ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கடிதத்தை முன் வைத்து...

 
Albert Einsteinஎடின்பெர்க் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த டேவிட் புர்தி என்பார், உலகப் புகழ் பெற்ற இயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதமொன்றை அண்மையில் கண்டடைந்துள்ளார். அந்தக் கடிதத்தில், 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்காட்லாந்து தத்துவ அறிஞர் ’டேவிட் ஹும்’-யின் மெய்யியல் சிந்தனைகள், தனது ‘சிறப்புச் சார்பியல் கொள்கைகளை’ உருவாக்க எத்தகைய முக்கியப் பங்கினை வகித்தது என்பது பற்றி ஐன்ஸ்டீன் குறிப்பிட்டிருப்பதாக டேவிட் புர்தி தனது ஆய்வுக் குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

மெய்யியல் அறிஞர் டேவிட் ஹியூம் எழுதியுள்ள ”A Treatise of Human Nature” (மனிதர்களின் இயல்புகளைப் பற்றியும் அவர்களது குணாதிசயங்களுக்கான காரணங்களைப் பற்றிய மெய்யியல் ஆய்வு), படைப்புகளை நான் படிக்காமல் போயிருந்தால், “சிறப்பு சார்பியல் கொள்கைகளை உருவாக்குவதில் நான் எதிர்கொண்ட சிக்கல்களுக்கான தீர்வுகள் வந்திருக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது” என்று அந்தக் கடிதத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதியிருக்கின்றார்.

 ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நன்கறிந்த வரலாற்றாய்வாளர்கள் மெய்யியலாளர் ஹூமின் சிந்தனைகள், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளை உருவாக்குவதில் செலுத்திய பங்களிப்புகளைப் பற்றியும், அந்தக் கடிதத்தினைப் பற்றியும் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளனர்.

 டேவிட் ஹூம் மட்டுமின்றி எர்னெஸ்ட் மேக் முதல் ஆர்தர் சோப்பென்ஹவர் வரை ஏனைய மெய்யியல் அறிஞர்களின் படைப்புகளும் சிந்தனைகளும் ஐன்ஸ்டீனின் இயற்பியல் கோட்பாட்டு உருவாக்கங்களில் செலுத்திய தாக்கத்தினைப் பற்றியும் அவரது வரலாற்றினை ஆய்ந்த அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டறிந்த தனித்துவமிக்க அறிவியல் கோட்பாடுகளை,(special theory of relativity, general theory of relativity) அவர் கொண்டிருந்த மெய்யியல் சிந்தனைகள் தான் வடிவமைத்திருக்கின்றன என்ற அந்த உள்சூட்சுமக் கதையினை அவர்களுள் பலரும் ஒப்புக்கொள்கின்றனர்.

தத்துவங்களுக்கும், தாங்கள் மேற்கொள்ளும் அறிவியல் ஆய்வுப் பணிகளுக்கும் ஏதும் தொடர்பில்லை என்று கருதி தத்துவங்களைத் தவிர்ப்பதும் வெறுப்பதுமான போக்கு, இன்றைய அறிவியல் அறிஞர்களிடையேயும் காணப்படுகின்ற ஒரு வழக்கமாக இருந்து வருகின்றது.

”இயற்பியலிலும் கணிதவியலிலும் கொண்டாடப்பட்ட பெருமைமிகு கண்டுப்பிடுப்புகளின் வெற்றிகளோடு ஒப்பிடும்போது, தத்துவ அறிஞர்களின் உள்ளொளி ஞானம் என்பது இருண்மைமிக்கதாகவும், காரண காரியத் தொடர்புகள் அற்றதாகவும் உள்ளன” என்று நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீவன் வெயின்பெர்க் கூறுவதிலிருந்து அறிவியல் அறிஞர்கள் தத்துவங்களை எப்படிப் பார்த்தார்கள் என்பதனைப் புரிந்துகொள்ள முடியும்.

மெய்யியலின் பெருமதிப்பினை புறக்கணிப்பதும்கூட ஒரு தத்துவஞான உரிமைக் கோரிக்கையே என்பது தான் இதில் உள்ள நகைமுரண். அறிவியல் ஆய்வுகள் எவ்வாறு செய்து முடிக்கப்பட வேண்டும் என்பது பற்றியயும், அறிவியல் ஆய்வுமுறைகளின் மீது அவர்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத உறுதியான நிலைப்பாடுகளும் கூட ஒரு மெய்யியல் நிலைப்பாடுதான்.

 அறிவியல் என்பது செயல் ஆய்வுகளின் வழி பெறப்படும் உண்மைகளும், தரவுகளும் மட்டுமல்ல. நாம் கேட்கும் வினாக்கள், அந்த வினாக்களுக்கு விடை காண நாம் மேற்கொள்ளும் வழிமுறைகள், உண்மைகளை சூத்திரங்களாக உட்பொருத்தி, அவற்றின் மீது பல கணிதச் செயல்பாடுகளை நடத்தி, அவற்றின் வழி புதிய முடிவுகளை, சமன்பாடுகளை (the process of derivation of equation) எட்டுவதற்கான கருத்தியல் வகைப்பட்ட வரைவுக் கட்டமைப்புகள் என எல்லாமே அறிவியல் தான்.

 அண்டத்தின் கால-வெளி பற்றிய ஆய்வுகளைச் செய்தாலும் சரி, அல்லது மனிதர்களின் இயல்புகளைப் பற்றிய உளவியல் ஆய்வுகளைச் செய்தாலும் சரி, அவற்றில் சரியான தீர்வுகளை எட்டுவதற்கு தத்துவம் சார்ந்தும் அறிவியல் ஆய்வுமுறைகள் சார்ந்தும் அந்ததந்தத் துறை அறிவியல் அறிஞர்கள் சிந்திக்க வேண்டும்.

Albert Einstein letter”கருத்தியல் வகைப்பட்ட பகுப்பாய்வுகள், ஐயங்களின் மீது கவனத்தைச் செலுத்துதல், சரியான முடிவுகளை வெளிப்படுத்துவதில் துல்லியத் தன்மை, நேர்த்தியான வாதங்களில் ஆங்காங்கு காணப்படும் சில இடைவெளிகளை குறைக்கும் திறன், உண்மைக்கு நெருக்கமான புதிய பார்வைகளையும், வழிமுறைகளையும் உருவாக்குதல், கருத்தியல் ரீதியாக வலுவில்லாதவைகளை சுட்டிக் காட்டுதல், மாற்று விளக்கங்களைத் தேடுதல் போன்ற தத்துவவியல் கூறுகள், அறிவியலை வழிநடத்திச் செல்கின்றன.” என்று இயற்பியல் அறிஞர் கார்லோ ரோவெல்லி கூறுகிறார்.

மேற்கண்ட இதே கருத்தினை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வார்த்தைகளில் கூறுவதென்றால்,

”வரலாற்றினைப் போலவும், அறிவியல் தத்துவங்களைப் போலவும் அறிவியலில் பின்பற்றப்படும் ஆய்வியல் வழிமுறைகளின் கல்வியியல் சார்ந்த மதிப்பினையும் அதன் முக்கியத்துவத்தையும் நான் உணர்ந்திருக்கின்றேன்.

என்னைப் போன்ற துறைசார்ந்த அறிவியல் வல்லுநர்களில் பலரும், இன்றைய நாளில் அறிவியல் வழிமுறைகளைப் பொருத்தமட்டில் ’ஆயிரம் மரங்கள் இருப்பதாகக் காண்கிறார்களேயன்றி, அங்கே ஒரு காடு இருப்பதாக’ அவர்கள் உணரவில்லை. இயங்கினால், இதுபோன்றதொரு தவறான முற்கருதுகோள்களிலிருந்தும், அதுதரும் கேடான முடிவுகளிலிருந்தும் இன்றைய அறிவியல் விஞ்ஞானிகள் விடுதலை பெற வேண்டுமெனில், அவர்களுக்கு முந்தையை வரலாற்றினையும், அந்த வரலாறு வளர்த்தெடுத்த தத்துவக் கோட்பாடுகளை தனது ஆய்வுப் பின்புலங்களாகவும் கொண்டு இயங்கினால் தான், இன்றைய அறிவியல் அறிஞர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் இந்த ‘அறிவியல் வழிமுறை’ தரும் அவதிகளிலிருந்து விடுபட முடியும். தத்துவ ஞானப் பின்புலம் தரும் இந்த சுதந்திர சிந்தனைப்போக்குதான், ஒரு துறை சார்ந்த நிபுணனுக்கும் (artisan or specilasit), புறநிலையில் காணப்படும் உண்மைகளுக்கு அப்பால் உள்ள உண்மைகளைத் தேடுபவனுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை அடையாளம் காட்டுகின்றது.”

ஒரு துறை சார்ந்த அறிவியல் வல்லுநர்கள் அவர்கள் கண்டறிந்த சில உண்மைகளோடு தங்களை முடித்துக் கொள்கின்றனர். ஆனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் போன்றவர்கள் அவர்களிலிருந்து வேறுபடுகின்றனர். அவர்கள் கண்டறிந்த உண்மைகளோடு மட்டும் நிறைவடைந்து விடுவதில்லை. மாறாக, அந்த உண்மைகளைக் கடந்து நிற்கும் உண்மைகளை கண்டறிய முயல்கின்றனர். இந்தத் தேடலுக்கான பார்வையை அவர் தத்துவத்திலிருந்து எடுத்துக் கொள்கிறார். அறிவியலுக்கு தத்துவச் சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்டு தேடும் அந்த முயற்சியில் தான் மற்ற அறிவியல் அறிஞர்களிடமிருந்து அவர் தனித்தன்மை பெற்று விளங்குகிறார்.

(2019, பிப்ரவரியில் ’தி கார்டியன்’ இதழில் கெனான் மாலிக் என்ற பத்தி எழுத்தாளர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

- ப.பிரபாகரன்