ஆண்களில் பெரும்பாலானோர், கல்யாணத்துக்கு முன்னரே நன்கு சமைக்க கற்றுக் கொண்டு விடுகிறார்கள். வரன் தேடுகையில், சமையல் கலையை 'எக்ஸ்ட்ரா கரிக்குலர்' ஆக்டிவிட்டியில் போட்டு கொள்ளலாம். பெண் பார்க்கும் படலத்தின் போது "பையனுக்கு சமைக்கத் தெரியுமா?" என்று நேரடியாகக் கேட்க முடியாமல், "பையன் ஹோட்டல்ல 'தான்' சாப்பிடுறாரா?" என்று அழுத்திக் கேட்டு சாமார்த்தியமாய் பதில் வாங்கி விடுகிறார்கள் பெண் வீட்டார். மேலும் "எங்க பொண்ணு சமையல் கட்டுக்குள்ளே தண்ணி குடிக்க மட்டும்தான் வருவா" என்று சொல்லிவிட்டு பெருமை பொங்க சத்தமாய் சிரிக்கிறார்கள். சமையலும், 'சமையல் மந்திரமும்' ஆண்கள் தான் கற்றுத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். கொஞ்சம் தெரிந்தாலும், எதுவுமே தெரியாதது போல் தான் நடிப்பார்கள்.

kitchen kingவேளச்சேரி கிராண்ட் மாலுக்கு எதிரில் இருக்கும் 'அப்பா சுட்ட தோசை' என்ற ரெஸ்ட்டாரெண்டே தற்போது சூழ்நிலை மாறி விட்டது என்பதைக் கண்கூடாக உணர்த்துகிறது.

ஆனால் நான், கடலைப் பருப்புக்கும், துவரம் பருப்புக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாத அப்பாவி. சமையல் ஷோ, எனக்கு பாகற்காய். கிச்சன் சூப்பர் ஸ்டார் கூட, அதில் வரும் தக்காளி பிகர்களுக்காக தான் பார்த்திருக்கிறேன். கடைசி வரை கிரிஜாஸ்ரீக்காக 'சமையல் மந்திரம்' பார்த்த அனுபவம் மட்டுமே இருந்ததால், திருமணத்திற்குப் பிறகு என் மனைவி 'விம் பார்' யை என் கையில் கொடுத்து, இந்த கருப்பு எம்ஜியார் குண்டாவெல்லாம், வெள்ளை எம்ஜியார் போல பளபளவென்று மின்னவேண்டும் என்று சொல்லி விட்டாள். தினமும் அவள் சமைத்தவுடன், ஆபிஸ் கிளம்புவதற்குள் பாத்திரத்தை எல்லாம் கழுவி விட்டுச் செல்ல வேண்டும். எங்களுக்குள் சிறு ஊடல் வந்தால், அன்று வேண்டுமென்றே கழுவாமல் சென்று அவளுடன் அறப்போர் செய்வேன். இரவு வீட்டுக்கு வந்து எண்ணையில் போட்ட கடுகாய் பொரிவாள்.

இதைத் தவிர, காய்கறி நறுக்குவது, தேங்காய் துருவித் தர சொல்வது என ஒரு மருமகளைப் போல வேலை வாங்குவாள். ஒரு பக்கம் கண்ணை கசக்கிக் கொண்டு நான் வெங்காயம் வெட்டி கொண்டிருக்கும் போது, அவள் அந்தப் பக்கம் மாமியார் கணக்காய் சீரியல் பார்த்து கண்ணு வேர்த்துக் கொண்டிருப்பாள். அவ்வப்போது குக்கர் விசில் எண்ணும் வேலையும் கொடுக்கப் படும். புத்தகம் எழுதி, புக்கர் விருது வாங்கும் கனவையெல்லாம் தேங்காயைப் போல இரண்டாய் உடைத்து விட்டாள். 'வீட்டுச் சாப்பாடு' எனும் ஒரே காரணத்திற்காக இதையெல்லாம் பொறுத்துக் கொண்டேன்.

திருமண பந்தத்தின் உன்னதமே, இருவரின் நிறை குறைகளை ஏற்றுக் கொண்டு, பரஸ்பரம் உதவி செய்து கொள்வது தான். இப்படியாக எனக்கு அவள் சமையலைக் கற்றுத் தர, அவளுக்கு நான் சமையல் மந்திரத்தைக் கற்றுத் தந்தேன்.

மந்திரம் வேலை செய்து அவள் ஊருக்குச் சென்ற பின், கற்றுக் கொண்ட வித்தையெல்லாம் மொத்தமாக இறக்க முடிவு செய்து களத்தில் இறங்கினேன். சிறு வயதில் எக்ஸாமுக்கு செல்லும் முன் சரஸ்வதி சாமியைக் கும்பிட்டு விட்டுப் போகச் சொல்வார்கள். மனப்பாடம் செய்தது மறந்து விட்டால், 'சரசு' கூட இருந்து பிட் எடுத்துக் கொடுக்கும் என்ற நம்பிக்கை. அது போல நான் தினமும் சமையலை ஆரம்பிக்கும் முன் அந்த அன்னபூரணி தெய்வத்தை வணங்கி விட்டு தான் தொடங்குவேன். அன்னபூரணியின் அருளில் தினமும் நன்றாகவே சமைப்பதாகத் தோன்றியது. என் வீட்டு ஓனர் அவ்வப்போது எட்டிப் பார்த்து "ஏன்டி, இந்த தம்பி சமைக்கும்போது எப்புடி வாசம் வருது! நீ ஒரு நாளாவது இப்படி சமைச்சிருக்கியா?" என்று தன் மனைவியைப் பார்த்துக் கேட்பார். இந்தப் பெரிசு நம்மைக் கலாய்க்கிறதா? என்று சந்தேகமாய் இருக்கும். அதனால், ஒருநாள் சமைத்ததில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து விட்டு வந்தேன். இப்போதெல்லாம் அந்த ஓனர் என் சமையலில் மூக்கை நுழைப்பதில்லை. சாதாரணமாய்ப் பேசும் போது கூட, ஆங்கிலப் படத்தில் வருவது போல, முகம் கொடுக்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு "என்னப்பா ஆபிசுக்குக் கிளம்பிட்டியா?" என்று கேட்கிறார்.

தற்போது, மனைவி ஊரிலிருந்து வரட்டும் என்று காத்திருக்கிறேன்.

அடுத்த புத்தகக் கண்காட்சிக்கு, நளபாகம் தயார் ஆகிக் கொண்டிருக்கிறது. தோழர், உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

- பிளடி பிளாக்கர்

Pin It