக் குறித்து நிற்கும் வெவ்வேறு மொழிகளை இந்நாவலில் பூமணி பேசவிட்டுள்ளார்.

இந்நாவலில் ஒலிக்கும் வேறுபட்ட மொழிகளை அடையாளப்படுத்த வேண்டும். மரபுரீதியான ஆதிக்க சாதிகள் அதிகார வர்க்கத்துடன் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டதை பூமணி இந்நாவலில் குறிப்பாகப் பதிவு செய்துள்ளார்.

சமூக மாறுதலை மிகக் கூர்மையாக எதிர்த்தவர்களாக பூமணி அதிகாரிகளைச் சித்தரிக்கிறார். நாட்டுப்புறப் பாடல்களையும் பழக்க வழக்கங்களையும் வெகுவாகச் சார்ந்து இந்நாவலை எழுதியுள்ளார். விடுதலையை நோக்கி நின்ற ஒரு பகுதி மக்களின் இலக்குகள் அன்றைய சூழல்களில் எதிர்மறையாக மாற்றம் பெற்றதை வரலாற்றுக் காரணிகளோடு அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். சமகாலச் சூழல்களில் கூட அந்நிகழ்வை நாம் அர்த்தப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். 1947க்குப் பிறகு பாகிஸ்தான் பிரிவினை, இந்திராகாந்தி கொலை வரையில் நாவலை நீட்டித்திருப்பது சிறிது உறுத்தலாக இருந்தது.

அபூர்வமான நூல்களை நீங்கள் எப்படிக் கண்டடைகிறீர்கள்? சில நூல் நிலையங்கள், புத்தகக் கடைகளைப் பற்றிச் சொல்லுவீர்களா?

புத்தகங்கள் மீது ஆசை வந்துவிட்டால் எப்படியும் அவற்றைக் கண்டுபிடித்து விடலாம். என்னுடைய புத்தக ஆசைக்கு முதலில் உதவியவர் தெட்சணாமூர்த்தி குரு பகவான். நெல்லை நகரில் இருந்த நெல்லையப்பர் கோவிலில் தெட்சணாமூர்த்திக்கு தனி சன்னதி உண்டு. கல்விக் கடவுளான அவருக்கு அர்ச்சனை செய்யவென்று என் அம்மா ஒரு ரூபாய் தருவார்கள். அர்ச்சனை செய்யாமல் அதில் ‘கோல்மால்’ செய்து அந்தக் காசைச் சேமித்து வைப்பேன். பின்னர் அந்தக் காசைக் கொண்டு டவுனில் இருந்த ஓர் அய்யரின் பழைய புத்தகக் கடையில் புத்தகங்கள் வாங்கத் தொடங்கினேன். அந்தக் காசுக்கு அன்றைக்குப் புத்தகங்கள் கிடைத்தன.

அண்ணாமலைப் பல்கலையில் படித்த போது சென்னை மூர்மார்க்கெட், சிதம்பரத்தில் ஒரு பழைய புத்தகக் கடை ஆகியவற்றோடு பரிச்சயம் ஆகிக் கொண்டேன்.

தூத்துக்குடியில் குருசாமி நாடார் புத்தகக்கடை. பல அபூர்வமான பழைய நூல்கள் விற்கும் இடமாக ஒரு காலத்தில் விளங்கியது.

கருத்தரங்குகளுக்குப் போய்வரும்போது பயணச் செலவு, படி என கொஞ்சம் பணம் தருவார்கள் அல்லவா! அந்தப் பணத்தைப் பெரும்பாலும் நூல்கள் வாங்குவதற்குப் பயன்படுத்திக் கொள்வேன். சில கிறித்தவ அமைப்புகள் என் தேவைகளை உணர்ந்து விவிலியக் களஞ்சியம் போன்ற பெரிய நூல்களை அன்பளிப்பாக வாங்கித் தந்ததுண்டு. தற்போது என் மூத்த மகன் சி.ஆழ்வார் பிலிப்கார்ட் நிறுவனம் வாயிலாக சில விலையுயர்ந்த நூல்கள் சிலவற்றை வாங்கி அவ்வப்போது அன்பளிப்பாகத் தருகிறான். குடும்பப் பொறுப்புகள் முடிந்துபோய் பொருளாதாரச் சுமை சற்றுக் குறைந்துள்ளதால் நூல்கள் சிலவற்றை என்னால் வாங்க முடிகிறது. உடல் ஆற்றலுடன் இருந்த போது நூல்கள் வாங்கப் பணமில்லாமலிருந்தேன். நூல்கள் வாங்கும் பொருளாதார நிலை இருக்கும்போது அவற்றைப் படிக்கும் ஆற்றல் சற்றே குறைந்து விட்டது. எப்படிப் பார்த்தாலும் இன்னும் நூல்களின் மீதான ஆசை அல்லது தேவை குறையவில்லை.

நூல்களைத் தேடி அலைவதில் உ.வே.சா.வின் அனுபவத்தை மிஞ்சிய அனுபவங்கள் யாருக்கும் கிடைக்காது. அவை குறித்து அவர் ஏராளமாக எழுதியிருக்கிறார். உ.வே.சாவின் நூல் தேடல்கள் குறித்த செய்திகளை அவரது எழுத்திலேயே இளைஞர்கள் படிக்கவேண்டும்.

உ.வே.சாவின் நூல் தேடல், தரவுகள் தேடல் குறித்துச் சொல்லுவீர்களா?

பழைய கவிராயர்களின் வீடுகளில் நூல்களைத் தேடி அவர் ஊர் ஊராக அலைந்தார். ஓர் ஊரில் அவரை அழைத்துச் சென்ற வண்டிக்காரர் கூலி வாங்க மறுத்துவிட்டார். ஏனெனில் அவர் ஒரு பழைய வள்ளலின் மகன். தற்போது அவர் நொடித்துப் போயிருந்தாலும் கூலி வாங்க மறுத்த அந்நிகழ்வை உ. வே. சா உருக்கமாக எழுதியுள்ளார். உ.வே.சாவின் காலம், மடங்களும் ஜமீன்களும் தமது செல்வாக்கை இழந்து கொண்டிருந்த காலம். கவிராயர்களும் அவர்களது வாழ்க்கை வசதிகளை இழந்து போனார்கள். குறிப்பிட்ட அக்காலக் கட்டம் பற்றிய பல செய்திகளைத் துணுக்குகளாக உ.வே.சா பதிவு செய்துள்ளார்.

முல்லைப்பாட்டைத் தேடி உ.வே.சா வெகுவாக அலைந்தார். கடைசியில் ஆழ்வார் திருநகரிக்கு வந்தபோது ஒரு வீட்டில் சில சுவடிகள் கிடைத்தன. அந்த நேரத்தில் அந்த வீட்டில் வெளிச்சம் ஏதுமில்லை. முற்றத்தில் விழுந்த நிலா வெளிச்சத்தில் அச்சுவடியை உ.வே.சா படித்துப் பார்த்தார். பார்த்தால், அது முல்லைப்பாட்டுச் சுவடி. “நிலவில் பூத்த முல்லை” என்று தலைப்பிட்டு அது குறித்து அவர் எழுதியுள்ளார்.

“இடையன் எறிந்த மரம் போல” என்று சீவக சிந்தாமணியில் ஒரு பாடல் வரி. இந்த வரியின் பொருளை அவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்று எழுதுவார். திருப்பனந்தாள் மடத்தின் தோட்டத்தில் ஒரு மாடுமேய்ப்பவர் அரை வெட்டாக வெட்டி மரக்கிளையைத் தணியச் செய்து ஆடு மாடுகளைத் தின்னச் செய்தார். மரத்துக்கும் சேதம் இல்லை. அதுதான் அந்தப் பாடல் வரியின் பொருள் என்று உ.வே.சா விளக்குவார். கும்மியானம் என்று ஒரு சொல்... அதன் பொருளைத் தேடிக் கண்டறிந்து சொல்லுவார். பாயாசம் போல ஒன்று. பாசிப்பயறும் வெல்லமும் சேர்த்துச் செய்யப்பட்ட ஓர் இனிப்பு. ஒரு வைணவக் கோயிலில் செண்டு அலங்காரம் என்ற வழிபாட்டு முறையைப் பார்த்தார். அது பூக்களால் அலங்கரிக்கும் முறை அல்ல. செண்டு என்ற படைக்கருவியால் செய்யப்படும் அலங்காரம் என்று உ.வே.சா விளக்குவார். இந்த அறிதல் அவர் பதிப்பித்துக் கொண்டிருந்த ஒரு நூலில் இடம்பெறும் “செண்டு” என்ற சொல்லுக்குப் பொருள் எழுத உதவியது. இவற்றையெல்லாம் விளக்கி காலச்சுவடு உ.வே.சா சிறப்பு மலரில் ஒரு கட்டுரை “உ.வே.சாவும் நாட்டார் வழக்காற்றியலும்” என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். ஜி.யு.போப்புக்குக் கிடைத்த நிதி உதவி உ.வே.சாவுக்குக் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் மேலும் சாதித்திருப்பார்.

இந்த நேர்காணல்களுக்கு நன்றி. உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் 70 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறீர்கள். 17 வயதிலிருந்து அரசியல் ஈடுபாடு கொண்ட நீங்கள் ஓர் ஆசிரியராக, ஆய்வாளராக 55 ஆண்டுகளைக் கடந்துள்ளீர்கள். இந்த நேர்காணல்களில் இப்போதும் உங்களின் விமர்சன ஆற்றல் குறைந்து விட்டதாகத் தெரியவில்லை. இன்னும் எழுதுவதற்கும் பேசுவதற்கும் உங்களிடம் ஏராளம் உள்ளன. நீங்கள் தேர்ந்து கொண்ட இந்தப் பாதை, பயணம் நிறைவுடைய ஒன்று எனக் கருதுகிறீர்களா? ஏதேனும் போதாமைகள் இருந்ததாகக் கருதுகிறீர்களா?

நிச்சயமாக ஒரு நிறைவான மனநிலையிலேயே வாழ்கிறேன். மனித வாழ்வில் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி விடுவதில்லை. எனக்கும் அது பொருந்தும். ஆனால் நிறைவேறாத விருப்பங்களுக்காக ஏங்கித் தவிப்பது அறிவுபூர்வமான செயல்பாடுகளுக்குத் தடைக்கல்லாகும் என்பதை உணர்ந்துள்ளேன்.

பிறப்பின் அடிப்படையில் நாம் விரும்பாமலேயே இரு அடையாளங்கள் நம்மை ஒட்டிக் கொள்ளுகின்றன. ஒன்று சாதி, மற்றொன்று சமயம். இவ்விரு அடையாளங்களையும் துறப்பது என்பது சற்றுக் கடினமான ஒன்றுதான். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கமும் பெரியார் இயக்கமும் இவை இரண்டையும் துறந்து வாழ்வோரை உருவாக்கியுள்ளன.

“சுயசாதி அடையாள மறுப்பு”, “சமய அடையாள மறுப்பு” என்ற இரண்டையும் 15-16 வயதிலேயே நான் ஏற்றுக் கொள்ளும்படி எனக்குக் கிடைத்த தோழமை உறவுகளும் தழுவிக் கொண்ட சித்தாந்தமும் செய்துவிட்டன.

முதுமை சிலரைத் தடுமாறச் செய்து மேற்கூறிய இரு அடையாளங்களிலிருந்தும் விலகி நின்றோரை மீண்டும் தழுவிக் கொள்ளச் செய்துவிடும். இதை விந்தை என்பதா, விபத்து என்பதா? என்னைப் பொறுத்த அளவில் இவ்விந்தையும் விபத்தும் இதுவரை நிகழவில்லை, இனிமேலும் நிகழாது.

நம் ஆன்மீகவாதிகள் ஒருவகையான தேடலை வலியுறுத்துவார்கள். பொருள்முதல்வாதிக்கும் கூட ஒரு தேடல் உண்டுதான். ஆனால் அது ஆன்மீகவாதியின் தேடலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. என்னைப் பொறுத்த அளவில் நீண்ட காலம் வாழ்வதை விடத் தேடலை மேற்கொள்ளும் மனவலிமையுடன் வாழ்வதே சிறப்பானது.

இத்தேடலில் நான் தனித்து நிற்கவில்லை என்பது மகிழ்ச்சியளிப்பதாய் உள்ளது. எனது மனைவியும் பிள்ளைகளும் என் பணிகளுக்கு குறுக்கே நின்றதில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்கள், என் வயதை ஒத்தவர்கள், என்னைவிட வயதில் குறைந்தவர்கள் எனத் தோழமை உறவுகள் எனக்குத் துணை நிற்கின்றன. சில போழ்து வழிநடத்தவும் செய்கின்றன. The Child is the Father of the Man என்ற ஆங்கிலச் சொற்றொடரை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்.

உழைக்கும் மக்களின் போராட்ட அரசியல் அவசியமானது என்பதை நான் சார்ந்திருக்கும் இயக்கம் எனக்குப் புரிய வைத்திருக்கிறது. உழைக்கும் மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தாது, அவற்றை ஆதரிக்கும் அவசியத்தையும் அது கற்றுக் கொடுத்திருக்கிறது.

இன்று நான் பெற்றுவரும் ஓய்வூதியத்தை எவ்வித மன உறுத்தலுமின்றி வாங்கி வருகிறேன். யாரோ போராடினார்கள், பயனை நான் அனுபவிக்கிறேன் என்ற நிலையில் நான் இல்லை. கல்லூரி ஆசிரியர்கள் சங்கமான மூட்டா நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு சக ஆசிரியர்களுடன் நான்கு முறை நானும் சிறை சென்றதே இதற்குக் காரணம். பண்பாட்டு ஊழியன் என்று கூறிக் கொண்டு ஆசிரியர் போராட்டங்களில் கலந்து கொள்வதையும் சிறைவாசத்தையும் நான் தவிர்க்கவில்லை. உன்னைப் போன்ற என் மாணவர்கள் முற்போக்குச் சிந்தனையுடன் பல்வேறு அரங்குகளில் அழுத்தமாகப் பணிபுரிவதைக் கண்டு மகிழ்கிறேன்.

(2014ஆம் ஆண்டில் என்.சி.பி.எச். வெளியீடான ‘தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்’ என்ற நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்காணல்)

நேர்காணல்: ந.முத்துமோகன்

Pin It