நாட்டில் பொது மக்கள் நம்பிக்கை இழந்து நிற்கின்றார்கள். அவர்களுக்கு இந்தத் தேர்தல் எந்த உற்சாகத்தையும் வழங்கவில்லை. அவர்களின் உதடுகள் தொடர்ச்சியாக ஒன்றை உச்சரித்தபடியே இருக்கின்றன, “எப்படி இருந்தாலும் மீண்டும் மோடி ஆட்சியைப் பிடித்து விடுவார், இந்தத் தேர்தல் எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு கண்துடைப்பு நாடகம்” என்று. ஏன் அவர்கள் இவ்வாறு விரக்தியில் பேசுகின்றார்கள் என்பது இன்று அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர்கள் மோடியின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட ஒன்று என்று உறுதியாக நம்புவதற்கு முக்கிய காரணம் வாக்குப் பதிவு இயந்திரங்களின் மேல் இருக்கும் நம்பிக்கையின்மைதான். மேலும் இந்த முறை மோடி ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்தியாவில் தேர்தல் என்ற ஒன்றே நடக்காது என்றும், இந்தியா மீளமுடியாத நரகத்தின் புதைக்குழிக்குள் தள்ளப்பட்டு விடும் என்றும் மிரட்சியுடன் மக்கள் இருக்கின்றார்கள். மோடியின் ஐந்துவருட பாசிச ஆட்சியை நேரடியாக அனுபவித்த அவர்கள், அதன் தாக்கம் இன்னும் குறையாமல் நடுக்கத்தோடே இருக்கின்றார்கள்.

evm and vvpatமோடியை ஜனநாயக முறையில் ஓட்டுப் போட்டு, தோற்கடிக்க முடியுமென்று மக்களிடம் நம்பிக்கையின்மை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் என்றால், மற்றொரு காரணம் அதை வைத்து தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடும் தான். இன்று இந்திய மக்களால் மிகக் கேவலமாக கேலி செய்யப்பட்டு, வெறுக்கப்படும் ஓர் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியிருக்கின்றது. அதன் நடவடிக்கைகள், செயல்பாடுகள் அனைத்தும் ஒரு தேர்ந்த மக்கள் விரோத பாசிசக் கட்டமைப்பை ஒத்ததாகவே இருக்கின்றது.

தொடர்சியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது நம்பகமின்மையை எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தினாலும், தேர்தல் ஆணையம் அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கின்றது. தேர்தல் ஆணையம் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சிகள் கேட்டது போல, 50 சதவீத வாக்குகளுடன் ஒப்புகை சீட்டுகளை சரி பார்க்க ஒத்துக் கொள்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? அப்படி சரி பார்த்து முடிவுகள் வெளியிட 6 நாட்கள் தாமதமாகும் என்பதெல்லாம் கவைக்குதவாத வாதங்கள் ஆகும். எதிர்க்கட்சிகள் 6 நாட்கள் ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லும்போது யாருக்காக அத்தனை அவசர அவரசரமாக முடிவுகள் அறிவிக்க வேண்டும்?

நாடு முழுவதும் 7 கட்டங்களாக வெவ்வேறு தேதிகளில் தேர்தல் நடத்தி ஒரு மாதத்திற்கு மேல் காக்க வைத்து முடிவுகளை வெளியிடும் தேர்தல் ஆணையம், இன்னும் ஒரு ஆறு நாட்கள் தாமதிப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. குறைந்தபட்சம் 25 சதவீத ஓட்டுக்களையாவது விவிபாட் இயந்திரங்களுடன் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட ஏற்க மறுப்பது என்பது தேர்தல் ஆணையம் மோடியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்படுவதை உறுதிப்படுத்துகின்றது.

நாட்டின் மிக உயரிய நீதி அமைப்பாக கருதப்படும் உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்தின் இந்த அடாவடித்தனமான போக்கிற்கு ஆதரவு தரும் வகையில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து, ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கு வெறும் 5 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை மட்டும் அதாவது 2 சதவீதம் மட்டும் விவிபாட் உடன் சரிபார்க்க உத்திரவிட்டுள்ளது. ஆளுங்கட்சியின் கைக்கூலி அமைப்புகள் போன்றுதான் தொடர்ச்சியாக தேர்தல் ஆணையமும் செயல்பட்டு வருகின்றது. யாருக்கு ஓட்டளித்தளித்தாலும் இயந்திரத்தில் பிஜேபிக்கே ஓட்டளித்ததாக காட்டுவதாக பரவலாக இந்தியா முழுவதும் சர்ச்சை எழுந்த பிறகே இந்த விவிபாட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சாலைகளிலும், ஹோட்டல்களிலும், அரசியல்வாதிகளின் வீடுகளிலும் சர்வ சாதாரணமாக கண்டெடுக்கப்படும்போது தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை பல்லிளிக்கின்றது.

தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி கோவையில் இருந்து 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சம்மந்தமே இல்லாமல் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை அனைத்தும் பதிவு செய்யப்படாத வாக்குப் பதிவு இயந்திரங்கள் என தேர்தல் ஆணையம் சொன்னாலும், அதைத் தேர்தல் ஆணையம் நிரூபிக்கவில்லை. இதற்குப் பின்னால் மிகப் பெரிய சதி இருப்பதகாவும், அந்தச் சதியை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் துணைபோவதாகவுமே எதிர்க்கட்சிகள் குற்றம் சாற்றுகின்றன.

மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையினுள் மூன்றடுக்கு பாதுகாப்பைக் கடந்து தேர்தல் அலுவலர் சம்பூர்ணம் அத்துமீறி நுழைந்து மூன்று மணி நேரம் உள்ளே என்ன செய்து கொண்டிருந்தார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இதை எல்லாம் பார்க்கும் சாதாரண மக்கள் இந்தத் தேர்தல் ஆணையமே திட்டமிட்டு இது போன்ற அற்பத்தனமான செயல்களைச் செய்வதாக ஏன் நினைக்க மாட்டார்கள்? ஆளும் பாசிச பிஜேபி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெற வைக்க தேர்தல் ஆணையம் முயல்வதாக எழும் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பது போலத்தான் அதன் செயல்பாடுகள் உள்ளன. இந்தியாவில் மீண்டும் பார்ப்பன பாசிசத்தை நிலைநிறுத்தும் வேலையைத்தான் தேர்தல் ஆணையம் செய்து வருகின்றது.

பவுத்த மதத்தை இந்தியாவில் வேர்கொள்ளச் செய்து, பார்ப்பனியத்தின் மேலாண்மையை கேள்விக்குள்ளாக்கிய மெளரியர்களின் ஆட்சியை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து, மீண்டும் பார்ப்பனியத்தை நிலை நிறுத்தினான் புஷ்யமித்தர சுங்கன். அவனது ஆட்சியில் தான் மனுஸ்மிருதி இயற்றப்பட்டு, அது இந்திய மக்கள் மீது அரசின் துணையுடன் வன்முறையாகத் திணிக்கப்பட்டது. அதன் பிறகு பல நூற்றாண்டுகளை இந்தியா கடந்து வந்து விட்டாலும் பார்ப்பனியம் இன்னும் வீரியமாக இருப்பதற்குக் காரணம் பார்ப்பனியத்தை நிலைநாட்ட காலந்தோறும் புஷ்யமித்தர சுங்கன்கள் தோன்றிக்கொண்டே இருப்பதுதான்.

தேர்தல் முறையில் தமக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய இந்தியாவில் புஷ்யமித்தர சுங்கன்களின் பணி மிக எளிமையாக மாறியிருக்கின்றது. அவர்கள் பெரும் படையெடுத்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்றுதான் பார்ப்பனியத்தின் மேலாண்மையைத் தக்க வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அந்தத் திருப்பணியைச் செய்வதற்கென்றே தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதனிடம் அந்தப் பணி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலைப் போல இதுவரை வேறு எந்தத் தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் இவ்வளவு மோசமாக நடந்துகொண்டது கிடையாது. இப்படி வெட்கக்கேடான முறையில் ஒரு தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலை நடத்தாமலேயே இருக்கலாம். ஒரு வேளை இந்தத் தேர்தலில் பாசிச பிஜேபி வெற்றி பெற்றதென்றால் அதற்கு முக்கிய காரணம் தேர்தல் ஆணையமும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும்தான்.

தேர்தல் ஆணையம், உச்ச நீதி மன்றம் என அனைத்து அரசு உறுப்புகளுமே பார்ப்பன பாசிசத்தை நிலைநாட்டவே இயங்கி வருவதாக தொடர்ச்சியாக இந்த ஜனநாயகத்தைக் கூர்மையாக அவதானித்து விமர்சனம் செய்யும் இடதுசாரிகள் கூறி வருகின்றார்கள். இனி அவர்கள் மட்டும் அல்லாமல் இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள சாமானிய மக்களில் இருந்து முதலாளித்துவ அறிவுஜீவிகள் வரை அதையே சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். இனி எப்படியும் இந்த நாட்டை ஒரு ஜனநாயக நாடு என்று சொல்வதற்குரிய வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலையை பிஜேபியும் அதற்குத் துணை போகும் அரசு உறுப்புகளும் உருவாக்கி விட்டன. நாடு ஒரு மோசமான காலகட்டத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது.

- செ.கார்கி