உடலைச் சுத்தப்படுத்தாமல் இருப்பவர்களைக் காட்டிலும், சில வகை சோப்புகளைப் பயன்படுத்துவதால் மனிதர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. சில வகை சோப்புகளின் நறுமணத்தால் கொசுக்கள் கவரப்படுவதே இதற்குக் காரணம். மனிதர்களைப் போல சில வகை சோப்புகளும் கொசுக்களைக் கவர்கின்றன.

மனிதர்களைக் கடித்து குடிக்க இரத்தம் கிடைக்காமல் போகும்போது அதை ஈடுகட்ட அவை பூக்களில் இருந்து தேன் குடிக்க முயற்சி செய்கின்றன. சோப்புகளில் பயன்படுத்தப்படும் பல வித பூக்களின் நறுமணத்தால் ஈர்க்கப்படும் கொசுக்கள் அத்தகைய சோப்புகளைப் பயன்படுத்துபவர்களை குறிவைத்து கடிக்கின்றன. ஆய்வில் தன்னார்வத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பயன்படுத்திய நான்கில் மூன்று வகை பிரபல சோப்புகளின் நறுமணம் கொசுக்களைக் கவர்ந்திழுத்தது.

பூ வாசனை வீசும் சோப்புகள்

பல நறுமணம் வீசும் மலர்கள், பழங்களின் வாசனையுடன் இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள் சோப்புகளை உற்பத்தி செய்கின்றன. இந்த வாசனை சோப்புகளைப் பயன்படுத்தும் மனிதர்களிடம் அதே போன்ற வாசனை வீசுகிறது. இரத்தம் குடிக்காமல் அதை ஈடு செய்ய அவதிப்படும் கொசுக்கள் அதற்கு ஈடாக இந்த நறுமணத்தை அறிந்து தேன் கிடைக்கும் என்று கருதி வாசனையுடன் இருக்கும் மனிதர்களைக் கடிக்கின்றன என்று வெர்ஜீனியா பாலிடெக்னிக் கழகம் மற்றும் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரும், ஆய்வுக்குழுவின் தலைவருமான க்ளெமெண்ட் வினோஜர் (Clement Vinauger) கூறுகிறார்.mosquitoe 456இது காபி மற்றும் மஃப்ஃபின் (muffin) எனப்படும் விரைவு இனிப்பு ரொட்டியின் வாசனையை நமக்கு நினைவுபடுத்துவது போன்றது என்று அவர் கூறுகிறார்.

ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட நறுமணம் இருப்பதால், வாசனை சோப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் சோப்புகளின் வாசனையும் அவர்களில் சிலரை மட்டும் கொசு கடிக்க ஒரு காரணமாக அமையலாம் என்று ஐசயன்ஸ் (iScience) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள இந்த கட்டுரை கூறுகிறது.

ஆய்வில் ஈடுபட்டவர்களிடம் இருந்து, முதல் நாள் இரவு படுக்கும்போது அவர்கள் பயன்படுத்திய துணிகள் மாதிரிகளாக சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டன. டயல் (Dial), டவ் (Dove), நேட்டிவ் (Native) மற்றும் சிம்பிள் ட்ரூத் (Simple Truth) ஆகிய நான்கு வகை பிரபல சோப்புகள் ஆராயப்பட்டன. மனித இரத்தத்தைக் குடிக்கும் பெண் கொசுக்கள் எந்த சோப்பைப் பயன்படுத்திய துணிகளால் அதிகம் ஈர்க்கப்படுகின்றன என்று ஆராயப்பட்டது.

கொசு விரட்டியாக தேங்காய் எண்ணை வாசனை

இதில் முதல் மூன்று வகை சோப்புகளின் நறுமணம் கொசுக்களை அதிகமாகக் கவர்ந்தன. ஆனால் சிம்பிள் ட்ரூத் சோப்பு தேங்காய் எண்ணையின் வாசனையுடன் இருந்ததால் அந்த வாசனையால் கொசுக்கள் ஈர்க்கப்படவில்லை. பொதுவாக தேங்காய் எண்ணையின் நறுமணம் கொசுக்களை விரட்டும் இயல்புடையது என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மூச்சு விடும்போது வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடு கொசுக்களைக் கவரும் ஒரு முக்கிய ஈர்ப்புப்பொருள் என்பதால் மனிதர்கள் நேரடியாக ஆய்வில் உட்படுத்தப்படவில்லை. வாசனை வீசும் பூக்கள் மலரும் செடிகளையும், பழ மரங்களையும் இல்லாமல் செய்யும் மனிதன் அந்த நறுமணத்தை செயற்கையாக உருவாக்கினால் இது போன்ற பாதிப்புகளே ஏற்படும்.

தொலைதூர விண்வெளி ஆய்வுகளிலும் ஆழமான கடற்பரப்பில் ஆராய்ச்சிகளிலும் சாதனைகள் புரியும் மனிதனால் கொசுக்கள் என்ற இந்த சின்னஞ்சிறிய உயிரினங்களைக் கட்டுப்படுத்துவதில் இன்னும் வெற்றிபெற முடியவில்லை என்பதே உண்மை.

மேற்கோள்https://www.theguardian.com/environment/2023/may/10/soap-can-make-humans-more-attractive-mosquitoes-study?CMP=Share_AndroidApp_Other

- சிதம்பரம் இரவிச்சந்திரன்