"நானும் தேசத்தின் பாதுகாவலனே" என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டிங் செய்யப்பட்டுள்ளது. பல பேருக்கு இது ஆச்சரியத்தைக்கூட கொடுத்திருக்கலாம். நாடே வெறுத்து ஒதுக்கும் ஒருவரை, அதுவும் நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் செய்து, இந்திய ராணுவ வீரர்களின் கைகளில் கலாவதியான மிக் 21 பைசன் ரக விமானத்தைக் கொடுத்து அவர்களின் உயிரோடு விளையாடியது மட்டுமல்லாமல், ரஃபேல் தொடர்பான ஆவணங்களைக் கூட பாதுகாக்கத் திராணியற்ற ஒருவரைப் பற்றி எப்படி கூச்சமே இல்லாமல் "நானும் தேசத்தின் பாதுகாவலனே" என டிரெண்டிங் செய்யப்படுகின்றது என்று. பிஜேபி நடத்தும் ஐ.டி. பிரிவைப் பற்றியும், அதன் மோசடி பணிகளைப் பற்றியும் தெரிந்தவர்கள் இப்படிப்பட்ட டிரெண்டிங்கைப் பார்த்து ஆச்சரியப்பட மாட்டார்கள். அவர்கள் நினைத்தால் மோடியை தேசத்தின் பாதுகாவலன் என்று மட்டுமல்ல, மோடிதான் இந்தியாவின் கடவுள் என்று கூட டிரெண்டிங் செய்ய முடியும். அந்த அளவிற்கு பல நூறு கோடிகளைக் கொட்டி நரியைப் பரியாக்கும் வேலையை இந்திய கார்ப்ரேட்டுகளின் துணையுடன் பிஜேபி செய்து வருகின்றது.

modi 374ஆனால் நிலைமை 2014 போல் தற்போது இல்லை. மோடியால் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, பசியாலும், வேலைவாய்ப்பின்மையாலும், வறுமையாலும் கதறும் மக்களின் மரண ஓலம் இன்று இந்தியா முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கின்றது. ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவற்றால் மட்டும் இந்தியாவில் 3 கோடியே 70 லட்சம் பேர் அமைப்பு சாராத் துறையில் வேலையிழந்து இருக்கின்றார்கள். 2018-ம் ஆண்டில் மட்டும் 1.30 கோடி பேர் வேலையிழந்து இருக்கின்றார்கள். கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கின்றது. அமைப்பு சாராத் தொழிலாளர்கள் பெருமளவு பணிபுரியும் சிறு குறு தொழிற்சாலைகள் பெருமளவு மூடப்பட்டிருக்கின்றன. இன்றைய தேதிக்கு இந்திய மக்கள் தங்களைப் பிடித்த பெரும் தரித்திரமாகவே மோடியைப் பார்க்கின்றார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால் அப்படி இருந்தும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மீண்டும் மோடியால் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ள முடிகின்றது. தற்போது ட்விட்டரில் தனது பெயருக்கு முன் ‘சவுக்கிதார்’ என்ற சொல்லை மோடி இணைத்திருக்கின்றார். சவுக்கிதார் என்றால் ‘மக்கள் பாதுகாவலன்’ என்று அர்த்தமாம். அண்டங்காக்கை ஒருநாளும் குயில் ஆகிவிட முடியது என்பதும், ஆட்டுப் புளுக்கைகள் வைரங்கள் ஆகிவிட முடியாது என்பதும் மானமும் அறிவும் உள்ள மனிதர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் மனித ரத்தத்தை ஊற்றி, வெறுப்பு அரசியலை மட்டுமே வளர்க்கத் தெரிந்த வலதுசாரி பிற்போக்குவாத லும்பன் கும்பல்களுக்கு நிச்சயம் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். அதனால்தான் மோடியால் "உங்களுடைய பாதுகாவலன், உறுதியாக நின்று நாட்டுக்கே சேவையாற்றி வருகிறேன். ஆனால், நான் தனி நபர் அல்ல. ஊழலுக்கு எதிராகவும், சமூகத்தில் நிலவும் தீய செயல்களுக்கு எதிராகவும் போராடும் அனைவருமே பாதுகாவலர் தான். நாட்டின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் அனைவருமே பாதுகாவலர் தான்." என்று கூறியிருக்கிறார். சொன்னதோடு மட்டுமல்லாமல் அந்தப் பதிவின் முடிவில், நானும் தேசத்தின் பாதுகாவலனே என்ற உறுதிமொழியை ஏற்று ஹேஷ்டேக்கை டிவீட் செய்யுமாறு கோரிக்கையும் வைத்துள்ளார்.

மோடி மட்டுமல்லாமல் அமித்ஷா, பியுஸ்கோயல் தொடங்கி நம்ம ஊர் தமிழிசை, எச்ச ராஜா வரைக்கும் இந்த ‘சவுக்கிதார்’ என்ற அடைமொழியை தங்களின் பெயருடன் சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு பக்கா திருடன் தன்னை பரம யோக்கியன் என்று சொல்லிக் கொள்வது போல, நாட்டை பெருமுதலாளிகளுக்கு கூட்டிக் கொடுத்த கும்பல் தன்னை வெட்கமே இல்லமால் இன்று மக்களின் காவலன் என்று சொல்லிக் கொள்வதாக நாடே காறித் துப்புகின்றது. மோடி உண்மையில் யாருக்குக் காவலாக இருந்தார்? இந்தியாவின் மிகப்பெரிய 9 பணக்கார குடும்பங்கள் நாட்டின் வளங்களில் 50 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த வருடம் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ 2,200 கோடி என்ற அளவில் உயர்ந்துள்ளது என்று இந்தாண்டு வெளியான ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுகின்றது. சவுக்கிதார் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவிற்கு சொந்தமான ‘டெம்பிள் என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் 16 ஆயிரம் மடங்கு சவுக்கிதார் மோடியின் ஆட்சியில் அதிகரித்துள்ளது. அதே சமயம் உலகில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளில் 50 சதவிகிதக் குழந்தைகள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்கின்றன சமீபத்திய புள்ளி விவரங்கள். அதில் பிஜேபி ஆண்ட, ஆளும் மாநிலமான உத்திரப் பிரதேசம் 46 சதவீதமும், மத்தியப் பிரதேசம் 42 சதவீதமும், ராஜஸ்தான் 39 சதவீதமும், ஜார்க்கண்ட் 45 சதவீதமும் என ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் பெரும்பான்மையை வகிக்கின்றன‌. ஆனால் மனித உயிர்களை மயிரளவுக்குக் கூட மதிக்காத மோடி, வல்லபாய் பட்டேலுக்கு 3000 கோடி செலவில் 182 மீட்டர் உயரத்தில் சிலை வைத்தார்.

இந்திய வங்கிகளில் 8.5 லட்சம் கோடி வாராக் கடன் உள்ளது. ஆனால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11300 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டு நீரவ் மோடியும், பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி ரூ. 9000 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு மல்லையாவும் மோடி ஆசியுடன் லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மானங்கெட்ட சவுக்கிதார் ஆட்சியில் இவர்கள் மட்டுமல்ல, 2017 ஆம் ஆண்டு 7000 மிகப்பெரிய பணக்காரர்கள் இந்தியாவில் இருந்து வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்திருக்கின்றார்கள். 2016 ஆண்டு 6000 பேரும், 2015 ஆம் ஆண்டு 4000 பேரும் வெளிநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்கு சொகுசு வாழ்க்கை வாழச் சென்றுவிட்டார்கள். இது போன்ற சவுக்கிதாரை நீங்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. இப்படி நாட்டின் சொத்தையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு பெருமுதலாளிகள் ஓடிய போது இந்த சவுக்கிதார் என்ன செய்தார்? பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதன் மூலம் 80 ஆயிரம் கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்தார். இவரை சவுக்கிதார் என்பதைவிட சாவுகிராக்கி என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு நாட்டை சீரழித்து குட்டிச்சுவராக்கி வைத்திருக்கின்றார்.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் புதுப் புது புரட்டுகளையும் சொற்ஜாலங்களையும் மோடி களத்தில் இறக்கி, இந்திய மக்களுக்கு எழுச்சி தருவேன் என வாக்குறுதி கொடுப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் சிட்டுக்குருவி லேகியம் விற்பவன் மீது இருக்கும் நம்பிக்கையைக் கூட மோடி மேல் வைக்க இன்று யாரும் தயாராகயில்லை. மோடி தன்னை சவுக்கிதார் என்று சொல்லிக் கொண்டாலும் ராகுல் காந்தி சொன்ன ‘நாட்டின் பாதுகாவலன் ஒரு திருடன்’ என்பதுதான் இன்று உண்மையாகி இருக்கின்றது. காரணம் மோடி மக்களின் சவுக்கிதார் இல்லை; கார்ப்ரேட்டுகளின் வாசலில் வாலாட்டிக் கொண்டு,காத்துக் கிடக்கும் சவுக்கிதார் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதால்தான்.

- செ.கார்கி

Pin It