தாராள மயம், தனியார் மயம், உலகமயம் எனப் புவிப்பரப்பைப் பற்றியுள்ள இந்த முப்பெரும் நோய்கள் மக்களின் பொருளியல் வாழ்வை மட்டுமல்ல, அரசியல் அன்பியல் கொடைகளாய் மானிடர்க்கு வாய்த்த இயற்கை யின் அழகியலையே சீரழிக்கக் கூடியவை என அறிவியல் அறிஞர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அஞ்சுகின்றனர்.
புவியில் துருவப் பனிப்பரப்பின் அடியில் மீத்தேன் போன்ற பல்வேறு வாயுக்கள் சிக்கியுள்ளன. புவி வெப்பம் மிகுந்து வருவதால் பனி மலைகள் உருகுகின்றன. கூடவே இத்தகைய பசுங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் நிறை கின்றன. இதனால் வெப்பநிலை மேலும் உயர்ந்து பல்வேறு தாவர இனங்கள் அழியத் தொடங்கியுள்ளன. உலகளாவிய வெப்பநிலை 3 பாகை செல்சியஸ் உயருமானால் உலகி லுள்ள காடுகளில் பாதிக்கும்மேல் அழிந்து சிதையும். துருவப் பகுதிகளின் பனிமலைகள் உருகி மூழ்குவதால் உலகளாவிய கடல் பரப்பு ஏறக்குறைய 5 மீட்டர் உயர்ந்துவிடும். கடலின் நீர்த்தன்மை அமிலமாகி அவை சிப்பி, நத்தை போன்ற வற்றின் ஓடுகளையே அரித்துவிடும். திமிங்கலம், சீல், வால்ரஸ் போன்ற மீனினங்களுக்கும் பெருங்கேடு நேரும் என அறிவியலாளர் எச்சரிக்கின்றனர்.
கடல் பரப்புக்கு மேலே வெப்பச் சலனம் ஏற்பட்டுச் சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்து பெருங்காடுகள் அழியவும் வாய்ப்புள்ளது என்றும் சுற்றுச் சூழலியலார்கள் அஞ்சுகின்றனர். காடுகள் அழிவு தொடங்கு வதற்கு முன்பே நாடுகளைச் சுற்றியுள்ள நடவுக் கழனிகளின் அழிவு நம்மைச் சுற்றியும் நடந்துகொண்டுள்ளது.
‘காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - என
மேவிய ஆறு பலஓட - திரு
மேனி செழித்த தமிழ்நாடு’
என்று தமிழ்நாட்டின் ஆற்றுநீர் வளத்தை வியந்து பாடினார், பாரதியார். நலங்குன்றி நாடு சிறுத்தாலும், வளங்குன்றா வள்ளல்தன்மை மிக்கிருந்த காவிரியாறு இன்று வறண்ட பாலைவனம் போல் மாறி வருகிறது. அந்நியர்கள் ஆட்சி அளவற்ற நம் இயற்கை வளங்களைக் கொள்ளை கொண்டு போனது. விடுதலை பெற்றதாய்ச் சொல்லப்பட்ட போதும் நம் மக்களின் வாழ்வில் விடிவில்லை.
காவிரி ஆறு தாய்ப்பாலாய்ப் பெருகிக் கழனிகளைச் செழிப்பாக்குகிறது. காவிரிப்படுகை விலைமதிப்பற்ற எண் ணெய் வளங்களைத் தன் மடியில் கொண்டுள்ளது. 1958 ஆம் ஆண்டில்தான் காவிரிப்படுகையில் கச்சா எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டு முதல் நடுவண் அரசால் இங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டன. 1984ஆம் ஆண்டு முதல் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) இந்த இடத்தில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நிலத்தடியில் சுமார் 7000 அடிமுதல் 9000 அடி (ஏறத்தாழ 2.5 கி.மீ.) வரை நிலங்களைத் தொளையிட்டு, அங்கு நீர்மநிலையில் தேங்கியுள்ள கச்சா எண்ணெய், அதன்மேல் அழுத்த நிலையில் ஆங்காங்கே தேங்கியுள்ள எரிவாயு ஆகியவை மரபான முறையில் எடுக்கப்படுகின்றன.
இதன்பின், இதே காவிரிப் படுகையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வரையான 667 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில், நிலத்தின் மேல் அடுக்கில் சுமார் 500 அடி முதல் 1600 அடி வரை படர்ந்துள்ள நிலக்கரிப் பாறைப் படிமங் களுக்கு இடையில், நீரின் அழுத்தத்தால் பெருமளவில் மீத்தேன் எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலக்கரிப் படுகை மீத்தேன் (Coal Bed of Methane - CBM) வாயுவை எடுப்பதற்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, நிலக்கரிப் படிமங்களிடையே உள்ள நீரை வெளியேற்றினால் மீத்தேன் வாயு தன்னெழுச்சியாய் மேலே வரும்.
ஆனால் இதில் சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேடு தோன்றும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இதிலிருந்து வெளிப்படும் நீர் அதிக உப்பு மற்றும் திண்ம உலோகங்களைக் கொண்டிருப்ப தால், ஆறுகள், வாய்க்கால்கள், வயல்களில் இவை கலந்தால் விளை நிலங்கள் முற்றிலுமாய்ப் பாழாகும். நிலத்தடி நீர் மட்டமும் பெருமளவில் குறையும்; நீர் வெளியேற்றப்பட்ட வெற்றிடத்தில், கடல்நீர் உள்ளே புகுந்துவிடும். இதனால் நிலைமை மேலும் மோசம் அடையும். இவற்றையெல்லாம் முற்றிலுமாய் உய்த்துணர்ந்துகொண்ட தஞ்சை மற்றும் காவிரிப்படுகையின் வேளாண் பெருமக்களும், இயற்கை ஆர்வலர்களும் கடுமையான அறவழிப் போராட்டங்கள் நடத்தக் களம் புகுந்தார்கள்.
இந்தியாவை அந்நிய நாட்டானுக்கு விற்கும் அடிமைத் தனம் இராசிவ்காந்தி ஆட்சியிலிருந்த போதே தொடங்கி விட்டது. மன்மோகன் காலத்தில் அது பட்டொளி வீசிப் பறந்தது. இப்போதைய நிலையைச் சொல்லவே வேண்டாம். காவிரிப்படுகையின் வளங்களைக் கொள்ளையிட அப்போ தைய மன்மோகன் அரசு கிரேட் ஈஸ்டர்ன் எனெர்ஜி கார்ப் பொரேஷன் (ஜிஇஇசிஎல்) என்கிற பன்னாட்டுத் தனியார் நிறுவனத்துடன் 29.7.2010இலேயே ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. முந்தைய தி.மு.க. அரசும் 2011 சனவரி முதல் நாளே நான்காண்டுக்கான உரிமத்தையும் அதற்கு வழங்கிற்று.
29.12.2011 அன்று தஞ்சையில் பேரணியாய்த் திரண்ட உழவர் பெருமக்கள் இத்திட்டத்திற்கான பேரெதிர்ப்பைப் பதிவு செய்தனர். உழவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் கடும் போராட்டங்களையும் மீறி 12.09.12 அன்று நடுவண் அரசு இத்திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழையும் வழங்கிட்டது.
ஜிஇசிசிஎல் நிறுவனமும், நடுவண் அரசின் ஓஎன்ஜிசி நிறுவனமும் இணைந்து காவிரிப் படுகையில் மீத்தேன் ஆய்வுக் கிணறுகளைத் தோண்டுவதைத் தடுத்து, அப்பகுதி உழவர் அமைப்புகள் அவற்றின் கட்டுமானப் பணிகளை உடைத்தெறியும் போராட்டத்தில் இறங்கின. இப்பணிகளுக் குத் தடைவிதிக்கக்கோரி உழவர் அமைப்புப் போராளி பி.ஆர். பாண்டியன் என்பவர் தமிழ்நாடு பசுமைத் தீர்ப்பாயத் தில் வழக்குத் தொடர்ந்தார். அப்போது ஓஎன்ஜிசி நிறுவனம் “நாங்கள் காவிரிப்படுகையில் மீத்தேன் எடுக்கும் பணி எதிலும் ஈடுபடவில்லை. மரபுசார் எண்ணெய், எரிவாயு எடுப் பதற்கான ஆய்வுப் பணிகளில்தான் ஈடுபட்டு வருகிறோம்” என்று பச்சையாய்ப் புளுகியது.
அடுத்த சில நாள்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தைச் சேர்ந்த வ. சேதுராமன் என்பவர் காவிரிப் படுகையில் பாறை எரிவாயு (ஷேல் கேஸ்) எடுக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத் தின் திட்டம் குறித்த விவரங்களைத் தக்க சான்றுகளுடன் வெளியிட்டார். மீத்தேன் திட்டத்தால் நேரும் கேடுகளையும், ஜிஇஇசிஎல் நிறுவனம் மீண்டும் மீத்தேன் எடுக்க இசைவு கோரி விடுத்துள்ள விண்ணப்பச் சான்றுகளையும் அவர் தான் வெளிக்கொண்டு வந்தார்.
பேரெழுச்சியோடு நடைபெற்ற மக்கள் போராட்டங்களை அடுத்துப் புதிதாக ஆட்சிக்குவந்த ‘ஜெ’ அரசு 8.10.2013 அன்று மீத்தேன் எரிவாயு எடுப்புத் திட்டத்திற்குத் தடை விதித்தது. அதுவரை அங்கு நடந்துள்ள பணிகள் பற்றி ஆராய வல்லுநர் குழு ஒன்றையும் அமைத்தது. தற்போது அந்த வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுத் தமிழக அரசு மீத்தேன் திட்டத்துக்கு நிலையாகத் தடை விதித் துள்ளது.
தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழுவின் பரிந்துரை யில் பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன :
“மிகப்பெரிய அளவிலான நிலத்தடி நீர் வெளியேற்றம் நடந்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகு ஆழத் துக்குக் கொண்டு செல்ல நேரிடும், ஆழ்துளைக் கிணறுகளின் கூட்டுத் தொகுதி குறுக்கும் நெடுக்குமாய்ச் செல்வதால், இப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் அழகிய இயற்கை அமைப்பும் மாறக்கூடும்.
ஐ.நா. அவையின் வளர்ச்சித் திட்டப் பிரிவு, இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் எடுப்பதால் உண்டாகும் நில அமைப்பியல் மாற்றத்தால் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தாக ஆய்வு செய்து தெரிவித்துள்ளது. மீத்தேன் வாயுக் கசிவு, நச்சு வாயு வெளியேற்றம், அப்பகுதியில் வளிமண்டல வெப்ப நிலை மாற்றத்தை ஏற்படுத்தும். மழை அளவு குறைவதற் கும் வாய்ப்புகள் உண்டு.
மீத்தேன் வாயு எடுக்கப்பட்ட பின்னர், இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கிணறுகளைத் தூர்க் கவோ, மீண்டும் பயன்படுத்தவோ முடியாது. வாயு கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்படும் வாயுக் கசிவு, அதனால் ஏற்படும் பெருவெடிப்பு இப்பகுதியில் உள்ள மக்களின் உயிர், உடைமை மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற் படுத்தும் அபாயம் உள்ளது. மீத்தேன் கிணறு அமைய வுள்ள 4.266 ஏக்கரில் உற்பத்திச் செய்யப்படும் அரிசி 2.77 இலட்சம் மக்களுக்கு உணவளிக்க வல்லது என்கிற உண்மை இத்திட்டத்தால் விளையும் கேட்டைத் தெளிவாய் உணர்த்துகிறது.
மேற்கண்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மன்னார்குடி வட்டாரத்தில் தொடங்கப்படவுள்ள நிலக்கரிப் படுகை மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை நிராகரிக்கலாம் அல்லது மறுஆய்வு செய்யலாம்” (தி இந்து (தமிழ்) நாளேடு, 13.10.2015, பக்.8).
வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்றுத் தமிழக அரசு மீத்தேன் திட்டத்திற்கு நிலையாக விதித்துள்ள தடையைத் தமிழ்மக்கள் அனைவரும் வரவேற்றுப் பாராட்டக் கடமைப் பட்டுள்ளனர்.
இங்கு இன்னொரு செய்தியையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. மீத்தேன் எடுப்புத் திட்டத்தைவிடப் பன்மடங்கு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது-எண்ணற்ற உயிர்களை ஒருநொடியில் பறிக்கக்கூடியது கூடங்குளம் அணுஉலைத் திட்டமாகும். கூடங்குளத்தில் அணுஉலை கூடாது எனப் பெரும்பான்மைத் தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது சங்கரன்கோயில் சட்டப் பேரவை இடைத்தேர்தலை எதிர்கொண்டிருந்த இன்றைய முதல மைச்சர் ‘உங்களில் ஒருத்தியாக நான் இருந்து அத்திட்டத்தை எதிர்ப்பேன்’ என்றார். ஆனால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன், காவல்துறையினரை ஏவிப், போராடிய மக் களைக் கடுமையாக ஒடுக்கினார். இப்போதும் நம் முதல மைச்சர் இன்னும் ஐந்தாறு மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். அவர் வெற்றி, தோல்வி மீத்தேன் எதிர்ப்புத் திட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத் தக் கூடாது என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
மீத்தேன் எடுப்புத் திட்டத்தில் நடுவண் அரசு இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்களைப் போலக் குறுக்கும் நெடுக்குமான ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் (ஒரு இலட்சம் கிலோ மீட்டர் நீளம்) கொண்டதும், அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடியதுமான காவிரிச் சமவெளியில் இந்தக் கழிவு களைத் தேக்கி வைப்பதும் பராமரிப்பதும் சாத்தியமற்ற ஒன்றாகும், காவிரி டெல்டா பகுதி முழுவதும் இப்பணிக்காக நாள்தோறும் இயக்கப்படும் ஆயிரக்கணக்கான கனரக ஊர்திகள் அப்பகுதியின் உயிர்ப்பன்மைச் சூழலையே தரை மட்டமாக்கிவிடும். நாடாளுமன்றத்தில் ஜிஇஇசிஎல் நிறுவனத் துடன் ஆன ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படும் எனப் பெட்ரோ லியத்துறை அமைச்சர் அறிவித்துப் பல மாதங்கள் ஆகியும் ஒப்பந்தம் இன்றும் உயிர்ப்புடனேயே உள்ளது.
மீத்தேன் திட்டத்தால் நிலப்பகுதி மட்டும் கெட்டழியப் போவதில்லை. புதுச்சேரி, தரங்கம்பாடி, நாகை, தஞ்சை, மன்னார் வளைகுடாவை ஒட்டிய அரிய வகை மீனினங்கள், வெளி மான்கள், டால்பின்கள், கடல் பசுக்கள், ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும், பவழப்பாறைகளும் தாவரங்களும் அழிந்துவிடும் பேராபத்து உள்ளது. இவற்றுக் கெல்லாம் ஒரே மாற்று மலையரண் போன்ற மக்கள் எழுச்சி யும் போராட்டமுமே ஆகும். கடல் போலும் எழுவோம்; கயவர்களைப் புறங்காண்போம்!
(கட்டுரை அமையத் துணை செய்தவை : 1.‘காவிரி டெல்டா மீது கவியும் கருநிழல்’ - சி. கதிரவன் எழுதியுள்ள கட்டுரை, தி இந்து (தமிழ்) நாளேடு, 27.9.2015. 2. மீத்தேன் - குழம்பிய குட்டையாகத் தமிழகம் - மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு - கடலூர் மாவட்டம்; அறிக்கை.)