பணவீக்கம் என்பது என்ன?
நாம் வாழும் இந்த பூமியின் பொருளாதாரமே "பற்றாக்குறை" எனும் அந்த ஒற்றை வார்த்தைப் புள்ளியில் இயங்குகிறது. மறுதலையாக பற்றாக்குறை இல்லையென்றால் பொருளாதாரமும் இல்லை. இந்த பற்றாக்குறை உழைப்பு சார்ந்து அதற்கு நிகராக இருக்குமானால், அது உண்மையான பற்றாக்குறை. இல்லையேல் பதுக்கி வைத்தல், உபரியைப் பெருக்குதல் போன்ற பேராசையால் விளையுமானால் அது நாட்டிற்கு பேராபத்து.
தேவை மற்றும் அளிப்பு இந்த இரண்டிற்குமானதுதான் உலக அல்லது ஒரு நாட்டின் பொருளாதாரம். ஆனால் எப்பொழுதும் தேவையின் அளவு ஒரே சீராக இருந்து கொண்டே இருக்குமானால் அது தவழும் பணவீக்க நிலையிலேயே இருக்க ஏதுவாகும். அந்த நாடும் தவழும் பணவீக்கத்தால் முன்னேறுகிறது என்று பொருள். அதாவது ஒரு நாடு உயர வேண்டுமானால் அங்கே நிச்சயம் பணவீக்கம் இருக்க வேண்டும் ஆனால் அதே நேரத்தில் அது சீரான வேகத்தில் பயணிக்க வேண்டும் அல்லது தவழ வேண்டும் என்று பொருள்.
ஒரு தெருவில் சுமார் 100 பேர் வசிக்கிறார்கள். எல்லோருக்கும் 1 கிலோ வெங்காயம் தேவை. ஆனால் கடையில் இருப்பதோ வெறும் 60 கிலோ இருப்பு மட்டுமே என்கிற நிலையில், 40 பேர் ஏற்கனவே தம்மிடம் தலா 1 கிலோ என 40 கிலோ வெங்காயம் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கடைக்காரர் சரியான விலையாக 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்றால், வெறும் 60 பேர்களுக்கே வெங்காயம் இருப்பு உள்ள நிலையிலும், அந்தத் தெருவில் வெங்காயத்தை வாங்க 80 பேர்கள் விருப்பம் தெரிவிக்கிறார்கள் என்கிற நிலையிலும் பற்றாக்குறை நிகழ்கிறது. கடைக்காரரிடம் இன்னும் 20 கிலோ அதிக இருப்பு தேவைப்படுகிறது. ஆனால் தற்போது வெங்காயம் எனும் பொருள் இல்லை. எனவே அவர் நிலமையைப் புரிந்து கொண்டு மேலும் 20 ரூபாய் உயர்த்தி, கிலோ 40 ரூபாய் என்று உயர்த்தி விடுகிறார். வெறும் 20 ரூபாய் வெங்காயத்தை 40 ரூபாய்க்கு உயர்த்துவதால் ஏற்கனவே வாங்கி வந்த சாமானிய மக்களின் வாங்கு திறன் குறைந்து விடுவதோடு பணத் தேவையும் அதிகரித்து விடுகிறது.
அதாவது அதிகபட்ச பணம் குறைந்தபட்ச பொருள்களைத் துரத்துகிறது அல்லவா? இந்தப் பணத்தின் வாங்கும் திறனின் வீழ்ச்சியை பணவீக்கம் என்கிறோம்.
இப்பொழுது இப்படி நினைத்துப் பாருங்கள். ஏற்கனவே 40 பேர்களிடம் வெங்காயம் இருக்கிறது. ஆனாலும் அதில் 20 பேர்கள் மேலும் வாங்க விழைகிறார்கள். ஒருவேளை அவர்களின் உணவு ஆசையை அல்லது சேமிக்கும் ஆசையை விடுத்து, இல்லாதவர்கள் பெற்றுக் கொள்ளட்டும் என்று விடுவதால் வெங்காயத்தின் தேவை 60 பேர்களுக்கு 60 கிலோ என்கிற சீரான நிலையில் இருக்க வாய்ப்புண்டு.
இங்கே இன்னொரு உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும் 20 ரூபாய் வெங்காயத்தை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு அந்தத் தெருவில் வசிக்கும் 20 பேர்களின் பொருளாதாரம் அல்லது அவர்களின் வாழ்க்கைத் தரம் அனுமதிக்கிற வேளையில், அதே தெருவில் வசிக்கும் 60 பேர்களின் கூலி அல்லது ஊதியம் உயரவில்லை என்பதுதான். ஒருவேளை நாளை வெங்காயத்தின் விலை ஏறினாலும், சமமாக இருந்தாலும் அந்தப் பொருளினூடே பிணையப்பட்ட உழைப்பு சக்தியை கணக்கில் கொள்ள மறுக்கிறார்கள் தற்கால பொருளாதார வல்லுநர்கள். இது ஆபத்திலும் ஆபத்து.
1 கிலோ வெங்காயமும், கூலியும் 20 ரூபாயாக உயருமானால் ஏற்றத்தாழ்வு இருக்கப் போவதில்லை. ஆனால் கூலி வெறும் 15 ரூபாய் என்றால் வெங்காயத்தின் விலை 125% ஆக உயர்ந்து விடுகிறதல்லவா? வெறும் வெங்காயத்தில் நின்றுவிடாமல் நம்முடைய அனைத்து அன்றாடத் தேவைகளிலும் நீக்கமற கலந்துவிட்ட பொருள்களை சிந்தியுங்கள், பணவீக்கம் புரியும்.
தேவைகளும் ஆசைகளும்!
தேவைகளுக்கும் ஆசைகளுக்குமான இடைவெளியைக் குறைத்துவிட்டால் பணவீக்கமும் குறைந்துவிடும். அதாவது ஒரு நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி வெகுவாக குறைந்திருக்க வேண்டும். மறுதலையாக எந்த நாடு அதன் ஏற்றுமதியை விட பல மடங்கு அதிகமாக இறக்குமதி செய்கிறதோ, அந்த நாடு அழிவின் விளிம்பில் நிற்கிறது என்று பொருள். நான்கு பேர்கள் உள்ள ஒரு நகர்ப்புற குடும்பத்தில் மகிழ்வுந்து தேவைப்படுவதில்லை. ஆனாலும் ஒன்றிற்கு இரண்டு நிற்கிறது. ஆளுக்கு ஒரு இரு சக்கர வாகனம் இருக்கிறது. ஆனால் நமது நாட்டின் எரிபொருள் தேவை நம்முடைய உற்பத்தியை விட 180% தேவைப்படுகிது. அதாவது நமது தேவையில் 80% இறக்குமதி செய்கிறோம் என்றால் பணவீக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். மிரண்டு விடுவீர்கள்.
ஒன்று நமது போலி வறட்டு கௌரவப் பேராசைகளை ஒழிக்க வேண்டும். அது நடவாத காரியமாதலால் நமது உணவு மற்றும் ஏற்றுமதிப் பொருள்களின் ஏனைய உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நம்மால் ஒரு கிராம் தங்கத்தை வெட்டி எடுப்பதை விட பலமடங்கு குறைந்த செலவில் வாங்கிவிட முடியுமெனில் நாம் தங்கத்தை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும் அல்லது தங்கத்தின் மீதான நம்முடைய போலி அந்தஸ்து அடையாளங்களை விட்டுவிட வேண்டும் என்று பொருள்.
மனிதனின் ஆசைகளையும், பேராசைகளையும் எந்த காலத்திலும் நிறைவேற்றிவிட முடியாது. காரணம் அப்படியொரு மாய மந்திரம் இன்னும் இந்த உலகில் உருவாகவில்லை. இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய ஆசைகளும், பேராசைகளும் நம்முடைய உழைப்பிற்கு நிகராக ஒருபோதும் இருந்ததில்லை, இருப்பதில்லை, இருக்கப் போவதுமில்லை. நமது விருப்பங்களைத்தான் இங்கே பற்றாக்குறை என்று பொருள்படுத்தியுள்ளேன். ஒரு நாடு தொடர்ந்து முன்னேறுவதற்கும், வளர்வதற்கும் சீரான பற்றாக்குறை எப்பொழுதும் அங்கே இருக்க வேண்டும். ஆனால் "சீரான" என்கிற வார்த்தையின் அளவை உழைப்பு, மதிப்பு கொண்டு மட்டுமே கணக்கிட வேண்டும்.
நாம் விளைவிக்கும் உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் கனிம வளம் சார்ந்த பொருள்கள் என எல்லாமே மனித ஆற்றல், இயற்கை வளம், தொழில்நுட்ப வசதி பொறுத்தே உள்ளதால் அவைகளால் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி நிலைகளைத் தாண்டி பயணிக்க முடிவதில்லை. அதாவது நம்முடைய விருப்பங்களை அல்லது தேவைகளைப் பூர்த்தி செய்கிற அளவிற்கு எப்பொழுதும் எந்தவொரு நாட்டின் உற்பத்தியும் இருப்பதில்லை என்று பொருள்.
பற்றாக்குறையை எப்படி சமாளிப்பது?
பற்றாக்குறை என்பதே பெருநிறுவனங்களால் செயற்கையாக உருவாக்கப்படுவதுதான். அதாவது என்னிடம் ஒரு ஆண்டுக்கு முன்னதாக வாங்கப்பட்ட 30,000/- மதிப்புள்ள ஆண்ட்ராயிடு போன் இருக்கிறது. ஆனால் பெருநிறுவன தந்திர விளம்பர யுக்திகளினால் தூண்டப்பட்டு, தேவையே இல்லை எனினும் 60,000/- மதிப்புள்ள ஆண்ட்ராய்டு போனை வாங்க ஏதுவாக நுகர்வு கலச்சாரப் பேராசை உலகினுள் நுழைகிறேன்.
என்னிடம் வெறும் 60,000/- மட்டுமே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். என்னுடைய மகன் கல்லூரிப் பணம் கட்ட திடீரென்று 60,000/- கேட்கிறான். இப்பொழுது நான் இந்த இரண்டையும் பூர்த்தி செய்ய இயலாத நிலை. அதாவது பொருளாதாரப் பற்றாக்குறை சூழலில் நான் கல்லூரிக் கட்டணத்தை மட்டும் தெரிவு செய்தால், சரியான முடிவு செய்ததன் மூலம் பற்றாக்குறையை சரி செய்து விட்டேன் என்று பொருள். ஆனால் தற்போது 60,000/- மதிப்புள்ள ஆண்ட்ரைடு போனை வாங்காததன் மூலம் எனக்கு இழப்பும் ஏதுமில்லை. அதாவது நுகர்வு கலாச்சாரத்தைத் தவிர்த்து விட்டு சரியான உண்மையான தேவைகளை அளவுடன் தெரிவு செய்து நுகர கற்றுக் கொண்டு விட்டால் தனிமனித வாழ்வு சிறப்பதோடு நாட்டின் பொருளாதாரமும் சமன் செய்யப்பட்டு விடும்.
நாம் நம்முடைய தேவைக்கு அதிகமாக வாங்கும் அழகு சாதனம், உணவு வகைகள், ஆடைகள், வாகனங்கள், வீட்டு அழகுப் பொருள்கள் என்று எதுவாயினும் அதன்மீது நம் செலுத்தும் அனைத்து உபரியும் சிந்தாமல் சிதறாமல் ஆசிய அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே செல்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சாமானியனுக்கும் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருந்தும், தன்னுடைய பேராசையாலும், போதிய பொருளாதார கல்வி அறிவு இல்லாததாலும், சக மனிதன் மீது சக மனிதனே நம்பிக்கையற்று இருப்பதாலும், இந்த அரசும், முதலாளித்துவ நிறுவனங்களும் எப்பொழுதும் தனி மனிதனின் பாக்கட்டை எட்டிப் பார்ப்பதாலும் இந்த நிலை உருவாகிறது.
இந்திய உபகண்டம் உலக உபரியின் மிகப் பெரிய சந்தை. ஆதலால் இங்கே சக மனிதனூடேயான ஒற்றுமை உருவாவது கடினம். அதனால்தான் அவன் மீது திட்டமிட்டே கடவுள் கொள்கை, சாதியப் பற்று, மதம் என்று பெருநிறுவன முதலாளித்துவ அரசாங்கங்களினால் எப்பொழுதும் ஏவப்படுகிறது.
அடுத்த தொடரில் இன்னமும் விரிவான இந்தியப் பொருளாதாரம் பேசுவோம்.
- பார்த்திபன்.ப