தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டுவிட்டது. வெறும் 2 சதவீத மாணவர்கள் மட்டுமே படிக்கும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் மீதமுள்ள 98 சதவீத மாணவர்கள் தேர்வெழுத நிர்பந்திக்கப் பட்டிருக்கின்றார்கள். எப்படி 3 சதவீத பார்ப்பனர்களுக்காக மனு மீதமுள்ள 97 சதவீத மக்களை கீழ்த்தரமானவர்கள் என்று படிநிலைவரிசை படுத்தி அவர்களின் ஜனநாயக உரிமைகளை பறித்தார்களோ, அதற்குச் சற்றும் குறையாதவகையில் இந்தியாவின் புதிய மனுவாக உட்கார்ந்திருக்கும் மோடி தமிழக மக்களின் முகத்தில் கரியைப் பூசி அவர்களை மருத்துவக் கல்லூரிகளின் பக்கம் எட்டிப் பார்க்க முடியாமல் செய்துள்ளார். தமிழக அரசால் நீட் நுழைவுத்தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா இன்னும் குடியரசுத் தலைவரை சென்றடையவில்லை என்பது தற்போது அம்பலமாகி உள்ளது. எப்படியும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள 15 சதவீத இளங்கலை மற்றும் 50 சதவீத முதுகலை இடங்கள் போக மீதமுள்ள உள்ள இடங்களையும் பார்ப்பன-மேல்சாதி கும்பல்கள் ஆக்கிரமித்துக் கொள்ள திட்டமிட்டுக் காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மருத்துவ கல்விக்கான நெறிமுறைகளை வகுக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. மற்றபடி அதற்கு நாடுமுழுவதும் ஒரு பொதுவான நுழைவுத் தேர்வை நடத்தும் அதிகாரம் கிடையாது என்பதையும் தாண்டி எம்.சி.அய் இந்த நுழைவுத்தேர்வை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படி நாடு முழுவதும் நடத்தியுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தின் தன்மைக்கு ஏற்றார்போல கட்டமைத்துள்ள மாநில அரசின் பாடத்திட்டங்களை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் மாநில சுயாட்சியின் மீதும் சமூக நீதியின் மீதும் கடுமையான தாக்குதலை மத்திய பார்ப்பன-மேல்சாதியின் நலன்காக்கும் மத்திய பாஜக அரசு செய்துள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் சில 'அறிவாளி' நீதிபதிகள் தமிழக கிராமப்புற மாணவர்களின் பொருளாதாரநிலை மற்றும் அவர்களின் சமூகநிலையைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல் மேட்டுக்குடி மனப்பான்மையில் நீட் நுழைவுத்தேர்வுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ஆனால் அப்படி பேசும் அதே நீதிபதிகளும் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ்படித்தவர்கள் என்பதையும் வசதியாக மறந்துவிட்டு பார்ப்பன மயமாக்கப்பட்ட சி.பி.எஸ்.இ பாடத்திட்டதிற்குக் காவடி தூக்குகின்றார்கள். மாநில அரசின் பாடத்திட்டம் மட்டமானது என்பதற்கோ, இல்லை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் உலகத்தரமானது என்பதற்கோ எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமல் சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் வாந்தி எடுத்து அதைத் தீர்ப்பு என்று நம்மை ஒப்புக்கொள்ள சொல்கின்றார்கள்.
கடைசிவரை நீட்தேர்வு நடக்காது எப்படியாவது வழக்கம் போல +2 மதிபெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஆயிரக்கணக்கான கிரமாப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றார்கள். வசதி படைத்த மாணவர்கள் நாடுமுழுவதும் புற்றீசல்போல பெருகிவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து பல ஆயிரம் பணம் கொடுத்துப் படித்து நீட் தேர்வை சிறப்பாக எழுதி இருப்பார்கள். ஆனால் காலை எழுந்து வீடு வீடாக பேப்பர் போடும் மாணவர்களும் , மாலை பள்ளியைவிட்டு நேராக எதாவது ஒரு மளிகைக்கடையிலோ, செல்போன் கடையிலோ இல்லை பாஸ்ட்புட் கடையிலோ வேலைசெய்துவிட்டு அந்த வருமானத்தில் வீட்டையும் பார்த்துக் கொண்டு தனது படிப்பையும் பார்த்துக்கொண்டு இருந்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களை இந்தத் தேர்வு தீண்டாமை விலக்கம் செய்துள்ளது. அதுபோன்ற மாணவர்களை நீட் நுழைவுத்தேர்வு மையங்களுக்கே வராமல் இந்த மோடி அரசு துரத்தி விட்டிருக்கின்றது. இனி சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தனியார் பள்ளிகளில் பல லட்சங்களை செலவுசெய்து படித்து அதுவும் போதாது என தனியாக பயிற்சி வகுப்புகளில் சில ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரை செலவு செய்து படித்து தனது திறனை வளர்த்துக்கொள்ளும் மேட்டுக்குடி மாணவர்களுக்கு மட்டுமே இனி மருத்துவ படிப்பு கிடைக்கும் என்ற சூழ்நிலையை மோடி அரசு ஏற்படுத்தி இருக்கின்றது.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண்களின் கட்- ஆப் மார்க் அடிப்படையில் மட்டுமே இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்துவரும் மாணவர்கள் கட்- ஆப் மதிப்பெண் 195 மேல் பெற்றவர்களுக்கே கிடைக்கின்றது. அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தேர்வை நடத்தி தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்குகிறோம் என்று சொல்வதெல்லாம் அயோக்கியத்தனமான செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது - அது தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயிலும் வடஇந்திய பார்ப்பன மார்வாரி கும்பலுக்குப் பிடுங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதனால்தான் இரண்டு சதவீத சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்காக மாநில அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் 98 சதவீத மாணவர்களின் வாழ்க்கை பலிகடா ஆக்கப்பட்டிருக்கின்றது. மாநில அரசோ இதற்கான எந்தத் தீவிரமான முன்னெடுப்புகளையும் எடுக்காமல் குற்றுயிரும் குலை உயிருமாக படுத்துக் கிடக்கின்றது. நிச்சயமாக மாநில அரசு முயன்றிருந்தால் நீட் தேர்வை தமிழத்தில் நடக்கவிடாமல் தடுத்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்தால் எங்கே வருமான வரி சோதனை தங்கள் வீடுகளுக்கும் வந்துவிடுமோ என அச்சத்தில் பீடிக்கப்பட்ட தமிழக அரசு நடப்பதை எல்லாம் சூடு சுரணையற்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருகின்றது.
மோடியின் உத்தரவை அடுத்து காரில் இருந்து சிகப்பு விளக்கை தனது கரங்களாலேயே கழற்றி தான் என்றுமே மோடியின் நல்ல அடிமை என்று காட்டிய எடப்படி பழனிசாமி, நீட் நுழைவுத்தேர்வு எழுதப் போன தமிழக மாணவர்களை மிக இழிவான முறையிலே சட்டையைக் கிழித்தும், சுடிதாரைக் கிழித்தும், அவர்களை தலைவிரி கோலமாய் அசிங்கப்படுத்தி பெரும் உளவியல் சிக்கலுக்கு ஆளாக்கி, தேர்வு எழுதும் மனநிலையை மாற்றி, அவர்களை ஒட்டுமொத்தமாக முடமாக்கிக் கொண்டு இருக்கும் போது அதைக் கண்டிக்காமல் தனது பார்ப்பன அடிவருடிதனத்தில் காட்ட திருப்பதியில் வெங்கடாசலபதியைத் தரிசித்துக்கொண்டு இருக்கின்றார். பார்ப்பன அரசியல் தரகன் சங்கராச்சாரியைப் பார்த்தவனையே திகாருக்கு அனுப்பிவிட்டார்கள், வெங்கடாசலபதியைப் பார்ப்பதெல்லாம் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள உதவாது என்பது அவருக்கு இன்னும் தெரியவில்லை. தமிழக மாணவர்களின் மானம் போனால் என்ன, மரியாதை போனால் என்ன இப்போதைக்கு பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதைவிட முக்கியம் கொள்ளையடித்துச் சேர்த்துவைத்திருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்திற்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதுதான் எடப்பாடி பழனிசாமி அரசின் ஒரே நோக்கமாய் உள்ளது. ஆடைகளைக் கிழித்து அல்ல நாளை ஆடை இல்லாமல் தேர்வெழுத வேண்டும் என்று மோடி அரசு உத்தரவிட்டாலும் அதையும் கூட பொருட்படுத்தாத நிலையில் தான் தமிழக அரசு உள்ளது. இந்நிலையில் கேரளாவில் கண்ணூரில் நீட் தேர்வு எழுதவந்த மாணவியை உள்ளாடையைக் கழற்ற சொன்ன ஆசிரியர்கள் நாலு பேரை கேரள அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரியாரின் மண்ணில் தமிழக மாணவர்கள் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளார்கள். சுயமரியாதையைக் கற்றுக்கொடுத்த மண்ணில் மாணவர்கள் தங்களுடைய மான மரியாதையை இழந்திருக்கின்றார்கள். இத்தனையும் நடந்தபின்பும் அதைக் கண்டிக்க துப்பற்ற இந்த ஆட்சி இன்னும் எதற்காக நீடிக்க வேண்டும் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். ஆள்வதற்குத் திராணியில்லை என்றால் எதற்காக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்க வேண்டும்? மோடியின் மனதை குளிர்விப்பதற்குத்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது என்றால் அப்படி ஒரு மானங்கெட்ட ஆட்சி தமிழக மக்களுக்குத் தேவையே இல்லை. இன்னும் எடப்பாடியார் ஆட்சி முடிவதற்குள் தமிழக மக்கள் எதை எதை எல்லாம் இழக்கப் போகின்றார்களோ என ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களும் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளார்கள். நாம் சுயமரியாதை அற்ற தமிழக அரசுக்கு வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான் - தமிழன் அனைத்தையும் உங்களால் இழந்துவிட்டான். அவனிடம் மிச்சமிருந்தது மானம் ஒன்றுதான். அதையும் டெல்லியிலும், இப்போது தமிழகத்திலும் பறித்துவிட்டீர்கள். இன்னும் அவனிடம் இருப்பது சூடுசுரணை நீக்கப்பட்ட அவனது உயிர்தான். அதையும் பறித்துவிடாதீர்கள்.
- செ.கார்கி