உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும், கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதியான கர்ணனுக்கும் இடையே நடக்கும் ‘நீ பெரியவனா? இல்லை நான் பெரியவனா?’ என்ற சண்டையில் ஆளாளுக்கு மாற்றி, மாற்றி ஒருவருக்கு எதிராக இன்னொருவர் தீர்ப்பு கொடுத்து நாட்டில் சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக மாற்றிக்கொண்டு இருப்பதைப் பார்த்து, நாடே சிரிப்பாய் சிரிக்கின்றது. ஏற்கெனவே நீதித்துறையைப் பற்றி கொஞ்சம் நஞ்சம் இருந்த மரியாதையும் முச்சந்திக்கு இழுத்துவந்து அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். ஒரு பதவியில் இருக்கும் நீதிபதியைக் கைது செய்து சிறையில் அடைக்கச் சொல்லும் அளவிற்கு அப்படி என்ன பெரிய தவறை நீதிபதி கர்ணன் செய்துவிட்டார்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் லஞ்சம் வாங்குகின்றார்கள் என்று சொல்வது ஒரு தவறா? உண்மையிலேயே உச்சநீதி மன்ற நீதிபதிகள் எல்லாம் நேர்மையில் புடம் போட்டு எடுக்கப்பட்டவர்களா? இதுவரை அப்படியான புகார்களை யாரும் வைத்ததில்லையா என்ன? இந்தச் சின்ன விடயத்திற்குப் போய் சின்னப்பிள்ளைத்தனமாக ஒரு உயர்நீதி மன்ற நீதிபதியைப் பார்த்து மனநலப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்வதும், அவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்வதும் உச்சிக்குடுமி நீதிமன்றத்திற்கு அழகா?

justice karnan

 நீதிபதி கர்ணனை உத்தமர் என்று நாம் நினைக்கத் தேவையில்லை. அவர் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும், தன்வாழ்நாளில் தன்முன்னால் வந்த அனைத்து வழக்குகளையும் நேர்மையான முறையில் விசாரித்து, யாரிடமும் கைநீட்டாமல் நீதியை நிலைநாட்டியவர் என்றும் நாம் பார்க்கத் தேவையில்லை. அவர் உச்சநீதி மன்ற நீதிபதிகள் மீது வைத்த ஊழல்குற்றச்சாட்டுதான் அவர் மீதான நடவடிக்கைக்குக் காரணம் என்று வரும்போதுதான் அதை நாம் கேள்வி கேட்க வேண்டி வருகின்றது. நீதிபதி கர்ணன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு முன்னமேயே சாந்திபூஷன் 2010 ஆம் ஆண்டே உச்சநீதி மன்ற நீதிபதிகளில் 16 பேரில் 8 பேர் ஊழல் செய்தவர்கள் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் “நீதிபதி கர்ணன் நீதிபதி மட்டுமல்ல, ஒரு சாமானிய குடிமகனும் கூட… இது போன்ற தவறுகளை ஒரு சாமானியன் செய்தால் உச்சநீதி மன்றம் எப்படி அணுகுமோ அப்படித்தான் நாங்கள் இதை அணுகுகின்றோம்” என்று சொல்கின்றார்கள். அதையே தான் நாமும் கேட்கின்றோம். ஒரு சாமானிய இந்திய குடிமகன் லஞ்சம் வாங்குவதும், ஊழல் செய்வதும் ஆச்சரியப்பட வேண்டிய விடயமாக இருக்காத போது அந்தச் சாமானிய இந்திய குடிமாகனாக இருந்து இன்று உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவியேற்ற நீங்கள் ஏன் லஞ்சம் வாங்கியிருக்க மாட்டீர்கள்? உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவியேற்ற உடனேயே நீதிபதிகளுக்கு எல்லாம் லஞ்சம், ஊழல் எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்ட புனிதர் அந்தஸ்த்து வந்துவிடுமா என்ன?

 நாட்டிலே ஊழல் நடக்காத துறை என்று ஏதாவது உண்டா? எந்த அரசு ஊழியர்களாவது வாங்கும் சம்பளத்துக்கு மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், யாரிடமும் சல்லிபைசா கைநீட்டி லஞ்சம் வாங்கக்கூடாது என்று மன உறுதியோடு நேர்மையாக வேலை செய்கின்றார்களா? யாராவது அங்கொருவன், இங்கொருவன் அப்படி இருக்கலாம். ஆனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் மக்கள் விரோதிகள் என்பதுதான் உண்மை. பிச்சைக்காரனே மிரண்டு போகும் அளவுக்கு மிரட்டி பிச்சை எடுக்கும் இழிவான பிச்சைக்காரர்கள்தான் அரசு ஊழியர்கள். இதை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன் வாழ்நாளில் நிச்சயம் அனுபவித்து அறிந்திருப்பார்கள். எனவே உச்சநீதி மன்ற நீதிபதிகள் மட்டும் இதற்கெல்லாம் விதிவிலக்கானவர்கள் என்றால் எப்படி சாமானிய மக்கள் நம்புவார்கள்? ஜாமீன் கேட்டால் மூன்று மாதத்திற்குள் தீர்ப்பு எழுத வேண்டும் என்று தத்து உத்தரவிட்டதை நாங்கள் பார்க்கவில்லையா? குமாரசாமியும் தத்துவும் கோடிகளால் குளிப்பாட்டப்பட்டதை நாடே பார்த்துக் காறித்துப்பியதே! அமித்ஷாவை கொலை வழக்கில் இருந்து விடுவித்ததற்காக நீதிபதி சதாசிவத்திற்கு பாஜக அரசு ஆளுநர் பதவி கொடுத்து அழகு பார்த்ததே, அப்போது உச்சநீதி மன்றம் என்ன செய்துகொண்டு இருந்தது? அதைத் தடுத்து நிறுத்தியதா? வேடிக்கை பார்த்துக்கொண்டுதானே இருந்தது. இன்னும் எவ்வளவோ கேடுகெட்ட நீதிபதிகளையும் அவர்கள் பணம் வாங்கிக்கொண்டு கொடுத்த கேடுகெட்ட தீர்ப்புகளையும் நம்மால் விரிவாகப் பட்டியலிட முடியும்.

 வெளி உலகத்திற்கு வந்து நாறியது கொஞ்சம் என்றால் இன்னும் தினம் தினம் பணம் வாங்கிக்கொண்டு நீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் சம்பவங்கள் நீக்கமற இந்தியாவின் கீழமை நீதிமன்றங்களில் இருந்து உச்சநீதிமன்றம் வரை நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதனால் நீதிபதி கர்ணனின் குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்று விசாரிக்க உத்தரவிடுவதுதான் நேர்மையான செயலாக இருக்க முடியுமே ஒழிய, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்க உத்தரவிடுவது எப்படி நேர்மையான செயலாக இருக்க முடியும்? இது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல் அல்லவா உள்ளது.

 உயர் நீதிமன்ற நீதிபதிகளையோ இல்லை உச்ச நீதிமன்ற நீதிபதிகளையோ அவர்கள் பதவியில் இருக்கும் போது அவர்கள் மீது எந்த வழக்கும் போட முடியாது என்பதுதான் சட்டம். அப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டு வந்துதான் நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் கர்ணனை கைது செய்ய உத்தரவிட்டார்கள். பாராளுமன்றத்தைக் கூட்டி நடவடிக்கை எடுத்தால் தாங்கள் அம்பலப்பட்டு விடுவோம் என்ற பயத்தின் காரணமாகவே சட்டத்திற்குப் புறம்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டு இருக்கின்றார்கள். இல்லை ஒரு வேளை அவர் தலித் என்ற காழ்ப்புணர்ச்சியில் கூட உச்சிக்குடுமி நீதிபதிகள் தீர்ப்புக் கொடுத்திருக்க வாய்ப்புள்ளது. அப்படி எல்லாம் உச்சிக்குடுமி மன்ற நீதிபதிகள் சாதி பார்க்காத முற்போக்காளர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

 இதன் மூலம் உச்சநீதி மன்ற நீதிபதிகள் நாட்டுமக்களுக்குச் சொல்ல வரும் நல்ல செய்தி என்னவென்றால், இனி எவனும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லக்கூடாது என்பதுதான். அப்படி சொன்னால் சொன்னது ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் அவரைக் கைதுசெய்து நாங்கள் சிறையில் அடைத்து விடுவோம் என்பதுதான். தங்கள் அதிகார, ஊழல் முறைகேடுகளுக்கும் எந்த வித பாதிப்பும் வராமல் ஒரு பாதுகாப்பை அச்சுறுத்தல் மூலம் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இனி எவனாவது நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டோ, இல்லை வேறு ஏதாவது குற்றச்சாட்டோ முன்வைத்தால் கம்பி எண்ண வைத்துவிடுவார்கள். இதற்குப் பெயர்தான் ஜனநாயகம். பேச்சுரிமையோ, இல்லை எழுத்துரிமையோ மறுக்கப்பட்டால் நாம் அனைவரும் நீதிமன்றத்தை அணுகி அதை பெற்றுக் கொள்ளலாம் இப்போது நீதிமன்றமே ஜனநாயகத்தை மறுத்துப் பாசிசத்தனமாக நடந்துகொள்ளும் போது நாம் யாரிடம் போவது. “காஞ்சிப் போன பூமி எல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காஞ்சி போயிட்டா” சொல்லுங்க மைலாட் சொல்லுங்க நாங்க என்ன செய்யறது?

-       செ.கார்கி

Pin It