(முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268–1308) வாரிசுகள் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் இடையே வாரிசு உரிமையால் போர் மூண்டது. இதை பயன்படுத்தி டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி படைத்தளபதி மாலிக்காபூர் மதுரையில் படையெடுத்ததை தொடர்ந்து பாண்டியர்களின் ஆட்சி முடிவிற்கு வந்தது)

இரண்டாம் யாமம். வைகை ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த மாடத்து படிக்கட்டுகளில் இரண்டு ஊர்க்காவலர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் மெலிந்த தேகவாகுடன் சராசரிக்குச் சற்றே கூடுதல் உயரமாக இருந்தான். மற்றொருவன் அவனைப் பார்க்கிலும் சற்றே உயரம் குறைந்தவனாக இருந்த போதிலும் ஒரு மல் யுத்தப் போட்டியாளனின் உடல்வாகுடன் காணப்பட்டான். எத்தனையோ மன்னர்களின் சரித்திர சாட்சியாக இருந்த வைகையும் தற்போதைய இளவரசர்களின் வாரிசுச் சண்டையை நினைத்து குழம்பிய மன நிலையில் தனக்கேயுண்டான ஆர்ப்பரிப்பு துளியும் இல்லாமல் ஏதோ ஒரு யோசனையில் அமைதியாகப் பாய்ந்தது கொண்டிருந்தது.

தூரத்தே இரண்டு வணிகர்கள் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். இதைக் கவனித்த காவலர்களில் ஒருவன் வணிகர்களிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான். அதில் ஒரு வணிகன் கையளவு உலர்ந்த இலையில் வரைந்திருந்த அழகிய பெண்ணின் ஓவியத்தை காவலனிடம் காண்பித்தான். தன் மோதிரத்தில் இருக்கும் சிறிய பொரிக்கதவைத் திறந்து தன் காதலியின் சிறிய ஓவியத்தை அதனுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூறினான்.

நாட்டில் நடக்கும் முக்கியமான செய்திகளை இப்படியான ஓவியங்களின் மூலம்தான் ரகசியமாக யாரோ அனுப்பவதாகவும் அதை விசாரிக்கத்தான் தாங்கள் வந்திருப்பதாகவும் காவலர்கள் கூறினார்கள். உடல் வாகுள்ள காவலன் வணிகர்களிடமிருந்து அந்த ஓவியத்தை வாங்கி சிறிது நேரம் அதையே உற்றுப்பார்த்தான். அதில் ஒரு பெண்ணின் ஓவியத்தைத் தவிற வேறெதுவும் காவலர்களுக்குப் புலப்படவில்லை.

வணிகர்களிடம் அந்த ஓவியத்தைப் பெற்றுக்கொண்ட காவலர்கள் தலைமைச் சேனாதிபதியிடமிருந்து தங்களுக்குக் கிடைக்கப் போகும் சன்மானத்தை நினைத்துக்கொண்டே வைகைக் கரையில் உற்சாகமாகப் பேசிக்கொண்டே நடந்தார்கள், அப்போது உடல் வாகுள்ள அந்தக் காவலன் ஒரு சிறிய கல் இடறி தலை குப்புற கீழே விழுந்தான். அவனுடைய கால் கட்டைவிரலிலிருந்து குருதி கொப்பளித்து வழிந்தது. வலது கையால் வழியும் குருதியைத் துடைக்க, தெறித்து சிதறிய குருதி இடது கையில் அவன் வைத்திருக்கும் ஓவியத்தில் பட்டது. சிறிது நேரத்தில் அந்த அழகிய பெண் மறைந்து எழுத்துக்கள் தோன்ற ஆரம்பித்தது.

  கடம்பவனமும் பற்றியெறியும்

  காவேரியும் கைவிடும்

  ரங்கனும் உன் துணைக்கு வாரான்”

ஓவியத்தில் இந்த மாற்றத்தைக் கவனிக்காத காவலர்கள் அதை தலைப்பாகயில் சொறுகி வைத்துக்கொண்டு அரண்மனையை நோக்கி வேகமாக நடந்தார்கள், வணிகர்களும் ஓவியன் தங்களுக்குப் பணித்த வேலையை செய்து முடித்த திருப்தியில் அந்தணர்கள் வேடத்துக்கு மாறி ஊர் எல்லையில் இருக்கும் பாண்டி கோயிலை நோக்கி போகத் தயாரானார்கள்.

தலைமைச் சேனாதிபதி காவலர்கள் கொடுத்த அந்த ஓவியத்துடன் மன்னன் குலசேகரபாண்டியனைக் காண அரண்மனைக்கு வந்தார். மன்னரிடம் ஓவியத்தின் பின்புலத்தில் மறைந்திருந்த எழுத்துக்களைக் காட்டினார். அதை ஆழ்ந்து படித்த அரசர் “ சேனாதிபதி, இந்த ஓவியனையா தாங்கள் சந்தேகப்பட்டு தேடிக்கொண்டிருந்தீர்கள். இவன் நிச்சயம் ஒரு கட்டியக்காரனாகத்தான் இருக்கவேண்டும். சகோதர யுத்தமும் தொடங்கப்போகிறது. அதனால் மதுரையும் அழியப் போகிறது. அப்போது ஆட்சியைக் காப்பாற்ற ரெங்கநாதனும் உதவிக்கு வர மாட்டான் என்பதைத் தான் மறைமுகமாக கூறியிருக்கிறான். அந்த ஓவியனை எங்கிருந்தாலும் சகல மரியாதையுடன் என்னிடம் அழைத்துவாருங்கள்” என்று ஆணையிட்டார். உடனே சேனாதிபதி “நம் ஒற்றர்களில் ஒருவன் ஊர் எல்லையில் இருக்கும் பாண்டி கோயிலில் அவனை பார்த்ததாக செய்தி கொண்டு வந்திருக்கிறான். விரைவில் அவனை தங்களிடம் அழைத்து வருகிறேன் மன்னா” என்று வாக்களித்து அரசரிடம் இருந்து விடைபெற்றார்.

குலசேகரபாண்டியன் மகன்களின் தலைமைப் போட்டி குறித்தான தடுமாற்றத்தில் இருந்தார். மெல்லிய தயக்கம் இழையோட அரண்மனைப் பூங்காவில் நடந்துகொண்டிருந்தார். மனதை சலனப்பட வைக்காத மாலை மயங்கும் நேரம். இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல் அந்தப் பொழுதில் தடாகத்தில் பூத்திருந்த அல்லிகள் புது மணப் பெண்ணின் முகம் போல வெளிறிய மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது. பூங்கா முழுவதும் தாய்ப் பறவைகளைத் தேடும் குஞ்சுகளின் மெல்லிய தொடர் இரைச்சல். காய்ந்த ஆலிலைகள் காற்றிற்கு ஒரு இடத்தில் குவிவதும், மீண்டும் கலைவதுமாக இருந்தது. அப்போது கண்ணிற்கெதிரே மரத்திலிருந்து உதிராமால் இருந்த ஒரு காய்ந்த இலையில் வரைந்திருந்த ஓவியம் மன்னரின் கவனத்தை ஈர்த்தது. இது நிச்சயம் அந்த கட்டியக்காரனின் வேலைதான் என்று அவனைத் தேடி பார்வையை சுற்றிலும் சுழலவிட்டார். அந்த இலையைப் பறித்து தடாகத்து நீரில் நனைக்க அவர் நினைத்தது போல இந்த முறை எழுத்துக்கள் முகிழ்க்கவில்லை. அதற்குப் பதிலாக அலங்கார சிம்மாசனம் தீப்பற்றி எரிவதுபோல வேறொரு ஓவியம் தெரிந்தது.

குலசேகர பாண்டியன் இருக்கையில் அமர்ந்து அந்த ஓவியத்தையே உற்றுப் பார்த்தார். அப்போது அந்த ஓவியன் அரசரின் முன் பணிவுடன் நின்றான். தன்னுடன் சேனாதிபதியை அரசர் எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்த ஓவியன் “தாங்கள் சேனாதிபதியை எதிர்பார்க்காதீர்கள் மன்னா. அவர் என்னை பாண்டி கோயிலில் தேடிக்கொண்டிருக்கிறார். ஒற்றனாக வந்து என் இருப்பிடத்தை அவரிடம் கூறியதே நான்தான்” என்று கூறி அரசரின் பதிலிற்காகக் காத்திருந்தான். இதைக் கேட்ட அரசர் “முதலில் ஓவியன், பிறகு கட்டியக்காரன், ஒற்றன். இப்போது யாராய் வந்திருக்கிறாய்?” என்று கேட்டு சிரித்துக்கொண்டே ஓவியனை தன் எதிரில் இருக்கும் இருக்கையில் அமரச் சொன்னார். சிறிது நேரம் கண்களை மூடி தியானித்த ஓவியன் கட்டியம் கூற ஆரம்பித்தான்.

என் பாண்டி துணைக்கு வந்து

என்னிடம் அனைத்தும் கூறுவான்

சப்த கன்னிகைகளின் மேல் ஆணை.

சத்திய வாக்கிது.

கொல்லம் கொண்ட பாண்டிய மன்னனின்

வருங்காலம் இனி நான் உரைப்பேன்

 

தாதிக்கு பிறந்தவன் அரியணையேற

பட்டத்து வாரிசு தீராத பகைகொள்வான்.

பழியும் தீர்ப்பான்.

அவனே தந்தையின் குருதி ஈரம் காயுமுன்

அரியணையேறுவான்.

ஆட்சியையும் மீட்டெடுப்பான்.

சகோதரர்களின் பகையும் தொடரும்.

இடையே இணக்கமும் தோன்றும்.

மானார் பெருமான் துணைக்கு வர

மீண்டும் வீரனும் அரியணையைக் கைப்பற்ற

மீண்டும் ஓர் பகை எழும்.

பகை மறந்து மீண்டும் ஒன்று கூட வள்ளாளனும் வருவான்.

மீண்டும் ஒரு மாற்றான் போர் தொடுப்பான்.

வீரனும் தலைமறைவாவான்.

சுந்தரனும் சிறைகொள்வான்.

மாற்றானுடன் செல்வங்களும் போம்.

உடன் யானைகளும் குதிரைகளும் போம்

கட்டியக்காரன் கூறியது போல ஒவ்வொன்றாக அனைத்தும் பாண்டிய நாட்டில் நடந்தேறியது. குலசேகர பாண்டியனுக்கு சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் என்று இரண்டு புதல்வர்கள். சுந்தரபாண்டியன் பட்டத்து இளவரசிக்குப் பிறந்தவன். வீரபாண்டியன் தாதிக்குப் பிறந்தவன். தந்தையின் ஆட்சிகாலம் முழுவதும் இருவரும் இளவரசர்களாக ஆட்சி புரிந்து வந்தனர். முதலில் வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினார்கள். ஐந்து வருடங்களுக்குப் பிறகே சுந்தரபாண்டியன் இளவரசானான். திறமை, அரசியல் அறிவு, வீரம் என்று அனைத்திலும் சிறந்த வீர பாண்டியனே தன் அரியணை வாரிசாக வரவேண்டும் என குலசேகர பாண்டியனும் ஆசைப்பட்டான். அதற்கேற்ப வீரபாண்டியனும் அரியணையேறினான்.

இதை அறிந்த சுந்தர பாண்டியன் வெகுண்டெழுந்தான். தன் தந்தை எடுத்த முடிவில் தன் நிலை மறந்தான். வீரபாண்டியன் மேலும் தீரா பகை கொண்டான். தன் தந்தை தனக்கிழைத்த துரோகத்தை நினைத்து பழி தீர்க்க திட்டம் தீட்டி சரியான தருணத்திற்காகக் காத்திருந்தான்.

சுந்தரபாண்டியன் தந்தையை கொலை செய்தான். மன்னராக மதுரையில் முடிசூடிக்கொண்டான். அரசபதவிக்காக சுந்தரபாண்டியனிற்கும் வீரபாண்டியனிற்கும் ஏற்பட்ட இந்தப் பொறாமையும், பகையுமே பாண்டிய நாட்டின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமானது.

இருவருக்குமான முதல் யுத்தத்தில் வீரபாண்டியனுக்கு ஆதரவாக குலசேகரத் தேவரின் மகள் வயிற்றுப் பேரனும் கரூர் பகுதிக்குத் தலைவனுமான “மானார் பெருமான்” உதவி புரிய வீரபாண்டியன் மீண்டும் அரியணையேறினான். இதை அறிந்த சுந்தர பாண்டியனோ வேறு விதமாக வியூகம் ஒன்றை அமைத்தான்..

எந்த நேரத்திலும் மாலிக் கபூர் தன் படைகளுடன் தமிழக எல்லைக்குள் நுழைவான் என்ற எண்ணிய ஹொய்சாள மன்னன் வள்ளால தேவன் பாண்டிய சகோதரர்களுக்குள் சமாதான ஏற்பட முயற்சித்து வெற்றியும் கண்டான். வீரபாண்டியன் வீரத்தலவாய்புரத்தையும், சுந்தர பாண்டியன் மதுரையையும் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தார்கள். அதே சமயம் சகோதரர்களிடையே சமாதானத்திற்கும் ஒற்றுமைக்கும் காரணமான வள்ளால தேவன் மாலிக் கபூரிடன் தோற்று, மாலிக்கின் படைகள் பாண்டிய நாட்டிற்குள் நுழைவதற்கு வழிகாட்டினான்.

முதலில் வீரத்தலவாய்புரம் சுல்தான் படையினரிடம் வீழ்ந்தது. வீரபாண்டியன் தலைமறைவானான். சுல்தான் படைகள் மதுரையை நோக்கிப் புறப்பட்டது. சுந்தரபாண்டியன் சுல்தான் படையை எதிர்க்க வீர்பாண்டியன் மதுரையிலிருந்து கொண்டே தற்காப்புப் நடவடிக்கைகளில் ஈடுபட சகோதரர்களுக்குள் ஒப்பந்தம் ஏற்பட்டது. சுந்தரபாண்டியனின் படைகள் மேலைத் திருக்காட்டுப்பள்ளி வரை வெற்றிகரமாக முன்னேறியது. கோடைக்காலத்தின் மத்திய பகுதி. விரைவில் படைவீரர்கள் களைப்படைந்தார்கள். சுந்தரபாண்டியனின் படைவீரர்கள் போரில் முன்பு போல ஆர்வம் காட்டாமல் தாகத்துடன் நீர்த்தடாகங்களை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள். காவிரியிலும் தண்ணீர் இல்லாமல் சுடு மணல் மேடாக இருந்தது. இதை முன் கூட்டியே அறிந்த சுல்தான் படையினர்கள் தண்ணீரை தேவைக்கு அளாவாக சிக்கனமாக உபயோகித்தார்கள். சுந்தரரின் படைகள் இலக்கை விட்டு காவிரியின் மேற்கு திசை நோக்கி பயணமானது. இறுதியில் மாலிக் கபூரின் படைகள் திருச்சிராப்பள்ளியில் சுந்தரபாண்டியனின் படைகளை எதிர்கொண்டது. பாண்டியர்களின் படை வீழ்ந்தது. சுந்தரபாண்டியனைத் தவிற படைவீரர்கள், தளபதிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன. சுந்தரபாண்டியன் சிறை பிடிக்கப்பட்டான். மாலிக்கபூரின் படைகளை இனிமேல் தனியாக எதிர்கொள்ள இயலாது என்று எண்ணிய வீரபாண்டியன் பாதுகாப்பு கருதி பெண்களையும், குழந்தைகளையும் மதுரையிலிருந்து மலையாள தேசத்திற்கு அனுப்பினான். மதுரை சுல்தான் படையினறால் சூறையாடப்பட்டது.

சுந்தரபாண்டியனின் மாமா விக்கிரம பாண்டியன் தன்னிடம் இருக்கும் மறவர் படைகளை வைத்துக்கொண்டு திடீர் தக்குதல்களால் சுல்தான் படைகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தினான். போரும் தொடர்ந்தது.

ஒரு காலகட்டத்தில் மாலிக்கபூர் மேற்கொண்டு போரினைத் தொடரமுடியாததால் வீரபாண்டியனுடன் ஒரு ஒப்பந்ததிற்கு உடன்பட்டான். அந்த உடன்படிக்கையின்படி வீரபாண்டியன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிற்கு சொந்தமான 9000 மொடக்கு பொற்காசுகளையும், விலைமதிப்பில்லா நவரத்தினங்களையும் சுல்தானுக்கு அளிக்க வேண்டும். அத்துடன் மதுரையில் இருக்கும் உணவுப்பொருட்களில் பாதியை சுல்தான் படையினர்க்குக் கொடுக்கவேண்டும். அதன்படி அனைத்தையும் பெற்றுக்கொண்ட சுல்தான் மதுரையை விட்டு இறுதியாக 612 யானைகளுடனும், 20,000 குதிரைகளுடனும் டெல்லிக்குப் புறப்பட்டான். அதற்குப் பதிலாக சுந்தரபாண்டியன் மீட்கப்பட்டான். மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் சுல்தான் படையினரால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டது.

மாலிக் கபூர் படை மதுரையை விட்டுச் சென்ற பின் பாண்டிய சகோதரர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. மீண்டும் சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் போட்டி போட்டுக் கொண்டு சிறிது காலம் ஆண்டனர். பாண்டிய நாட்டில் எங்கும் குழப்பம் மலிந்திருந்தது. இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு திருவாங்கூர் பகுதியை ஆண்டு வந்த சேரமன்னன் இரவிவர்மன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். பல பகுதிகளைக் கைப்பற்றினான். ஒரு காலத்தில் தொண்டை மண்டலம் வரை பரவியிருந்த பாண்டியர்களின் ஆதிக்கம் இறுதியில் சேரனால் ஒடுக்கப்பட்டது.

தன் கண்முன்னே பாண்டியநாடு அழிவதைக் காணப் பொறுக்காமல் கட்டியக்காரன் தொலைதூர தீர்த்த யாத்திரைக்குச் சென்றதாக பாண்டி கோயில் பூசாரி கூறினான். பல வருடங்கள் கழித்து ஒரு சிலர் அவனை வீரத்தலவாய்புரத்தில் பார்த்தாகவும் மற்றும் சிலர் மதுரையில் பார்த்ததாகவும் கூறினார்கள். வருடங்கள் பல கடந்து மூப்பெய்தும் காலத்தில் அவன் மீண்டும் மதுரை மாநகருக்குள் வந்தான். யாருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை. ஒரு கல்மண்டபத்தைத் தேர்ந்தெடுத்து அங்கேயே சில நாட்கள் தங்கினான். அப்போது ஒரு நாள் கல்மண்டபத்திற்கு வந்த அந்த இளைஞன் ஓவியனை தான் சிறுவயதில் பார்த்ததாகக் கூறினான். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த இளைஞனின் வேண்டுகோளிற்கிணங்க நீண்ட நாட்கள் கழித்து ஓவியன் தூரிகையை கையில் எடுத்தான். வெகு நேரம் யோசித்த பிறகு நடுங்கும் விரல்களால் வரைய ஆரம்பித்தான். அவனுடைய கண் முன்னே சப்த கன்னிகளும் தோன்றினார்கள். இறப்பிற்கு சற்று முன் அவன் வரைந்த அந்த கடைசி ஓவியத்தில் வைகை மணலில் பாதி புதைந்த மன்னரின் கிரீடம் இறக்கைகளை விரித்து பறப்பதைப் போல வரைந்திருந்தான்.

- பிரேம பிரபா

Pin It