குற்றவாளிகள்? BJP, காங்கிரஸ், அதிமுக, திமுக!

நேற்று முன் தினம் ஆங்கில இந்துவில் ஒரு பெரிய செய்திக் கட்டுரை வந்திருந்தது. தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த கடல் மணல் கொள்ளை பற்றிய செய்திக் கட்டுரை அது. பொதுநல வழக்கொன்றின் கீழ் சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்த நீதிமன்ற ஆய்வாளர் (amicus curiae) V. சுரேஷ் அளித்த அறிக்கையின் விவரங்களை அந்த நீண்ட கட்டுரை அளிக்கிறது. (அதனைப் படிக்க http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/beached-by-illegal-sand-mining/article19248018.ece)

‘மரங்கள் வரும் போகும் ஆனால் காடு நீடித்து வாழும்‘ என்ற ஆங்கில பொன்மொழியைச் சற்று மாற்றி, ‘அரசுகள் வரும் போகும் ஆனால் முறைகேடுகள் முடிவதில்லை‘, என்று இந்துவின் கட்டுரை கட்டுரை ஆரம்பிக்கிறது.

sand miningதென்மாவட்டங்களின் கடற்கரை மணல் மிக விசேஷமானது. அதனை அருமணல் (அரிய மணல்- Rare Earth Minerals ) என்று குறிப்பிடுவர். மேற்குத் தொடர்ச்சி மலையின் சிகரங்களில் பொதிந்துள்ள அரியத் தாதுப்பொருட்களை மழை நீர் அடித்து வந்து ஆற்றில் கொட்ட, கடலில் கலக்கும் ஆற்று நீரைக் கடலின் செயல்பாடு கடைந்தெடுக்க, திரளும் வெண்ணெய்தான் இந்த அருமணல். கார்னைட் (garnet), இல்லுயிமினேட் (ilmenite), ரூட்டைல் (rutile), ஜிர்கான் (zircon ), லெக்கோஜின் (leucoxene) மோனோசைட் (monazite) போன்ற தாதுப்பொருட்கள் அந்த மணலில் உள்ளன.

கணினி, தொலைக்காட்சிப் பெட்டி திரை தயாரிப்பது முதல், பெயிண்ட் தயாரிப்பது, விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டுகளின் வெளிப்புறப் பூச்சு வரை, உங்கள் கையில் இருக்கும் செல்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தயாரிப்பு வரை இந்த தனிமங்கள் பயனாகின்றன. நவீன தொழில்துறையின் பிரிக்க முடியாத பகுதியாக இந்த அருமணல் தாதுகள் மாறிவிட்டன.

இவற்றில் மிக முக்கியமானது மோனோசைட். தோரியம் என்ற அணு சக்தி உற்பத்திக்கு, அணு குண்டு செய்யத் தேவையான கதிரியக்கத் தனிமத்தை மோனோசைட்டிலிருந்து தயார் செய்ய முடியும்.

1998ல் வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில் அருமணல் தாதுக்களைப் பிரித்தெடுக்கும் உரிமம் தனியாருக்கு அளிக்கப்பட்டது. அவற்றைப் பிரித்து எடுத்த பின்பு இறுதியில் தங்கும் மோனோசைட்டை (monazite tailings)- அணு சக்திக்கான தாதுவை, இந்தியா அரசின் Indian Rare Earths Ltd (IREL) என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி.

சிக்கலான இந்தத் தொழில் துறையைக் கண்காணிக்கும் பொறுப்பில் தமிழ்நாடு அரசின் சுரங்கத்துறை உள்ளிட்ட பல துறைகளும், பிரதம மந்திரியின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் அணு சக்தி துறையும், மத்திய அரசின் சுரங்கத் துறையும் கண்காணிக்கின்றன. இத்தனைக் கண்காணிப்பு இருந்தும் மாபெரும் ஊழல் அருமணல் அள்ளுவதில் நடந்துள்ளது.

 அரசின் பல்வேறு துறைகளின் அனுமதிபெற்ற தனியார் நிறுவனங்கள் 2000த்திற்கும் 2017க்கும் இடையில் 1.5 கோடி மெட்ரிக் டன் அளவுக்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடற்கரையோர மண் அள்ளியிருக்கின்றன. அள்ளப்பட்டி மண்ணில் 57 சதம் சட்ட விரோதமாக அள்ளப்பட்டது என்று நீதிமன்ற ஆய்வாளர் (amicus curiae) V. சுரேஷ் அளித்த அறிக்கை சொல்கிறது.

அள்ளிய மண்ணில் பல்வேறு தனிமங்களை எடுத்த பின்பு எஞ்சியிருக்கும் மோனோசைட் மிச்சத்தின் அளவை வைத்துக் கணக்கிடும்போது அள்ளப்பட்ட மண்ணின் அளவு 4.69 முதல் 4.93 கோடி மெட்ரிக் டன் கடல் மண் அள்ளப்பட்டிருப்பதாக நீதிமன்ற ஆய்வாளர் கணக்கிட்டுள்ளார். ஆனால், 1.5 கோடி மெட்ரிக் டன் மட்டுமே எடுக்கப்பட்டதாக ஆவணங்கள் சொல்கின்றன. அதிபயங்கர முறைகேடு நடந்திருப்பதாகவும் இது குறித்து ஆழமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்துள்ளார்.

ஆய்வில் 23, 461 மெட்ரிக் டன் மோனோசைட் கடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது உறுதியாகியிருக்கிறது. “அணு சக்தித் தொழிலுக்குப் பயன்படும் தோரியத்தை உள்ளடக்கிய மோனோசைட் அல்லது மொனோசைட் அடங்கிய கழிவு மண் (monazite tailings) சட்ட விரோதமாக நாட்டைவிட்டுக் கடத்தப்பட்டுள்ளது. இது சர்வதேசப் பாதுகாப்புக்கு ஆபத்தை வரவழைக்கும்“ என்று ஆய்வாளரின் அறிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. அணுகுண்டுகளைச் செய்யப் பயன்படும் கதிரியக்கத் தாதுகள் பயங்கரவாத அரசுகளின் கையிலோ அல்லது சர்வதேச பயங்கரவாதிகள் கைகளுக்கோ சென்றிருந்தால் உலகத்தின் இருத்தலுக்கே ஆபத்து ஏற்படும். எனவே, இப்பிரச்சனையின் சிக்கலான - சர்வதேச தொடர்பு- நிலைகள் காரணமாக CBI போன்ற அமைப்பு புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று ஆய்வாளர் பரிந்துரைத்துள்ளார்.

இந்தப் பிரச்சனைகளின் பின் உள்ள முக்கியமான நபர் வைகுந்தராஜன் என்ற மணல் கொள்ளையன். இவர் ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் நெருக்கமானவர். ஜெயா தொலைக்காட்சியின் பங்காளியாக இருந்தவர். இவரின் நிறுவனமான விவி மினரல் மற்றும் அவரின் சகோதரரும் சேர்ந்து நடத்தும் டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட் லிமிடெட் என்ற நிறுவனங்கள் அள்ளப்பட்ட கடல் மண்ணில் 68 சதத்தை அள்ளியிருக்கின்றன. மணல் அள்ளும் 62 இடங்களில் 50 இடங்கள் இவர்களுக்கே குத்தகை அளிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள இடங்களின் குத்தகை வேறு சில தனிநபர்களின் பெயரில் இருந்தாம், இறுதிப் பலன் என்று பார்க்கும்போது 62 இடங்களுமே வைகுந்தராஜனின் பிடியில் இருந்திருக்கிறது.

வைகுந்தராஜனுக்கும் அவரின் கம்பெனிக்கும் மாநில அரசிலும், மத்திய அரசிலும் வலுவான செல்வாக்கு இருந்ததாகவும், அதனைப் பயன்படுத்தி தன் பாதையில் யாரும் குறுக்கே வராது பார்த்துக்கொண்டதாகவும் நீதிமன்ற ஆய்வாளர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.  

ஜூன் 20 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் “இது மிகப் பிருமாண்டமானது. மூளையைக் கலங்கடிக்கக் கூடியது“ என்று சொல்லியிருக்கிறார் V. சுரேஷ். இதில் சம்பந்தப்பட்ட தொகையின் அளவைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. 2Gயை விட நிலக்கரி ஊழலை விட மிகப் பெரியது என்றும் நீதிமன்ற ஆய்வாளர் V. சுரேஷ் கூறியிருக்கிறார்.

மேலும், “முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களின் அதி உயர் மட்டத்தில் இருப்பவர்கள் இந்த அனைத்து முடிவுகளுக்கும் தனிப்பட்ட முறையில் பொறுப்பானவர்கள் ஆவார்கள். அவர்களின் முடிவுகள் சந்தேகத்திற்கு இடமானவை, கேள்விக்கு இடமளிப்பவை“ , என்கிறது நீதிமன்ற ஆய்வாளர் V. சுரேஷ் அளித்த அறிக்கை.

யார் அந்த உயர் மட்டத்தில் இருப்பவர்கள்?

முன்னாள் பிரதமர்கள் வாஜ்பேயி, மன்மோகன், தற்போதைய பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, OPS, தற்போதைய முதல்வர் EPS ஆகியவர்கள்தான் மேற்படி உயர் மட்ட முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்தவர்கள். இருப்பவர்கள்.

இவர்கள் தண்டிக்கப்படுவார்களா? வைகுந்தராஜனின் சொத்துக்களும், அவர் கொள்ளைக்கு வழியேற்படுத்திய மேற்சொன்ன பிரதமர்களின் முதல்வர்களின், அவர்களின் உத்தரவுப்படி நடந்த மேல்மட்ட அதிகாரிகளான ஆட்சியர்களின், துறைகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படுமா?

கட்சிகளின் நிறம் மாறலாம். ஆனால், ஊழலில் தேசத் துரோகத்தில், மனிதக் குலத்துக்கு ஆபத்து ஏற்படுத்துவதில் அனைவரும் ஒரே நிறம்.

- சி.மதிவாணன்

Pin It