எந்த கோசத்துடன் பெஹ்லு கான் அடித்துக் கொல்லப்பட்டாரோ அதே கோசத்துடன் அவரைக் கொலை செய்தவர்கள் விடுதலையும் செய்யப்பட்டார்கள்.

பெஹ்லுகான் எனும் 55 வயது முதியவர் இந்நாட்டில் பகலில் நடுரோட்டில் வைத்து பசு குண்டர்கள் எனும் கும்பலால் கொலை செய்யப்படுகிறார். அதனை வீடியோவாகவும் எடுத்து நாடு முழுக்க பரப்பினார்கள். ஆனாலும் நீதிமன்றம், சாட்சியங்கள் போதவில்லை என குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரையும் விடுதலை செய்தது. 6 பேர் விடுவிக்கப்பட்டதும் நீதிமன்ற வளாகத்தில் 'பாரத் மாதா கி ஜே' கோசத்தை எழுப்பினர் சிலர். இது நீதிக்கான கோசம் இல்லை, இந்துத்துவ சக்திகள் கட்டியெழுப்பிருக்கும் இந்துராஷ்டிராவுக்கான வெற்றி கோசம்.

pehlu khan murderஎந்த கோசத்துடன் பெஹ்லு கான் அடித்து கொல்லப்பட்டாரோ அதே கோசத்துடன் அவரை கொலை செய்தவர்கள் விடுதலையும் செய்யப்பட்டார்கள்.

பெஹ்லுகான் கொலை

ஏப்ரல் 1, 2017ல் 55 வயதான பெஹ்லு கான் சந்தையில் இருந்து பால் வியாபாரத்துக்காக மாடு வாங்கி வரும் போது விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பைச் சார்ந்தவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். தனது மரண வாக்குமூலத்தில் கும்பலில் இருந்த ஆறு பெயரின் பெயரையும் கூறியிருந்தார் பெஹ்லு கான்.

பெஹ்லு கான் அடித்து சித்ரவதை செய்யப்பட்ட வீடியோ, மரண வாக்குமூலம், வன்முறையில் ஈடுபட்டவரின் வாக்குமூலம் என பல ஆதாரங்கள் இருந்தும் கீழ்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

காவல்துறையின் திட்டமிட்ட அலட்சியப் போக்கு

பெஹ்லுகான் இறந்த போது இரண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஒன்று பெஹ்லுகானை தாக்கியவர்கள் மீது. மற்றொன்று, பெஹ்லுகான் மீதும், அவர் பையன்கள் மீதும் போடப்பட்டது. அதிலிருந்தே காவல்துறையின் கருணை கொலையாளிகளுக்கு இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.

குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை காப்பாற்றும் விதமாக சட்ட வழிவகைகளில் குற்றம் நிரூபிக்கப்படாத வகையில் ஆதாரங்களைத் திரட்டாமல் கைவிட்டது காவல்துறை. முக்கியமான சாட்சியான வீடியோவை தடயவியல் துறைக்கு அனுப்பி உறுதி சான்றிதழ் வாங்கத் தவறியது.

இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்தது, குற்றம் நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவும், போட்டோவும் தான். செல்போனில் வீடியோவை எடுத்த ரவிக்குமார் நீதிமன்றத்தில் இந்த வீடியோவை எடுத்தது தான் என்று ஒத்துக்கொண்ட பிறகும் கூட, பின்னாளில் பிறழ் சாட்சியாக மாறி விட்டார். அதே போல் படத்தை எடுத்த புகைப்படக்காரர் நவால் கிஷோரும் அது தனக்கு நியாபகம் இல்லையென்று நீதிமன்றத்தில் கூறிவிட்டார்.

மிக முக்கியமாக கருதப்பட்ட சாட்சியம் பெஹ்லு கானின் மரண வாக்குமூலம், பெஹ்லுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 மணி நேரத்திற்குப் பின்னால் மரண வாக்குமூலம் காவல்துறையால் பெறப்பட்டிருக்கிறது. ஆனால் வாக்குமூலம் பெறும் முன் மருத்துவரிடம், அவர் வாக்குமூலம் தருவதற்கான உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்று அனுமதி கையொப்பம் பெற வேண்டும். இதனையும் காவல்துறை செய்யவில்லை.

இப்படி சட்டவழிவகைகளில் சிக்காமல் குற்றவாளிகளுக்கு ஏதுவாக திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறது காவல்துறை. இதனை சரி செய்ய வேண்டிய நீதித்துறையும் கூட்டாளியாக இணைந்து தீர்ப்பை நிறைவேற்றியிருக்கிறது.

வீடியோ சாட்சிகள் போதாது

பெஹ்லு கான் அடித்து கொல்லப்பட்ட வீடியோ நாடு முழுக்க பரப்பப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் அந்த வீடியோவில் பெஹ்லு கானைத் தாக்குவது இடம்பெற்றிருக்கிறது. அதிலும் ஒருவர் பெஹ்லுகானின் கழுத்தை நெறித்து தரையில் தள்ளி மீண்டும் மீண்டும் மிதிக்கிறார். ஆனால், இந்த வீடியோவின் தரம் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்குப் போதவில்லை. அந்த வீடியோ தெளிவாக இல்லை. அதனால் ஆறு பேரும் வீடியோவில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை என்று சொல்லி விடுவித்திருக்கிறார்கள்.

நெஞ்சு வலியில் இறந்தார்

பெஹ்லு கான் நடுரோட்டில் கொடூரமாக அடிக்கப்பட்டதை உலகமே பார்த்திருந்தாலும் பெஹ்லு கானின் பிரேதப் பரிசோதனையில் அவர் இறந்ததற்குக் காரணம் மாரடைப்பு என்று அரசு மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அடித்ததனால் உண்டான காயங்களில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறியதால் இறந்திருக்கிறார் என்றும் ஒரு மருத்துவர் அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நீதிபதி இதை நம்பவில்லை. அதனால், மாரடைப்பு வந்தால் உடல் முழுக்க காயம் ஏற்பட்டு ரத்தம் தோய்ந்து இறந்து விடும் உலகின் முதல் நபர் பெஹ்லு கானாகவே இருக்கக் கூடும்.

அப்பாவி என விடுதலை செய்யப்பட்ட நபரின் வாக்குமூலம்

விபின் யாதவ், பெஹ்லுகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர். NDTVக்கு கொடுத்த பேட்டியில் சொல்கிறார், "நாங்கள் ஒன்றரை மணி நேரம் பெஹ்லுகானை அடித்துக் கொண்டிருந்தோம். முதலில் 10 பேர் வந்தார்கள். பிறகு 20 பேர், பிறகு 500க்கும் அதிகமான நபர்கள் வந்தார்கள்"

நாங்கள் தான் அடித்தோம் என்று சொன்னால் கூட அது நீங்களில்லை என்று விடுதலை செய்யும் நீதிமன்றங்களை உருவாக்கி கொடுக்கும் அளவுக்கு இந்த ஆட்சியின் வளர்ச்சி அமைந்திருக்கிறது.

அரசு இயந்திரங்களின் கூட்டு

2015லிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக பசுப் பாதுகாவலர் எனும் கும்பலால் தாக்கப்பட்டதாக காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளின் எண்ணிக்கை 110. இதில் 43 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களில் அரசு அதிகார அமைப்புகள் எப்படி செயல்படுகிறது என்பதற்கு பெஹ்லுகானின் வழக்கு முன்னுதாரனமாக இருக்கிறது.

கொலை நடந்ததில் தொடங்கி அதில் கொலையாளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இறுதியாக நீதிபதிகள் என எல்லாம் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு செயல்படுவதைப் போல கச்சிதமாக ஒவ்வொன்றும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் என அரசின் கீழ் இயங்குபவர்கள் தவறு செய்தாலும் இறுதி நம்பிக்கையைக் கொடுக்கும் இடம் நீதிமன்றங்கள் தான். ஆனால் அதுவும் இவர்களுடன் இணைந்து கூட்டாளிகளாக தீர்ப்பு வழங்கும் அவலம் தொடங்கியிருப்பதே இந்தியாவின் அழிவின் தொடக்கம்.

பெஹ்லு கானுக்கான நீதி மறுக்கப்பட்டதை விட இந்தியாவின் நீதிமன்றங்கள் பாசிசத்திற்கு ஆதரவானது என்ற வேதனையும், பயமும் தான் இந்தியாவிற்கு மிக ஆபத்தைத் தரக் கூடியது

- அபூ சித்திக்

Pin It