Agap Puram 3எமது உறவினர் திருமணத்திற்காக துணைவியாருடன் சமீபத்தில் மதுரை செல்ல நேர்ந்தது. எந்த ஒரு ஊர் சென்றாலும், அங்கு ஒட்டப்பட்டிருக்கும் அரசியல் சுவரொட்டிகள், பதாகைகள், சுவர் விளம்பரங்களை உற்று நோக்குவது நமது வழக்கம். அப்படிக் காண்கையில் பலமுறை உற்சாகம் பீறிடும், சில சமயம் மனது வருத்தமுறும். அப்படியான மனது வருத்தமுறும் வண்ணம் இம்முறை சுவரெழுத்து விளம்பரமொன்றினைக் காண நேர்ந்தது,

பெரிய பெரிய கொட்டை கொட்டையான எழுத்துருவில், ஒருவர் பெயரின் பின்னால் சாதிப் பின்னொட்டு. அது அவரோடு மட்டுமல்ல, அவருக்கு அடுத்தடுத்த நிலைப் பொறுப்பில் இருக்கும் மற்றவர்களின் பெயர்களுக்குப் பின்னால் எல்லாம் தவறாமல் இந்த சாதிப் பின்னொட்டு. சாதியப் பெருமிதம் பொங்கி வழிந்தது அந்தச் சுவர்ப் பகுதியில்.

பெரியார் மண், முற்போக்கு மண் என்றெல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்த நம் காலத்தில்தான், பல ஆண்டுகாலம் ஒட்டச் சுருட்டிக் கொண்டிருந்த சாதியப் பெருமித வால், தற்போது மெல்ல மெல்ல நெளிகிறது, வெளிப்படையாக அசைகிறது, ஆடத் துவங்குகிறது, கொஞ்சம் தூக்கலாகத் தெரிகிறது.

முன்பெல்லாம் ஏதோவொரு திரை நடிகரின் பெயர் அந்த ரசிகர் மன்றத்துக் குஞ்சுவின் முன்னொட்டாகவோ அல்லது பின்னொட்டாகவோ இருக்கும், காண நேரும். அப்போதெல்லாம் மனதுக்குள் மெலிதான சிரிப்பு எழும். ஆனால், இப்போதோ மனசு கனத்துப் போனது.

பொதுவாக, ஒருவருக்கு சூட்டப்படும் பெயரை, நாம் விளிக்கையில் இப்படி முன்னொட்டு பின்னொட்டு போட்டு விளிப்பதில்லை, அழைப்பதில்லை. கூட்டங்களின்போது அழைப்பிதழைப் பார்த்து விளிக்கையில் மட்டும் இதற்கு விதிவிலக்கு. மற்றபடி சாதாரணமாக நாம் அழைக்கையில், முன்னொட்டு, பின்னொட்டு போட்டு அழைப்பதில்லை.

மாறாக, எழுதுதலின் போதுதான் இந்தப் முன்னொட்டும், பின்னொட்டும் வந்து சேர்கிறது. எழுதுதலில் மட்டும் ஏன்? எப்படி? இந்த இடத்தில் பேச்சுக்கும், எழுத்துக்கும் இடையில் உள்ள அரசியலை நாம் கவனிக்க வேண்டும்.

தனி மனிதனின் உடல் வலு மற்றும் எதிர்த்துத் தாக்கும் திறன், விலங்குகளிடமிருந்து தற்காத்துத் தாக்கும் உத்தி, இதன் அடிப்படையில் தனி உழைப்பாய் இருந்த உழைப்பின்போக்கு, நிலைத்த வேளாண் சமூகத்தில் கூட்டு உழைப்பாய் மாறியது. வேட்டைச் சமூகத்தில் ஒலிக் குறிப்புகளாலும், சைகைகளாலும், உடல் மொழியாலும், தனது உணர்வுகளை வெளிப்படுத்திய மனிதனுக்கு, வேளாண் சமூகத்தில் அது கோரிய கூட்டு உழைப்பின்போது, ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளவேண்டிய கட்டாயச் சூழல். ஆக, மனித குல வளர்ச்சிப் போக்கின் முகாமையான பாய்ச்சல் கட்டம் ‘பேசு மொழி’யினைக் கண்டடைந்த காலமாகும்.

இப்படியான மனிதகுலக் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சிப் போக்கில், வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப்பட, பயன்படுத்தப்பட, அதிக அளவில் உற்பத்தியை, விளைச்சலைக் கண்டடைந்தான். இப்போது தேவைக்கும் அதிகமான கூடுதல் உற்பத்தி கிடைக்க, தேவைகளுக்குப் போக மீந்து கிடக்கும் ‘உபரி உற்பத்தி’யை யார் கைப்பற்றிக் கொள்வது என்பதற்கான போட்டியில், ஆதிக்கம், அடக்கி ஆளுதல், தனிச் சொத்து என்ற தோற்றம் கண்டு, இந்த தனிச் சொத்து என்பதின் தோற்றம்தான் மனித குல வளர்ச்சிப் போக்கில், பின்னாட்களில் ஆகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திய விளைவாகும்.

கூட்டுழைப்பின்போது, மனிதத் தொடர்பிற்காய் எழுந்த மொழி, இப்போது இரண்டாய் பிளவுபடும் தேவை எழுந்தது. மனிதத் தொடர்பிற்கான பேசு மொழி என்பதிலிருந்து, அபகரித்த உபரியின் மூலம் கிடைத்த சொத்துக்களை நிலைப்படுத்திட, தான், தனது, தனக்கு மட்டுமே என்பதாக ஆவணப்படுத்திட, காற்றில் கரைந்து போகும் பேச்சொலிகளை, கண்ணுக்குத் தெரிகிற காட்சிப் படுத்தல்களாக, என்றென்றைக்குமானதாய் நிலைப்படுத்திட, பேச்சொலிகளுக்கு உருவங் கொடுக்க, ‘எழுத்து’ கண்டுபிடிக்க வேண்டிய தேவை எழுந்தது.

ஆதியில் குகைகளிலும், மரப் பொந்துகளிலும் வாழத் தலைப்பட்ட மனிதன், தனது உணர்வுகளை வெளிப்படுத்த, பகிர்ந்துகொள்ள, வெறும் ஒலிக்குறிப்புகள் மட்டும் அவனுக்குப் போதுமானதாய் இல்லை. கூரிய முனைகளால் பாறைகளிலும், மரங்களின் மேனிகளிலும் ஒருவிதமான சித்திர வடிவங்களைச் செதுக்கியதன்மூலம் எழுந்த பொறித்தல் செயலை, எழுத்து கண்டுபிடித்தலின் ஆதி நடவடிக்கையாகக் கொள்ளலாமே தவிர, அதற்கான உள் தேவை என்பது எழவில்லை. ஆனால், இப்போது அவனுக்குத் தேவை எழுகிறது. எனவே, பேச்சுகளுக்கான, சொல்லுக்கான வரிவடிவம் காணும் முயற்சியில் இறங்குகிறான். எழுத்துக் கண்டுபிடிக்கிறான். இது இது இதற்கு என்று குறியீட்டுத் தன்மையைக் கைக்கொள்கிறான்.

மொழியின் பேச்சு, எழுத்து என்ற இரு வேறு நிலைகளின் அரசியலை இன்றும் நாம் காண முடியும். படித்தவன் x பாமரன் அதாவது, எழுத்து அறிந்தவன் அறிவாளி, எழுத்தறியாதவன் முட்டாள் என்பதில் துவங்கி, அச்சடிக்கப்பட்டவைகள் எல்லாம் உண்மைகள், நம்பத்தகுந்தவை என்பதில் நீட்சியுற்று, ஆவணங்கள், உடன்படிக்கைகள், சட்டம் என்று பொதுப்புத்தி உளவியலை உருவாக்கி, காலந்தோறும் இந்தச் சுரண்டல் அமைப்பை, அதற்குக் கிஞ்சித்தும் பங்கம் ஏற்பட்டுவிடாது பாதுகாத்துக் காப்பாற்றி வருகிறோம்.

இதுதான் பேச்சு x எழுத்தின் அரசியல். இதிலிருந்து நாம் மேற்செல்வோம். ஆக பேசுமொழியில் விளிக்கையில், நமக்கு இந்த முன்னொட்டுக்கள், பின்னொட்டுக்கள் தேவைப்படுவதில்லை. நிலைமொழியாக, நிலைத்த மொழியாக எழுத்து மொழியைப் பின்பற்றுகையில்தான், சொத்து, உரிமம் போன்றவைகள் குழப்பமேற்பட்டு வேறு யார் கைக்கும் போய்விடக் கூடாது என்பதற்காக, இந்த முன்னொட்டு, பின்னொட்டுக்களை கவனமாய் இட்டு உறுதி செய்து கொள்கிறாம்.

முன்னொட்டுக்களைப் பொருத்தவரை எல்லோருக்கும், இந்த ஆணாதிக்க, தந்தைமைய சமூகத்தில் தந்தையின் பெயரின் முன்னெழுத்தை மட்டும் எடுத்தாண்டு கொள்கிறோம். மாறாக, தாயின் பெயரை முன்னெழுத்தாகப் பொறித்துக் கொள்வதில்லை.

முன்பு 'பொட்டுக் கட்டும்' வழக்கம் என்கிற கொடூர வழக்கம் இருந்ததல்லவா? அந்தச் சமூகத்தில் தாய் உண்டு. தகப்பன் கிடையாது. எனவே, அந்தச் சமூகத்தில் மட்டும் தாயின் பெயரின் முன்னெழுத்தைத் தலைப்பெழுத்தாகக் கொள்ளும் மரபு முன்பிருந்தது. அந்தக் கொடூர வழக்கத்தை அழித்தொழித்த பின்பு, தற்போது சமூகத்தில் பெண்ணியம் கிளர்ந்தெழுந்த நிலையில், புரட்சிகர முற்போக்குப் புரிதல் உள்ளவர்கள், தாயின் பெயரின் முதலெழுத்தை முதலாகவும், தந்தையின் முதலெழுத்தை இரண்டாவதாகவும் இணைத்துக் கொண்டு, சேர்த்துக் கொண்டு எழுத்தாடி வருகிறார்கள். இப்போது. இதுதவிர, முனைவர், மருத்துவர், வழக்குரைஞர், கணக்காயர், நீதியரசர் என்று உயர் பதவி சார்ந்த சிறப்பு முன்னொட்டுக்களும் உண்டு.

இது பெயரின் முன்னொட்டுக் கதை என்றால், பின்னொட்டு என்பது பொதுவாக அவரவர்களின் கல்விப் புலம் சார்ந்தது. அதிலும் ஒரு வேறுபாடு. மேல்நிலைக்கல்வி வரையிலான படித்த படிப்பை யாரும் பின்னொட்டுக்களாகப் போட்டுக் கொள்வதில்லை, ஆர்வங் காட்டுவதில்லை.

ஆனால், இந்தச் சாதியச் சமுகத்தில் தந்தைப் பெரியாரின் களமாடல்களுக்கு முன்னர், சாதியப் பின்னொட்டு என்பது இயல்பானதொன்றாக இருந்திருக்கிறது. ஸ்ரீமான் நாயர் என்றும், நாயக்கர் என்றும், பிள்ளையவர்கள் என்றும், முதலியார் என்றும், சாஸ்திரி என்றும், ரெட்டி என்றும், அய்யர், அய்யங்கார் என்றெல்லாம் சமூகத்தில் உயர் நிலைச் சாதியினர்கள் பெருமையாக தங்கள் சாதிப் பட்டத்தால் அழைக்கப்பட்டார்கள், அதையே பெருமையாகக் கொண்டார்கள். ஆனால், அதே சமயம் பிற்படுத்தப்பட்ட மக்களிடமும் அந்த வேட்கை அளப்பரியதாக இருந்து வந்துள்ளது. தேவர் என்றும், கோனார் என்றும் இயல்பாக அன்றைய காலத்தில் விளிக்கப்படுவதை நாம் காணலாம்.

ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள், பட்டியல் சாதியினராய் ஒதுக்கப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள் தங்களை தங்கள் சாதிப் பெயரோடு பின்னொட்டுக்களை இணைத்துக் கொள்வதே இல்லை. அது அவமானம், இழிவு என்று கருதினார்கள்.

இந்த இடத்தில் ஒரு நுட்பமான விடயத்தை நாம் கடந்தாக வேண்டும். என்ன அது? பொதுவாக, ஒரு பெயரைச் சொல்லும்போதே அது உயர்சாதியா, தாழ்த்தப்பட்ட சாதியா என்பது துலக்கமாகத் தெரிந்துவிடும். ஏனென்றால், உயர்சாதியினர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எந்தப் பெயரையும் சூட்டிக் கொள்ளத் தடையில்லை. ஆனால் தாழ்த்தப்பப்டடவர்கள், சமூகத்தில் நிலவி வரும் பொதுப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள முடியாது.

பொதுவாக, கடவுள் பெயர்களைத்தான் அதிகம் இச்சமூகம் சூட்டிக் கொள்ளப் பிரியப்படுகிறது. அதன் வழியில், பெருந்தெய்வங்களான சிவன், விஷ்ணு சார்ந்த பெயர்களை தாழ்த்தப்பட்டவர்கள், பட்டியல் சாதியினர் சூட்டிக் கொள்ளமுடியாது. மாறாக, சிறுதெய்வங்களான மாடன், காடன், மாரி, மாடத்தி என்றுதான் வைத்துக் கொள்ளமுடியும். அதிலும் குறிப்பான விடயம், பொதுவாக உயர்சாதியினர் பெயருக்கு 'ர்' என்கிற சிறப்பு விகுதி சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள், பட்டியல் சாதியினர் 'ன்' என்கிற மரியாதைக் குறைவான, இளக்காரமான, விகுதியைத்தான் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அப்படியானதொரு இழிவுநிலை தலைதெறிக்க ஆடுமொரு சமூகத்தில்தான் தந்தை பெரியார், இந்த அவலத்தை மாற்ற, உயர்சாதியினரின் அழிச்சாட்டியத்தை ஒழிக்க, ஓய்வு ஒளிச்சல் இன்றிக் களமாடினார். 1929ஆம் ஆண்டு பிப் 17 - 18 தேதிகளில் செங்கற்பட்டில் ‘தமிழ் மாகாண சுய மரியாதை மாநாடு’ கூட்டினார்.

periyar with cadres 480இந்தியச் சாதியச் சமூகத்தில் பிற சமூகங்களில் இல்லாத தனிப் பெருஞ் சிறப்பு நம் தமிழ்ச் சமூகத்திற்கு உண்டு. அந்தச் சிறப்பைச் சாதித்துக் காட்டியவர், சாத்தியமாக்கிக் காட்டியவர் தந்தை பெரியார்.

இந்திய ஒன்றிய அரசின் தலைமைப் பீடத்தில் இருந்தாலும் சரி, முதல் குடி மகன்களாய், மகள்களாய் இருந்தாலும் சரி, அது சஞ்சய் தயாள் ‘சர்மா’வாகவும், பிரதீபா ‘பாட்டிலா’கவும், தலைமை அமைச்சர்களாக தேவே ‘கவுடா’க்களும், நரசிம்ம’ராவ்’களும், ஏன் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் ‘நாயனார்’களாகவும், ‘சாட்டர்ஜி’க்களாகவும், இவ்வளவு ஏன், அது புரட்சிகரப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களானாலும் சரி, அங்கும் ‘பட்டாச்சாரியா’க்களாகவும், ‘மிஸ்ரா’க்களாகவும் இருந்து வரும்போது, பொது வெளிகளில் சாதிய பின்னொட்டுக்களோடும், சில போழ்து சொந்தப் பெயர்கள் மறைந்து அந்த சாதியப் பின்னொட்டுக்களே பெயர்களாய்ப் பவனி வரும் இந்த நாட்களிலும், தமிழகத்தில் மட்டுந்தான் பின்னொட்டுகளை, முன்னொட்டுக்களை வால்களே அற்று, அவரவர் பெயர்களோடு மட்டுந்தான் வலம் வருவார்கள். இங்கும் மூப்பனார் போன்ற விதிவிலக்குகள் உண்டு என்றாலும், அது பொதுப் போக்காக இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.

நக்சல்பாரி புரட்சிகரக் கட்சியின் தமிழக அனுபவத்தினை இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்திய ஒன்றியத்தில் தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களிலிருந்து, சாதியப் பின்னொட்டுகளோடு நக்சல்பாரி புரட்சிகரக் கட்சியின் தலைவர்கள் தமிழகம் வரும்போது, இங்கிருக்கும் நாங்கள் அவர்களிடமே நேரடியாய் விமர்சிப்போம். ஏன்? என்று கேட்போம். அதற்கு அவர்கள் இறுத்த விடை என்ன தெரியுமா?

"தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் உங்களுக்குத் தந்திருக்கும் பக்குவம் என்பது எங்கள் பகுதிகளில் எல்லாம் கிடையாது. நாங்கள் உங்கள் நிலைக்கு வர இன்னும் பல படிகள் ஏறி வந்தாக வேண்டும்" என்பார்கள்.

நாங்களும் அவர்களை வரவேற்க, சுவரொட்டிகள் தயாரிக்கும்போது, தோழர் வினோத் என்றும், தோழர் நாகபூஷன் என்றும், பொதுவெளிக்கு அடையாளம் தெரிய வேண்டி, எந்தச் சாதிப் பின்னொட்டுக்களால் அவர்கள் அறியப் பட்டார்களோ, அந்தச் சாதிப் பின்னொட்டுக்களை அடைப்புக்குறிக்குள் தந்து அச்சிடுவோம்.

ஆக, இங்கு சூட்டப்படும் எல்லாப் பெயர்களுமே சாதி, மத, பால் அடையாளங்களோடுதான் இருக்கும் என்றாலும், இந்தச் சாதியப் பின்னொட்டுக்கள், வால்களைச் வெட்டிக் கொள்ளும் பொது மனோ நிலையை உருவாக்கி, உலவ விட்டது, நிறுவ விட்டது தந்தை பெரியாரும் அவர்தம் சுயமரியாதை இயக்கமும்தான். அதற்குத் துவக்கம் கொடுத்தது புகழ் வாய்ந்த செங்கற்பட்டு சுயமரியாதை மாநாடுதான்.

அந்த மாநாடு தீர்மான அறைகூவல்களை விடுத்தது. “தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைப் காட்டும் பட்டங்களை விட்டுவிட வேண்டும்” என்று அறை கூவியது. அதுமட்டுமல்ல, “ஜாதி அல்லது சமயப் பிரிவுகள் காட்டும் குறிகளை யாரும் அணிந்து கொள்ளக் கூடாது” என்றும் ஆணையிட்டது மாநாடு.

இவ்வாறாக, சுயமரியாதை இயக்கமும், குடிஅரசும் அன்று காத்திரமாகக் களமாடியதின் விளைவு. இன்றைய தமிழ்ச் சமூகப் புழங்கு வெளிகளில் மணவிழா அழைப்பிதழை எடுத்துப் பாருங்கள். மணமகனோ அல்லது மணமகளோ அவர்களின் பெயர்களுக்கு முன் இன்னாரின் பேரனும், பேத்தியும், அந்த இன்னாரின் பெயருக்குப் பின்னே சாதிய வால் தொங்கிக் கொண்டிருக்கும். ஆனால், இன்னாரின் மகனும், மகளும் என்பதற்கு, அந்த இன்னாரின் பெயருக்குப் பின் பெரும்பாலும் சாதிய ஒட்டு இருக்காது. மிகச் சிலவாகவே ஆங்காங்கே இன்னும் இருந்தாலும், நிச்சயம் அந்த மணமகன் பெய‌ருக்குப் பின் அந்த ஒட்டு இருக்கவே இருக்காது.

இந்த சாதியப் பெயரொட்டுப் பொசுக்கலுக்குத் துவக்க நெருப்பு எடுத்துக் கொடுத்தவர் பெரியார். எடுத்துக் கொடுத்தது செங்கற்பட்டு சுயமாரியாதை மாநாடு. இப்படியான மாநாட்டு அறைகூவல்களோடும், ஆணைகளோடும் அமைதியாய் இருந்து விடவில்லை பெரியார். உடனே தனது இதழான குடிஅரசில் “இதன்படி ஜாதிப் பட்டங்களையும், மதச் சின்னங்களையும் நீக்கியவர்கள் பட்டிய”லை வெளியிட்டு முன்மாதிரியாக்கியது.

அதே சமயம் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யவில்லை தந்தை பெரியார். குடிஅரசில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதுவரை பெரியாரை நாயக்கர் என்றுதான் பலரும் அழைத்து வந்தார்கள். இனி தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து சாகும்வரை போராடினார், களம் கண்டார். ஒருவரிடம் சாதியம் உள்ளுக்குள்ளிருந்தாலும், பொதுவெளியில், புழங்கு வெளியில் அதைக் காட்டிக் கொள்வதில், தவிர்ப்ப‌தை, தவிர்த்ததை, தயக்கத்தை இந்தத் சாதியத் தமிழக மண்ணில் சாதித்துக் காட்டினார் தந்தை பெரியார்.

ஆனால் இன்றோ, தமிழ்ப் புழங்கு வெளிகளில், சாதியப் பின்னொட்டுக்களை பெருமிதத்தோடு மனமுவந்து, கூச்ச நாச்சமின்றி அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலை மெல்ல மெல்ல தலைகாட்டுகிறது. அதன் தொடர்சியாக முகநூல், கட்செவி அஞ்சல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் அது ஆதிக்கம் செலுத்தத் துவங்கியுள்ளதை நம்மால் காண முடிகிறது. இப்போக்கை வளரவிட்டால், ஏற்கெனவே பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் சாதிக்கு, சலங்கை கட்டிவிடுவது போலாகும்.

முகத்தில் மூத்திரம் பெய்வதும், மலத்தைத் தின்னக் கொடுப்பதும், மாற்றுச் சாதிக் காதலை மாய்க்க ஆணவக் கொலைகள் செய்வதும் தமிழகம் ஏற்கெனவே பேயாட்டம் ஆடித்தான் வருகிறது. அதற்கு கூடுதலாக சலங்கை கட்டிவிடப் போகிறோமா நாம்? இப்போக்கைத் தொடரவிடப் போகிறோமா நாம்? அனுமதிக்கப் போகிறோமா நாம்?

இங்கு மாறி மாறி ஆட்சி செய்த சுயநல ஆட்சியாளர்கள், திராவிட வழிவந்தவர்கள் நாங்கள் என்று வாய்ப்பந்தல் இட்டாலும், அவைகள் தங்கள் வாக்கு வங்கிச் சேமிப்பிற்காய் இதுபோன்ற தலை காட்டல்களை வேரறுக்காமல், அமைதியாக அனுமதிக்கும் போக்கு தொடர்கிறது. அப்படியானால், எது தீர்வு? எங்கே தீர்வு?

'ஒரு விரல் புரட்சி' என்று திட்டமிட்டுப் பரப்பப்படும் வெத்துவேட்டு ஓட்டுச் சீட்டு அதிகாரத்தினால் ஒருபோதும் இதைச் சாதிக்க முடியாது. மாறாக, மறுபடியும் அந்தக் தொண்டுக் கிழவனிடம்தான் இருக்கிறது தீர்வு. வெகுவாய்த் திரண்ட கருஞ்சட்டைப் பேரணி வீரர்களின் கைகளில்தான் இருக்கிறது தீர்வு. கருஞ்சட்டை, செஞ்சட்டை, நீலச்சட்டையினரின் களமாடல்களில்தான் இருக்கிறது தீர்வு.

- பாட்டாளி

Pin It