தேர்தல் திருவிழா முடிந்து பதவியேற்றுள்ள அரசு வாக்களித்தபடி ‘எல்லா’ வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 1,607 கோடி செலவாகுமென்று தெரிவித்துள்ளனர்.

விடுதலை பெற்றபோது “மக்களுக்கு எட்டும் விலையில்” என்பதுதான் மின்சாரச் சட்டம் 1948 கொள்கையாக இருந்தது. 2003 சட்டம் மின்சாரத்தின் விலையே மின் கட்டணம் என்ற கொள்கையைச் சொல்லி இடைமானியத்தை நீக்கச் சொல்லியது. ஆனால் 2007ல் வந்த சட்டத்திருத்தமோ இடைமானியம் குறைக்கப்படும் என்றது. ‘குறைப்பது’ என்பது அடக்க விலையில் 20 சதத்திற்கு அதிகமாகவோ, இடைமானியம் 20 சதத்திற்கு மேலோ செல்லக்கூடாது என்று வரையறை நிர்ணயித்தது. அதேநேரத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு நாளொனறுக்கு ஒரு யூனிட் வீதம் அதிக மானியத்தில் மின்சாரம் வழங்கப்படுமென்றும் தெரிவித்தது. இதுவே தேசிய அளவில் வீடுகளுக்கான மின்சார மானியம் குறித்த கொள்கையாக இருக்கிறது. இந்த நிலையில் தான் தேர்தல் பரப்புரையின்போது அறிவிக்கப்பட்ட 100 யூனிட் மின்சாரம் இலவசம் இன்று நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதே நேரத்தில் புதுச்சேரியில் பதவியேற்றுள்ள அரசு 100யூனிட்க்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு 50 சதம் இலவசம் என்று அறிவித்துள்ளது. இந்த இரு அறிவிப்புகளில் புதுச்சேரி அரசின் அறிவிப்பு எளிய மக்களுக்கு மட்டும் என்றிருப்பதை பார்க்கலாம்.

மின்சாரம், மனித குலத்தின் வெளிஆற்றல் தேவைக்காக வளர்தெடுக்கப்பட்ட தொழில் நுட்பமாகும். இன்று உலகை அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் முதல் காரணியும்  இந்த மின்சாரம் தான்.

ஏழை மக்களுக்கு மின்சாரம் பங்களிக்கப்பட வேண்டும் என்பதிலும்,  அது அவர்களுக்கு எட்டும் விலையில் இருக்க வேண்டும் என்பதனையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இப்பொழுது இதனையும் தாண்டி இலவசமாகியுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு பொருளாதார அடிப்படையின்றி அனவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலோ 100 யூனிட்க்குள்ளாக பயன்படுத்துவோருக்கு மட்டும், அதுவும் 50 சதம் என கணக்கிட்டு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1.96 கோடிவீடுகள் மின்இணைப்பு பெற்றுள்ளன. ஆண்டுக்கு 8 லட்சம் புதிய இணைப்புகள் கூடுகின்றன. ஆக கணக்கிடுவதற்கு ஏதுவாக 2 கோடி இணைப்புகள் உள்ளதாக கொள்ளலாம். இதன்படி இரு மாதங்களுக்கு, 2000 மில்லியன் யூனிட் , அதாவது, 200 கோடி வீதம், ஆண்டுக்கு 1200 கோடி யூனிட் இலவசமாகச் செல்லும். அரசு சொல்லும் 1,607 கோடிதான் இதன் விலையல்ல. முதல் 100 யூனிட் என்பது, மொத்த பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் யூனிட் 110 பைசாவிலிருந்து, 350 பைசா வரை செல்லுகிறது. 2013 மார்ச்க்குப் பிறகு வாரியம் கணக்குகளை ஆணையத்தில் சமர்பிக்கவில்லை. 2013ல் வாரியத்தின் கணக்குபடி வீடுகளுக்கான மின்சாரத்தின் விலை பயனீட்டாளர் முனையில் யூனிட் 627 பைசாவாகிறது. இன்று இது கூடியிருக்கும். 2013ன் கணக்குபடி 1200 கோடி யூனிட்டின் விலை 7,524 கோடியாகும். அரசு முன்னதாகவே யூனிட்க்கு 50பைசாவிலிருந்து 150 பைசாவரை பயன்படுத்துவோருக்கு ஏற்றாற்போல் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் அரசு நிதிச்செலவில் கணக்கிட்டிருக்கும் 7,138 கோடியில் அடங்கும். 627 பைசாவில் இது முதல் பகுதியாகும், பயனீட்டாளர்கள் ஏற்கும் கட்டணம் இரண்டாம் பகுதி. இடைமானியமாக, தொழில் துறையினரும், வணிகத்துறையினரும் ஏற்பது மூன்றாம் பகுதியாகும்.

2013 ன் கணக்குப்படி இரு மாதங்களுக்கு 100 யூனிட்க்குள்ளாக பயன்படுத்துவோர் 89 லடசமாகும்.  இவர்கள் ஆண்டுக்கு 5,507 மில்லியன் யூனிட்டை பயன்படுத்துகின்றனர்.  4..3 லட்சம் இணைப்புகள் இருமாதங்களுக்கு 500 யூனிட் மேல் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஆண்டுக்கு 4.3 லட்சம் இணைப்புகள் பயன்படுத்துவதோ 4,300 மில்லியன் யூனிட். எனவேதான் அனைவருக்கும் இலவசம் என்பது பொருத்தமானதாக இல்லை. “100 யூனிட்க்குள்ளாக பயன்படுத்துவேருக்கு மட்டும் இலவசம்” என்பது தான் சரியானதாகும்.

இந்த அறிவிப்பினால் வரும் 1,607 கோடி மானியத்தையும் சேர்த்து மின்சாரத்திற்கான மானியம் மட்டும் ஆண்டுக்கு 8,745 கோடியாகும். கூடுதலாக விசைத்தறிகளுக்கான மானியத்தையும் சேர்த்தால்  8,764 கோடியாகும். அரசு தரும் மானியங்களிலேயே அதிக அளவு இதுதான். உணவுக்கான மானியம் கூட 5,300கோடிதான். பொதுச் சுகாதாரத்திற்கு  தரப்படும் நிதியளவுக்கு  ஒப்பாகும். ஆண்டு தோறும் கூடும் 8 லட்சம் இணைப்புகளினால் ஆண்டுக்கு இன்றைய விலையில் 50 கோடி மேலும் கூடும். மின்சாரக் கட்டணம் உயரும் போதெல்லாம் , அரசு தர வேண்டிய மானியமும் கூடிக்கொண்டே போகும்.

ஆனால், 1,00,000 கோடி கடன் சுமையில் உள்ள வாரியம், ஏற்கனவே பெரிய இக்கட்டில் உள்ளது. நடுவண் அரசு அறிவித்திருக்கும் UDAY கடன் புனரமைப்பு திட்டத்தை மாநில அரசு ஏற்குமா என்று தெரியவில்லை. ஏற்காவிட்டால் அதற்கான மாற்று வழியையும் அரசு கண்டறிய வேண்டிருக்கும். ஒரு லட்சம் கோடி கடனுக்கான வட்டியே ஆண்டுக்கு, 12,500 கோடியென சுமந்து கொண்டு போகும். ஒருவேளை UDAY திட்டத்தை மாநில அரசு ஏற்றுக் கொண்டால், வாரியம் 25,000 கோடியை ஏற்கவும், அதனைச் சரிகட்டும் அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தவும் வேண்டியிருக்கும். இது UDAY திட்டத்தின் நிபந்தனையாகும். அப்படியானால், மின்கட்டணம் இப்பொழுது உள்ளது போல இருமடங்காகும். அந்த நிலையில் அரசு தர வேண்டிய மின்சார  மானியம் 16,000 கோடியை எட்டும். அரசு அறிவித்திருக்கும் உணவு, மின்சார  மானியம் உட்பட40 திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடே 43,317 கோடிதான். மதுக்கடை மூலம் 27,000 கோடி  வருவாய் இருக்காது என்ற நிலையில், தமிழகம் தள்ளாடும் நிதி நிலைக்குப் போகும். அரசு ஏற்கனவே, மணல், தாதுமணல், மலை, காடு, வண்டல் மண், சுண்ணாம்புக்கல், கடல் வளம் என அனைத்தையும் விற்றாகி விட்டது. இனி எஞ்சி இருப்பது தண்ணீர் மட்டும் தான். இதையும் விற்கத் துவங்கிவிட்டது. ஆக ‘மின்சாரம் இலவசம், தண்ணீர்க்கு மட்டும் விலை’  என்ற வேடிக்கையான நிலையை நோக்கி நகரப் போகிறோம்.

அத்துடன் முதலீட்டுச் செலவுகளும் முடங்கும். இது தொழில் துறையை கடுமையாகப் பாதிக்கும். 12,000 மில்லியன் யூனிட் தேவைக்கு, உற்பத்திமுனையில் 15,384 மில்லியன் வேண்டும். இதற்கு 2,366 மெகாவாட் ஒதுக்கப் பட வேண்டியிருக்கும். இதன் மூலதனச் செலவோ, 14,200 கோடியாக இருக்கும்.

மக்களை உள்ளடக்கும் வளர்ச்சி என்பது, எளியவர்களுக்கு இலவச உணவு, அனைவருக்கும் இலவசக் கல்வி, சுகாதாரம் என்பதே. இந்த அடிப்படைத் தேவைகளை விலைக்கு வாங்க வேண்டிய போது, மற்ற இலவசங்கள் மக்களை ஏமாற்ற அளிக்கப்படும் அன்பளிப்புகளே. இது மக்கள் வாழ்வைச் செம்மைபடுத்தாது. அடிப்படைத் தேவைகள் நிறைவேறும் பொழுது மற்றவைகளை மக்கள் எளிதாக வாங்கிக் கொள்ள முடியும்

இலவசம் என்பது தகுதியானவர்களுக்கு மட்டும் என்பதுதான் மக்கள்தொகை மிகுந்த நாட்டில் பொருத்தமாக இருக்கும்.

-          சா.காந்தி

Pin It