நுனி நாக்குவரை வந்த கெட்ட வார்த்தையை அடக்கிக் கொண்டு தான் எழுத வேண்டி இருக்கிறது. மிக மன உளைச்சலில்தான் இந்த கட்டுரை இங்கே எழுதப்படுகிறது. முகத்தை மூடிக்கொண்டு மிக கொடூரமாய் கண்களில் மென்மை படர நிற்கும் ஒரு பிறழ் பொழுது தான்..... இங்கே காட்சியாக விரிகிறது. 
 
எது தூண்டுகிறது. எது இப்படி அலைக்கழிக்கிறது....எது இங்கே இத்தனை வன்கலவிகளை சாத்தியப்படுத்துகிறது...!
 
pollachi rapistsஎப்படி மானுட மனம்.. மானுட பரிணாமம்.. மானுட நாகரிகம் காணாமல் போனது. ஆனால் இத்தனைக்கும் பின்னால் ஒரு கூட்டம் எவ்வித பரபரப்பும் இன்றி......இயல்பான தோற்றத்தில் நம்மோடே இத்தனை நாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால்... அது திகில் நிகழ்வுகளின் திட்டமிட்ட சாயல் மனித வேடமேற்றிக்கிறது என்று தான் அர்த்தம். இந்த படுபாதக செயல்களை செய்யும் போது அது பற்றிய குற்ற உணர்ச்சியோ... அதன் பின் விளைவுகள் பற்றிய அச்சமோ... அது சார்ந்த எதிர்கால அச்சுறுத்தலோ எதுவுமே இல்லாமல் "சலீம்" படத்தில் வருவது போல... நாலு சின்ன பசங்க சேர்ந்து இத்தனை வேலைகளை செய்திருக்கிறார்கள் என்றால்.... அது அச்சாணி இல்லாமல் தறிகெட்டு ஓடும் மாட்டு வண்டிகளுக்கு சாத்தியமில்லை. சாட்டை வேறு எங்கோ இருக்கிறது.

மாற்றி மாற்றி எல்லாரும் திட்டி குவிகிறார்கள். விட்டால் அத்தனை பேரையும் கொன்று விடும் மனநிலை தான் பொள்ளாச்சி சம்பவங்களில் நிரம்பி இருக்கிறது. நூற்றுக்கணக்கில் பெண்கள்.. அதில்.. இளவயது.. முதிர்வயது.. திருமணம் ஆனது, ஆகாதது... படித்தது படிக்காதது என்று எல்லா பௌதீக மாற்றத்தையும் அடைந்திருக்கிறது. ஆசை வார்த்தையோ.. அச்சுறுத்தலோ... எதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பொது அறிவு இன்னமும் நம் பிள்ளைகளிடம் இல்லை என்பதற்கு இத்துர் சம்பவங்களே சாட்சி. 
 
ஒரு பெண்ணிடம் கூடவா உடல் வலிமை இல்லை. அல்லது ஒரு பெண்ணுக்கு கூடவா மனவலிமை இல்லை. இது தான் நம் சமூகம் காலம் காலமாக ஏற்படுத்தி வைத்திருக்கும் பெண்களுக்கான கட்டமைப்பா...?
 
நாசம் செய்தவர்களைப் பற்றி எந்த அளவுக்கு விமர்சனமும்.... விவாதமும்.....தேவையோ.... அதே அளவுக்கு நாசம் செய்யப்பட்ட பெண்களைப் பற்றிய விவாதமும் தேவைதான். கைக்குள் இருக்கும் வரை தான் அது அலைபேசி. கழுத்து வரைக்கும் நிரம்ப விட்டு விட்டால் அது சைத்தான். சைத்தான் தன் வேலையைச் செய்ய எப்போதும் காத்துக் கொண்டே தான் இருக்கும். அதன் பிடியில் கழுத்தை கொடுத்து விட்டு மூச்சடைக்கிறது என்றால் என்ன சொல்வது.
 
பலகீனமானவர்களை நோக்கி வைக்கப்பட்ட குறி.. இது. மனோதத்துவ ரீதியில் கையாளப்பட்ட குற்றங்கள் இவைகள். மானுடப் பெருவெளியில் பெண்களின் உடல் அமைப்பையும்.. உள்ளார்ந்த மன வியப்பையும் பயன்படுத்தி அதிலும் பணம் என்ற ஒரு தேவையின் ஆதாரத்தைக் கொண்டு அவர்களை மடக்கி இருக்கிறார்கள் என்பது தான் பொதுவாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது. அதே நேரம் அந்தப் பெண்களும் ஏதோ ஒரு வகையில்.... இந்தக் குற்றங்கள் தொடர காரணமாய் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையைக் கசந்தாலும் நம்பத்தான் வேண்டி இருக்கிறது. 
 
பலவீனப்படும் கழிவிரக்கத்தின் வாயிலாக தொலைந்து விட்டதாக நம்பி தன்னை பிறரில் தேடும் ஒரு வகை பிற்போக்கு மனநிலையை இன்னமும் பெண்கள் தங்களிடம் வைத்துக் கொண்டிருக்கும் முதிரா பக்குவத்தின் வெளிப்பாடுதான் முகநூலில் எல்லாம் ஒருவனுக்கு மயங்குவது. அதே நேரம்.. முகநூலின் தீவிரம் இந்த வாழ்வில் எந்தளவுக்கு சென்று சேர்ந்திருக்கிறது என்பதற்க்கும் இந்த நிகழ்வுகள் தான் சாட்சி. தூண்டிலின் முகம் தான் மாறி இருக்கிறது. இடுபவர்களின் வக்கிரம் மாறவேயில்லை. எல்லா காலத்திலும் ஒரு கூட்டம் பெண்களை கஷ்டப்படுத்தி அதன் மூலம் இன்பம் காணும் சுய அரூப சொற்களற்ற புன்னகையை தொண்டைக்குள் வைத்து உருட்டி உருட்டி தனக்கு மட்டுமே கேட்கும் இசையை நிகழ்த்திக் கொண்டு தான் இருக்கிறது. காமத்தை தப்பாகவே புரிந்து கொண்டு செயல்படும் அவர்கள்  மக்களோடு மக்களாகவே தான் கலந்திருப்பார்கள். கண்டுணர்ந்து விலகியிருக்க நாம் தான் கற்றுத் தர வேண்டும். பிள்ளைகளை பொதுவாகவே நம் ஆசைகளை நிறைவேற்றும் மீடியமாக நினைப்பதை பெற்றோர்கள் கை விட வேண்டும்.  இல்லையென்றால்... அன்புக்கு ஏங்கும் மனம்.... புழுதியில் தூக்கி வீசப்படும் நல்லதோர் வீணையாகும் என்பதில் ஐயமில்லை.
 
காதல்....எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை உடையது. ஆனால் காதலின் வலிமையே அது காதலிக்கப்படுபவரின் நிஜத்தை அதுவாகவே உணர்ந்து கொள்வது. அது உணராமல் போனதில் தான் காதல் போல செய்தலின் கண்மூடித்தனம் இருக்கிறது. எந்தப் புள்ளி நம்ப வைத்திருக்கும். நட்பின் கரமோ காதலின் நிறமோ... ஆனாலும்... புள்ளி அலங்கோலமாகும் போது அது தாங்கொணா தடுமாற்றத்தைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதில் ஒருவருக்கு கூடவா அதை எதிர்க்கும் துணிச்சலோ...இதிலிருந்து வெளிவர பலம் பொருந்தியவர்களின் துணையோ தேவை என்று உணரத் தோன்றாமல் போனது. அப்படி ஒருசிலர் உணர்ந்திருந்தாலும்... அதை ஆரம்பத்திலேயே 'பெல்ட்"டால் அடித்து அடக்கி பயத்தின் கோர முகத்தை மெல்ல மெல்ல விதைத்திருக்கிறார்கள் கல்பிரிட்ஸ்.
 
சதைப்பிண்டத்தை காசாக்கும் இந்தக் கூட்டம் சாதாரண கூட்டம் அல்ல. மனித குல தவறுகளின் எல்லா நியதிகளையும் தெரிந்த கூட்டம். மாட்டிக் கொண்டிருப்பது என்னவோ வெறிபிடித்த நாய்க் கூட்டம் தான். இன்னமும் மறைந்திருக்கிறது நரிக்கூட்டமும்.. ஒநாய்க்கூட்டமும்.
 
காதலின் கண்மூடித்தனம் காதலின் முந்தைய படியிலேயே காதலென்று சொல்லப்படும் நாடகத்தை படுவேகமாக அரங்கேற்றி இருக்கிறது. உணர்ந்து கொள்ளும் போது எல்லாமே படம் பிடிக்கப் பட்டுவிட்டது. நம்பி வந்த தோழியை ஆடை அவிழ்க்க சொல்லி அடித்து துன்புத்துகிறான் என்றால்... மறத்து போன மனநிலையில் வார்த்தெடுக்கப்பட்டிருக்கிறான் என்று தானே அர்த்தம். தன்னுள் இருக்கும் அத்தனை வக்கிரத்துக்கும் வடிகால் இதுவென அவனை நம்ப செய்தது எது. எப்படியும் ஒரு நாள் மாட்டிக் கொள்வோம் என்று தெரிந்தும் இத்தனை மோசமான குற்றங்களில் ஈடுபடும் மனவலிமையை அவன் எங்கிருந்து பெற்றான். அவனுக்கு.....இங்கே மாட்டிய பெண்கள் எல்லாருமே ஒருவகையில் பொருள்கள்தான். ப்ராடக்ட்ஸ். நமது சந்தைப்படுத்தலின் மிக மோசமான கற்பிதங்களுள் வளர்ந்தவனாக இருப்பான். 
 
இன்னமும் சொல்லப் போனால் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருமே மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். ஷாக் கொடுத்து தான் ஆக வேண்டும். 
 
ஆண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களே...பெண்களைப் புனிதப்படுத்தி எல்லாம் எதுவும் சொல்லித்தர வேண்டாம். அது சக உயிர் என்பதை மட்டும் பசுமரத்தாணி போல அவர்கள் மண்டையில் பதிய வையுங்கள்... போதும்.
 
தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகும்... வீட்டுக்குள் முக்காடிட்டுக் கொண்டு அமர்ந்திருக்கும் சூத்திரத்தைத் தான் நாம் இப்பெண் சமூகத்துக்கு இதுநாள் வரை கற்பித்திருக்கிறோம் எனும்போது ஒட்டு மொத்த சமுதாயத்தில் ஒரு சிரமாக குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டி இருக்கிறது. நமது கல்வி திட்டங்கள் கழிவு திட்டங்களாக இருக்கிறது. வாழ்வை எதிர்கொள்ளும் முறை இன்னும் சரிவர சீர்திருத்தப் படவில்லை என்பதற்கு இங்கே நடந்து கொண்டிருக்கும் அவமான சின்னங்கள் தான் பலத்த சாட்சி. எதுவெல்லாம் நடக்க கூடாதோ அதுவெல்லாம் நடக்கிறது. பிசாசுகள் ஆட்சி செய்கையில்.... பிஞ்சு குழந்தைகளும் பிய்த்து தின்னப்படுவார்கள். ஆட்சி மாற்றம் மட்டுமல்ல... அரசியல் மாற்றமே தேவைப்படும் நேரம் இது.
 
ஒவ்வொரு மனிதனின் குரூரமும் சரியான வாய்ப்பு வருகையில் வெளி வந்தே தீர்கிறது.... அதற்கு கொலை செய்திருக்க......வன்கலவி செய்திருக்க.......படு பாதகம் செய்திருக்க வேண்டியதில்லை...படம் பிடித்தலே போதுமானது. எல்லாவற்றையும் போட்டோ எடுத்துக் கொண்டே இருப்பது... மற்றவரின் அனுமதி இன்றி யாரை வேண்டுமானாலும் எந்த சூழலில் வேண்டுமானாலும் படம் எடுக்கும்..... தான்தோன்றித்தனத்தை அலைபேசிவாசிகள் விட்டொழிக்க வேண்டும். நிர்வாணத்தை படம் பிடித்து வைத்து கொண்டு அதை திரும்ப திரும்ப பார்ப்பது... உடனே ஒரு பத்து பேருக்காவது பகிர்வது.... அதில் உள்ளார்ந்த மகிழ்வை உணர்வது.... இவை எல்லாமே மனப்பிறழ்வுகள். சங்கிலியில் கட்டி வைத்து தான் வைத்தியம் பார்க்க வேண்டும். அபத்தங்களின் உலகில் இன்னமும் சாதிக்கூட்டம் தன் கோரமுகத்தை வேறு வேறு வழியில் தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. நிறைய முட்டாள்களை அதன் அருகில் கண்டுணர முடியும். 
 
பொந்துக்குள் இருந்து வரும் பெருச்சாலிகள் போல ஒவ்வொருவனாக வந்து கொண்டே இருக்கிறான். ஒவ்வொரு முகத்திலும் ஒரே முகம் நிர்வாணமாக பல்லிளிருக்கிறது. நம்ப வைத்து ஏமாற்றவது... குற்றத்தின் உயர் நோக்க பிழை. நம்பினோரைக் கைவிடுவது குற்றத்தின் கடைசி நிலை வக்கிரம். இரண்டும் இங்கே அனாயசமாக நடந்தேறி இருக்கிறது. நயமாய் பேசி.. நல்லவனாக முலாம் பூசி.. பின் வாய்ப்பு கிடைத்த ஒரு பொழுதில் அம்மணமாக்கி அடித்து நொறுக்குவதெல்லாம் ஆண்டான் அடிமை தத்துவம். எந்தக்காலத்தில் இருக்கிறோம்....? அடிமை முறை வேறு வேறு வழிகளில்... இன்னமும் தன் சாணிப்பாலை கரைத்து வைத்துக் கொண்டு கொடூரமாய் ரத்தக்காட்டேரியாய் காத்து தான் இருக்கிறது. சக மனிதன் மீதுள்ள அத்துமீறலின் நீட்சியில் இங்கே விடுதலையும் இல்லை.....சுதந்திரமும் இல்லை. எல்லாமே பணம் கொண்டோரின் தாக்குதலும் அதன் மீது அவர்கள் கட்டியெழுப்பிய சட்டமும் தான்.  
 
ரோட்டுக்கு ரோடு வீடில்லாதவன் வாழும் இத்தேசத்தில் பண்ணைவீடுகளின் அவசியம் என்ன....?
 
இனி எப்போதும் தைரியமாக ஒப்புக் கொள்ளுங்கள் பெண்களே... உடலால் உங்களை அசுத்தப்படுத்தவே முடியாது என்று. கற்பும் இல்லை... அதில் கழிவிரக்கமும் இல்லை. அது ஒரு சதைத் துணுக்கு. அதில் குடும்ப மானத்தையும்..... மயிறு மானத்தையும்...தக்க வைத்துக் கொள்ளும் பலகீனமான மனநிலையை ஒருபோதும் கொள்ளாதீர்கள். வலைவீசுவது இயல்பான அப்பீல் தான். மாட்டிக் கொள்ளாமல் இருப்பது தான் இயல்பான ரிப்பீட். இடைவெளி ஞானத்துக்கு தான் இந்த படிப்பு. அலைபேசியில் நள்ளிரவில் நோண்டிக் கொண்டிருக்க அல்ல. உடல் தேவை தனியுடமை. உலக உடமையாக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். தவறுவது இயல்பு. உணர்ந்து அதில் இருந்து மீண்டெழுவது தான் சாமர்த்தியமே தவிர மீண்டும் மீண்டும் அதில் பாதாளம் வரை சென்று வீழ்வது அல்ல. 
 
அற்ப மனிதர்களே.... சும்மா இருக்காதீர்கள். அது தான் சாத்தானின் கூடாரம். இன்னொருவன் உழைப்பில் வாழுகையில் ஆதி மிருகம் விழித்துக் கொண்டு தான் இருக்கும்... உழைத்துக் களை. கடவுள்தனம் தானாக வரும். 
 
பெண்களின் பெற்றோர்களும் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டு பிள்ளைகளிடம் நெருங்கி இருப்பது அவசியம். தங்கள் கனவுகளை பிள்ளைகள் மீது திணித்து அவர்களை ஓட ஓட மனதளவில் விரட்டாமல் இருப்பது கண்டிப்பாக அவசியம். கண்மூடித்தனமான ஓட்டத்தில் இதுபோன்ற விபரீதங்களும் நடந்து விடும். 
 
உடல்தேவைகளை இன்னும் முறையாக பயிற்றுவிக்க வேண்டும்... நிறைய பேருக்கு செக்ஸ் பற்றிய போதிய அறிவு இல்லவே இல்லை.
 
இதே நேர்கோட்டில் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்த உடனே அது பற்றியே பேசி பேசி போதையாகும்....ஒரு கூட்டத்தை எந்தக் கணக்கிலும் சேர்த்துக் கொள்ளவே முடியவில்லை.

எதிர்கால சந்ததி இப்படி அநியாயமாக வளர்க்கப்படவே கூடாது. சட்ட ரீதியாக குற்றம் நிரூபிக்கப் படும் பட்சத்தில்....குற்றவாளிகளின் அம்மாக்களின் கையால் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது தான் எங்கள் வேண்டுதலாக இருக்கும்.... மற்றபடி சேக்கிழார் எழுதிய ராமாயணத்தை வைத்துக் கொண்டு எதை புடுங்க முடியும் என்று தெரியவில்லை.
 
- கவிஜி
Pin It