இன்னும் இரண்டு கோடி ரூபாய் இருந்தால் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான தொகையான 40 கோடி ரூபாய் கிடைத்துவிடும் என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறுகின்றார். புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைப்பதன் மூலம் உலகம் முழுவதும் தமிழ் மொழியின் சிறப்புகள் அவர்களின் நாகரிகம், பண்பாடு பற்றிய ஆய்வுகள் நடப்பதற்கு வசதி ஏற்படும் என்று சொல்லப்படுகின்றது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தமிழ் இருக்கையை அமைப்பதற்கு தமிழக அரசும், தமிழை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கும் நபர்களும் செய்த உதவி என்பது உண்மையில் இவர்களுக்கு தமிழின் மீதும், தமிழினத்தின் மீதும் உள்ள அக்கறை எந்த அளவிற்கு பிழைப்புவாதமானது, சுயநலமானது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது.

harvard tamil chair

ஹார்வார்டில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக அந்தப் பல்கலைக்கழகம் கேட்கும் தொகையான 6 மில்லியன் டாலர், இந்திய ரூபாய்க்கு 40 கோடி என்பது நிச்சயம் ஒரு பெரிய தொகையே அல்ல. தமிழக அரசு நினைத்தால் இந்தத் தொகை முழுவதையும் கொடுத்து, இருக்கை அமைப்பதற்கு உதவமுடியும். செத்துப்போன ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு 44 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்க, தமிழ்மக்களின் வரிப்பணத்தை வாரி இறைக்கும் அரசு உள்ளபடியே தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், அதன் பெருமைக்கும் பயன்படப் போகும் தமிழ் இருக்கை அமைப்பதற்காக வெறும் பத்து கோடி ரூபாயை கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகைக்கு பிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது கீழ்த்தரமான செயலாகும்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி இறைத்து, கூத்தடித்துக்கொண்டு இருக்கும் எடப்பாடி அரசு தமிழ் இருக்கை அமைக்க முழுத் தொகையையும் கொடுக்க மறுப்பது ஜெயலலிதாவைப் போலவே ஒட்டுமொத்த கட்சியும் 'தமிழ், தமிழினம் எப்போதுமே மீட்சி அடையக் கூடாது' என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது என்பதைத்தான் காட்டுகின்றது. அதுவும் அறிவு, ஆராய்ச்சி என்ற சொற்கள் எல்லாம் ஒட்டுமொத்த அதிமுக கூட்டமும் அறியாதது. தன்னைப்போலவே ஒட்டுமொத்த கட்சியையும் தற்குறிகளாக வளர்த்தெடுத்த ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்ததும் முதலில் செய்த காரியம் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாக இருந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அழித்தொழிக்க சதித் திட்டம் தீட்டியதுதான். அது தோல்வியில் முடிந்திருந்தாலும், அதிமுக என்ற பார்ப்பன அடிவருடிக் கட்சி எப்போதுமே தமிழர் விரோத பாசிசக் கட்சி என்பதை நாம் புரிந்து கொள்ள சாட்சியாக இருந்தது.

இந்த அரசு ஒட்டுமொத்தமாக அனைத்திலும் தோற்று ஒரு திவாலான அரசாக நடந்து வருகின்றது. நியாய விலைக்கடையில் உளுத்தம் பருப்பு கொடுக்க காசு இல்லை, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கக் காசு இல்லை, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தக் காசு இல்லை என கையை விரிக்கும் அரசு தனக்கும், தனது கூட்டாளிகளுக்கும் மட்டும் இவ்வளவு நிதி நெருக்கடியிலும் சம்பளம் உயர்த்திக் கொள்ள மட்டும் தயங்கவில்லை. சரி அரசுக்குத்தான் தமிழ் மீதும், தமிழர் நலன் மீதும் எப்போதுமே அக்கறையில்லை. அதனால் தமிழ் இருக்கை அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தமிழையும், சைவத்தையும் வளர்ப்பதற்காகவே உருவான நிறுவனங்கள் போன்று பல்லாயிரம் கோடி சொத்துமதிப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சைவமடங்களான திருவாடுதுறை, மதுரை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற மடங்களும் தமிழ்நாட்டில் 'தமிழை வளர்ப்பதற்கென்றே' பார்ப்பன பயங்கரவாதிகளால் நடத்தப்படும் சங்கரமடமும் இதற்காக என்ன செய்தன என்று பார்த்தால் அவர்களின் உண்மையான யோக்கியதை என்னவென்று தெரியாமல் போகாது.

தமிழ் இருக்கை அமைப்பதற்காக நடிகர் கமல் அவர்கள் 20 லட்சமும், ஏ.ஆர். ரகுமான் அவர்கள் 16 லட்சமும், நடிகர் சூர்யா மற்றும் விஷால் போன்றவர்கள் 10 லட்சமும், ஏழைக் கவிஞர் வைரமுத்து அவர்கள் 5 லட்சமும் என அவரவர்கள் தங்களால் முடிந்த நிதியை அளித்து, எப்படியாவது ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைக்க உதவி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டு மண்ணில் தொழில் தொடங்கி, பல நூறு கோடிகளை இந்த வளங்களை சுரண்டி பணம் ஈட்டிய பல்வேறு தொழில் முதலாளிகள் எவனும் இதற்குப் பெரிய அளவில் உதவியதாக தெரியவில்லை. நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட கோடிகள் கொடுத்த தொழிலதிபர்கள் அவர்களை வாழவைக்கும் தமிழ்நாட்டிற்கும், அதன் மொழிக்கும் பணம் கொடுப்பதற்கு மனம் வரவில்லை.

இந்தத் தமிழ் இருக்கை அமைக்க முன்கை எடுத்துச் செயல்படும் மருத்துவர்களான ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் இருவரும் ஏறக்குறைய ஒரு மில்லியன் டாலர் பணத்தை இதற்காக கொடுத்துள்ளனர். நாடுகடந்து வாழும் அவர்களிடம் இருக்கும் தமிழ் உணர்வு கூட இங்கு தமிழையும் , தமிழர்களையும் வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கும் நபர்களிடம் துளியும் இல்லை என்பது வேதனையானது. தமிழை வளர்க்கின்றோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சியும் சுதந்திரம் அடைந்த இந்த 70 ஆண்டுகளில் தமிழுக்காக பெரிதாக என்ன செய்திருக்கின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. 8 கோடி தமிழர்களைக் கொண்ட ஒரு நாட்டில் ஒரு தமிழன் மருத்துவத்தையும், பொறியியலையும் தமிழில் படிக்க முடியாது, அறிவியல் ஆய்வுகளை தமிழில் மேற்கொள்ள முடியாது என்ற நிலை இருக்கின்றது என்று சொன்னால், இதை விட தமிழர்களுக்கு என்ன அவமானம் நேர்ந்துவிட முடியும்?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிற்போக்கு இலக்கியங்களை மட்டுமே எழுதி, தனது சொத்தாக கொண்டாடிக்கொண்டு இருக்கும் தமிழன் அறிவு பெறுவதற்கு இந்த அரசுகள் என்ன கிழித்திருக்கின்றன? இராமாயணமும், பாரதமும், பக்தி இலக்கியங்களும்தான் தமிழன் அறிவை மழுங்கடித்து அவனை முட்டாளாக, பார்ப்பன அடிமைகளாக மாறச் செய்தன. தமிழின் பெருமை பேசிய தமிழனத்தின் பெருமை பேசிய எந்த நபரும் இதை எல்லாம் கொளுத்த வேண்டும், அறிவு சார்ந்த நூல்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழனை அறிவியல் ரீதியில் சிந்திக்க கற்றுத்தர வேண்டும் என்று யோசிக்கக் கூட இல்லை. ஆண்டாள் எழுதிய ஆபாச இலக்கியங்களை நாம் கொளுத்த வேண்டும் என்று சொன்னால், இங்கிருக்கும் சில அறிவிலிகள் ஆண்டாளை தமிழனத்தின் மூத்த மூதாட்டி என்று சொல்கின்றனர். இது போன்ற பார்ப்பனியத்தையும், பார்ப்பானையும் நக்கிப் பிழைக்கும் நபர்களால்தான் இன்றளவும் தமிழன் தலை நிமிர முடியாமல் கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு இருக்கின்றான்.

எனவே ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு உதவுவதன் வாயிலாக தமிழ் பற்றியும், தமிழரின் ஆதிப் பண்பாடு பற்றியும் உலகம் முழுவதும் தெரிந்துகொள்ள வாய்ப்பு எற்படும். தமிழ் இலக்கியங்களை நேர்மையான முறையில் ஆய்வு செய்யும் போதுதான் தமிழை அழிப்பதற்கென்றே அதன் மீது பார்ப்பன கும்பலால் திட்டமிட்டு திணிக்கப்பட்ட வரலாற்று மோசடிகளை நம்மால் அம்பலப்படுத்த முடியும். உண்மையில் தமிழனுக்கென்று ஒரு வரலாறு இல்லாமல் இருந்திருக்காது. சாதி, மதம் போன்ற குப்பைகள் எல்லாம் கலவாத ஒரு புராதான பொது உடமை சமூகம் நிச்சயம் இருந்திருக்கும். அதை மீட்டெடுக்க வேண்டும் என்றால் சாதியையும், மதத்தையும், அடிமைத்தனத்தையும், ஆபாசத்தையும் இலக்கியம் என்ற பெயரால் தமிழன் மீது திணித்து, அவனை இன்றளவும் முட்டாள் தனத்திலேயே உழலச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் கும்பலை நாம் தனிமைப்படுத்த வேண்டும். அதற்கு ஹார்வார்டு போன்ற பல்கலைக்கழங்களில் நடக்கும் ஆய்வுகள் நமக்கு உதவலாம்.

பார்ப்பனிய அடிமையான அதிமுகவும், அதன் தற்குறித் தலைவர்களும் இதைப் பற்றி கவலைப்படாமல் போனாலும், தமிழ்நாட்டிலும் இன்னும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள வசதி படைத்த, தமிழ் மீதும், தமிழர்களின் நலன் மீதும் அக்கறைகொண்ட நபர்கள் தங்களால் முடிந்த உதவியைச் செய்து எப்படியாவது ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உதவ வேண்டும். செத்துப் போன சமஸ்கிருதத்துக்கு இருக்கை இருக்கும்போது, தமிழுக்கு இல்லை என்றால், அது மிகப்பெரிய அவமானம் ஆகும். எனவே தமிழனும், தமிழும் உலகில் தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்று நாம் விரும்பினால் கண்டிப்பாக ஹார்வார்டு தமிழ் இருக்கை அமைய உதவி செய்ய வேண்டும்.

- செ.கார்கி

Pin It