இந்தியாவில் அற்புதம்மாள் போன்ற எண்ணற்ற மகனைப் பெற்ற தாய்மார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்திய அரசியல், ஆளும் வர்க்கத்தின் கையில் படும் பாட்டின் வெளிப்பாடு தான் அற்புதம்மாள் போன்றோர். கடந்த 28 ஆண்டுகளாக‌ மகன் பேரறிவாளன் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று காத்துக் கொண்டிருக்கிறார் அற்புதம்மாள்.

arputham ammal 670அரசின் கதவுகள் திறக்கவில்லை. மக்களை சந்திக்கப் புறப்பட்டார் அவர். கடந்த 24ம் தேதி கோயம்புத்தூரில் மக்களை நோக்கிய பயணத்தைத் தொடங்கினார். அற்புதம்மாளின் பயணம் நமக்கு சில வரிகளை நினைவூட்டுகிறது.

“ஏழைகள், பலவீனமாவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், அதிகாரம் இல்லாதவர்கள், இவர்கள் தான் மரண தண்டனை வழங்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்” என்ற முன்னாள் அமெரிக்க தலைமை அரசு வழக்கறிஞர் ராம்சே கிளார்க்கின் வரிகள் தான் அது.

28 ஆண்டுகளாக‌ சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் விடுதலையாக வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் அற்புதம்மாள். ஆனால், அவருடைய போராட்டத்திற்கு இது வரை தீர்வு கிடைக்க‌வில்லை. அற்புதம்மாளின் போராட்டம் என்பது அவர் மகனுக்கான போராட்டம் மட்டுமல்ல, அனைவருக்கமான போராட்டமாக அதனை முன்னெடுத்துச் செல்கிறார்.

ஆளும் அரசுகள் எந்தவித பாரபட்சமுமின்றி விடுதலையை தள்ளிப் போட்டு வருகிறது. இதனால், இனி நான் மக்களை சந்திக்கப் போகிறேன் என்ற முழக்கத்தோடு அவருடைய பிரச்சாரப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்திற்கு முன்பாக அவர் கூறிய வார்த்தைகள்: "என் புள்ளை உட்பட 7 பேரையும் விடுதலை செய்யச் சொல்லி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து நாலு மாதத்துக்கு மேலாகிடுச்சு. இதுவரை 7 பேர் விடுதலைக்கான எந்த அறிகுறியும் தெரியலை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், சட்டத்துக்கும் மதிப்பு கொடுக்கணும்னு நான் தொடர்ந்து போராடிக்கிட்டுதான் இருக்கேன். ஆனால், அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படலை. இந்தப் பொங்கல் பண்டிகைக்கு என் புள்ளை வீட்டுக்கு வந்திடுவான்னு நினைச்சேன். ஆனா, என் ஆசை நிறைவேறலை. ரொம்ப வேதனையில இருக்கேன்.

இனி, 7 பேர் விடுதலை விஷயத்துல மக்கள்தான் எனக்கு ஆதரவு. எனவே, 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி கோயம்புத்தூரில் பயணத்தைத் தொடங்குகிறேன். ஈரோடு, சேலம் உட்பட வரிசையாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போகப் போறேன். இறுதியாக, சென்னையில பயணத்தை முடிக்கத் திட்டமிட்டிருக்கேன். அப்போ, பல தலைவர்களையும் அழைப்பேன்.

இந்தச் சுற்றுப்பயணத்தில் என் ஆதங்கத்தை மக்களிடம் வெளிப்படுத்துவேன். மக்களின் கருத்துகளைக் கேட்பேன். அதில், ஆக்கப்பூர்வமான கருத்துகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கப் போறேன்" என்றார் அவர்.

அவருடைய போராட்டம் பேரறிவாளன் போன்று, சிறையில் உள்ள ஆயிரக்கணக்கான சிறைவாசிகளின் விடுதலையையும் சாத்தியப்படுத்தட்டும்.

- நெல்லை சலீம்

Pin It