எங்களது ஊர்ப் பகுதிகளில் ஒரு சொலவடை உண்டு. 'மாடுமுட்டிப் பய' என்பார்கள். என்ன என்று பெரியவர்களிடம் கேட்டால் சொல்வார்கள், "மாடு நம்மை முட்ட வந்தால் புத்தியுள்ளவங்க என்ன பண்ணுவோம்... விலகி நிற்போம். ஆனா இவன் என்ன பண்ணுவான்னா மாட்டுக்குச் சமமா மல்லுக்கு நிப்பான். அந்தளவுக்கு புத்திகெட்ட பய..."
அதுபோன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு செயல்தான் ஜல்லிக்கட்டு. மனித அறிவும், அறிவியல் தொழில்நுட்பமும் மேம்படாத காலத்தில் மாட்டை அடக்குவது அல்லது அணைத்து, வசப்படுத்துவது வீரமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த அறிவியல் தொழில்நுட்ப காலத்தில் மாட்டோடு மல்லுக்கு நிற்க எந்த அவசியமும் இல்லை. மாட்டை வசப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன.
மாட்டிற்கும், நமக்கும் என்ன பொருத்தம்? அதன் உருவ அளவு என்ன? நமது உருவ அளவு என்ன? அதன் கொம்புகள், வலுவான கால்கள் என்ன? நமது உடலமைப்பு என்ன? அதன் பலம் என்ன? நமது பலம் என்ன? அதோடு மோதி நமது பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?
உலக மல்யுத்தப் போட்டியில் விளையாடுபவர்கள் அவர்களது உடல் எடைக்கு இணையான உடல் எடை உள்ளவர்களோடு மட்டுமே மோத விடப்படுவார்கள். அவன் 51 கிலோ என்றால், இவனும் 51 கிலோ இருக்க வேண்டும். ஆனால், நமக்குக் கொஞ்சமும் பொருந்தாத மாட்டுடன் முட்டிக் கொண்டிருப்பதை 'வீர விளையாட்டு' என்று சொன்னால், அது பகுத்தறிவுள்ள செயலா? இதுதான் நமது பண்பாடு என்று சொன்னால் உலகம் நகைக்காதா?
நாட்டு மாடுகளும் ஜல்லிக்கட்டும்
ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் இன்னொரு வாதம் - 'ஜல்லிக்கட்டு இல்லை என்றால் நாட்டு மாடுகள் அழிந்து விடும்'
நான் சிறுவனாக இருந்தபோது, தாய்வழி தாத்தா வீட்டிலும், தந்தைவழி தாத்தா வீட்டிலும் தலா இரண்டு ஜோடி காளை மாடுகளும், நான்கு, ஐந்து பசு மாடுகளும் இருந்தன. அதோடு மாட்டு வண்டிகளும், கலப்பைகளும் இருந்தன. தாய்வழி தாத்தா வீட்டில்தான் நான் அதிகம் வளர்ந்தேன். அப்போது அந்த ஊரில் காளை மாடுகளும், பசு மாடுகளும் இல்லாத வீடுகளே மிகவும் குறைவு. தாத்தா மாடு மேய்க்கப் போகும்போது, நானும் உடன் சென்றதுண்டு.
டிராக்டர்கள் வரத் தொடங்கியதும், ஒவ்வொருவராக காளை மாடுகளை விற்கத் தொடங்கினார்கள். எனக்கு 12 வயதாகும்போது, எங்கள் வீட்டில் இருந்த காளை மாடுகளை தாத்தா விற்றுவிட்டார். பின்பு பசுமாடுகளின் எண்ணிக்கையும் குறைந்தது. பால் தேவைக்காக மட்டும் ஒரே ஒரு பசு மாடு இருந்தது. தாத்தா இறந்ததும், அந்த பசு மாடு வளர்ப்பும் நின்றுவிட்டது.
இப்போது அதே ஊரில் காளை மாடுகளே இல்லை என்றாகி விட்டது. தற்போது 35, 40 வயதைத் தாண்டிய, கிராமத்திலிருந்து நகரத்தில் குடியேறிய மக்களிடம் கேட்டுப் பாருங்கள்... பெரும்பாலோனோர் கிராமங்களில் இதுதான் நிலைமை.
இதெல்லாம் ஜல்லிக்கட்டுக்குத் தடை வருவதற்கு முன்பே ஏற்பட்டுவிட்டது (மேலும் விவரங்களுக்குப் படிக்க - ‘நாட்டு மாடுகளின் அழிவு’ இனி மேல்தானா?). பயனில்லாதவற்றிற்கு செலவு செய்யுமளவிற்கு தமிழக விவசாயிகள் வசதியானவர்கள் அல்ல. கலப்பையை உடைத்து, வீட்டுக்குத் தேவையான மரச் சாமான்கள் ஆக்கியதுபோல், மாடுகளை விற்று, அந்த ஆண்டு நட்டத்தை கொஞ்சம் ஈடு கட்டிக் கொண்டார்கள்.
உண்மையில் நாட்டு மாடுகளைக் காக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், அதற்கு செய்ய வேண்டியது ஆக்கப்பூர்வமான வேலைகள்தான். ஜல்லிக்கட்டு மூலம் காப்போம் என்பது நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை வெறும் 300க்குள் சுருக்கி விடும்.
மாடுகள் அழிந்து கொண்டிருந்த காலத்தில், அதுகுறித்து சூழலியலாளர்கள் தவிர வேறு யாரும் பேசவில்லை.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேச ஏதாவது கைப்பொருள் வேண்டும் என்பதற்காக, இப்போது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கையில் எடுத்ததுதான், நாட்டு மாடுகள் குறித்த அக்கறை. இது தவறு எனில், 'ஜல்லிக்கட்டு மூலமாகத்தான் நாட்டு மாடுகள் காப்பாற்றப்படுகின்றன' என்று யாராவது 2009க்கு முன்பு பேசியிருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டவும்.
நாட்டு மாடுகளை எப்படிக் காப்பது?
நாட்டு மாடுகள் அழிவது குறித்து அக்கறை கொள்வோர்கள், ஜல்லிக்கட்டு இல்லாமலேயே அதைச் செய்ய முடியும்.
1. அவரவர்கள் வீடுகளில் நாட்டுக் காளைகளையும், நாட்டுப் பசுகளையும் வளர்ப்பதை யார் தடை செய்திருக்கிறார்கள்? இதனால் பால் உற்பத்தி அதிகரித்து, பால் விலையும் குறையும்; நாட்டு மாடுகளும் காப்பாற்றப்படும்.
2. நாட்டு மாடு ஆதரவாளர்கள் எல்லாம் மாட்டுக்கறி பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்; தங்களது வீடுகளில் மாட்டுக்கறி சாப்பிடத் தொடங்க வேண்டும். கோழிக்கறி, ஆட்டுக்கறி போல் மாட்டுக்கறிக்கும் அதிக தேவை இருந்தால், யாரும் கேட்காமலே மாடுகளை வளர்க்கத் தொடங்கி விடுவார்கள். எந்தவொரு விலங்கினமும் மனிதனின் தேவைக்குப் பயன்பட்டால் மட்டுமே, மனிதன் அதை வளர்ப்பான். மாட்டுக்கறிக்கான தேவையை தமிழர்கள் அதிகப்படுத்தினால், அயல்நாடுகளைப் போல் இங்கும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
எனக்குத் தோன்றிய யோசனைகள் இவை. உண்மையில் நாட்டு மாடுகள் மீது அக்கறை உள்ளவர்கள் யோசித்தால், இன்னும் நிறைய வழிகள் பிறக்கும். மாடு முட்டித்தான் மாடு வளர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.
ஜல்லிக்கட்டு மாடுகளின் மீதான செண்டிமெண்ட்
'பிள்ளை போல மாட்டை வளர்ப்பாங்க' என்று நெஞ்சுருக விக்கிரமன் சினிமா பாணியில் பலர் பேசுகிறார்கள். ஆனால், உண்மை அதுதானா?
கிராமத்தில் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகளை மற்றவர்கள் யாரும் அடிக்கக்கூட விடமாட்டார்கள். ஆனால், அவர்கள்தான் தங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வரும்போது, 'கோழியை அடி, ஆட்டை வெட்டு' என்பார்கள். அவர்களது நேசம், அவர்களது பயன்பாடு, தேவை சார்ந்தது. பயன்படும் வரை உழவு மாடு, பின்பு அடிமாடு என்பதுதான் அவர்கள் கணக்கு. இன்றைக்கு எல்லா கிராமங்களிலும் ஆடுகள், கோழிகள் இருக்கின்றன; ஆனால் காளை மாடுகள் மட்டும் இல்லை. இது ஏனென்று யோசித்தால், நான் சொல்ல வருவது இன்னும் கொஞ்சம் விளங்கும். ஒரு சிலருக்கு கால்நடைகள் மீது ஏற்படும் தனிப்பட்ட பிரியம் இதில் விதிவிலக்கு.
'ஜல்லிக்கட்டு என்பது மாட்டுக்கும் மனுஷனுக்குமான உறவு' என்றும் சொல்கிறார்கள். எந்தக் காலத்திலும் ஜல்லிக்கட்டில் அத்தகைய உறவு இருந்ததில்லை. உண்மையில் மாடு பிடிக்க வருபவர்களை குத்திக் கிழிக்கும் வகையில்தான் கொம்புகள் வளர்க்கப்படுகின்றன; கூர்மையாக சீவி விடப்படுகின்றன. சாராயம் கொடுத்தும், வாலைக் கடித்தும் அதற்கும் வெறி ஏற்றப்படுகிறது. மாடு வளர்ப்பவர்களின் ஒரே நோக்கம், 'மாடு பிடிபடக்கூடாது, எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை'.
மாடு பிடிப்பவர்களின் நோக்கம், 'மாட்டிற்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. அதைப் பிடிக்க வேண்டும்'.
ஒட்டுமொத்தமாக பத்து, பதினைந்து பேர் மாட்டின்மீது பாய்ந்து விழுவதிலும், மாட்டிடம் உதை வாங்குவதிலும், கொம்பு கிழித்து குடல் சரிவதிலும் என்ன உறவு பேணுதல் இருக்கிறது?
ஜல்லிக்கட்டை பெண்கள் ஆதரிப்பார்களா?
பெண்களைப் புறந்தள்ளிய, பெண்களின் பங்கேற்பு இல்லாத ஜல்லிக்கட்டை தமிழர்களின் ஒட்டுமொத்த பண்பாடு என்று எப்படிச் சொல்வது? பங்கேற்பை விடுங்கள்... ஒப்புதல் கிடைக்குமா? "தமிழ்ப் பண்பாட்டைக் காக்க நம் மகனை ஜல்லிக்கட்டுக்கு அனுப்பட்டுமா?" என்று வீட்டில் கேட்டுப் பாருங்கள்... என்ன பதில் கிடைக்கும்?
'ஜல்லிக்கட்டு நடத்தலாமா' என்று வாக்கெடுப்பு நடத்துங்கள்... இலட்சம் பேர் என்ன.. கோடிபேர் கூட ஆதரவு தெரிவிப்பார்கள். 'ஜல்லிக்கட்டில் மாடுபிடிக்க வருகிறீர்களா' என்று கேட்டுப் பாருங்கள்... தமிழ்நாடு முழுக்கத் தேடினாலும் பத்தாயிரம் பேர் கூட வர மாட்டார்கள்.
யாராவது மாடு முட்டி சாகட்டும்... நாம் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கொண்டு தமிழர் வீரம், தமிழர் பண்பாடு என்று பேசலாம். அப்படித்தானே?
“கடவுள் வேண்டாம் என்ற சொன்ன பெரியார், கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தவில்லையா?” என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தோழர்கள் கேட்கிறார்கள். கோயில்களே வேண்டாம் என்பதுதான் பகுத்தறிவாளர்களின் இலட்சியம். அதே கோயிலுக்குள், கருவறைக்குள் நுழைய வேண்டும் என்று கேட்பது உரிமைக்கான போராட்டம். கடவுள் மறுப்பு, கருவறை நுழையும் போராட்டம் இரண்டையும் இணையாக பெரியாரியவாதிகள் செய்து வருகிறார்கள்.
கருவறைக்குள் செல்ல உரிமை கிடைத்தால், எங்கள் வீட்டினர் நாளை உள்ளே செல்வார்கள். நாளையே ஜல்லிக்கட்டுக்குத் தடை நீங்கினால், உங்களில் எத்தனை பேர் குடும்பத்துடன் மாடு பிடிக்கப் போவீர்கள்?
போட்டிகளை நடத்தத்தானே உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது; பயிற்சி நடத்தத் தடை இல்லையே! ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுப்பவர்கள், ஊருக்கு ஒரு காளை மாட்டை வாங்கி, அதனைப் பிடிப்பதற்குப் பயிற்சி எடுத்து, பண்பாட்டின் மீதான அக்கறையை நிரூபிக்கலாமே!
இதையெல்லாம் நீங்களும் செய்ய மாட்டீர்கள்; உங்கள் குழந்தைகளையும் அனுமதிக்க மாட்டீர்கள். உங்களுக்குத் தெரியும், பழகாத காளை மாடு முட்ட வரும்; உதைக்க வரும். வேறு யாரோ குத்துப்பட்டு செத்தால், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழர் வீரம் என்றும், தமிழர் பண்பாடு என்றும் பழங்கதை பேசுவீர்கள்.
பார்ப்பனர்களுக்கு திராவிடம் துணை போகிறதா?
"PETA அமைப்பு மூலம் தமிழர் பண்பாட்டை பார்ப்பனர்கள் சிதைக்க முயல்கிறார்கள்; அவர்களின் முயற்சிக்கு பெரியாரியவாதிகள் துணை நிற்கலாமா?" என்ற கேள்வி ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
முதலில் ஒரு செய்தியைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். PETA அமைப்பு கவலைப்படுவது மாடுகளுக்காக... பெரியாரியவாதிகள் கவலைப்படுவது மனிதர்களுக்காக... PETA அமைப்புக்கு முன்னதாகவே ஜல்லிக்கட்டுக்கு எதிராக பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், இடதுசாரிகள் பேசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தோழர் சுப.வீரபாண்டியன் 'இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்ற நூலில், தமிழர் பண்பாடு என்ற பெயரில் நிகழும் அவலங்கள் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். வே.ஆனைமுத்து அய்யாவின் ‘சிந்தனையாளன்’ இதழில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தோழர் ஓவியா எழுதியிருக்கிறார். தலித் முரசு இதழ் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டில் நிலவும் ஆதிக்க சாதி மனோபாவத்தைக் கண்டித்து வந்திருக்கிறது. சேர்ந்து இயங்கிய போதும், தனித்து இயங்கியபோதும் தோழர்கள் கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன் இதை எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.
இடதுசாரி எழுத்தாளர்களும், அமைப்புகளும் ஜல்லிக்கட்டில் நிலவும் நிலப்பிரபுத்துவக் கூறுகளை தொடர்ச்சியாக விமர்சித்து வந்திருக்கிறார்கள்.
கீற்று இணையதளத்திலோ, பிற இணையதளங்களிலோ தேடினால் இதற்கான தரவுகள் நிறைய கிடைக்கும்.
இன்று ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாம் முன்னர் பேசியது இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது என்பதினால்தான், பெரியாரியவாதிகள், இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள் இத்தடையை வரவேற்கிறார்கள். நாட்டு மாடுகளை வளர்க்கவே கூடாது என்ற தடை வந்தால், அதை எதிர்த்து இந்த அமைப்புகள் நிச்சயம் குரல் கொடுக்கும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.
பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களும், ஜல்லிக்கட்டும்...
பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து இருக்கிறார் (https://goo.gl/16M3NJ & https://goo.gl/6VX8EE). அவரது கருத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. இது வேட்டைச் சமூகத்து வீர விளையாட்டு. பண்பாடு, பாரம்பரியம் சார்ந்தது.
வேட்டைச் சமூகத்தில் வாழ்ந்தது போலவா இப்போது வாழ்கிறோம்? எவ்வளவோ நாகரிகமடைந்து, வேட்டைச் சமூகத்தின் மூடப் பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறையையும் விட்டொழித்த பின்பு, ஜல்லிக்கட்டு மட்டும் எதற்காக?
நவீன யுக்திகள் இல்லாத அன்றைய சமூகத்தில், காட்டு விலங்காக இருந்த மாட்டை வசமாக்குவதற்கும், அடுத்த தலைமுறைக்கு அதே பயிற்சியை அளிப்பதற்கும் இந்த விளையாட்டு பயன்பட்டு இருக்கலாம். ஆனால், இன்று மாடு, வீட்டு விலங்காகி விட்டது. வளர்ப்பவர்கள் பின்னே சாதுவாக வருகிறது. இன்றைக்கும் மாட்டோடு முட்டிக் கொண்டிருக்க வேண்டிய தேவை என்ன? உடல் எல்லாம் காயப்பட்டு, உயிரைக் கொடுக்க வேண்டியதற்கு அவசியம் என்ன? இதன்மூலம் இந்த உலகிற்கும், அடுத்த தலைமுறைக்கும் என்ன சொல்ல விழைகிறோம்? உலகிலேயே மாட்டை முதன் முதலில் வசப்படுத்தியவர்கள் நாம் என்றா?
பண்பாடு, பாரம்பரியம் என்பவை மயக்கத்தில் ஆழ்த்தும் சொற்கள். முன்னோர்கள் சொன்னார்கள், செய்தார்கள் என்பதற்காக எந்தக் கேள்வியுமின்றி, அவற்றைப் பின்தொடர வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
அன்றைக்கு சுடுகாட்டில் உடலைப் பற்ற வைப்பதற்கு வசதிகள் இருக்காது. அதற்காக பிணத்தை எடுத்துச் செல்லும்போது, வீட்டில் இருந்து கொள்ளிச்சட்டி எடுத்துச் சென்றார்கள். இன்றைக்கு மின்சார சுடுகாடு வந்தபின்பும், அதே மாதிரி சட்டியை சுமந்து செல்கிறானே, அது மடத்தனம் இல்லையா?
பண்பாடு, பாரம்பரியம், பழக்க வழக்கங்கள் என்று அன்றைக்குச் செய்தது, இன்றைக்கு ஒத்து வருகிறதா என்பதைப் பகுத்தறிவால் ஆராய்ந்து, கொள்வனவற்றைக் கொண்டு, அல்லாதவற்றை விட்டொழிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால், ஜல்லிக்கட்டு இந்தக் காலத்திற்குத் தேவையில்லாத விபரீத விளையாட்டு.
2. ஜல்லிக்கட்டில் வன்முறை இல்லை. கூட்டத்தைப் பார்த்து மிரண்டு , கொம்பைப் பயன்படுத்துகிறது. காயப்படாத விளையாட்டு உண்டா? - ஆய்வாளர் தொ.பரமசிவன்
ஜல்லிக்கட்டில் எத்தனை பேர் ஆண்டுதோறும் இறந்தார்கள்? எத்தனை பேர் ஆண்மையை இழந்தார்கள்? எத்தனை பேர் படுகாயத்துக்கு உள்ளானார்கள்? இதெல்லாம் வன்முறை இல்லையா?
உச்ச நீதிமன்றம் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தபின்பும், இந்த வன்முறையின் அளவு குறையவில்லையே! மாட்டின் மீதான வன்முறை குறித்து நாம் அக்கறைப்படவில்லை. தமிழர்கள் மீது மாடு வளர்ப்பர்கள் செலுத்தும் வன்முறை குறித்துதான் கவலைப்படுகிறோம்; எதிர்க்கிறோம்.
"காயப்படாத விளையாட்டு இல்லையா, கிரிக்கெட்டில் உயிர் இழப்பு ஏற்படவில்லையா?" என்று பேராசிரியர் கேட்கிறார். ஆனால், அங்கு உயிரிழப்பு என்பது என்றைக்கோ ஒரு முறை நடக்கும் விதிவிலக்கான சம்பவம்; இங்கு என்றைக்கும் நடக்கும் தவறாத சம்பவம்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் சொல்கிறார். அப்படி செய்துவிட்டால், அணைக்க வருபவர்களுக்கு மாடு வளைந்து கொடுக்குமா? யாரையும் கொம்பால் குத்தவோ, காலால் உதைக்கவோ செய்யாதா? என்ன கருத்து இது?
வன்முறையே இல்லாமல், மிகவும் பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்றால், கொம்பில்லாத மாடுகளைப் பயன்படுத்த வேண்டும்; அந்த மாடுகளையும் – பொதி சுமக்கும் கழுதைகளைப் போல – கால்களைக் கட்ட வேண்டும். இதை ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் ஒத்துக் கொள்வார்களா?
3. ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்கள் யாரும் மாட்டுக் கறி சாப்பிட மாட்டார்கள். - பேராசிரியர் தொ.பரமசிவன்
பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், இடதுசாரிகள் இதை எதிர்ப்பதற்கான காரணமும் இதுவேதான். தமிழ்ச் சமூகத்தில் மாட்டுக்கறி சாப்பிடாதவர்கள் ஆதிக்க சாதியினர்; சாப்பிடுபவர்கள் தலித் மக்கள். அந்த தலித் மக்கள் யாரும் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பது இல்லை என்பதைத் தான் பேராசிரியர் தொ.ப. மறைமுகமாகக் கூறுகிறார். தலித் மக்கள், பண்ணை ஊழியம் செய்யும் ஆதிக்க சாதியினர் வீடுகளில்தான் ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. தலித் மக்கள் அந்தப் பண்ணையில் உள்ள மற்ற மாடுகளை வளர்ப்பதுபோல் இவற்றையும் வளர்க்கிறார்கள். அதே மாடு இறந்தால், அதை அறுத்துச் சாப்பிடுவதும் தலித் மக்கள்தான்.
தான் வளர்க்கும் மாட்டை, தனது பண்ணையில் வேலை பார்க்கும் தலித் அடக்குவதற்கு ஆதிக்க சாதி முதலாளி அனுமதிப்பாரா?
இப்படி உழைக்கும் மக்களும், சரிபாதி பெண்களும் பங்கு பெறாத ஜல்லிக்கட்டு எப்படி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறாக முடியும்?
4. இது மாட்டை அடக்குவது அல்ல; மாட்டை அணைத்தல். - பேராசிரியர் தொ.பரமசிவன்
இதில் சோகம் என்னவென்றால், தங்களை கட்டி, அணைக்கத்தான் அவர்கள் வருகிறார்கள் என்பது மாட்டிற்குத் தெரியாமல் போய்விடுவதுதான். விளைவு, மாடுபிடி வீரர்கள் கொம்பால் குத்துப்பட்டும், காலால் உதைபட்டும் கீழே விழுகிறார்கள்.
5. மாடு வனவிலங்கு கிடையாது; வீட்டு விலங்கு. - பேராசிரியர் தொ.பரமசிவன்
நமக்கும் இதில் மாற்றுக்கருத்து இல்லை. வீட்டு விலங்கை வசப்படுத்த, தவிடு, புண்ணாக்கு வைத்தால் போதும்; ஜல்லிக்கட்டு வேண்டாம்.
6. ஜல்லிக்கட்டில் மாடு துன்புறுத்தப்படுவது இல்லை. - பேராசிரியர் தொ.பரமசிவன்
மனிதர்கள் துன்புறுத்துப்படுவது குறித்துதான் நமக்குக் கவலை; மாடுகள் துன்புறுத்தப்படுவது குறித்து நமக்கு யாதொரு வருத்தமும் இல்லை. அது விலங்கு நல ஆர்வலர்களின் கவலை. தலித், முஸ்லிம் மக்களைப் போல, மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் என்று மாட்டுக்கறி திருவிழா, இயக்கம் நடத்துபவர்கள் நாம்.
7. இது மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விழா, திராவிடப் பண்பாடு. - பேராசிரியர் தொ.பரமசிவன்
மனிதர்களுக்கு வாழ்த்து சொல்வதையே மூடநம்பிக்கை என்பார் பெரியார். "வாழ்த்துவதால் நாம் கூடுதல் நாட்கள் வாழ்ந்து விடுவதும் இல்லை; பழிப்பதால் நமது வாழ்நாள் குறைந்து விடுவதும் இல்லை" என்று சொன்னவர் பகுத்தறிவுப் பகலவன் பெரியார். மனிதர்களுக்கே இந்நிலை எனும்போது, மாடுகளுக்கு நாம் நன்றி சொல்வதுகூடத் தெரியாது. ஆனாலும், பொங்கல், மாட்டுப் பொங்கல் பண்டிகைகளில் இருக்கும் இத்தகைய சடங்குகளை பெரியார் லேசான விமர்சனத்துடன் கடந்துவிடுகிறார். காரணம், இதில் நாம் இழப்பதுமில்லை; ஏமாற்றப்படுவதுமில்லை, பாதிக்கப்படுவதுமில்லை.
மாட்டுக்கு நன்றி சொல்வது மாட்டுப் பொங்கலோடு முடிந்துவிடும்போது, அதே மாட்டைத் துன்புறுத்தும் ஜல்லிக்கட்டு எதற்கு? முன்னரே சொன்னதுபோல், ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவது குறித்து நமக்கு எந்த வருத்தமும் இல்லை. தொ.ப. அவர்கள் சொல்லும் வாதத்தில் இருக்கும் முரணை சுட்டிக்காட்டத்தான் இதைக் குறிப்பிடுகிறேன்.
மேலும், ஜல்லிக்கட்டு எப்படி திராவிடப் பண்பாடு ஆகும்?
பெரியார் சொல்கிறார்:
"நாம் எல்லோரும் ஆறு அறிவு படைத்த மனிதர்கள். ஆனால், காட்டுமிராண்டித் தன்மையிலேயே இருக்கின்றோம். அறிவு பெற்ற மக்களாக நடந்து கொள்ளவில்லை. உலகம் எவ்வளவோ முன்னேறியும், இன்னமும் பழமை என்னும் பெயரால் அதைப் பின்பற்றி, பின்னோக்கிக் காட்டுமிராண்டித் தன்மைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்."
பெரியார் சொல்வதைக் கருத்தில் கொண்டால், பழமை, பாரம்பரியம் என்பதைத் தவிர ஜல்லிக்கட்டில் என்ன இருக்கிறது? தற்கால உலகிற்குத் தேவைப்படாத இதுபோன்ற பழமைகளை நாம் அருங்காட்சியகத்திலும், ஓவியத்திலும், சிற்பத்திலும், இலக்கியத்திலும் வைத்து நினைவுகூரலாம். இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டுமானால், முன்னர் நடந்த ஜல்லிக்கட்டுக் காட்சிகளை பொங்கல் பண்டிகைகளின்போது அடுத்த தலைமுறைக்குப் போட்டுக்காட்டி, "முன்பு இப்படித்தான் இருந்தோம்; இப்போது பண்பாட்டில் இன்னும் செழுமை அடைந்து விட்டோம்" என்று சொல்லலாம்.
ஆனால், இன்றும் ஜல்லிக்கட்டை நடத்தி, நாம் இன்னமும் அதே பழைய காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உலகிற்குப் பறை சாற்றத்தான் வேண்டுமா?
- கீற்று நந்தன்