பேய் பிடித்த ஸ்வரத்தை நடனமாக்கி.. ஆத்திரம் உடைக்கும் அற்புத கணங்கள் எல்லாவற்றையும் உன் சிலுவையாக்குகிறேன். அழுகை கடந்த ஆன்ம ஒப்புக்கொடுத்தலின் விதியை நீள வண்ணமாக்கிடும் சூனியத்தின் சுவர் உன்னால் நிரம்புகிறது. அப்படியாகத்தான் நிகழுவதாக நம்புகிறது உனக்குள் அடங்கி விடும்.....எனது மாயம். நிகழ்வற்ற பொழுதொன்றாய்... அதிசயத்துக் கிடக்கும் மேட்டாங்காட்டு சிறு கற்களின் செம்மண் நிறத்தில்.... பொசுக்கென்று உரு பெற்று விடுகிறாய் யாரோ மறந்த தேவதையாய்...அல்லது நானும் விழுந்த மீன்வலையாய். தேவதையின் சாத்திரம் உடைத்திட்ட சப்த நொடிகளின் பெருவெடிப்பு இனிதே நிறைவேறும் தூரத்தில் ஒன்று உனதாகவும் ஒதுங்குகிறது எனது பிரபஞ்சம். இப்படித்தான் இம்முறையும். அப்படித்தான் உன் முறையும்.

என் வானம் உன் பறவைகளுக்கும்தான்.........சிறகில்லையென்றாலும்.....வா. உன் விதிகளால் என் தவம் ஒருபோதும் கலைவதில்லை... வேண்டுமானால் வரம் தருகிறேன்...நீ மறுத்து போகவும். மறந்து நின்ற வாசித்தலின் விதியை மாற்றுகிறாய்.... வாசலைத் திறந்து சென்று விட்டிருந்தது மறதியின் மரணம். கன்னா பின்னா ஆசையில்... கொட்டித் தீர்க்கிறது... தாபத்தின் வாழ்வுதனை உன் மௌனம் கொய்யுமென. உன் திமிர் பூசி விடிகிறது என் வீடு. அப்படியான தருணத்தைதான் நான் வளர்க்கிறேன். மெல்லிய கோடுகளில்... மெய்ம் மறந்து நகரும் சிறுகூட்டு சிந்தனைக்குள் நான் உன் பறவை ஆகும் அதிசயத் தருணம்... அப்படியே வரம் பெருகிறது. பிறழ்வுகளின் கூட்டு சதி இனி இல்லை... வா... உனை அப்பிக் கொள்ளும் சாத்தியத்தோடுதான்.. எதிர்வினை ஆற்றுகிறது என் வினை. உன் குடைக்கும் என் மழைக்கும் இடையே இன்னும் சற்று நேரத்தில் இடியுடன் கூடிய மழை செய்தி மட்டுமே...இருக்க ஆசை. ஆசைக்கும் ஆசை வர ஆசைப்படும் அத்தனையும் உனதருகே இருப்பதாக ஆசைப்படும் மனதோடுதான் ஆசை ஆரம்பிக்கவும் செய்கிறது... முடியவும் செய்கிறது.

விட்டொழியா தருணத்தின் மறுபக்க நிகழ்வுகளென எனது ஆக்கம் உனது மறுபக்கம் புரட்டும். காதல் குருதி குடிக்கும்... தத்துவமென...உன் தகவமைப்பின் சொட்டுதலை மழையாக்கி... மௌனம் கலைப்பதில்.... மீண்டும் தொடர் வலை விரிக்கும்.. எனது தேகமற்ற குடை. கடவுள் துகள்களின் தூதுக் கனவுகளென உனது நிகழ்த்துக் கலையின் நிர்பந்தம் உடைக்கும் மிகப் பெரிய வெளியில் நான் நிறமற்று இருப்பதுதான் உச்சம். உச்சத்தின் மிச்சத்தில் மீண்டும் ஓர் உச்சம் நுனி ஒடியக் காத்திருக்கும்....அச்சத்தில் நீ காற்று.. நான் மலை. உனது சாமக் காட்டின் திறவுகளாய் பறந்துவிட்ட விடுதலைகளின் உயிர்த்தலை உன் பெண்மையின் ஸ்திரம் மீண்டும் சிறகடித்துக் கூறுகிறது.....உடைபட உடைபட விடை பெறும் நம் காதலும் என்று. காதலின் கேள்விக்குள் நான் மட்டும் பதிலாய் இருக்கிறேன்... இருபக்க காகிதத்தில் நிறமற்ற மாயத்தை போல. தாயத்தின் உருளலில் ஒற்றைத் தவம் மாறி விடும் யுக்திக்கு முன் ஒரு மந்திரப் புன்னகை உனதாகின் மாறும் என் பொருள் தேடும் தந்திரம்.

உனது அற்புத வனத்தில் தற்பெருமை பேசித் திரியும்.. எனது ஆன்மாவின் சுவடுகளை உனக்கே சமர்பிக்கிறேன்..... தின்று கொழு. மீட்ட மீட்ட இசையாகி... வடியும் கல் கொண்ட சிற்பத்தின் மிக சிறந்த நூதனம் உன் பின்னிய வரைவுகளின் சாமர்த்தியம். அது அப்படியாகவே நிர்கதியாகட்டும். உன் ஜன்னல் கடக்கும் வெண்ணிற இரவின் அகவலை... மெய்ம் மறக்க செய்திருக்கிறது...உனைப் புணர்ந்து கிடக்கும்....அறைக் காற்றின் முயக்கத்தில் என் நினைவுப் பெருமூச்சு. ஏக்கம் மூச்சாகின்... தூக்கம் உளரும். உலர்ந்த பேச்சுக்களின் மௌனக் காடு விரியும். விரிந்து பறக்கும் வெண்ணிற இரவின் தன்னிறம் யாதாகினும்...அது உன்னிறம் தேடும்...உன்னிறத்தையே சூடும்.

மூச்சடைத்துக் கொல்லும் உன் முத்தங்களின் கணங்கள் பெருத்து வெடித்து சிதறும் நுண்ணிய நுட்பத்தின் வேதியியல் மாற்றத்தில்....பௌதீகமும் மாறும் நிலை.. முலை தாண்டி சிரிக்கும்... சிலிர்க்கும்...... பதின் பருவத்து வெட்கமென இருக்கட்டும். இனம் காண முடியா தொலைதலின் தூரம் உனது கூந்தல் செய்யும் மிரட்சியாக இருப்பதில் வரைந்து முடியாத தத்ரூபங்களை பின்னிப் பிணைந்து பூக்களாக்கும் கரு மைக்குள் கொஞ்சம் செந்நிறம் வெயிலின் குறும்பென அறியப் படுவதும் உன் நூதனம். ஆர்வக் கசிதலின் அடுத்த பக்கமென உனது மூக்குத்தி மின்னும் ஞாபக நட்சத்திரத்தின் பின்னிரவு ஆடை விலக்கி உன்னை கவ்வத் துடிக்கும்... எனது சாயலின் வலிமை...இன்னும் வேறு வேறு வரிகளில் நீயாகவே வெளிப்படுகிறது...

சிற்பமாகும் தருணத்தை நீ கோவிலுக்கு பிச்சை இடுகிறாய். உனது தூரங்களின் சுருட்டுதலை மெல்ல மெல்ல வேகமாக்கும் என்னையே தேடி மீண்டும் நீள்கிறது..... நீள்பரப்பின் சிறகற்ற உன் கொக்கரிப்பு. காத்திருந்து காத்திருந்து குருதி குடிக்கும் காதலின் எல்லா சாபங்களையும் நானே கொண்டு உனையே உண்கிறேன்...எப்போதும். தூங்கா இரவுகளின் ஆழ் திறவு உன் பிம்பத்தின் பகர்தலாக மிக அருகில் என்னைப் போலவே மிதக்கிறது....என்ன செய்ய... காட்சி பிழையில் சரியாகிறது எனது உனதாக.. உனது எனதாக. இன்னும் இரண்டு பறவையாகும் தவம் கலைத்த உன் பெண்மையை சூடிக் கொள்ள நானே வருவேன்......நமக்குள் இல்லாமல் போகவாவது இருக்க வேண்டும் ஏதாவது. இல்லையெனில்.... இல்லையே தான்.. இருப்பதும்... என்றான பிறகு....இருந்துதான் விடட்டுமே.. இல்லாததும்... அல்லது இருப்பதும்.

இப்படித்தான் இம்முறையும் உன் நினைவோடு மரித்து போகிறேன்.....அல்லது ஜனித்து நீள்கிறேன். சரி.... இனி...... நானாகிடும் வரம் தா....நானெல்லாம் உன் அணுக்கள்...என்பதைக் கூறவாவது.

- கவிஜி

Pin It