1. நீண்ட கால கொள்முதல்

அரசு தெடர்ந்து அறிவித்து வரும் 3300 மெகா வாட் மின்சாரக் கொள்முதலில் - 2479.5 கோடி யூனிட் - பெரும் முறைகேடும், இழப்பும் ஏற்பட்டுள்ளது.

TNEBஇந்த கொள்முதல் காலமான 15 ஆண்டுகளில் மின்வாரியத்திற்கு குறைந்த அளவாக 40,327 கோடி இழப்பாக இருக்கும். ஆண்டுக்கு 2,688 கோடி இழப்பு இருக்கும்.

வாரியம் தமிழகத்தின் மின்தேவை பற்றி எந்த அடிப்படையும் இல்லாமல் இந்தக் கொள்முதலைச் செய்திருக்கிறது. கொள்முதலை நியாயப்படுத்த 13-14 ஆண்டில் 15,736 மெகா வாட் தேவை என்று சொல்கிறது. ஆனால் 13-14 ஆண்டில எட்டப்பட்ட உச்ச தேவையே 12,005 மெகாவாட்தான். இது ஆண்டில் ஒரு நாளில் மட்டும் எட்டப்பட்ட உச்சம். தோராயத் தேவை 11220 மெகாவாட்தான். 4,516 மெகாவாட் கூடுதலாக கணக்கிட்டுள்ளது. இது தேவையைவிட 40 விழுக்காடு அதிகமாகும்..

 11/2012ல் 1000 மெகாவாட் ஐந்தாண்டுகளுக்கு வாங்கப் போவதாகவும், 2016-17ல் 498 மெகாவாட் உபரியாக இருக்கும் என்று ஆணையத்திடம் தெரிவிக்கும் வாரியம், அடுத்த மாதமே 12/2012ல் ஐந்தாண்டுக்குப் பதிலாக பதினைந்தாண்டுகளுக்கு கொள்முதல் செய்யப் போவதாக சொல்கிறது. அடுத்த பத்து மாதத்திற்குள் 10/2013ல்- 1000 மெகாவாட் தேவைக்குப் பதிலாக, 3300 மெகாவாட் தேவை என்று சொல்கிறது.

ஒப்பந்தம் கோரியபடி 1208 மெகாவாட்க்கு கொள்முதல் உத்திரவு வழங்கிய வாரியம், இரண்டாவது கட்டமாக, பங்கேற்ற அத்தனை உற்பத்தியாளர்களிடமிருந்தும் - அனைத்து மின்சாரத்தையும் 2122 மெ.வா. கொள்முதல் செய்துள்ளது. டெண்டர் ஒழுங்கு விதிப்படி கோரப்பட்ட அளவைவிட — 1000 மெகாவாட்டை விட - 20 விழுக்காடு மட்டுமே கூடுதலாக கொள்முதல் செய்ய வேண்டும். இந்த இரண்டாவது கொள்முதல் டெண்டர் விதிக்கு புறம்பானதாகும். மறு டெண்டர் கோரப்பட்டிருந்தால் போட்டி காரணமாக விலை மேலும் குறைந்திருக்கும்.

கடந்த மூன்றாண்டுகளில் இந்தியா முழுவதுக்கும் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்ட 37,000 மெகாவாட்டில், 4000 மெகாவாட் மட்டுமே கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக மின் உற்பத்தியாளரகள் சங்கம் தெரிவிக்கிறது. இந்த 4000 மெகாவாட்டில், 3300 தமிழகத்தில் ஒப்பந்தமாகியுள்ளது. சந்தை விலை மிகவும் லாபகரமாக உள்ளதால், பிற மாநிலங்கள் நீண்ட கால கொள்முதலை செய்யவில்லை. இன்றும் 13,900 மெகாவாட் உற்பத்திக்கு சந்தையில்லாமல் தேங்கியுள்ளன. தினசரி சந்தையில் மின்சாரத்தின் விலை யூனிட் 80 பைசாவில் தொடங்குகிறது. சந்தை விலையோ 2.50 லிருந்து 3.20 வரை இருக்கிறது. ஆனால் வாரியத்தின் தற்போதைய கொள்முதல் விலையோ யூனிட் ரூ 4.91 ஆகும். ஆனால் தரப்படும் விலையோ ரூ.6.38 மற்றும் ரூ.5.59 என்றாகிறது.

ரூ.4.91 யூனிட் விலையை நியாயப்படுத்த வல்லூர் முதல் அலகுக்கு நடுவண் ஆணயம் நிர்ணயித்த விலையான ரூ.4.92வுடன் ஒப்பிடுகிறது மின்வாரியம்.

ஆனால் உண்மை வேறு விதமானது.

                வல்லூர் முதல் திட்டம் இரு அலகுகளைக் கொண்டது. முதல் மற்றும் இரண்டாம் அலகுகளுக்கு சேர்த்தே முதலீட்டுச் செலவை பிரித்து கணக்கிட வேண்டும். தற்போது முதல் அலகுக்கு மட்டுமே தற்காலிக விலையைத்தான் நடுவண் ஆணையம் அறிவித்துள்ளது. இது மாறப்போவதாகும். வாரியம் முதல் அலகுக்கு 3775.35 கோடியும் – இரண்டாம் அலகுக்கு 1968.78 கோடியும் செலவு காட்டுகிறது. இரு அலகுகளுக்கும் புகைபோக்கி, கரி கையாளுதல் போன்ற பல்வேறு துணை நிலையங்கள் பொதுவானதாகும். இரண்டாம் அலகுக்கு மின் உற்பத்திவிலை நிர்ணயிக்கும்போது இது சமப்படுத்தப்படும். இதன்படி கணக்கிட்டால் வல்லூர் நிலைய தோரய மின் உற்பத்தி யூனிட் ரூ.1.55 + ரூ.1.86= ரூ.3.41 ஆகும். கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் விலையான ரூ.4.91 என்பது 15 ஆண்டுகளின் விலையின் சராசரியாகும். இது லெவலைஸ்டு கட்டணம் என்றழைக்கப்படுகிறது. ஆனால் கொள்முதல் விலைக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்ட வல்லூர் முதல் நிலையத்தின் மின்சாரத்தின் விலை லெவலைஸ்டு கட்டணமல்ல.—தற்காலிகமானது. இதன் லெவலைஸ்டு கட்டணம் ரூ3.41க்கு குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஏனெனில் வடசென்னை முதல் அலகின் மின் உற்பத்தி யூனிட் ரூ.2.87 என்றே தமிழக ஆணையம் நிர்ணயித்திருக்கிறது. இந்த விலையை ஏன் வாரியம் கணக்கில் கொள்ளவில்லை என்பது விடையில்லாத கேள்வியாகவுள்ளது. இங்கு காட்டப்பட்டுள்ள இழப்பு வல்லூர் முதல் அலகு மின்சாரத்தின் விலை யூனிட் ரூ 3.41 என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டதாகும்.

இரண்டாம் முறையாக 2122 மெ.வா. கொள்முதலை நியாயப்படுத்த பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டுவர வழித்தடத்தைக் காரணம் காட்டுகிறது வாரியம். ஆனால் 2122 மெ.வா.ல் 1172 மெ.வா தமிழகத்தில் உற்பத்தியாகிறது. இங்கு வழித்தடம் பிரச்சனையல்ல என்பது தெரிந்ததுதானே!

கொள்முதல் செய்யும் 11 மின் நிலையங்களில் எட்டு நிலையங்கள் பிற மாநிலத்தில் உள்ளவை. ரூ4.91ல் வழித்தடங்களுக்கான செலவாக ரூ0.75வும் அடங்கும். ஆனால் வழித்தட செலவு தமிழக உற்பத்தியாளர்களுக்கு இல்லை. அதாவது இவர்களுக்கு 4.91-0.75= 4.16/யூனிட் என்றிருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கும் 4.91 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் 880.4 கோடி யூனிட்க்கும் ரூ0.75 வீதம் 660.3 கோடி கூடுகிறது. மொத்த கொள்முதலில் இது மூன்றில் ஒரு பங்காகும்.

டெண்டர் பெறப்பட்டபோது அன்னியச் செலாவாணி டாலர்க்கு ரூ54ஆகவும், பரிசீலிக்கும்போது ரூ59 ஆகவும் இருந்திருக்கிறது. பரிசீலிக்கும்போதே விலையை ரூ59க்கு சமன்படுத்தியிருந்தால் செலவாணி கூடும் பொழுது விலை கூடாது.

ஓ.பி ஜி மற்றும் கோஸ்டல் என்ற தமிழக மின்நிலையங்களுக்கு யூனிட் ரூ.6.388ம், ரூ.5.957ம் பிப்ரவரியில் கொடுக்கப்பட்டதாக செய்திகள் சொல்கின்றன. இதன்படி பார்த்தால் இறக்குமதி நிலக்கரியின் விலை முறையே டன் 154.59, 151.5 அமெரிக்க டாலர் என்றாகிறது. வாரியம் இறக்குமதி செய்யும் நிலக்கரியோ 63 அமெரிக்க டாலர்தான். அதுமட்டுமல்ல உலகச்சந்தையில் இதுவரை எட்டப்பட்ட உச்ச விலையே 130 அமெரிக்க டாலர்தான்

மின்சாரச்சட்டம் 2003, பிரிவு 63ன்படி நடுவண் அரசின் விதிப்படி செய்யப்படும் கொள்முதலில் ஆணையம் குறுக்கிட முடியாது. ஆனால் கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், ஒப்பந்தத்துடன் முழுவிபரங்களும் வலைதளத்தில் வெளியிட வேண்டுமென்றும், இந்த கொள்முதல் பற்றி இரு செய்தித்தாள்களில் வெளியிடவேண்டுமென்றும் இதே விதி சொல்கிறது. ஆனால் கொள்முதல் செய்தாலும் செய்தி வெளியிட மறுக்கிறது மின்வாரியம். தகவல் உரிமைச் சட்டத்தையும் மதிப்பதில்லை.

2. குறுகிய கால கொள்முதல்

ஓர் ஆண்டுக்குள்ளான கொள்முதல் குறுகிய கால கொள்முதலாகும். 10/2014 லிருந்து 09/2015 வரை யூனிட் ரூ 5.50 வீதம் 1563.6 கோடி யூனிட் – 2100 மெ.வா. - வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது வாரியம். தமிழகத்தில் ஜூன் – செப்டம்பர் மாதத்தில் தென்மேற்கு பருவக் காற்று காலமாகும். இந்தக் காலத்தில் காற்றாலை மின் உற்பத்தி 4000 மெ.வா.யை எட்டும். இதன் விலையோ யூனிட் ரூ3.12தான். 2100 மெ.வா. குறுகிய கால கொள்முதல் அதிகமானதால் இந்த நான்கு மாதத்தில் 1100 மெ.வா. அளவுக்கு இதனை வாங்கவில்லை. ஆனால் வாங்காத இந்த மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ரூ 2.00 வீதம் தண்டனைக் கட்டணமாக மின்வாரியம் தந்து கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு 4.48 கோடிவீதம் கடந்த 100 நாளில் 448 கோடியை மின்சாரம் வாங்காமலேயே தனியார்களுக்கு வாரி வழங்கி வருகிறது வாரியம். அது போலவே காற்றாலை மின்சாரம் 1500 மெ.வா.ம் வாங்கவில்லை. குறுகிய கால கொள்முதல் போல் காற்றாலை மின்சாரத்தை வாங்காதபோது தண்டனைக் கட்டணம் ஏதுமில்லை. தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழகத்தில் மின் பற்றக்குறை இருக்காது என்பது வாரியத்திற்கு தெரியும். என்றாலும் கொள்முதல் ஓப்பந்தம் செய்திருக்கிறது.

3. ஜி.எம்.ஆர்-ம் மின்வாரியமும்

ஜி.எம்.ஆர் என்ற தனியார் ஒப்பந்ததாரரின் மின்சாரம் ரூ12.50 என்பதால் வாங்க வேண்டாமென ஆணையம் உத்திரவிட்டபோதும் வாரியம் இந்த மின்சாரத்தை வாங்கி வந்துள்ளது. ஒப்பந்த காலம் 15/02/2014ல் முடிவுற்றாலும் மேலும் ஓராண்டு காலத்திற்கு இவர்களிடம் இருந்து மின்சாரம் வாங்கியது வாரியம்.

இந்நிறுவனம் 2008ல் வாரியத்திடம் நிலுவை என்று 538 கோடியை வசூலித்தது. தீர்ப்பாயம் இந்தத் தொகையில் 350 கோடி அளவுக்கு வாரியத்திற்கு திருப்பியளிக்க உத்திரவிட்டது. மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றமும் வழக்கை தமிழக ஆணையத்திடம் திருப்பியது. கடந்த ஓராண்டாக வாரியம் இந்தப் பணத்தை பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

4. ஆணையத்திடம் வேண்டுகோள்

மின்சாரச்சட்டம், தகவல் உரிமைச் சட்டம், ஆணைய உத்திரவுகள் எதனையும் மின்வாரியம் மதிப்பதேயில்லை. மின்கட்டணங்களை உயத்தும் பொழுதுகூட பொதுமக்கள் பார்வைக்கு கணக்குகளை முன்வைக்க மறுத்து வந்துள்ளது. மேலே சொல்லப்பட்ட கொள்முதல்களுக்கு மக்கள் பணத்தை உள்நோக்கத்துடன் விரயம் செய்துள்ளது. மேலே சொல்லப்பட்ட நடுவண் அரசின் ஆணைப்படி இந்த கொள்முதல்களுக்கு தமிழக ஆணையம்– 6.4படி ஒப்புதல் வழங்க வேண்டும். மக்களை வெகுவாக பாதிக்கும் - வெளிப்படத்தன்மையற்ற இந்தக் கொள்முதலை மக்கள் பரிசீலனைக்கும், ஒப்புதலுக்கும் முன் வைக்க ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்

- சா.காந்தி, தலைவர், தமிழக மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு.

Pin It