நாட்டுப்புற மக்களின் ஓர்மையும், வரலாற்று ஆவணங்களே எனும் இக்கட்டுரையானது நாட்டுப்புற வழக்காறுகள் எவ்வாறு வாய்மொழி வரலாற்றிற்கு ஆதாரங்களாகக் கொள்ள முடியும் என்ற முறை­யியல் சார்ந்த கேள்வியை முன்வைத்து, மாற்று ஆய்வு வரலாற்று முறையியல் அணுகுமுறையில் வாய்மொழி வரலாற்றின் முக்கியத்துவத்தையும் பேசுகின்றது. முறையியலில் ஏற்படுகின்ற சிக்கல்களும் அவற்றிற்கான தீர்வுகளும் கட்டுரையில் விவாதிக்கப்படுகின்றன. மேலும் இங்கு நாட்டுப்புற மக்கள், ஓர்மையின் வெளிப்பாடாக இருந்து வரும் வழக்காறுகள், அவர்களின் வாய்மொழி மரபு போன்றவை குறித்த தெளிவினைக் காணவும் இக்கட்டுரை முயற்சிக்கின்றது.

வாய்மொழி வரலாற்று அணுகுமுறை

வாய்மொழி வரலாறு மக்களைத் தான் வரலாற்றின் மையத்துக்குக் கொண்டு வருகின்றது. மரபாக எழுதப்பட்ட வரலாற்றின் மையத்தில் இராஜா, இராணி, மந்திரிகள் போன்றவர்கள்தான் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். மேலும் ஓவியர்கள், படைத்தளபதிகள், மதகுருமார்கள்தான் வரலாற்றின் மையத்தில் இருக்கிறார்கள். வாய்மொழி வரலாற்று முறையானது மக்களை வரலாற்றின் மையத்துக்குக் கொண்டு வருவதாகும். அவ்வாறு செய்யும்போதுதான் வாய்மொழி மரபை வரலாற்று வரைவியல் மற்றும் இலக்கியமும் தனது ஆய்வு முறையியலில் அதற்கென்று உரிய இடத்தை அளிக்கிறது.

village women 593வாய்மொழி வரலாறு என்பது ஒரு மாற்று வரலாற்று முறையியல், நாட்டார் வரலாறு என்பதனை பற்றிக் கூறும்போது முதலில் நாட்டார் வழக்காறுகள் என்ன என்பதை நாம் வரையறை செய்யவேண்டும். பண்பாடு என்பதற்கும் உண்மையாகன வரையறை வேண்டும். சமூக முரண்பாடுகள், தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள் போன்றவைகளையும் எழுதுவதுதான் உண்மையான வரலாறாக இருக்க முடியும். இங்கு மாற்று வரலாறு என்று சொல்வதெல்லாம் உழைக்கும் மக்களின் வரலாறு. அடிமைப்படுத்துகிறவர்களுக்கு ஒரு வரலாறு இருந்தால் அடிமைப்பட்டவர்களுக்கு ஒரு வரலாறு இருக்கும். இவை அனைத்திலும் அரசியல், சமூக, பொருளாதார தாக்கங்களும் மக்களிடத்தும் வரலாறு எழுதுவதென்பது நிகழ்கிறது. வாய்மொழியாகப் பெறப்படும் தகவல்களால் எழுதப்பட்ட வரலாற்றின் குறைபாடுகளை வெளிக்கொணர முடியும்.

உதாரணமாக ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒன்றான பின்லாந்திலும் நாட்டார் மரபுகள் ஒரு தேசிய அடையாளத்தை வெளிக்காட்டியது (Kalevala: The National Epic of Finland). அதே போன்று பழம்மரபுமிக்க, சிறப்புமிக்க ஒவ்வொரு வட்டாரங்களின் (அ) குழுக்களின் வரலாற்றினை மறுகட்டமைப்பு செய்வதற்கு இந்த நாட்டார் வரலாறு அல்லது வாய்மொழி வரலாறு ஒரு மரபான வரலாற்றின் குறைபாட்டிற்கு மாற்றான ஒரு வரலாறாக அமைகின்றது.

வாய்மொழி வரலாற்றிற்கான ஆதாரங்கள்

வாய்மொழி மரபுதான் ஆதாரம். ஆனால் அதுமட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. நாட்டார் அருங்காட்சியகப் பொருட்கள், மேலும் மக்கள் வரலாற்றைப் பேசும் நூல்களிலேயே பேசப்பட்ட தரவுகள் ஏராளம் உள்ளன. பல ஆவணங்களை எழுதப்பட்ட வரலாற்றில் கொண்டுவரப் படவில்லை. உதாரணமாக கிறித்தவ சபையினுடைய ஆவணங்களைக் குறிப்பிடலாம். கிறித்தவ சபை ஆவணங்களினை சமயம் சார்ந்த ஆவணங்கள் என்று பெரும்பாலும் ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு அச்சமயம் சார்ந்த ஆவணங்கள் குறிப்பிடும் நபர்கள், அம்மக்கள் சமயம் மாறியதன் பின்னணி என்று பார்க்கும்பொழுது பெரும்பாலும் அவர்கள் அனைவரும் அடித்தள மக்களாகத்தான் இருப்பர். அடித்தள மக்களுக்கும், அதிகார நிலைக்கும் உள்ள உறவு இதுபோன்ற ஆவணங்களை ஆய்வு செய்யும் போது வெளிக்கொண்டு வர முடியும்.              

புழங்கு பொருட்கள் என்பதை நாம் பொருட்களாக மட்டும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, பொருட்கள் எப்படி உற்பத்தி செய்யப்பட்டன, விநியோகிக்கப்பட்டன, உற்பத்தியாளனுக்கும் பொருளுக்கும் உள்ள உறவு எப்படி இருந்தது, இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுதுதான் முழுமையான வரலாறாக இருக்கும். ஆடை முறைகள் என்று வரும் பொழுது சங்க காலத்திலேயும் ஆடை அணிந்தார்கள். அரசர்கள் காலத்திலும் ஆடை அணிந்தார்கள், ஆங்கில ஆட்சி வந்த பிறகும் ஆடை அணிந்தார்கள். ஆகவே, தமிழர்களின் ஆடை வரலாறு என்பது அது மட்டுமல்ல. சங்க காலத்தில் எப்படி உற்பத்தி செய்யப்பட்டது. அரசர்கள் காலத்தில் எப்படி உற்பத்தி செய்யப்பட்டது. வீட்டிலேயே தறியை வைத்து நெய்தார்கள். அதனைப் போய் சந்தைப் படுத்தினார்கள். உற்பத்தியாளனுக்கு உற்பத்தி செய்யும் அந்தக் கருவிமேல் உரிமை இருந்தது. விநியோகம் செய்யும் உரிமையும் இருந்தது.

விநியோகம் செய்யும் உரிமை வரும் பட்சத்தில் விலை நிர்ணயம் செய்யும் உரிமையும் இயல்பாகவே வருகிறது. உதாரணமாக, எத்தகைய பண்டமாற்று வைத்துக்கொள்ள வேண்டும், எவ்வளவு நெல்லுக்கு இந்த ஆடைகளைத் தரணும் என்ற நிலையும் இத்தனை பானைக்கு இந்த ஆடைகளை மாற்று தரவேண்டும் என்ற முடிவெடுக்கும் அதிகாரம் என்பது உற்பத்தியாளனுக்கு இருக்கின்றது. இன்று ஆடைகள் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. எட்டுமணி நேர வேலைதான். உழைப்புக்கு மட்டுமே ஊதியம் கிடைக்குது. சந்தைப்படுத்தும் உரிமை என்பது இல்லை. உற்பத்திக்கருவி உழைப்பவருக்குச் சொந்தம் இல்லை. உற்பத்தி செய்பவனுக்கும் அந்த பொருளுக்குமுள்ள உறவு உற்பத்திக்கருவியின் மீது இருக்கக்கூடிய உரிமை, விலை நிர்ணயம் செய்யும் உரிமை போன்றவைகளெல்லாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விசயமாக உள்ளது. ஆய்வுகளும் இவ்வாறு மேற்கொள்ளப் படவேண்டும். மேற்கூறிய காரணிகளை உள்வாங்கி வரலாற்றில் மன்னர்களுக்கிடையே நடைபெற்ற போர்களைப் பற்றிப் படிக்கிறோம். ஆனால் மக்கள் பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் ஏராளம் அரங்கேறியிருக்கின்றன. அவற்றினை யாரும் அதிகாரப்பூர்வமாக எழுதவில்லை. ஆங்காங்கே வட்டார, சமுதாயப் பிரதியாக மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

நாட்டார் வரலாறு (அ) வாய்மொழி வரலாறு என்று சொல்லும் போது அதில் ஒரு குழுவின் பங்களிப்பு இருப்பதனைக் காணமுடியும். இன்னுமோர் உதாரணமாக, வாய்மொழி வரலாற்றில் தரவுகள் சேகரிக்கும் முறையைக் குறிப்பிட வேண்டுமென்றால், ஒரு தொழிற்சாலை தோன்றினது, அழிந்தது அல்லது ஒரு படையெடுப்பு நடந்தது என்பன இதுபோன்ற நிகழ்வுகளை மக்களின் வாய்மொழி மரபிலிருந்து சேகரிப்பது ஆகும். நன்றாகச் சொல்லுவதென்றால் வாய்மொழி வரலாறு என்பது சமூக அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆய்வாளர்களால் மாற்று வரலாற்று முறையியலில் பயன்படுத்தும் சொல்லாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு குழுவின் தோற்றம் குறித்தும், சாதியின் இடப்பெயர்ச்சி குறித்தும், புராணங்களும், கதைகளும் நாட்டார் வரலாற்றுக்கு வலு சேர்க்கிறது. அதுமட்டுமில்லாது உலகில் வாழும் அனைத்து இனக்குழுக்களும் தாங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பதற்கான கதைகளையும் வைத்துள்ளார்கள். சாதியின் இடப்பெயர்ச்சி, ஒரு சில சாதிகள் சில பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கிறது. இவை அனைத்தும் இன வரலாற்றிற்கான அடிப்படைத் தரவுகளாகக் கொள்ள முடியும்.

சாதிகளின் இடப் பெயர்ச்சியை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்போது பின்புலமாகத் தெரியவருவது பாலியல் கொடுமைகள், வேலைக்காக ஓரிடம் விட்டு ஓரிடம் வந்தவர்கள், வறுமை காரணமாக பிழைப்புத் தேடி வந்தவர்கள் என்றும் காரணங்கள் அதிகமாக இருப்பதனைக் காணமுடியும். இதனை நாடார்களின் தோற்றக்கதைகளை குறிப்பிடும் வெங்கலராசன் கதையும் அது குறித்தப் பதிவுகளைக் கொண்டுள்ளது. மேலும், வாய்மொழி வரலாறு என்பது குறிப்பிட்ட சாதிகளுக்கான வரலாறு என்று மட்டும் சொல்லிவிட முடியாது. வாய்மொழியாகக் கூறியது என்பது ஒரு சில சாதிகளாக இருக்கலாமே தவிர, வாய்மொழி வரலாறு என்பது சாதி வரலாற்றினைத் தேடும் முயற்சி என்று சொல்வதாய் இருக்க முடியாது.

நாட்டுப்புற மக்களின் ஓர்மை பல்வகைப்பட்டது. உதாரணமாக ஒரு தொழிலை செய்யமாட்டோம், இன்னொரு தொழிலைத் தேர்ந்தெடுப்போம் என்பதிலும்; அரசு விதித்த வரியினால்

ஓரிடத்திலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்வது என்பதும் இடம்பெயர்தல் குறித்த ஓர்மைகளைக் குழுவினரிடம் காண முடியும். இடப்பெயர்ச்சி என்பதை ஒரு குழுவினர் இன்னொரு குழுவினை ஒடுக்கியதால்தான் நடக்கிறது என்று பொதுவிதியாகக் கூறிவிட முடியாது. பகைமையை இன்னொருவர் ஏற்படுத்தி வைத்திருப்பர். இந்தப் பகைமை யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதனை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் நமது நாட்டில் ஏராளமான மதமாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பெருந்திரளாக மக்கள் தங்களின் சமயம் மாறிய நிகழ்வும் வரலாற்றிலும் சரி அது குறித்தப் பதிவுகள் மக்கள் மரபில் பாடலாகவும், கலை வெளிப்பாடாகவும் கிடைக்கின்றன.

வாய்மொழி வரலாறு காட்டும் அடையாளம்

சமூகத்தில் அடித்தட்டு, விளிம்பு நிலையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் மரபுகளும் வாய்மொழி வரலாற்றிற்கான ஆதாரங்களாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பொருளாதார நிலை – சாதி – பாலியல் நிலை போன்ற நிலைகளில் தாழ்ந்திருப்பவர்கள் அடித்தள மக்கள் என அழைக்கப்படுகிறார்கள் (ஆ. சிவசுப்பிரமணியன்: 2016). ஓரிடத்தில் ஆதிக்க சாதியாக இருக்கும் குழு இன்னொரு இடத்தில் அடிமையாக இருக்கும். உதாரணமாக நாடார் சமூகத்தில் நிலைமைக்காரர், நாடான் பட்டம் உள்ளவர்களெல்லாம் அடக்கு முறைக்கு ஆளாகாமல் இருந்துள்ளார்கள். சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்துள்ளார்கள் (S. ராமச்சந்திரன் & A. கணேசன்: 2010). பனை விவசாயிகள் பெரும்பாலோனோர் இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துள்ளார்கள். தென் திருவிதாங்கூரில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டத்தின் பின்னணியில் உள்ளவற்றை ஆராய்ந்தோமென்றால் மேற்கூறிய சொத்துரிமை உடைய நாடார்களைத் தவிர பனைத் தொழிலாளர்கள் வீட்டுப் பெண்களுக்கு தோள்சீலை அணியத் தடை இருந்தது. ஒரு இனக்குழு ஒரு வட்டாரத்தில் ஒரு சமூக அந்தஸ்தினையும், இன்னொரு வட்டாரத்தில் வேறு அந்தஸ்தினையும் கொண்டிருந்தது என்பதற்கு மேற்கூறப்பட்ட தரவினை உதாரணமாகக் கொள்ளலாம்.

பொதுவாக வரலாறு என்று ஆதாரங்களைத் தேடும்பொழுது மக்களின் சமூக நிலை குறித்த பதிவு மிகவும் அவசியமான ஒன்று. சமூக நிலை என்றால் கலை, பண்பாடு போன்றவைகளையும் பேசுகின்றது. ஆடை அணிகலன்கள், உணவு முறைகள், சமயம் போன்ற காரணிகள் மிக முக்கியமானதாக மாறுகின்றது. அதோடு மட்டுமல்லாமல், மக்களின் சமூக நீதிக்காக வேண்டி நடத்தியப் போராட்டங்கள் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட இழிவான கட்டுப்பாடுகள், இழிவான வேலைகள், ஊதியம் இல்லாமல் வேலை செய்வது (வெட்டி வேலை) வெட்டி வேலை செய்யவில்லை என்றால் தண்டனை. இதற்கு ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிடும் களப்பணித் தரவுகள் பொருத்தமானதாக இருக்கும். “கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்திலிருந்து ஒரு குழு உப்பை விளைவித்து நாகர்கோயிலிலுள்ள நாகராசர் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில்களுக்கு தரவேண்டும். அவ்வாறு உப்புக் கொண்டு போகவில்லை என்றால் தண்டனை உண்டு. இது அரசர் காலத்தில் இருந்த நிலைமை. ஆகவே அம்மக்கள் கிறித்தவர்களாய் மாறிவிட்டார்கள் என்றால் ஞாயிற்றுக்கிழமை ஊழிய வேலைக்குப் போக வேண்டிய தேவையில்லை. கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் வேலைசெய்ய விதிவிலக்கு. அதனாலேயே ஏராளமானோர் கிறித்தவர்களாக மதம் மாறிய வரலாறு உண்டு" (ஆ. சிவசுப்பிரமணியன்: 2009). ஆக வாய்மொழி வரலாறு என்று சொல்லும்போது மக்களின் கலை, பண்பாடு சார்ந்தவைகள்தான் என்று சொல்லிக் கொடுக்கப்பட வேண்டுமென்றில்லை. ஒவ்வொன்றிற்கும் உள்ள தொடர்பின் விளக்கத்தைப் பதிவு செய்வதும் வாய்மொழி மரபினை ஆவணப்படுத்துவதாகும்.

பொருள்சார் பண்பாடும், வரலாறும்

 பொருள்சார் பண்பாடு என்று சொல்லும்போது பொருளை படைக்கிறது மட்டுமல்ல. பயன்படுத்துபவரும் அதில் அடங்குவர். உப்பு தயாரிப்பில் எடுத்துக்காட்டாகக் கூறுவதென்றால் பழைய முறையில் பாத்திகட்டி ஏற்றம் போட்டு இறைத்ததும் பொருள் சார் பண்பாட்டிற்குள் தான் வருகின்றது. உப்பினைப் பயன்படுத்துவோரும் அதே பொருள் சார்ந்த பண்பாட்டிற்குள்தான் வருகிறார்கள் (ஆ. சிவசுப்பிரமணியன்: 2009). அதைப் போலவே வண்ணார்கள் பற்றி அறியும் போது நம்முடைய பாரம்பரிய சலவைத் தொழில் பற்றி அறிந்து கொள்ளமுடியும். அந்தக் காலத்தில் அழுக்கைப் போக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருள்கள், குறிகள் இடுதல், துணிகளை அடையாளம் காணுவதற்காக பயன்படுத்திய பொருள்கள், மேலும் வெள்ளாவி போடுவது குறித்துப் பேசுவது அனைத்திலுமே இந்தப் புழங்கு பொருட்களுக்குள்ளும் அது சார்ந்த பண்பாட்டிற்குள்ளும் உள்ளன. வாய்மொழி வரலாறு எழுதும் பொழுது இவர்களுக்கும் (வண்ணார்) வெளுப்பதற்காக துணி தருகிறவர்களுக்கும் உள்ள சமூக உறவுகள் குறித்து ஆராய வேண்டியுள்ளது. இன்று கூலி தருவது போன்று அன்று ஒரு துணிக்கு இவ்வளவு தொகை என்று தருவது கிடையாது. அதற்குப் பூ-க்கு (ஒரு பருவத்திற்கு என்று பொருள்) இவ்வளவு நெல் என்றுதான் பேசப்படும். புஞ்சைகளாக இருந்தால் வருடத்திற்கு ஒரு முறை தானியம் தருவார்கள்.

ஆகவே, வாய்மொழி வரலாறு எனும் இந்த மாற்று வரலாற்று முறையியலால்தான் அதனைச் செய்ய முடியும். ஓர் இடத்திலிருந்து பல்வேறு வகையான, வியாபாரப் பரவல்கள், கலாச்சார பரவல்கள், யுத்தக்காரணத்தினால் பல்வேறு இடத்திற்கு மக்கள் பரவும்போது அவர்கள் கூடவே வழக்காறுகளும், வாய்மொழிகளும் கூடவே வருகிறது. இனக்குழு வரலாறு அல்லது நாட்டார் வரலாறு என்பதெல்லாம் மக்களின் வாழ்வாதாரம், கலாச்சார, பண்பாட்டுப் பிரதிபலிப்பினை பதிவு செய்யும் வரலாற்று முறையியலாக உள்ளது. அது பண்பாட்டை பிரதிபலிக்கும் கலாச்சார சிறப்பு மிக்க மக்களையும், ஒடுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட மக்களின் வரலாறாகவும் இருக்க முடியும். அடித்தள, விளிம்பு நிலை மக்களினை நாட்டார் வரலாறு என்ற மாற்று வரலாற்று விளக்க முறையினால் விழிப்புணர்வை ஏற்படுத்திவிட முடியும்.

தலைமுறைகளின் வரிசைப்பாடும் (Family Lineage) வாய்மொழி வரலாற்றில் ஆதாரமாகவும் ஏற்றுக் கொள்ள முடியும்.

பார்வை நூற்கள்

அ.கா.பெருமாள், சுண்ணாம்பு கேட்ட இசக்கி, சென்னை: தமிழினி

ஆ.சிவசுப்பிரமணியன் (2009), உப்பிட்டவரை, நாகர்கோயில்: காலச்சுவடு (2010),

வரலாறும் வழக்காறும், நாகர்கோயில்: காலச்சுவடு (2010),

தமிழகத்தில் அடிமைமுறை, நாகர்கோயில்: காலச்சுவடு (2011),

கிறித்தவமும் சாதியும், நாகர்கோயில்: காலச்சுவடு (2016),

பனைமரமே பனைமரமே: பனையும் தமிழ்ச் சமூகமும், நாகர்கோயில்: காலச்சுவடு (2016),

அடித்தள மக்கள் வரலாறு, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ச. பிலவேந்திரன் (பதி.) (2004),

சனங்களும் வரலாறும்: சொல் மரபின் மடக்குகளில் உறையும் வரலாறுகள், புதுவை: வல்லினம் டி. தருமராஜ் (பதி.) (2006),

சனங்களின் சாமிகள், பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் ஞா.ஸ்டீபன் (தொ.), (2009),

பண்பாட்டு வேர்களைத் தேடி, பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் ஞா. ஸ்டீபன் (2009),

தமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள், பாவை பப்ளிகேஷன்ஸ் நாகேஸ்வரி அண்ணாமலை (2016),

ஐந்து தலைமுறை நாடார் பெண்கள், அடையாளம் பதிப்பகம்

பூமணி(2012),அஞ்ஞாடி, சென்னை: கிரியா பதிப்பகம்

பொன்னீலன் (2009), மறுபக்கம், சென்னை: நியு செஞ்சுரி புக் ஹவுஸ்

Anthony Good, (March 1981), “Prescription, Preference and Practice: Marriage Patterns among the Kondaiyankottai Maravars of South India”, in Man New Series, Vol. 16, No.1 Mar.1981. Pp.108-129

Jan Vansina (1985), Oral Tradition as History, University of Wisconsin Press Nicholas B. Dirks (1993),

The Hollow Crown: Ethnohistory of an Indian Kingdom, Ann Arbor: University of Michigan Press Thomas A. Green (1997)


 Folklore: An Encyclopedia of Beliefs, Customs, Tales, Music and Arts, B: Santa Barbara Alan Dundes (1996)

Essays in Folklore Theory and Method, Chennai: Cre-ASivasundari Bose (2006), Golden Stag, Mosaic Press

- முனைவர் சி.ஜஸ்டின் செல்வராஜ், உதவிப் பேராசிரியர், தலைவர், நுண்கலைகள் மற்றும் அழகியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

Pin It