உலகின் அழகு தேசங்களில் ஒன்றான நியூசிலாந்து நாட்டின் கிழக்குக் கரை நகரமான "கிரைஸ்ட்சேர்ச்" முகமதியர்களின் இரத்தத்தால் குளிப்பாட்டப்பட்டிருக்கிறது. முகமதியர்களின் இரண்டு மசூதிகளில் துப்பாக்கிதாரி நடாத்திய கோரத் தாக்குதலில் தொழுகையிலிருந்த அப்பாவிகள் 50 பேர் கொல்லப்பட்டும், பலர் படுகாயமுற்றும் போனார்கள் என்பது மற்றுமொரு வெறும் செய்தியாய் கடந்து விட்டது. இந்தப் பேரவலம் நிகழ்ந்த மார்ச் 15 நியூசிலாந்தின் கரிய நாள் என்கின்றார் அந்நாட்டுப் பிரதமர் அம்மையார் ஜெசிந்தா அவர்கள். 150ற்கு மேற்பட்ட மொழி பேசுகின்ற மதம், சாதி, நிறம், தேசங்கள் என்று எவ்விதப் பாகுபாடுமற்ற கருணையும், பரிவும், கனிவும் வழிந்தோடும் நற்பண்பாளர்கள் வாழும் இத்தேசத்தில் இந்த அனர்த்தம் எதற்காய் நிகழ்ந்தது?

no to terrorismகொலையாளியாய் இனங்காணப்பட்டுள்ள 28 வயது இளைஞர் தான் புரிந்த கொலைகளை நேரடியாகக் காணொளிகளில் 17 நிமிடம்வரை பொதுவெளியில் பரவ விட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன . நியூசிலாந்தின் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சமூகவலை ஊடக நிறுவனங்களால் அந்தக் காணொளியை நிறுத்த முடியவில்லை என்பது சமூக ஊடக வலை நிறுவனங்களின் நம்பகத் தன்மையை, பாதுகாப்பை மீளவும் பலத்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக தன் தேர்தல் பரப்புரையை முடுக்கி விட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களை நேசிக்கும் அக்கொலைகார இளைஞர் குடிவரவாளர்களை மிக வெறுத்தவர் என்பதாக தன் பல பக்க விஞ்ஞாபன செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கனடாவின் கியூபெக் நகரில் இஸ்லாமிய கலாச்சார மையத்தில் 2017ல் இடம்பெற்ற துப்பாக்கிதாரிகளின் கொலைகள் ட்ரம்பின் தேர்தல் பரப்புரையின் பின்னணி என்று பல ஊடகங்கள் அன்று தெரிவித்திருந்தன. பயங்கரவாதத்தை முடுக்கி விடும் அதிகார சக்திகள் பெரு மதிப்புடைய தலைவர்களாகின்றார்கள். அத்தகு தலைவர்களினால் செயல் வடிவில் தூண்டி பயங்கரத்தை நிகழ்த்துவோர் பயங்கரவாதிகள் ஆகின்றனர். இத்தகு பஞ்ச தந்திரமே இன்றைய உலகை ஆள்கின்றது.

பயங்கரவாதம் என்பதற்குச் சரியான வரைவிலக்கணத்தை வரையறை செய்வதென்பது மிகக்கடினமானது. அதற்கான நுட்பமான நிபுணத்துவம் வாய்ந்த வரையறையை யாராலும் இதுவரை செய்ய முடியவில்லை, செய்யவும் முடியாது. பயங்கரவாதத்தை மரபு சாராத போர் அல்லது ஓர் உளவியல் போர் என்று பகுப்பாய்வு செய்கின்ற வாதங்கள் இன்றும் தொடர்கின்றன. இன்றைய உலகில் அதிகம் பேசப்படுகிற சொற் சிலம்பம் இது. வென்றவன் தோற்றவனையும், தோற்றவன் வென்றவனையும் வெறியோடு மாறி மாறி விளிக்கின்ற வீர வாக்கியம் இது. பயங்கரவாதத்தால் தம்மைத் தக்க வைக்க பல அரசுகள் பயங்கரவாதத்தைக் கையில் எடுத்திருக்கின்றன. அரசியல் இயக்கங்கள், மதக்குழுக்கள், மடாதிபதிகள், மாணவர்கள், இடதுசாரிகள், வலது சாரிகள், புரட்சியாளர்கள் என்று சகட்டுமேனிக்குப் பலரும் இந்தப் பயங்கரவாதப் பதத்திற்குள் அடங்கிப் போவது பரிதாபத்திற்குரியது. கொன்றவனும் புனிதனாகிற, கொல்லப்பட்டவனும் புனிதனாகிற சிருங்கார வார்த்தை இது. அரசுகளின் அனுசரணையற்ற, அப்பாவிக் குழுக்களின் நியாயமான போராட்டங்கள் பல சந்தர்பங்களில் பயங்கரவாத முத்திரையோடு அழித்து நிர்மூலமாக்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், போராளிகள், அடிப்படைவாதிகள், புரட்சியாளார்கள், கிளர்ச்சியாளர்கள் என்பனவெல்லாம் பயங்கரவாத மரத்தின் கிளைகளாக இன்று பிரகடனப்படுத்துகின்றார்கள். பயங்கரவாதமென்னும் பெயரில் ஈழத்தமிழர்கள் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல. கொடிய அடக்குமுறைகளினால் நம்பிக்கை பிறழ்தல், ஏமாற்றம், விரக்தி, அநீதி என்று பல காரணங்களினால் தீவிரவாதம் அல்லது புரட்சி தோன்றுகின்றது. அவ்வாறாயின் பலமானவர்களுக்கும் பலவீனமானவர்கட்கும் இடையிலான போராட்டம் தான் பயங்கரவாதமா??

தமது கருத்தையே பிறரும் பேணி நடக்க வேண்டுமென்னும் வன்முறை சார்ந்த அதிகாரம் தான் மற்றவர்களுக்கு அச்சமூட்டுவது. இதுவே பயங்கரவாதத்தின் தோற்றுவாய். இத்தகு அச்ச நிலைமையினுள் அகப்பட்டு நாளும் பொறுத்துப் பொறுத்துப் போகும் ஜீவராசிகள் தங்களால் தாங்க முடியா நிலையில் போராடத் துணிகின்றன. அவை போராடாவிட்டால் வாழ்வில்லை என்பதே புவிசார் விதியாக இருக்கின்றது.

ஒரு மனிதனின் பார்வையில் பயங்கரவாதியாகத் தென்படுபவர், இன்னொரு மனிதனின் பார்வையில் விடுதலைப் போராளியாக, தேசியவாதியாகத் தென்படுவார். சரியாக சொல்லப் போனால் பயங்கரவாதம் என்பது ஓருவர் பார்க்கும் பார்வையில் உள்ள அரசியல் கருத்தேயன்றி வேறல்ல. இந்த வகையில் பலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும் இஸ்ரேல், அமெரிக்காவின் உற்ற தோழனாகவும், நமக்கு பயங்கரவாதியாகவும் தோன்றுவது ஒன்றும் காட்சிப் பிழையல்ல. கடந்த 200 வருடங்களில் அமெரிக்கா செய்த பயங்கரவாதச் செயல்கள் கணக்கிலடங்கா. லட்சக்கணக்கில் அமெரிக்க ஆதிகுடி மக்களை வெளியேற்றினார்கள், கொன்றொழித்தார்கள், நோயும் நஞ்சும் கொடுத்தார்கள், மெக்ஸிகோவைக் கையகப்படுத்தினார்கள். கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவின் பெரும் பகுதிகளில் அழிவும், அட்டூழியமும் ஏற்படுத்தினார்கள். ஹவாய் தீவை பிடித்தடக்கி நவீன அடிமைகள் ஆக்கினார்கள். பிலிப்பைன்ஸ் போரில் 1,00,000-க்கும் மேற்பட்ட பிலிப்பைன்சியர்களைக் கொன்றார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் முழுமையும் சுற்றிப் பெரும் போர் செய்வது அமெரிக்காதான். இந்நிலையில்தான் நிகராகுவாவின் மக்கள் தங்களுக்கு இழைத்த கொடுமைகளுக்காக அமெரிக்காவைத் தலைகுனிய வைத்து உலக நீதிமன்றில் நிற்க வைத்தார்கள். ஆனாலும் இன்றுவரை அவர்கள் பயங்கரவாதிகள் என்று வேற்று நாட்டவர்களையே சொல்லி வருகின்றார்கள். இந்நிலையில்தான் அமெரிக்காவின் வர்த்தக மையக் கட்டிடங்கள் மற்றும் இராணுவத் தலைமையகம் (பென்டகன்) ஆகியன அல்கைதா தீவிரவாதிகளால் மோதி அழிக்கப்பட்டது. இது கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உருவாக்கத்திலிருந்து பிறந்த குழந்தைகளால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுதான். இதற்குப் பிறகு பயங்கரவாதம் என்பதை அமெரிக்கா மிகப்பெரிய பேசுபொருளாக்கியது.

ஜனநாயக அரசுகள் என்று அழைக்கப்படுகின்ற அரசுகள், அரச பயங்கரவாதச் செயல்களைப் புரியும்போது அவற்றைப் பயங்கரவாதம் என்று துணிவாகக் கூறுவதற்கும், மறுத்துரைப்பதற்கும் எவருக்கும் திராணி இல்லாதிருக்கின்றது. அரச பயங்கரவாதப் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்ற கொடிய பயங்கரவாத நாடுகள் தான் இன்றைக்கு மிகப்பெரும் சமாதானவாதிகளாக உலகில் பவனி வருகின்றன. சர்வதேச பயங்கரவாதத்திற்காக உலக நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட மிகப் பெரிய வல்லரசாக அமெரிக்கா இருந்தபோதும், ஈராக், சூடான், சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா என்று மத்திய கிழக்கினைத்தான் தீவிர பயங்கரவாத மையங்கள் என்று உலகம் எப்பொழுதும் அவர்களை நோக்கியே கைகளை உயர்த்துகின்றது. இவ்வாறான கண்துடைப்பு நாடகமே இவ்வுலகின் இன்றைய அரசியல்.

கொள்கை பரப்புச் சாதனங்களை எவன் தன் கையகப்படுத்தி வைத்துள்ளானோ, அவனது கொடுமையும், பயங்கரமும் பெரும்பாலும் பயங்கரவாதமாய் எண்ணப்படுவதில்லை. வன்முறையை ஏவி, பயமூட்டி பலவந்தமாய்க் கீழ்ப்படிய வைக்கின்ற பல அரசுகளின் நடவடிக்கைகள், பல மத நிறுவகங்களின் நடவடிக்கைகள் பயங்கரமாய்க் கொள்ளப்படுவதில்லை. இத்தகு முரண்களுக்கு இடையே தீவிரவாதத்தை உடைத்தெறிந்து சமாதானத்தை உருவாக்கல் என்பது சாத்தியம்தானா என்கின்ற கேள்வி இயல்பானது. இன்றைக்கு மிகப்பூதாகரமாக உருவெடுத்திருக்கின்ற மத தீவிரவாதத்தின் மூலம் எது? மூலகர்த்தா யார்?? பன்னெடுங்காலமாய் பாலஸ்தீனரை விரட்டுகின்ற யூதர்களா? சிலுவை யுத்தங்களை நடாத்தி முடித்திருக்கின்ற கிறிஸ்தவர்களா? சாதிய வர்ணாசிரம சீர்கேட்டால் சமூகத்தைப் பிரித்தழித்த இந்துக்களா?? ஆர்மீனியாவின் மொத்த அஸ்ஸீரிய மக்களையும் தம்மவர்களாக்கிய அராபியர்களா? மனைவியைத் தவிக்க விட்டோடி தான் மட்டும் முத்தி பெறும் பவுத்தமா? அன்பைச் சொரிவதாய் ஏற்படுத்தப்பட்ட அனைத்து மதங்களும் பயங்கரவாதத்தின் முகத்தையே கொண்டுள்ள நிலையில் 'எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர். ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் முஸ்லிம்களே' என்று ஒரு மதத்தை நோக்கி இந்துத்துவ அடிப்படைவாதிகள் கூக்குரல் இடுவது மிகக்கேவலமானது. இந்தியாவில் இந்துத்துவ சாதியக் கட்டமைப்பும், வர்ணாசிரமக் கோட்பாடும் ஏற்படுத்தியுள்ள பயங்கரம் சொல்லும் தரமன்று. தங்கள் தவறுகளைக் கண்டு கொள்ளாது ஒரு மதத்திற்கு மட்டுமே வன்முறை மற்றும் தீவிரவாதம் இந்த உலகில் பொருந்திப் போகிறதென்கிற கருத்தியல் மிக இழிவானது. உலக மக்கள் அனைவரையும் ஒருவர் கொலை செய்ய முற்ப்பட்டாலும் அவன் முஸ்லிமாக இருந்தால் மட்டுமே தீவிரவாதியாக அறிவிக்கின்ற பரிதாபத்தில் இன்று ஊடகங்கள் இயங்குகின்றன.

இப்போதெல்லாம் கையில் துப்பாக்கி, வெடிகுண்டுகள், ஆட்கடத்தல், அச்சுறுத்தல் என்கின்ற எல்லாவற்றையும் தாண்டி அந்தராக்ஸ் மற்றம் விசவாயுக்கள் என உலகின் ஒட்டுமொத்த உயிர்களையும் சில மணி நேரத்தில் உக்கிரத்தோடு அழிக்கின்ற பல நவீன கொலைச்சாதனங்கள் உலா வருகின்ற வேளை இது. நுண்ணுயிரிகள், இராசயன கதிரியக்கப் பொருள்களினால் இவ்வுலகம் இன்று மிக அச்சுறுத்தப்படுகின்றது. சைபர் பயங்கரவாதம், உயிரியல் பயங்கரவாதம், சூழியல் பயங்கரவாதம் என தீவிரவாதம் தொழில் நுட்பங்களோடும் புதுப்புது வார்த்தை ஜாலங்களோடும் வலம் வருகின்றது. என்றுமிலாத வகையில் இன்று சமூக வலை ஊடகங்கள் பயங்கரவாதப் பகலவனாகப் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளன. தீவிரவாத எண்ணங்களை வளர்க்கும் இணையதளங்கள் கண்காணிக்கப்படுவதாகச் சொல்லப் படுகின்றது. ஆயினும் என்ன? இவற்றைத் தடுப்பதற்கும் எதிர்த்துச் சண்டையிடுவதற்குமான தொழில்நுட்ப வல்லமைகள் கூட அருகிப்போன அவல நிலைமை உருவாகியுள்ள அச்சம் தரும் வேளை இது. கலப்படம் செய்கின்ற உள்ளூர் வியாபாரி முதல் உலக வர்த்தகப் பெரு-மையங்கள் அனைத்துமே பயங்கரமானவையாகவே உள்ளன. பொள்ளாச்சி விவகாரமும், சாதிவெறிச் சண்டைகளும், ஆணவக் கொலைகளும், அரசியல் குத்து வெட்டுக்களும், மதம்சார் ஏமாற்றும் இதற்கு விதிவிலக்கல்ல. பயங்கரவாதம் என்பதில் பெரிது சிறிது என்று உண்டா?

அதிகம் பேரைக் கொலை செய்வதன்மூலம் தன் மீது கவனத்தைத் திருப்பி தன்னைப் பயங்கரவாதியாகப் பிரகடனப்படுத்தும் ஒருவன், தன் வீட்டில் இருந்தபடியே உலகை ஆட்டிப் படைக்கும் செயல் திறமை கொண்டவனாக இருக்கின்றான் என்பதில் மகிழ்வதா, கவலையுறுவதா என்பது மிகமிக அச்சம் தரும் ஒரு கேள்வி. அமைதியில் மிகச் சிறந்ததது மன அமைதியாகும். அதை நாம் அறவே இழந்து விடும் அபாயத்தில் உள்ளோம். உலகம் என்றால் இயற்கை, அழகு, பசுமை, உன்னதம் என்றிருந்த கருத்து நிலை மாறி, உலகம் என்பது துப்பாக்கி, குண்டுவெடிப்பு, இரத்தம், கலவரம், ஊரடங்கு, பதற்றம் என்று அச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றோம். நாடுகள் யாவும் ஒன்றோடு ஒன்று "பகைவனுக்கு பகைவன் நண்பன் " என்கின்ற பஞ்ச தந்திரத்தோடும், பகையோடும் பழகுகின்றன. அகதியாக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு, நிர்கதியாக்கப்பட்டு நிற்றலே சாமானியர்களின் கதியாக இன்றைய உலகம் மாறி வருகின்ற அபாயம். எம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்பதை அறிய முடியாதவர்களாக எம்மை வைத்திருப்பதில்தான் பயங்கரவாதம் முழு வெற்றி அடைகின்றது. "இறைவன் கண்ணியப்படுத்தியுள்ள எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொல்ல எவருக்கும் உரிமையில்லை" என்கின்ற குரானின் வார்த்தையைத் தான் நாம் மீளவும் இங்கு நினைவு கூர வேண்டியுள்ளது.

- மா.சித்திவிநாயகம்

Pin It