சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி:
பேரறிவாளன் விடுதலை என்பது அனை வருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். ஈழ ஆதரவாளன் என்ற முறையில், ஈழம் தொடர்பானது என்று கருதிக் கொண்டு, ஏதோ பயங்கரவாதம் நடந்து விட்டதாக பேசிக்கொண்டு அரசுகள் அவர் மீது வழக்கு புனைந்ததும், தண்டிக்கப்பட்டதும் வேறு கதை என்றாலும் கூட, இப்போது இவரது விடுதலையை 30 ஆண்டுகள் கடந்தும் காலம் தாழ்த்திக் கொண்டிருந்த அரசுகளுக்கு குறிப்பாக ஆளுநருக்கு தலையில் குட்டு வைத்ததைப் போல இந்த தீர்ப்பினை நான் பார்க்கிறேன். அவர் நேரடியான குற்றச் செயலில் ஈடுபடவில்லை என்று வழக்கே கூறினாலும், அவருக்கு உட்சபட்ச தண்டனை வழங்கப் பட்டது. அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின்பும், இவ்வளவு காலம் சிறையில் இருந்தார் என்பதை எந்த மனிதநேயர் களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பெரும்பாலானோரால் தேசத் தந்தை என்று சொல்லப்படுகின்ற காந்தியைக் கொன்ற கோபால் கேட்சேவிற்கு 15 ஆண்டுகளில் விடுதலை தரப் பட்டது. ஆனால், இந்த வழக்கில் ஏனோ இவ்வளவு காலம் தாழ்த்தி விட்டார்கள். அதை ஏற்கெனவே உச்சநீதிமன்றம், 161 விதியின் கீழ் மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்பும், இதற்கான பரிந்துரையை 4 ஆண்டுகளுக்கு முன்பே மாநில அரசு கொடுத்து விட்ட பின்பும், ஆளுநர், அரசியல் சட்டத்தில் கால வரையறை இல்லை என்ற காரணத்தால், நீட்டித்துக் கொண்டே இருந்தது என்பது, ஜனநாயகவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். எனவேதான் இந்த வழக்கை பேரறிவாளன் உச்சநீதிமன்றம் எடுத்துச் சென்றார்.
உச்சநீதிமன்றம் கூறியது, “ஆளுநர் இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டி வரும்” என்று கூறிக் கொண்டே இருந்தது. ஆனால் ஆளுநர் தரப்பி லிருந்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆளுநருக்காக ஒன்றிய அரசு வழக்கறிஞர் வாதாடிய போதும், அவர்களிடம் உச்சநீதி மன்றம், “ஆளுநருக்காக ஏன் ஒன்றிய அரசு வாதாடுகிறது” என்ற கேள்வியை வைத்தார்கள்.
இப்படி பலமுறை பல வாய்ப்புகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டும், விடுதலை செய்ய மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்த ஒன்றிய அரசுக்கும், அவர்களுடைய கங்காணியாக தமிழ்நாட்டில் இருக்கிற ஆளுநருக்கும், இது ஒரு எச்சரிக்கை போல கிடைத்த தீர்ப்பு என்று நாங்கள் நம்புகிறோம்.
மாநில உரிமை என்று வருகிறபோது, மாநில அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதை இந்த வழக்கு மீண்டும் உறுதி செய்திருக்கிறது. இந்த வகையில் பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சரவை பரிந்துரைத்தது அனைவருக்கும் தான். பேரறிவாளன் நீதிமன்றம் சென்றதால் அவருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. மற்றவர்களின் விடுதலைக்கான பரிந்துரையை இப்போதாவது ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மற்றொரு பார்வையில் பார்த்தால் நீண்டகால சிறைவாசிகள் பல பேர் இருக்கின்றனர். குறிப்பாக இஸ்லாமிய சிறை வாசிகள். நீண்ட காலமாக அவர்களை சிறையில் அடைத்து வைத்துள் ளார்கள். இஸ்லாமியர்கள் என்பதால் மட்டுமே சிறைபடுத்தப்பட்டுள்ளார்களா? என்று எண்ணத் தோன்றுகிறது. இஸ்லாமிய சிறை வாசிகளின் விடுதலையை மாநில அரசு தள்ளி போடக்கூடாது. அவர்களை விடுவிக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, வீரப்பன் தொடர்பான வழக்கில் அவரது சகோதரர் மற்றும் இன்னும் சிலரும் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
சிறை என்பது மனிதனை திருத்துவதற்குத் தானே தவிர மனிதனை தண்டிப்பதற்கு அல்ல. அந்த தண்டனையைக் கூட சிறைவாசிகளின் குடும்பத்தினர் தான் அனுபவிக்கின்றனர் என்பது தான் எதார்த்தத்தில் இருக்கிற உண்மை என்பதை கருத்தில் கொண்டு, நீண்டகால சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
மீண்டும் ஒருமுறை பேரறிவாளன் விடுதலையை ஒரு ஈழ விடுதலை ஆதரவாளனாக மட்டுமில்லை எங்கள் குடும்பத்துப் பிள்ளை என்பதற்காக மட்டுமல்லாமல் ஒரு மனித உரிமை ஆர்வலர் என்ற அடிப்படையிலும் வரவேற்கிறோம். மாநில உரிமையை உறுதி செய்துள்ள இத்தீர்ப்புக்காக மீண்டும் ஒருமுறை வரவேற் கிறோம் என்றார் கொளத்தூர் மணி.