மோடி ஆட்சியின் கடைசி பட்ஜெட் வெளிவந்து விட்டது. ஒவ்வொரு பட்ஜெட் வெளியாகும் போதும் நடுத்தர வர்க்கமும், தேசிய முதலாளிகளும், தரகு முதலாளிகளும், கொஞ்சம் அரசியல் உணர்வு பெற்ற தொழிலாளர் வர்க்கமும் தனக்கு ஏதாவது பட்ஜெட்டில் சலுகை அறிவிக்கப்பட்டிருக்குமா என்று ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். வழக்கம் போல இந்தியப் பெருமுதலாளிகளின் ஏவல் நாயான இந்திய ஆட்சியாளர்கள் பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகையும், கோடான கோடி இந்திய மக்களுக்கு பட்டை நாமத்தை சாத்துவதையும் வழக்கமாக செய்வார்கள். அதுவும் மோடி அரசு பதவியேற்றதில் இருந்து இந்த எண்ணம் இந்திய மக்களிடம் மேலோங்கி இருக்கின்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக மோடியின் கபட நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நொந்து நூலாகிப்போன சாமானிய மக்கள் மோடி ஆட்சியின் இந்தக் கடைசி பட்ஜெட்டை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. புராண புளுகுகளைவிட பிஜேபி பொய்யர்களின் புளுகு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை என்பதை மக்கள் இந்த நான்காண்டு கால பிஜேபி ஆட்சியில் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
அதனால் மக்கள் இந்த அரசிடம் இருந்து ஏதாவது சலுகைகள் கிடைக்கும், அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் கொஞ்சமாச்சும் உயரும் என்ற சிந்தனையில் இருந்து, இருப்பதை பிடுங்கிக்கொண்டு விடாமல் இருந்தாலே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டியும் ஓட்டுமொத்த நாட்டின் தொழிற்வளர்ச்சியையும் அழித்து, ஏற்கெனவே தட்டுத் தடுமாறிக் கொண்டு இருந்த சிறு தொழில்களை சுடுகாட்டிற்கே அனுப்பியது. பெருவாரியான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துக் கொண்டிருந்த சிறு குறு தொழில்களின் அழிவானது நாட்டில் கடுமையான வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தி இருக்கின்றது. உற்பத்தித் துறையில் மட்டும் கடந்த ஆண்டு 40 சதவீத வேலை இழப்பு ஏற்பட்டு இருக்கின்றது. ஒரு பக்கம் மோடி அரசின் கேடுகெட்ட பொருளாதாரக் கொள்கைகளால் வேலை இழப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்க, இன்னொருபுறம் இந்தியாவில் வேலை செய்யத் தகுதியான 27 சதவீதம் பேருக்கு வேலையில்லை என்று குளோபல் ஹீயுமன் கேபிடல் ஆய்வு தெரிவிக்கின்றது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கத் துப்பில்லாத மோடி அரசு, இருக்கும் வேலை வாய்ப்புகளையும் பறித்து கோடான கோடி இந்திய மக்களை நடுத்தெருவில் நிறுத்தி இருக்கின்றது.
இந்த அரசின் நோக்கமெல்லாம் சாமானிய எளிய மக்களை எப்படி கைதூக்கிவிடுவது என்பதெல்லாம் கிடையாது. தனது கட்சியின் அஜண்டாவான பார்ப்பனிய சித்தாந்த மேலாண்மையை இந்தியாவின் கடைகோடி மனிதன்வரை கொண்டு சென்று, அவனை ஒரு நல்ல இந்துவாக, சாதிய வருணாசிரம தர்மத்தையும், அதை தாங்கி நிற்கும் இந்து பார்ப்பன தத்துவ இயலையும் விதந்தோதும் மனிதனாக மாற்றுவதுதான். உலகிலேயே மிகவும் மாசடைந்த கங்கையைப் புனிதப்படுத்தவும், மாட்டுக்கறி தின்பவர்களையும், ஏன் தின்றதாக சந்தேகிக்கப்படுபவர்களையும் கூட அழித்தொழித்து பார்ப்பன மேலாண்மையை உறுதி செய்வதும், நாடு முழுவதும் இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதையும் தான் இந்த அரசு தனது முழு நேரக் கொள்கையாக கொண்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் 4 கோடி பசுக்களுக்கு அடையாள எண் இடுவதற்காக 50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் பசுக்களின் வயது, பாலினம், உயரம் மற்றும் சிறப்பு அங்க அடையாளங்கள் பதிவு செய்யப்படும். உலகில் வேறு எங்கேயாவது இப்படி கீழ்தரமான முட்டாள்களின் ஆட்சி நடக்குமா என்று தெரியவில்லை. மேலும் செயற்கை முறையில் பசுக்களை கருத்தரிக்க வைத்து அதன் எண்ணிக்கையைப் பெருக்க தனியாக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல கங்கையை சுத்தப்படுத்த இந்த பட்ஜெட்டிலும் நமாமி கங்கா திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டியும் இன்னும் கங்கை சுத்தமாகாமல் இருப்பதற்குக் காரணமே பார்ப்பன மூடநம்பிக்கைகள்தான். அது ஒழியும் வரை நிச்சயம் கங்கையை சுத்தப்படுத்துவது என்பது கூவத்தை சுத்தப்படுத்துவதை விட சிரமமான காரியமாகவே இருக்கும்.
ஒரு பக்கம் பார்ப்பன பாசிசத்தைக் காப்பாற்ற நிதி ஒதுக்கும் மோடி அரசு, தொடர்ச்சியாக பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகையை அறிவித்து வருகின்றது. 250 கோடிக்கு மேல் பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்களுக்கான கார்ப்ரேட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்திருக்கின்றது. வருடா வருடம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் இந்தியா முழுவதும் குறிப்பாக பிஜேபி ஆளும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் செத்துக்கொண்டு இருக்கின்றார்கள் ஆனால் விவசாயிகளின் முதன்மைக் கோரிக்கையான விவசாய கடன் தள்ளுபடியைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவில் இருந்து 1.5 சதவீதம் ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. நிச்சயம் இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. திட்டமிட்ட விவசாய உற்பத்தியைப் பற்றிய எந்தக் கருத்துமே இந்த அரசிடம் இல்லாத போது, ஆதார விலையை உயர்த்துவதால் பெரிதாக ஒன்றுமே நடந்துவிட முடியாது. எந்தெந்த விவசாயப் பொருட்களுக்கு ஆதார விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது என்பதைக்கூட தெளிவாக வரையறுக்காததில் இருந்தே இது ஒரு மோசடியான திட்டம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் ஒன்றும் கிழிக்க முடியாத மோடி அரசு, திரும்பவும் 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவோம் என்று மீண்டும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டு இருக்கின்றது.
மேலும் கல்விக்கான ஒதுக்கீடும் மொத்த செலவினங்களில் 2.1 சதவீதத்தில் இருந்து 2.0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று மாமா வேலை பார்க்கும் மோடி அரசு, இந்தப் பட்ஜெட்டிலும் 80000 கோடி அளவிற்கு அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. ஆக மொத்தம் இந்த நான்கு ஆண்டுகளில் மோடி அரசு யாரின் நலன் காக்க செயல்பட்டுக் கொண்டிருந்ததோ, இப்போதும் அவர்களின் நலன் காக்கவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தியப் பெருமுதலாளிகள், தரகு முதலாளிகளின் நலனை முன்னிலைப்படுத்தி செயல்படுவது மட்டுமே எப்போதும் இந்திய ஆட்சியாளர்களின் ஒரே குறிக்கோள். அதற்கு காங்கிரசோ, இல்லை பிஜேபியோ விதிவிலக்கானவர்கள் கிடையாது. பெருமுதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்தால் அதனால் ஏற்படும் சாமானிய மக்களின் கோபத்தைத் தணிக்க கொஞ்சம் கிள்ளிக் கொடுப்பார்கள். அதுதான் தர்மபிரபுக்களின் வாடிக்கையான செயல்.
மேலும் இந்த பட்ஜெட்டில் குடியரசுத் தலைவரின் சம்பளம் 1.5 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. அதே போல துணை குடியரசுத் தலைவரின் சம்பளமும் 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதே போல மாநில ஆளுநர்களின் சம்பளமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாமானிய மக்கள் ஒருவேளை சோற்றுக்கே அல்லாடிக்கொண்டு இருக்கும் போது மக்களுக்காக சேவை செய்யவே அரசியலுக்கு வந்தோம் என்று மார்தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தங்கள் சம்பளத்தை இப்படி வெட்கம்கெட்ட முறையில் பல மடங்கு உயர்த்திக் கொள்ள கூச்சப்படுவதில்லை.
வருமானவரி உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும், ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்றும் மோடி கொடுத்த வாக்குறுதிகள் குரங்குகளும், அணில்களும் சேர்ந்து இலங்கைக்கு பாலம் கட்டியதைவிட மிகப்பெரிய வரலாற்று மோசடியான பொய் என்பதை இந்திய நடுத்தர வர்க்கமும், சாமானிய மக்களும் உணர்ந்து விட்டார்கள். மாட்டு மூத்திரத்தைக் குடிப்பவனிடம் நாட்டைக் கொடுத்தால் அவன் நாட்டை என்ன செய்வான் என்பதை இந்த நான்காண்டு ஆட்சியில் மக்கள் தங்களின் சொந்த அனுபவம் மூலமே புரிந்து கொண்டிருக்கின்றார்கள். இது மோடி அரசின் கடைசி பட்ஜெட் மட்டும் அல்ல, பிஜேபியின் கடைசி பட்ஜெட். இனி வரலாற்றில் பிஜேபிக்கு பட்ஜெட் போடும் வாய்ப்பு எப்போதுமே கிடைக்கப் போவதில்லை. அதனால் இந்த பட்ஜெட்டை நாம் பிஜேபியின் மரண வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம்.
- செ.கார்கி