கருத்துக் கேட்பில் போர்க்குரல் எழுப்பிய மே 17 இயக்கம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO) சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் அமலுக்கு வர இருக்கின்ற மின்கட்டண உயர்வு குறித்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒருங்கிணைக்கும் கருத்துக் கேட்புக் கூட்டம் 22 ஆகஸ்டு 2022 அன்று சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது. முன்னதாக கோவையில் 16 ஆகஸ்டு 2022 அன்றும், மதுரையில் 18 ஆகஸ்டு 2022 அன்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
கலைவானர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தை மின்சார ஒழுங்கு முறை ஆணையத் தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் வெங்கடேசன், ஆகியோர் தலைமையேற்று நடத்தினார்கள்.
கூட்டத்தில் பல்தொழில் சார்ந்த பிரதிநிதிகள் எண்ணிக்கை பெரும்பான்மையாகப் பங்கேற்றனர். கட்டண உயர்வு மனுவை எதிர்த்தே பெரும்பான்மை கருத்துக்களைப் பதிவு செய்யப்பட்டது. மொத்தமாக 94 பேர் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர். ஒரு சிலரைத் தவிர்த்து வெகுமக்கள் தரப்பு பங்கேற்பு இல்லை. உரிய விளம்பரங்கள் செய்யப்படாததே அதற்கான காரணமெனும் கண்டனக் குரலைச் சிலர் பதிவு செய்தனர்.
தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா.காந்தி அவர்கள், மின்வாரியம் அளித்திருக்கும் உண்மைக் கணக்கு அறிக்கைக்கும் 10-08-2021-ல் மாநில அரசு அளித்த வெள்ளை அறிக்கைக்கும் இடையே இருக்கும் இடைவெளியை கேள்விக்குட்படுத்தினார். மின்வாரியம் வைத்திருக்கும் ஐந்தாண்டுக் கணக்குகளில் மின்சாரக் கொள்முதல், உற்பத்தி மற்றும் விற்பனை மட்டுமே இருக்கிறதெனவும் வாரியத்தின் மற்றொரு செயல்பாடான திறந்தவெளிப் பயன்பாடு கணக்குகள் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டினார். கொடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையிலும் நிறையப் பிழைகள் இருக்கிறது என்பதைப் பற்றியும், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அதிகாரிகள் பதிலளிக்காமல் இருப்பது பற்றியும் குற்றம் சாட்டினார்.
காற்றாலை மின் உற்பத்திக்கு வழங்கப்பட்டிருக்கும் பேங்கிங், காற்றாலைகளிடமிருந்து வசூலிக்காமல் விடப்பட்ட 27,712 யூனிட்டுகளுக்கான இடைமானியம், திறந்தவெளிப் பயன்பாடு, காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றை முடக்காமல் பயன்படுத்த வேண்டும் (Most run status) எனும் முறை, தன் உற்பத்தி வழக்கு ஆகியவற்றால் ஏற்பட்ட இழப்புகள் எனக் காற்றாலை மின் உற்பத்தி சார்ந்து ஏற்பட்டிருக்கும் நஷ்டம் மட்டும் 63,060 கோடி ரூபாய் எனத் தெரிவித்தார்.
திறந்த வெளி பயன்பாட்டின் மூலம் நடைபெற்ற சுரண்டல் முழுக்க காற்றாலை உற்பத்தியைச் சார்ந்தவையாக இருக்கிறதெனவும் அதனால் ஏற்பட்ட 1,50,000 கோடி ரூபாய் நஷ்டத்திற்குக் காரணமான பல நிர்வாக முறைகேடுகளையும் பட்டியலிட்டார்.
அக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு தன் கருத்துக்களைக் கூறினார்.
“மின்சாரம் வியாபார பண்டம் அல்ல. கல்வியைப் போல, உணவைப் போல, மருத்துவத்தைப் போல ஒரு அடிப்படையான தேவைகளுள் ஒன்று. தமிழ்நாட்டின் 8 கோடி பேரில் பல துறைகளைச் சேர்ந்த பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் மின்கட்டண உயர்வுக் குறித்த கருத்தைக் கேட்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் இக்கூட்டம் தொடர்பாகப் பொதுவெளியில் செய்திகள் பரவலாக்கப்படவில்லை. ஆகையால் ஒரு கண்துடைப்பு கூட்டமாகத்தான் இது நடந்து கொண்டிருக்கிறது. கருத்துக் கேட்புக் கூட்டம் வெறும் மூன்று நகரங்களில் மட்டும் நடத்தப்படாமல் விரிவு படுத்தப்படவில்லையெனில் இது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
மின்சார வாரியம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்படும் நட்டம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான உரிய பதில் வேண்டும். ஒரு வாரியத்திடம் கொடுக்கப்பட்ட துறை நட்டத்தில் இயங்கினால் அதற்கான பொறுப்பு வாரியத்தினுடையது. மக்கள் தாங்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்குப் பணம் செலுத்தாமல் இந்த நட்டம் வரவில்லை. ஆகையால் நட்டத்தை மக்கள் தலையில் கட்டுவது நியாயமாகாது.
நட்டத்திற்காக காரணங்கள் பட்டியலிடப்படவில்லை. 20 வருடங்களுக்கு முன்னர் மின்சார வாரியம் இலாபத்தில் இயங்கியது. பத்து வருடங்களுக்கு முன்னர் 44,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருந்தது. இன்று 1,50,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கிறது. பத்து ஆண்டுகளில் 3 மடங்கு நட்டம் எப்படி வந்தது என்பதற்கான கணக்கை தனிக்கை செய்யும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. ஆகையால் தலைவர், நிதி நிர்வாக அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியவர்களுள் யார் பொறுப்பினை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒழுங்குமுறை ஆணையம் மின்சாரம் வாங்குவதையும் விற்பதையும் ஒழுங்குபடுத்துகிறது. வாங்கும் அதிகாரம் பொதுமக்களிடம் இல்லை. அதிகாரிகளிடம் இருக்கிறது. அவர்கள் தான் இந்த நட்டத்திற்கு பொறுப்பு. அவர்களே குற்றவாளிகள்.” என்று திருமுருகன் காந்தி அவர்கள் குற்றம் சாட்டி பேசினார்.
கோரிக்கைகள்:
இறுதியாக “1,50,000 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய - மின்வாரியத்தில் முடிவெடுக்கும் முக்கிய பொறுப்பிலிருக்கும் உயர் அதிகாரிகள், நிதி நிர்வாக அதிகாரிகள், ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆகிய அனைவரின் மீதும் வெளிப்படையான விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
குறைந்தபட்சம் 10 மாவட்டங்களில் கூட்டம் நடத்தப்படவேண்டும். கூட்டம் நடத்தப்படும் இடங்களில் விரிவான அறிவிப்பு வெளியிடப்பட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தப் படவேண்டும். அதில் தமிழ்நாடு மின்வாரியத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று வெளிப்படையாகப் பதில் கூற வேண்டும்.
ஒழுங்குமுறை ஆணையம் மக்களின் சார்பாக அமைக்கப்பட்டது. இவ்வாணையம் தாமாக முன்வந்து இந்த மின்வாரியத்தின் நிலைக்குக் காரணமான அதிகாரிகளை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். தனியாருக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெறுவது, வழக்குகளை நடத்தாமல் இருப்பது, தனியாருக்கு பணத்தை வாரி வழங்குவது, அவர்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவது ஆகிய முறைகேடுகள் சரியான முறையில் விசாரிக்கப்படவேண்டும். கட்டண உயர்வை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இதற்கான பதில் இல்லாமல் கருத்துக் கேட்புக் கூட்டம் முடித்து, கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் போராட்டம் நடத்தப்படும். மின்வாரியம், ஒழுங்குமுறை ஆணையம், ஆகியவற்றின் முன்பாக ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஒவ்வொரு அதிகாரிகளின் பெயரைச் சொல்லி பிரச்சாரம் செய்யப்படும்.” என திருமுருகன் காந்தி அவர்கள் அறிவித்தார்.
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசிய திருமுருகன் காந்தி அவர்களின் உரையின் போது நேரம் முடிந்ததென்று மணி ஒலிக்கப்பட்டது. அப்போது கூட்டத்திலிருந்தவர்கள் அவரை பேச அனுமதிக்குமாறு கூச்சலிட்டதால் அவர் 15 நிமிடங்கள் வரை பேசினார். அதிகாரிகளின் மீதும் ஆணையத்தின் மீதும் விசாரணை ஆணையம் வைக்கப்படவேண்டும் எனும் கருத்திற்கும், மின் கட்டணம் ஒரு வேளை உயர்த்தப்பட்டால் போராட்டங்கள் வெடிக்கும் என்று எச்சரிக்கும்போதும் கூட்டத்தில் கலத்துக் கொண்டவர்கள் தங்கள் ஆதரவினைத் தெரிவித்தனர்.
இறுதியாகப் பேசிய ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர் “அனைத்து வழிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்பட்டதாகவும், நுகர்வோர் தங்களின் கருத்துக்களை மின்னஞ்சல் மூலமாகவும் பதிவு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது” எனவும் தெரிவித்தார். மேலும் மின்வாரிய அதிகாரிகள் மேம்போக்காக சில விளக்கங்களை அளித்தனர். இவை இரண்டுக்குமான கண்டனங்களும் எதிர்க்குரலும் அரங்கில் எழுப்பப்பட்டன.
முன்னதாக, 16 ஆகஸ்டு 2022 அன்று கோவையில் எஸ்.என்.ஆர். மண்டபத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவன தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், விசைத்தறி சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். மொத்தம் 109 பதிவாளர்களில் பெரும்பாலானவர்கள் விலையேற்றத்தைக் கண்டித்தே தங்களது கருத்தைப் பதிவு செய்தனர்.
மே பதினேழு இயக்கத்தின் தோழர்கள் அக்கூட்டத்திலும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். மின்வாரியம், தனியார் நிறுவனங்களுக்குத் தள்ளுபடி செய்த கோடிக்கணக்கான இழப்பீடுகள் குறித்தும், அரசின் வெள்ளை அறிக்கைக்கும் மின்சார வாரியத்தின் உண்மை அறிக்கைக்கும் உள்ள முரண்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான சலுகைகள் என்ற பெயரில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றியும் பேசப்பட்டது. மேலும் இச்சட்டத் திருத்தங்கள் அம்பேத்கர் கொண்டு வந்த Cross Subsidy திட்டத்திற்கு எதிரானதென்றும், இதனால் பொதுமக்களுக்கு இதுவரைக் கிடைத்து வந்த 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும் சூழல் வரும் என்றும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக பதிவு செய்யப்பட்டது.
இந்த விலையேற்றம் ஜனநாயக விரோதமானது. மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மின்சாரத்துறை, தனியார் நிறுவனங்களின் லாப கொள்ளைக்காகவும், முறையற்ற நிர்வாகத்தாலும் சீரழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுவது கண்டனத்துக்கு உரியது. மக்கள் தங்கள் மேல் சுமத்தப்படுகிற விலையேற்றத்தைக் கண்டித்தும், இதனால் பயன்பெற்ற/ பயன்பெறப் போகின்ற பெருநிறுவனங்களை அம்பலப்படுத்தவும் மக்கள் அணிதிரள வேண்டியிருக்கிறது. அரசின் தனியார்மயமாக்கலுக்கு ஆதரவான போக்கினை மக்கள் போராட்டங்களின் மூலமாக திரும்பப் பெற வைக்க வேண்டும் என மே பதினேழு இயக்கம் கோரிக்கை வைக்கிறது.
- மே பதினேழு இயக்கம்