தொடர்புடைய படைப்புகள்

பிராந்திய மற்றும் மொழிசார் சுயநிர்ணய உரிமையின் பிதாமகரும், திராவிட நாடு கொள்கையை முன்வைத்துத் தமிழ்நாட்டின் தன்னாட்சி உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவருமான பெரியார் ஈ.வெ. ராமசாமியின் 148-வது பிறந்த நாளில் எழுதப்படும் பதிவு இது.

periyar 391இந்தியாவின் பன்மைத்துவம் என்பது 'ஒருமைப்பாடு' (Unity) மற்றும் 'ஒற்றைத்தன்மை' (Uniformity) ஆகியவற்றுக்கு இடையேயான உறவு குறித்து எப்போதும் அடிப்படையான வினாக்களை எழுப்பிக் கொண்டே இருக்கிறது. எண்ணற்ற மொழிகள், பண்பாடுகள், சமயங்கள், சமூக மரபுகள் மற்றும் பிராந்திய வரலாறுகளின் களமாக இத்தேச நிலப்பரப்பு திகழ்கிறது. அரசியலமைப்புச் சட்டம் தனது கூட்டாட்சி முறைமை, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றின் வழியாகப் பன்மைத்துவத்தை ஒரு பொதுவான அரசியல் கட்டமைப்புக்குள் தழுவிக் கொள்ள முயல்கிறது.

பெரியார் ஈ.வெ. ராமசாமியின் சிந்தனைகளின் பின்புலத்தில் உற்று நோக்கும்போது, இக்கேள்விகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. சமூகச் சமத்துவம், சுயமரியாதை, பிராந்திய மற்றும் மொழிசார் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் முதன்மைப் போராளியாகப் பெரியார் விளங்கினார். அவர் முன்வைத்த திராவிட நாட்டுக் கோரிக்கையும், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் தன்னாட்சிக்கான உறுதியான வலியுறுத்தலும், பிராந்திய அடையாளம், மொழி, அரசியல் அதிகாரம் ஆகியவற்றைப் பொது விவாதத்தின் மையப்புள்ளிக்குக் கொண்டு வந்தன.

எனவே, ஒருமைப்பாட்டிற்கும் ஒற்றைத்தன்மைக்குமான இந்தத் தொடர் விவாதத்தை, பன்மைத்துவத்திற்கு இடமளிக்கும் ஓர் 'அரசியல் ஒன்றியம்' (Political Union) என்பதற்கும், நிர்வாக, மொழி அல்லது பண்பாட்டு ரீதியிலான 'ஒற்றைத்தன்மையை' திணிக்கும் ஓர் அமைப்புக்குமான வேறுபாட்டின் வழியாகப் புரிந்துகொள்ள முடியும்.

ஒருமைப்பாடு என்பது ஒற்றைத்தன்மையன்று

ஒரு பன்மைத்துவ தேசம் அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்து இருப்பதற்கு, அது பண்பாட்டு ரீதியாகவோ அல்லது நிர்வாக ரீதியாகவோ ஒரே அச்சுக்குள்ளான ஒற்றைத்தன்மையைப் பெற வேண்டிய அவசியமில்லை. ஒரு விரிவான அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அங்கம் வகிக்கும் அதேவேளையில், வெவ்வேறு பிராந்தியங்கள் தங்களின் மக்களுக்குச் சார்ந்த விவகாரங்களில் கணிசமான தன்னாட்சியைப் பேணுவதற்கான கூட்டாட்சிச் சட்டகத்தை இந்திய அரசியலமைப்பு வழங்குகிறது.

அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணை, ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான அதிகாரங்களைப் பிரித்தளிக்கிறது. சில விவகாரங்களுக்கு தேசிய அளவிலான ஒருங்கிணைப்பும், வேறு சில விவகாரங்களுக்கு மாநில அல்லது உள்ளூர் அளவிலான முடிவெடுத்தலுமே பொருத்தமானது என்பதை இந்த முறைமை அங்கீகரிக்கிறது.

மாநிலங்கள் தங்களின் முன்னுரிமைகளைத் தாமே தீர்மானிக்கும் சுயாட்சி இடத்தை, மத்தியமயமாக்கப்பட்ட கொள்கை முடிவுகள் சுருக்கும்போதுதான் சிக்கல் உருவாகிறது. கல்வி, விவசாயம், காவல்துறை, மொழி மற்றும் பண்பாடு ஆகியவை தனித்துவமான பிராந்திய பரிமாணங்களைக் கொண்டவை. எனவே, தேசிய அளவிலான ஒருங்கிணைப்பிற்கும் மாநில தன்னாட்சிக்கும் இடையிலான சமநிலையைக் கூட்டாட்சி முறைமை பேண வேண்டும்.

வேறுபாடுகளைத் தேசிய ஒருமைப்பாட்டிற்கான தடைகளாகப் பார்க்காமல், ஒரு பொதுவான அரசியலமைப்புச் சட்டகத்திற்குள் தழுவிக்கொள்ளும்போது மட்டுமே 'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் அரசியலமைப்புத் தத்துவம் உயிர்ப்புடன் திகழும்.

இணக்கமான கூட்டாட்சி

ஒன்றிய அரசும் மாநிலங்களும் பரஸ்பரம் கலந்தாலோசித்து, கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகளைக் கூட்டாட்சியியல் கோருகிறது. அரசியலமைப்பின் 263-வது பிரிவு, மாநிலங்களுக்கு இடையேயும், ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையேயுமான ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் அமைப்பாக 'மாநிலங்களுக்கு இடையேயான மன்றத்தை' (Inter-State Council) வழங்குகிறது.

முறையாக இயங்கும் ஓர் அரசுக்கிடையேயான மன்றம், பல மாநிலங்களைப் பாதிக்கும் கொள்கைகள், நிதி ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக முரண்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கான களத்தை அமைத்துத்தரும். முக்கிய கொள்கை முடிவுகளுக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் கலந்தாலோசனை, பிராந்தியச் சூழல்களையும் கவலைகளையும் கருத்தில் கொள்ள அனுமதிக்கும். ஏழாவது அட்டவணையின் கீழ் உள்ள அதிகாரப் பகிர்வும் மிக முக்கியமானது. மாநிலப் பட்டியல், அன்றாட ஆட்சி சார்ந்த விவகாரங்களில் மாநில அரசுகளுக்கு அதிகாரத்தை அளிக்கிறது. பொதுப் பட்டியல், ஒன்றியமும் மாநிலங்களும் சட்டமியற்றக்கூடிய துறைகளை வழங்குகிறது. இந்த அரசியலமைப்புப் பகிர்வை மதிப்பது தேசிய ஒருமைப்பாட்டைப் பலவீனப்படுத்தாது; மாறாக, பொதுவான அரசியலமைப்பு அமைப்பைப் பேணிக்கொண்டே இந்தியாவின் பிராந்திய பன்மைத்துவத்திற்கு இடமளிக்கும் நிறுவன வழிமுறையை அது வழங்குகிறது.

மொழியும் சுயநிர்ணய உரிமையும்

பிராந்திய அடையாளத்தின் மிக வெளிப்படையான வெளிப்பாடு மொழி. இந்தியாவின் மொழிச் சமூகங்கள் தனித்துவமான இலக்கிய மரபுகள், வரலாறுகள் மற்றும் பண்பாட்டு நிறுவனங்களைக் கொண்டுள்ளன. எனவே, தேசிய ஒருமைப்பாடு குறித்த எந்தவொரு விவாதமும் மொழிசார் பன்மைத்துவத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

பன்மொழித்தன்மை பாதுகாக்கப்பட்டு, பிராந்திய மொழிகள் வளர அனுமதிக்கும்போது மொழிக் கொள்கை ஒருமைப்பாட்டிற்குத் துணைநிற்கும். 'மும்மொழிக் கொள்கை' பன்மொழிக் கல்விக்கான சட்டகத்தை வழங்கினாலும், அதன் அமலாக்கம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

மொழிச் சூழல் கணிசமாக வேறுபடும் ஒரு நாட்டில் நெகிழ்வுத்தன்மை கொண்ட அணுகுமுறை அவசியம். எந்தவொரு ஒற்றை மொழியியல் மாதிரியும் ஒவ்வொரு மாநிலத்தின் கல்வி மற்றும் பண்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியாது. பிராந்திய மொழிகளுக்கான அங்கீகாரமும் நிறுவன ஆதரவும் முக்கியமானவை. அரசின் தகவல்தொடர்புகள், கல்வி, பொதுச் சேவைகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் அதிகரித்து வரும் சூழலில் மொழித் தொழில்நுட்பத்தைச் சார்ந்துள்ளன. அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகள் அனைத்திலும் இத்தகைய வசதிகளை மேம்படுத்துவது, மொழிச் சமூகங்கள் பொது நிறுவனங்களை அணுக முடிவதை உறுதிசெய்யும்.

பண்பாட்டுப் பரிமாற்றம் பிராந்தியங்களுக்கு இடையிலான புரிதலை மேலும் வலுப்படுத்தும். இந்தியாவின் பிற பகுதிகளின் மொழிகள் மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பற்றி அறிவது பரஸ்பர அங்கீகாரத்தை ஊக்குவிக்கும். இத்தகைய பரிமாற்றம், ஒரு பண்பாட்டு மாதிரியை மற்றொன்றிற்குப் பதிலாகவோ அல்லது கீழானதாகவோ மாற்ற நினைக்கும் 'பண்பாட்டு ஆதிக்கத்திலிருந்து' (Cultural Assimilation) முற்றிலும் வேறுபட்டது.

ஒன்றியத்திற்குள் பிராந்திய தன்னாட்சி

இந்தியக் கூட்டாட்சியின் வரலாறு, பிராந்திய தன்னாட்சி பற்றிய கேள்விகள் ஜனநாயக அரசியலின் நீடித்த ஒரு பகுதியாக இருந்துவந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. பிராந்திய அரசியல் இயக்கங்கள் மொழி, பண்பாடு, பொருளாதார வளங்கள் மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு குறித்துத் தொடர்ச்சியான கோரிக்கைகளை எழுப்பியுள்ளன.

பெரியாரின் திராவிட நாட்டுக் கோரிக்கை, இந்த விவாதத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெளிப்பாடாகும். அவருடைய சிந்தனைகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் மற்றும் சமூகச் சூழலில் இருந்து உருவானவை என்றாலும், மொழியியல் மற்றும் பிராந்திய அடையாளங்கள் இந்திய ஒன்றியத்துடன் எவ்வாறு உறவு கொள்ள வேண்டும் என்ற பரந்த கேள்வி அரசியலமைப்பு மற்றும் அரசியல் விவாதங்களின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

ஒரு கூட்டாட்சி ஜனநாயகத்தில், பிராந்திய அரசியல் கட்சிகளும் மாநில அரசுகளும் தேசிய நிறுவனங்கள் வழியாகப் பிராந்திய நலன்களை வெளிப்படுத்த முடியும். மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, வெவ்வேறு அரசியல் சித்தாந்தம் கொண்ட மாநிலங்கள் கூட நிதிப் பரவலாக்கம், நிர்வாக அதிகாரங்கள் மற்றும் மொழி உரிமைகள் போன்ற விவகாரங்களில் இணைந்து செயல்பட அனுமதிக்கும்.

அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் கூட்டாட்சி பற்றிய கேள்விகளைப் பொது விவாதத்திற்குக் கொண்டுவருவதில் குடிமைச் சமூக அமைப்புகளுக்குக் கூடுதல் பங்கு உண்டு. ஜனநாயகப் பங்கேற்பு என்பது தேர்தல்களுக்கு அப்பால் பொது அமைப்புகள், சட்ட நிறுவனங்கள், கல்வி விவாதங்கள் மற்றும் குடிமை இயக்கங்கள் வரை விரிவடைகிறது.

நீதித்துறை மற்றும் நிறுவனப் பாதுகாப்புகள்

அதிகாரப் பகிர்வு தொடர்பான நீதித்துறைப் பாதுகாப்புகளையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது. உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட 'அடிப்படைக் கட்டமைப்புத் தத்துவம்' (Basic Structure Doctrine), அரசியலமைப்பின் சில அடிப்படை அம்சங்களை மாற்றியமைக்கும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு எல்லைகளை வகுத்துள்ளது.

கூட்டாட்சியும் மதச்சார்பின்மையும் அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புப் கவனத்தைப் பெற்றுள்ளன. எஸ்.ஆர். பொம்மை எதிர் இந்திய யூனியன் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கூட்டாட்சி, மதச்சார்பின்மை மற்றும் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த ஒரு முக்கியமான முன்னுதாரணமாகும். இத்தீர்ப்பு, 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்கான அரசியலமைப்பு எல்லைகள் மற்றும் கூட்டாட்சிக் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை உரக்கப் பேசியது.

அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களின் தன்னாட்சி, இந்த அதிகாரம் மற்றும் சமநிலை அமைப்பின் மற்றொரு முக்கிய அங்கமாகும். ஒழுங்குமுறை அமைப்புகள், ஆணையங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின்படி தங்களின் பொறுப்புகளை நிறைவேற்ற நிறுவனச் சுதந்திரம் தேவை.

தொடரும் விவாதம்

ஒருமைப்பாட்டிற்கும் ஒற்றைத்தன்மைக்குமான வேறுபாடு என்பது, இறுதியில் ஒரு பன்மைத்துவ சமூகம் அரசியல் அதிகாரத்தை எவ்வாறு அமைப்பாக்குகிறது என்பதில் தான் உள்ளது.

ஒருமைப்பாடு என்பது வெவ்வேறு மொழிகள், பண்பாடுகள் மற்றும் பிராந்திய அரசியல் மரபுகள் இணைந்து வாழக்கூடிய ஒரு பொதுவான அரசியலமைப்புச் சட்டகத்தை வழங்க முடியும். மாறாக, ஒற்றைத் தன்மை என்பது கொள்கை, நிர்வாகம் அல்லது பண்பாட்டில் அதிக அளவிலான 'ஒரே மாதிரியான தன்மையை' திணிப்பதைக் குறிக்கிறது.

ஒரு கூட்டாட்சி ஜனநாயகம் ஒவ்வொரு பிராந்தியமும் ஒரே மாதிரியான முன்னுரிமைகளையோ அல்லது நிறுவனங்களையோ கொண்டிருக்க வேண்டும் என்று கோருவதில்லை. மாறாக, வேறுபாடுகளைப் பேசித் தீர்ப்பதற்கும், தழுவிக்கொள்வதற்குமான வழிமுறைகளையே அது கோருகிறது.

பெரியாரின் அரசியல் சிந்தனை, அதிகாரம், அடையாளம் மற்றும் சமூகச் சமத்துவம் பற்றிய பெரிய விவாதத்தின் மையத்தில் பிராந்திய மற்றும் மொழிசார் சுயநிர்ணய உரிமையை வைத்தது. அவருடைய 148-வது பிறந்தநாளில், இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு குறித்த தொடர்ச்சியான விவாதத்திற்கு இக்கேள்விகள் இன்றும் பொருத்தமானதாகவே இருக்கின்றன.

பிராந்திய பன்மைத்துவத்திற்கான இடத்தை அதே வேளையில் பாதுகாத்துக் கொண்டே ஓர் அரசியல் ஒன்றியத்தைப் பேணுவதே அரசியலமைப்பு எதிர்நோக்கும் முதன்மை சவாலாகும். இணக்கமான கூட்டாட்சி, அரசியலமைப்பு அதிகாரப் பகிர்விற்கான மரியாதை, மொழி உரிமைகளின் பாதுகாப்பு, ஜனநாயகப் பங்கேற்பு மற்றும் நீதித்துறைப் பாதுகாப்புகள் ஆகியவையே அந்தச் சமநிலையைப் பேணுவதற்கான வழிமுறைகள்.

இத்தகையதொரு அமைப்பில், 'ஒருமைப்பாடு' என்பது ஒருபோதும் 'ஒற்றைத்தன்மையை' சார்ந்து இருப்பதில்லை. அது, வெவ்வேறு பிராந்தியங்களும் சமூகங்களும் ஒரு பொதுவான அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்பில் பங்கேற்கும் அதே வேளையில், தங்களின் தனித்துவமான அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனைச் சார்ந்தே நிற்கிறது.

(https://countercurrents.org/2026/09/periyar-regional-self-determination-and-the-continuing-debate-between-unity-and-uniformity/)

- பொன்.சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.