நாத்திகர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட்டாக இருப்பதில்லை. நாத்திகத்தை தங்களின் வாழ்வின் கொள்கையாக ஏற்றுக் கொண்ட பல பேர் அப்பட்டமாக முதலாளித்துவத்தை ஆதரிக்கும் புல்லுருவிகளாகவும், வர்க்க சுரண்டலை ஆதரிப்பவர்களாகவும் இருப்பதை நாம் பார்க்கின்றோம். தமிழ்நாட்டிலேயே அதுபோன்ற பலபேரை நம்மால் பட்டியலிட முடியும். கார்ப்ரேட்களை ஆதரித்துக் கொண்டு, வாய்கிழிய பகுத்தறிவு பேசும் இவர்கள் கடவுளையோ, மதத்தையோ வர்க்கப் பார்வையுடன் அணுகுகின்றவர்கள் கிடையாது. தம்மளவில் முதலாளித்துவ தாசர்களாகவும், சொகுசு பேர்வழிகளாகவும் இருக்கும் இவர்கள் பேசும் பகுத்தறிவுவாதத்தால் சமூகத்துக்கு பத்துபைசா கூட பிரயோசனம் கிடையாது. ஆனால் தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் கட்டாயமாக நாத்திகராகவும், பகுத்தறிவுவாதியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் முதலாளித்துவ சுரண்டலைக் காப்பாற்ற, நீடித்து நிலைக்கச் செய்ய கடவுளும், சாதியும், மதமும் எப்படி பயன்படுகின்றது என்பதை அம்பலப்படுத்த முடியும்.
ஒரு நாத்திகனுக்கு சமூகத்தைப் பற்றிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு நிச்சயம் அவை தெரிந்திருக்க வேண்டும். அது தெரிந்திருந்தால் மட்டுமே நாம் வாழும் சமூக அமைப்பை பற்றிய தெளிவான சித்திரத்தை நம்மால் தொழிலாளி வர்க்கத்துக்கு அளிக்க முடியும். இறுதி குறிக்கோளாக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும், இருக்கும் சமூக அமைப்பிற்குள்ளாகவே சில சில்லரை சீர்த்திருத்தங்கள் செய்து முதலாளித்துவத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டு வர்க்க மோதலை மட்டுப்படுத்துவதை மட்டுமே செய்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
ஒரு பிரச்சினையை கம்யூனிஸ்ட்கள் அணுகுவதற்கும், மற்ற கார்ப்ரேட் அடிவருடிகள் அணுகுவதற்கும் உள்ள முறையில் இருந்தே இதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஒரு கம்யூனிஸ்ட் அனைத்துப் பிரச்சினைகளையும் ஒடுக்கப்படும் மனிதனின் சார்பாக நின்றே பேசுகின்றான். பொதுவுடமை சிந்தனையற்ற நாத்திகவாதியைவிட ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு பொறுப்புகள் அதிகம். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதையும் பேசிவிட்டுப் போய்விட முடியாது.
இன்று தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பேசுபொருளாக மாறி இருக்கும் சிலை கடத்தல் பிரச்சினையில் சிக்கியுள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனுக்கு ஆதரவாக சிபிஐ பொதுச் செயலாளர் முத்தரசன் அவர்களும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களும் விடுத்திருக்கும் அறிக்கை ஒட்டுமொத்தமாக முற்போக்குவாதிகள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. நிச்சயமாக இவர்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு என்பது சிலை கடத்தல் என்பதையும் தாண்டி, கார்ப்ரேட்டுகளுடன் முத்தரசனுக்கும், வைகோவுக்கும் உள்ள கள்ள உறவையும் அம்பலப்படுத்துவதாக இருக்கின்றது. முதலில் இருவரும் வேணு சீனிவாசனுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையைப் பார்ப்போம்.
முத்தரசன் தனது அறிக்கையில்
"தனியார் நிறுவனங்களில் ஒரு முன்மாதிரி நிறுவனமாக விளங்கி வருகின்ற டிவிஎஸ் நிறுவனத்தின் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் மீது, கோயில் சிலை கடத்தல் வழக்கு பதிவு செய்திருப்பது வியப்பாக உள்ளது. மையிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருப்பணிக்கு ரூ.70 லட்சம் வழங்கியுள்ளார். திருவரங்கம் கோயில் அறக்கட்டளைத் தலைவராகவும் உள்ளதுடன், அக்கோயில் கும்பாபிஷேகப் பணிகளுக்கு ரூ.25 கோடி நிதியும் வழங்கியுள்ளார். மேலும் பல கோயில்களுக்கு நிதி வழங்கியதுடன், பல்வேறு பொதுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டுள்ளார். அவ்வாறு இருக்க, அவரை கோயில் சிலை மாயமான வழக்கில் சேர்த்திருப்பது உள்நோக்கமுடையதாகத் தெரிகின்றது. யாருடைய தூண்டுதல் பேரில் இவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும்.
வேணு சீனிவாசன் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறுவதுடன் சிலைகள் கடத்தல் வழக்குகளில் அப்பாவிகள், அதிகாரிகள் மீது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வழக்குகள் பதிவு செய்திருந்தால், அவற்றை திரும்பப் பெறப்படுவதுடன் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அதே போல வைகோ அவர்கள்,
"நேர்மையானவர், தொழிலதிபர் டி.வி.எஸ். குழுமத்தின் வேணு சீனிவாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமின் கேட்டிருப்பதாகவும் செய்தி அறிந்து திடுக்கிட்டு, அதிர்ச்சி அடைந்தேன்.
இந்தியாவிலேயே புகழ்பெற்ற தொழில் நிறுவனமான டி.வி.எஸ். குழுமம், இலட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வு அளித்துள்ளது..." என்றும்.
“……….தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து நெல்லை மாவட்டம் வரையிலும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள நவ திருப்பதி என்று அழைக்கப்படும் ஒன்பது வைணவக் கோயில்களுக்கும் வேணு சீனிவாசன் அவர்கள் ஏற்பாட்டில் திருப்பணியும், குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்டது. ஆங்காங்கு உள்ள அனைத்துத் தரப்பினரிடமும் அவர்களால் இயன்ற அளவு நிதியைப் பெற்று, தானே இருபது கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்தத் திருப்பணியில் ஈடுபட்டார். 2015-ம் ஆண்டு வேணு சீனிவாசன் திருவரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். வேணு சீனிவாசன் தன்னுடைய சொந்த அறக்கட்டளையிலிருந்தே திருப்பணிக்கு 25 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்.
தமிழகத்திலும், கர்நாடகா, கேரளத்திலும் உள்ள நூறு ஆலயங்களுக்கு தனது சொந்த அறக்கட்டளை பணத்திலிருந்து செலவழித்து திருப்பணி செய்திருக்கிறார். கோயிலில் முறைகேடு நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் வேணு சீனிவாசனையும் சேர்த்து வழக்குப் பதிவு செய்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏர்வாடி பகுதியில் அனைத்துச் சமயங்கள், சாதிகள் சார்ந்த மக்களை ஒருங்கிணைத்தே அந்தந்த ஊர்களில் மகளிர் சுயஉதவி நிதி, கண்மாய்கள் சீரமைப்பு ஆகியவற்றை தனது சொந்த அறக்கட்டளை நிதியிலிருந்து செய்து வரும் செயலை எவ்விதத்திலும் அவர் விளம்பரப்படுத்திக் கொள்வது இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.
தமிழ் மொழியின்பால் பற்றும், தமிழ் இலக்கியங்கள்பால் உயர்ந்த ஈர்ப்பும் கொண்டுள்ள வேணு சீனிவாசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து தமிழக அரசு உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். அறவழியில் நடப்போர் மீது வழக்குத் தொடுப்பதும், தவறு செய்யாத ஒருவர் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி, அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதும் சகிக்க இயலாதது. அக்குற்றச்சாட்டிலிருந்து தமிழக அரசு அவரது பெயரை நீக்கி அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.
முத்தரசன் மற்றும் வைகோ அவர்களின் அறிக்கைகளில் சாரமாக இருக்கும் செய்தி வேணு சீனிவாசன் மிகவும் தயாள குணம் கொண்டவர். முதலாளிகளிலேயே மிகவும் நேர்மையான முதலாளி, அவர் பல கோயில்களுக்கு திருப்பணிகள் செய்துள்ளார் மற்றும் ஏழைகளுக்கும் உதவியுள்ளார் என்பதுதான். எனவே இதை எல்லாம் செய்ததால் வேணு சீனிவாசன் ஒரு அக்மார்க் யோக்கியன் என்பதில் முத்தரசன் அவர்களும். வைகோ அவர்களும் ஒரே புள்ளியில் ஒன்றுபடுகின்றார்கள். வேணு சீனிவாசன் மீது முத்தரசன் மற்றும் வைகோ போன்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்க்கும் போது நமக்கு கீழ் வெண்மணி படுகொலையில் முக்கிய குற்றவாளியான கோபால கிருஷ்ண நாயுடுவை விடுதலை செய்ய நீதிபதி மகராஜன் சொன்ன காரணம் தான் நினைவுக்கு வருகின்றது, "கார், நிலம், உடமை உள்ள பணக்காரர்கள் தாங்களே கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை”.
மண்ணையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்தி வளங்களை சூறையாடி, உழைக்கும் வர்க்கத்தை ஒட்டச் சுரண்டி, கோடான கோடி மக்களை பட்டினிச் சாவுக்குள் தள்ளும் பெருமுதலாளி வர்க்கம், தான் கொள்ளையிட்ட பணத்தில் இருந்து ஒரு சிறு பகுதியை மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்துவது என்பது ஏதோ ஏழை மக்களின் வாழ்க்கையின் மீது கொண்ட பெருங்கருணையினால் அல்ல என்பதும், அந்த உதவிகூட சுரண்டப்படும் வர்க்கத்தின் மனதில் கனன்று கொண்டிருக்கும் வர்க்கப்பகையை மட்டுப்படுத்தவும்தான் என்பதும் வெளிப்படையான உண்மைகள். இதை வேறு யாரைக் காட்டிலும் கம்யூனிஸ்ட்டுகள் நன்கு உணர்ந்தவர்கள் ஆவார்கள். வேணு சீனிவாசன் மட்டுமல்ல, போர்டு பவுண்டேசன், ராக்பெல்லர் பவுண்டேசன், கோக்கோ கோலா பவுண்டேசன், மைக்ரோசாஃப்ட் பவுண்டேசன் போன்றவை உலகம் முழுவதும் இதைத்தான் செய்து வருகின்றன. இதை எல்லாம் செய்வதால் இவர்களை உலக உத்தமர்கள் வரிசையில் வைத்து யாரும் மதிப்பிடுவது கிடையாது.
ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும், அவர்கள் வசிக்கும் பகுதியில் கழிப்பறைகள் கட்டிக் கொடுப்பதும், மின் விளக்குகள் அமைத்துக் கொடுப்பதும், கோயில் உண்டியலில் பணம் போடுவதும், கோயில் திருப்பணிகள் செய்து தருவதும் ஒருவனை நேர்மையானவனாகக் காட்ட போதுமானது என்றால், இந்தியாவில் இருக்கும் சாராயம் காய்ச்சுபவன், கள்ளக்கடத்தல் செய்பவன், விபச்சாரத் தொழில் செய்பவன், கல்வி வியாபாரம் செய்பவன், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என அனைவருமே உத்தமர்கள் வரிசையில் வந்துவிடுவார்கள். குறைந்தபட்ச நேர்மையும் நாணயமும் உள்ள யாரும் இதுபோன்ற நபர்களுக்கு யோக்கியன் என்ற சான்றிதழை கொடுக்க மாட்டார்கள். அப்படி கொடுப்பார்களேயானால், நிச்சயம் அவர்களிடம் குறைந்தபட்ச நேர்மையும், நாணயமும் கூட கிடையாது என்பதுதான் உண்மை.
சர்வதேச அளவில் சிலை கடத்தல் தொழிலில் மட்டும் 45 ஆயிரம் கோடிக்கும் மேல் பணம் புரள்வதாக சொல்கின்றார்கள். அப்படிப்பட்ட நிலையில் அதில் வேணு சீனிவாசன் போன்ற பெருமுதலாளிகளுக்கு தொடர்பு இருக்காது, காரணம் அவர் நேமையான முதலாளி, கோயில் திருப்பணி செய்துள்ளார், ஏழைகளுக்கு உதவியுள்ளார் என்று வழியப் போய் வைகோவும், முத்தரசனும் அறிக்கை விடுவது உள்ளபடியே இருவரும் யாருக்கான நபர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. தமிழ்நாட்டிலே கம்யூனிஸ்ட் கட்சிகள் வளராமல் நாசமாய் போனதற்குக் காரணம் என்னவென்று இன்றைக்கு இருக்கும் இளைய தலைமுறையினர் பல பேருக்குத் தெரியாது. அப்படி தெரியாமல் இருப்பவர்கள் இப்போது நன்றாக தெரிந்துகொண்டு இருப்பார்கள் என்று நம்புகின்றோம்.
பல ஆயிரம் பேரை வைத்து ஒரு தொழிற்நிறுவனம் நடத்தி உற்பத்தியை உலக சந்தையில் கொண்டுபோய் விற்று, பணம் சம்பாதிப்பதைவிட பஞ்சலோக சிலைகளையும், ஐம்பொன் சிலைகளையும், சோழர், பல்லவர் கால கற்சிலைகளையும் திருடி விற்பது மிகவும் லாபகரமான தொழில் என்பது வைகோவுக்கும், முத்தரசனுக்கும் தெரியுமா என்று தெரியவில்லை. கடத்தப்படும் சிலைகளை வாங்குபவன் எவனும் குப்பனும், சுப்பனும் இல்லை. அனைவருமே ஊரைக் கொள்ளையடித்து சேர்த்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல், தம்முடைய பிரதாபத்தைக் காட்டுவதற்காக இது போன்ற சிலைகளை வாங்குபவர்கள்தான். ஒரு வேளை இவர்கள் கூட வேணு சீனிவாசன் போன்று சில பல கோயில்களுக்கு அறங்காவலர்களாகவோ, ஏழைகளுக்கு உதவிசெய்பவர்களாகவோ இருக்கலாம். இதை எல்லாம் வைத்துக் கொண்டு குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் மீது விசாரணை நடத்துவதற்கு முன்பே போய் யோக்கியவன் சான்றிதழ் கொடுப்பது அவமானகரமான செயலாகும்.
இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதற்காக சிபிஐ கட்சி முத்தரசன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என்று தெரியவில்லை. தா.பாண்டியன், தளி.ராமசந்திரன் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கட்சி இவரின் மீதும் நடவடிக்கை எடுக்காது என்று உறுதியாக நம்புவோம். தமிழ்நாட்டில் கட்சியை வலுவாகக் காலூன்ற தோழர்கள் எத்தகைய மகத்தான தியாகத்தையும் செய்வார்கள் என்பது நமக்குத் தெரியும். வைகோ பற்றி யாருக்கும் கவலையில்லை. அவர் எதை வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம். அவரே அவரைக் கட்சியில் இருந்து நீக்கிக் கொண்டால் தான் உண்டு.
ஒருபக்கம் இந்து பயங்கரவாதிகள் இந்து சமய அறநிலையத் துறையை கலைத்துவிட்டு கோயில் சொத்துக்களை எல்லாம் ஊர் பெரிய மனிதர்களின் வசம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று, கோயில் சிலைகளை வசதியாக திருடி விற்க கோரிக்கை வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இன்னொரு பக்கம் இதை எதிர்க்க வேண்டியவர்கள் அப்படி திருடி விற்கும் குற்றக்கும்பலுக்கு ஆதரவாக கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்துகின்றார்கள். தேனை எடுத்தவர்கள் யார் என்பதும், புறங்கையை நக்கியவர்கள் யார் என்பதும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அவர்களின் விசாரணையின் மூலம் நிச்சயம் வெளிவரும் என்று உறுதியாக நம்புவோம்.
- செ.கார்கி